விருது J.K. SIVAN
சென்னை மாநகரத்திலிருந்து அரைமணி நேரத்தில் சேரக்கூடிய இடமாக இருந்த கூடுவாஞ்சேரி இப்போது, ஏதோ ஒரு ப்ரயோஜனமில்லாத தொலைதூர விவசாய கிராமம் இல்லை. ஒருவர் மீது ஒருவர் இடிக்காமல் நடக்க கூட முடியாத நெரிசல் பட்டினம். நிறைய வீடுகள். ஆளில்லாமல் இருந்த நந்திவரம் மற்றும் பல கோவில்களுக்கு கொண்டாட்டம். அபிவிருத்தியான கிராம கோவில்களில் முதலிடத்தில் கூடுவாஞ்சேரி கோவில்களை வைக்கலாம். அங்கே ஒரு புது ஆஞ்சநேயர் வந்து மஹாலக்ஷ்மிநகரில் குடியேறி விட்டார். மாருதி தாசர் என்ற ஒரு எளிய ஆஞ்சநேய பக்தரால் உருவான அற்புத சிறிய ஆலயம். ஸ்ரீ யோக சந்தோஷ பீடம். அங்கு இருக்கும் ஆஞ்சநேயர் அருள்மிகு ஸ்ரீ த்ரி நேத்ர சதுர்புஜ நவகிரஹ யோக ஆஞ்சநேயர்.
இந்த வருஷம் 12ம் ஆண்டு ஹனுமான் ஜனன உற்சவ விழாவில் 108 சுமங்கலிகளுக்கு வஸ்திர தானம், சில சான்றோர்களை பாராட்டி விருது வழங்குதல், 10 லக்ஷம் ராம நாம ஜெபம், 3000 பேருக்கு அன்னதானம், விளக்கற்ற ஆலயங்களுக்கு விளக்கேற்ற எண்ணெய் வழங்குதல் போன்ற அற்புத செயல்களை 5-6 ஜனவரி 2019 அன்று ஏற்பாடு செயதிருந்தார் ஸ்ரீ மாருதி தாசர்.
ஒருவனுக்கு ஏதாவது எதிர்பாராமல் ஒரு லாபம், செல்வாக்கு, வசதி வந்தால் என்ன சொல்கிறோம்? ''அவனுக்கு என்ன, காற்று அவன் பக்கம் அடிச்சுது எங்கேயோ தூக்கி விட்டுவிட்டது '' என்கிறோம். உண்மையில் காற்று அவ்வாறு தான் என் பக்கம் வீசிவிட்டது. காற்று யார்? மாருதி எனும் வாயு பகவான் புத்ரன் ஆஞ்சநேயன் அல்லவா? . எனக்கும் மற்ற ''உண்மையான '' சான்றோர்களை சிறப்பிக்கும்போது ஒரு விருது கிடைத்து விட்டது. மஹா பாரதத்தை எளிமையாக வேதவியாசர்சொன்ன நிகழ்வுகளை கூடுமான வரை விடாமல் கதையாக சிறுவர்களுக்கு ஐந்தாம் வேதம் என்று இரண்டு பாகங்களாக விலையின்றி, குறைந்த தொகை நன்கொடைக்கு ஆயிரம் பக்கங்களில் வண்ணங்களோடு உயர் ரக காகிதத்தில் அச்சிட்டு கொடுத்ததற்காக நானும் ஒரு வ்யாசனாகி விட்டேனாம்! ''அபிநவ வியாசர்'' விருது. தாங்குவேனா நான்? நீங்கள் தான் சொல்லவேண்டும். முக்கியமாக வியாசருக்கு என் மேல் கோபம் வராமல் என்னை காப்பாற்றவேண்டும்.
No comments:
Post a Comment