ஒரு அற்புத ஞானி J.K. SIVAN
சேஷாத்திரி ஸ்வாமிகள்
உண்ணாமுலை அம்பாள் தரிசனம். J.K. SIVAN
ஒரு பிரதான கோவிலில் ப்ரம்மோத்சவத்தில் தேர் புறப்பாடு என்பது எளிதான காரியம் அல்ல.
அதுவும் திருவண்ணாமலை அருணாச்ச லேஸ்வரர் ஆலய பிரம்மோத்சவம். அம்பாளுடைய தேர் புறப்பட்டது. எண்ணற்ற பக்தர்கள் இழுத்துச் சென்றார்கள். அந்தக்காலத்தில் தெருவெல்லாம் தார் போட்டதில்லை. மண் தரை. ஆயிரக்கணக்கான கைகள் சேர்ந்து இழுத்த போது அந்த தேர் எப்படியோ ஒரு பள்ளத்தில் ஒரு சக்கரம் சிக்கி நிலை குலைந்து நின்று விட்டது. மணிக்கணக்காக எத்தனையோ பேர் பிரயாசைப் பட்டும் தேர்க்கால் அசையவில்லை. வகையாக பள்ளத்தில் ஆழ்ந்துவிட்டது. என்ன செய்வது?
எங்கே இருந்தாரோ, எப்படித் தெரிந்ததோ தெரியவில்லை. அங்கே ஓடி வந்தார் சேஷாத்திரி ஸ்வாமிகள். கூட்டத்தை கையால் தள்ளி பிளந்து கொண்டு வந்து பள்ளத்தில் இறங்கிவிட்டார். தேர்ச்சக்கரத்தை அங்கும் இங்குமாக ஏதோ தடவிக் கொடுத்தார். வெளியே வந்தார். தேர் வடத்தை கையால் பிடித்தார் இழுத்தார். எண்ணற்ற கைகள் அவர் இழுப்பதை பார்த்து கயிற்றைப் பிடித்து இழுத்தன. தேர் பள்ளத்திலிருந்து எளிதில் விடுபட்டு ஒரு சேதமுமில்லாமல் சென்னை அண்ணாசாலையில் கார் போவதைப்போல ஜம்மென்று நகர்ந்தது. அம்பாள் தேரை அம்பாளே இழுத்தாள் என்றபோது நகர்ந்ததில் என்ன அதிசயம்?
இனி அம்பாள் தரிசனம் பற்றி சொல்லட்டுமா?
வெங்கட்ராமன் ஒரு பதினைந்து வயசு பையன். சந்தியா வந்தனம் விடாமல் பண்ணி காயத்ரி மந்தரம் சொல்லும்
''நல்ல'' பையன். ஒரு நாள் சாயந்திரம் சந்தி பண்ணி முடித்து பட்டை பட்டையாக நெற்றியில், கைகளில், மார்பில் வெண்ணிற விபூதி அணிந்து அருணாசலேஸ்வரர் கோவில் அம்மன் தரிசனத்த்துக்கு சென்றவனை,,
இளையனார் கோவில் அருகே ஸ்வாமிகள் பிடித்துக் கொண்டார்.
''டே பயலே, எங்கே போறே?''
''அம்பாள் தரிசனம் பண்ண''
''இங்கேயே அம்பாளை பார்க்கறியா ?''
''ஓ!. எங்கே?''
இதோ, அவன் கண்களை தனது கையால் மூடி ''பார் '' என்கிறார். ஆலயத்துக்குள் இருக்கும் அபீத குஜாம்பாள் (உண்ணா முலை அம்மன் ) அவனது மூடிய கண்களுக்குள் தெரிந்தாள் .
''பார்த்தியா, அம்பாள் தெரிஞ்சாளா? எப்படி இருந்தா சொல்லு ''
''மஞ்சள் புடவை. மல்லிகைப்பூ மாலை. தலையிலே கிரீடம், இடுப்பிலே தங்க ஒட்டியாணம். காலுலே தண்டை கொலுசு.''
''சரி உள்ளே போய்ப் பார்''
பையன் உள்ளே சந்நிதிக்கு சென்றவன் அம்பாளை பார்த்தான். அதே உடை, நகை, அலங்காரம்.... ஆச்சர்யம் தாங்க முடியாமல் பையன் அன்று வீட்டில் அனைவருக்கும் இதை சொல்ல, அது ஊருக்கு எல்லாம் தெரிந்தது. ஒவ்வொரு நாளும் யாரோ மூலமாக சேஷாத்திரி ஸ்வாமிகள் மஹாத்ம்யயம் விடாமல் பரவிக்கொண்டிருந்த காலம் அது.
அவர் உள்ளே சென்று பார்க்கவில்லையே, அம்பாளின் அலங்காரம் அவருக்கு எப்படி தெரிந்தது என்றா கேட்கிறீர்கள்?
No comments:
Post a Comment