1. சீறும் கட்டபொம்மனும். சீறலை வாய் ஷண்முகனும்
J.K. SIVAN
அத்தனை பாளயபட்டுகளும் கதி கலங்கும் அவன் பேரைக் கேட்டாலே. மஹா வீரன். பயம் பத்து மைல் தூரம் கிட்டே நெருங்காதவன். அவனது மீசையை இடது கை விரல்கள் முறுக்கிக்கொண்டு இருந்தால் அவன் சிந்தனை எப்படி இந்த வெள்ளை நிறத்தவர்களின் ஊடுருவலை தடுத்து நிறுத்துவது என்பதாக இருக்கும்.
திருச்செந்தூர் முருகன் அவனுக்கு இஷ்ட தெய்வம்.அவன் பெயரே ''வீர'' பாண்டிய கட்டபொம்மன். திருச்செந்தூர் ஷண்முகனும் ஜக்கம்மாவும் இரு கண்கள். அவன் இருந்ததோ திருநெல்வேலியில் எங்கோ. பாஞ்சாலங் குறிச்சியில். ஆனால் மனம் செந்தூரானின் மீது. நினைத்தபோது குதிரை மேல் ஏறி பறந்துவிடுவான்.
சாப்பிட கூப்பிட்டால் ''முருகன் பூஜை முடிந்ததா, நிவேதனம் ஆகி விட்டதா அவனுக்கு என்று கேட்டுவிட்டு தான் இலையின் முன் அமர்வான். திருச்செந்தூரில் மதிய நிவேதனம் ஆனதை பாஞ்சாலங்குறிச்சியில் எப்படி தெரிந்து கொள்வது?
அவன் மந்திரி சொன்ன யோசனை பிடித்தது:
''அரசே திருச்செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை ஆங்காங்கே சில கல் மண்டபங்கள் கட்டி அதில் வெண்கல மணி கட்டி தொங்கவிடுவோம். ஒவ்வொரு மண்டபத்திலும் ரெண்டு ஆட்கள். திருச்செந்தூரில் உச்சி கால பூஜை முடிந்து நிவேதனம் ஆனவுடன் மணி அடித்தால் அருகில் இருக்கும் மண்டபம் அதை கேட்கும். அது மணி அடிப்பதை அதற்கடுத்த மண்டபம் கேட்கும். இப்படி சில நிமிஷங்களில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை மண்டபம் மணி அடிக்கும் நீங்கள் போஜனம் செய்ய ஆரம்பிக்கலாம்.
திருச்செந்தூரில் உச்சிகால பூஜை நடந்து முடிந்தவுடனே திருச்செந்தூர் கோயில் ஆலய கோபுர மணி ஒலிக்கத் தொடங்குவது வழக்கம். இத்தகைய மண்டபங்கள் ஆறுமுகநேரி, ஆத்தூர், ஒட்டபிடாரம், பாஞ்சாலங்குறிச்சி உள்பட பல இடங்களில் நிறுவப்பட்டிருந்தது. இந்த மண்டபங்களில் சில இன்றும் இருக்கிறது.
கட்டபொம்மன் என்றால் சிவாஜி கணேசன் முகம் தான் நினைவுக்கு வருகிறது. கனல் தெறிக்கும் கண்கள். முறுக்கு மீசை. கடித்த பற்கள். பரந்த நெற்றியில் திருநீற்று பட்டை. ஆமாம் வீரபாண்டிய கட்டபொம்மன் எப்போதும் அணிந்தது திருச்செந்தூர் முருகன் இலைத்திருநீறு. ஒவ்வொரு திங்கட்கிழமையும் குதிரை வீரர்கள் செந்தூர் முருகன் கோவிலிலிருந்து அபிஷேக விபூதி பெற்று அவனுக்கு கொண்டு வந்து தருவார்கள்.
ஆவலாக காத்திருப்பார். விபூதி கையில் கிடைத்தபிறகே அன்றாட பணிகளை கட்டபொம்மன் துவங்குவார்.
திருச்செந்தூர் முருகன் கோயில் கோபுரத்தின் ஏழாவது நிலையில் ஒரு மணி தொங்கிக்கொண்டிருக்கிறதே அதை அங்கே நிறுவியது கட்டபொம்மன். இது தான் முதல் வெண்கல மணி. இதன் ஓசையிலிருந்து தான் அடுத்து அடுத்து பல மண்டபங்கள் மணியோசையை பாஞ்சாலங்குறிச்சிக்கு அனுப்பின. வெகுகாலமாக ஒலிக்காமலிருந்த இந்த மணியை, ஒரு கோயில் கும்பாபிஷேகம் நடந்தபோது மீண்டும் ஒலிக்கச் செய்து இப்போது உச்சிகால பூஜையில் ''டாண் டாண்'
மஹாநுபாவன் கட்டபொம்மன் முருகன் மேல் கொண்ட சிறந்த பக்தியால்,தனது நெற்களஞ்சியங்களிலிருந்து
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அன்னதானம் அளிக்க பல ஆயிரம் கோட்டை நெல்லை விடாமல் அனுப்பியவன்.
'' எல்லோரும் உங்க வயக்காட்டிலிருந்து நெல்லைக் காவடியாகச் சுமந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கோயிலுக்குப்போக உதவி வேண்டுமானால் என் வீரர்கள் உதவுவார்கள்.'' என்று கட்டளை போட்டிருந்தான்.
கட்டபொம்மன் ஒரு சமயம் தனது மனைவிக்கு பெரிய தங்க அட்டிகை பரிசளிக்க விரும்பி, சிறந்த பொற்கொல்லன் ஒருவனை அழைத்து ஆர்டர் கொடுத்தான். ராஜா விருப்பப்படியே பொற்கொல்லர் தங்க அட்டிகை தயாரிக்க ஒப்புக்கொண்டு சென்றார். அன்றிரவு திருச்செந்தூர் ஷண்முகன் கனவில் தோன்றினான்
''கட்டபொம்மா, என்னப்பா உன் மனைவிக்கு தங்க அட்டிகையா செய்ய சொன்னாய்?''
''ஆமாம் முருகா''
''ஓஹோ என் நினைவு வரவில்லையா உனக்கு?'
தூக்கி வாரிப் போட்டது கட்டபொம்மனுக்கு
காலை முதல்வேலையாக ஒரு குதிரை வீரனை அனுப்பி அந்த பொற்கொல்லனை திருப்பி அழைத்து வர செய்தான்.
பயந்து போன பொற்கொல்லன் கைகைட்டி கட்டபொம்மன் முன் நின்றான்.
''உன்னிடம் நான் செய்ய சொன்ன தங்க அட்டிகை இன்னும் நன்றாக சீக்கிரமாக செய். தயாரானவுடன் அதை திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆறு முகனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். சீக்கிரம்''
கட்டபொம்மன் வாழ்வில் எத்தனையோ சம்பவங்கள் நமக்கு தெரிய வாய்ப்பில்லை. பராபரியாக கேட்ட ஒரு சம்பவம் இது. கோலாகலமாக திருச்செந்தூரில் மாசிமகம் திருவிழா. தேர் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலத்துக்கு தயார். முதலில் கட்டபொம்மன் வந்து வடம் பிடித்துக் கொடுத்த பின் நகரும். அது தான் வழக்கம். நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ராஜாவை காணோம். என்ன செய்வது. ஏதோ காரியமாக ராஜா வரவில்லை. தேரை நாமே இழுத்து விடலாம்''. பக்தர்கள் தேரை இழுத்தனர் ஆனால் ஏனோ தேர் நகரவில்லை. எவ்வளவு முயன்றும் ஹுஹும். தேர் நகரவில்லை. கட்டபொம்மன் எங்கோ இருந்தவர் திருச்செந்தூர் வந்து கொண்டிருந்தார். அவர் வந்து ''ஷண்முகா....''' என்ற பெருங்கூச்சலுடன் தேர்வடத்தை பற்றி பிடித்து இழுத்தார். அட என்ன ஆச்சர்யம். பூனைக்குட்டி போல் பணிந்து தேர் நகர்ந்தது.
அடுத்து இன்னும் சில விஷயங்கள் சொல்கிறேன்.
No comments:
Post a Comment