Monday, January 14, 2019

MARGAZHI VIRUNDHU

''என் பெண்....... என் பெண்....'' J.K. SIVAN

எனக்கு பரம சந்தோஷம். கடந்த முப்பது மார்கழி நாட்களும் எண்ணற்ற நண்பர்கள் ஆண்டாளை நினைக்க என் எழுதது உதவியது என்று உணரும்போது. மிகச்சிறந்த பெண் அவள். அவளை வளர்த்து அவள் தனக்கு பிடித்த கணவனை ஆண்டவனையே அடைந்த ஆண்டாள். அப்புறம்.........

ஒரு எண்ணச்சுழல்..
ஒரு அழகிய குழந்தை பிறந்ததா? எங்கு? யாருக்கு? தெரியாது. அப்படியென்றால் எங்காவது இருந்ததா? எங்கு? எப்போது?
இந்த ரெண்டு கேள்விக்கும் ஒரே விடை தான். ''ஆமாம் ஒரு தெய்வீக குழந்தை அப்போதே பிறந்ததாக தெய்வமே தன்னை கட்டிக்கொண்டிருக்கலாம், அல்லது இருந்தது போலும் காட்டிக்கொண்டிருக்கலாம்.
எங்கே? ஸ்ரீ வில்லிப்புத்தூரில் விஷ்ணு சித்தர் என்ற வைஷ்ணவர் ஆஸ்ரமத்தின் துளசி நந்தவனத்தில்.
எப்போது ? ஏழாம் நூற்றாண்டில். என்று? ஆடிப்பூரம் அன்று. என்ன குழந்தை, அழகிய ''மகாலக்ஷ்மி ',

ஆடிப்பூரம் உலகமுழுதும் அந்த அழகிய பெண்ணின் பிறந்தநாளாக கொண்டாடப்பட்டாலும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் கோலாகலத்துக்கு கேட்கவே வேண்டாம். ஜன்மஸ்தலம் அல்லவா.

அந்த குழந்தையை தனது நந்தவனத்தில் துளசி செடிகளிடையே கண்டெடுத்த விஷ்ணு சித்தர் பேர் சூட்டி தனது பெண்ணாக வளர்த்தார். தன்னைப்போலவே அவளையும் ஒரு வைணவ சிகாமணியாக்கினார், இருவருமே ஆழ்வார்கள். அவளால் அவர் பெரியாழ்வார். அவள் பாசுரங்கள் எழுதி திருப்பாவை, நாச்சியார் திருமொழி, எல்லாமே உலக பிரசித்தம். சிறுவயதிலேயே மணம் முடிக்கும் அக்காலத்தில் ஆண்டாளுக்கு திருமணமானது, ரெண்டே பேர் இதுவரை சில வருஷங்கள் தனியாக வாழ்ந்து மகிழ்ந்திருந்து அவள் மணமாகி ''புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்'' ஆனாள் .அவர் தனியாகி விட்டார். ஸ்ரீரங்கத்திலிருந்து அவள் மணம் முடிந்து அவர் வில்லிப்புத்தூரில் தனது துளசி நந்தவன ஆஸ்ரமத்தில் நிற்கும்போது வெறுமை தெரிகிறது, பிரிவு புரிகிறது. ஒரு தந்தையின் மனநிலையை அறிவோமா?
++

ஆண்டாள் மனதிற்கிசைந்த கணவனை அடைந்து திருவரங்கனோடு ஒன்றி விட்டாள் . வேண்டியதை அடைந்துவிட்டாள் .

சிலை போல வெகு நேரம் நின்று கொண்டிருந்தார் விஷ்ணு சித்தர். அந்த வைபவம் திருவரங்கத்தில் திவ்யமாக நிறைவேறியது. திரும்ப வில்லிப்புத்தூர் நடந்து வந்தார். தனியாக தனது பரந்த ஆஸ்ரம நந்தவனத்தை சுற்றி முற்றிலும் பார்த்தார். ஒருவேளை அங்கே ஏதாவது பூச்செடியோடு கோதை பேசிக்கொண்டிருப்பாளோ?

''எனக்கு அன்னம் ஆகாரம் எல்லாம் மறந்து விட்டதா வெறுத்து விட்டதா? அவளில்லையே! இனி அன்னம் எதற்கு, நீர் எதற்கு , வீடு வாசல் இந்த நந்தவனம் ஏன், என் உடலே எதற்கு? எல்லாம் அவளாகவே இருந்து, திடீரென்று அவளே இல்லாமல் போன பின் நானே எதற்கு?. என் கண்களில் வழியும் நீர் ஆனந்தக் கண்ணீரா? இல்லை அளக்க முடியாத சோக கண்ணீரா? தெரியவில்லையே. பித்து பிடித்து விட்டதே!!.

இதோ! இந்த துளசி வனத்தில் தானே, ஒரு ஆடிப் பூரம் அன்று, விடியற் காலை என் ரங்கனை பாடிக் கொண்டே புஷ்பம் பறிக்க வந்தபோது அந்தச் சின்னக் குரல் கேட்டேன். ஆச்சர்யமாக, அவளை ஒரு தெய்வ பிம்பமாக, தாயாரின் சிறு வடிவாகப்பார்த்து இதோ இந்த கூடத்தில் இட்டு பால் வார்த்தேன். இங்கு தானே ரங்கன் முன்னால் அமர்ந்து அவளை மடியில் போட்டுகொண்டு அனைவர் மத்தியிலும் அவளுக்கு இரவெல்லாம் யோசித்து பொருத்தமாக தேர்ந்தெடுத்த “கோதை ”(பூமியில் கிடைத்தவள்) என்ற பெயரிட்டேன். இங்கு தானே அவள் எப்போதும் என்னோடு அமர்ந்து பேசுவாள். ரங்கன் கதையெல்லாம் திரும்ப திரும்ப கேட்பாள். வாய் ஓயாமல் நானும் சொல்லி சொல்லி மகிழ்வேனே.எப்போதும் இந்த பூக்கூடையை பார்த்து “மாலை ரெடியா?” எனறு கேட்பாளே. ஏன் எதற்கு என் று ரொம்ப காலம் புரியாமலே இருந்து விட்டேனே!. தினமும் கட்டி வைத்த மாலையை தன் தோளில் சூட்டிக்கொண்டு இங்கே பின்னால் இருக்கும் கிணற்றில் நீரில் தன் அழகை பார்த்து “ரங்கா, நான் உனக்கு ஏற்றவளா? உனக்கு பிடிக்கிறதா என்னை” என்று கேட்பாளாமே!.

இறைவனின் மனதில் இடம் பிடித்த அவளை ஒன்றும் அறியாதவனான நான் கோபித்ததே மாபெரும் தவறு. அவள் சூடிக்கொடுத்த மாலை தான் வேண்டும் என்று ரங்கனே அல்லவா உணர்த்தினான் எனக்கு.

அவள் அவனுக்காகவே பிறந்தவள். என்னிடம் வளர்வதற்காகவே வந்தவள். நான் பாக்யவானே. அப்பறம் தானே இதெல்லாம் அந்த அழகிய மணவாளனே எனக்கு புரிய வைத்தான்!.

ஆஹா, என்ன குரல், என்ன குரல், அவளுக்கு. எவ்வளவு சூடிகை. எவ்வளவு அறிவு. என்னமாய் தமிழ் பாசுரங்கள் எழுதலானாள். என் பெண் சாதாரண பிறவி அல்ல என்று வாய்க்கு வாய் சொல்வேனே. அவள் பாசுரங்ளை நானே எத்தனையோ முறை பாடி மகிழ்ந்தேனே எல்லாமே அவள் என்னை விட்டு பிரிவதற்காகவேவா?”.

“ச்சே” என்ன எண்ணம் இது? . அவள் எங்கு என்னை விட்டு பிரிந்தாள்?. நான் அல்லவோ மேள தாளங்களோடு அரசன் அனுப்பிய பல்லக்கிலே சகல மாலை மரியாதைகளோடு மகாலட்சுமியாக அவளை சீவி சிங்காரித்து சீர் வரிசையோடு மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பினேன். கூடவே போனவனும் கூட.!

என்ன அழகு அவளுக்கு, எத்தனை மகிழ்ச்சி முகத்தில். “இன்னும் எத்தனை தூரம், எவ்வளவுநேரம் இருக்கு ஸ்ரீ ரங்கத்துக்கு'' என்று கேட்டு கொண்டே வந்தாளே. ஸ்ரீரங்கம் போனோம். அரங்கன் ஆலயம் எதிரே தெரிந்தது.

“என்ன ஆச்சர்யம், என்ன அதிசயம்! என்னைக் கிள்ளி பார்த்துக் கொண்டும் கூட என்னால் நம்ப முடியவில்லையே”.

'இதோ, வந்து விட்டது, என் ரங்கன் எனக்காக காத்திருக்கும் இடம்! இதோ வந்துவிட்டேன் ரங்கா, ........ ரங்கா, எனக்காக உன்னைக் காக்க வைத்து விட்டேனே!. “சீக்கிரம், பல்லக்கை இறக்குங்கள்”

அவசர அவசரமாக பல்லக்கை இரக்கச் சொல்லி தாவிக் குதித்து ரங்கனின் சந்நிதிக்குள் ஓடினாள். எல்லாரும் ''ரங்கா ரங்கா'' என்று உணர்ச்சி பொங்க கூவினோம். என் கோதை, எனை ஆண்டாள், எஙகளையெல்லாம் பார்க்கக் கூட நேரமில்லாமல் உள்ளே சென்றாள். ரங்கனை ஆரத்தழுவினாள். பிறகு? பிறகு .....? ரங்கனோடு கலந்தாள் ..... எங்கே அவள்......மறைந்தாள்!!!

இறைவனோடு எங்கள் இறைவி ஒன்றாக கலந்தது துக்கமா?? நிச்சயம் இல்லைதான்! ஆனால், ஆனால்,....
அவளை இனி என் கோதையாக பார்க்க முடியவில்லையே!”------ ஒரு தகப்பனின் பாசக் குமுறல் தான் இது!.

SREE KRISHNARPANAM SEVA டிரஸ்ட்
PUBLICATIONS ARE NOT PRICED AND ARE NOT FOR SALE. ONLY DONOR COPIES AVAILABLE FOR MINIMUM DONATION. ALL DONATIONS RECEIPTED AND EXEMPTED FROM INCOMETAX UNDER SECTION 80G. CONTACT 9840279080

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...