Wednesday, January 23, 2019

GEETHA GOVINDAM



கீத கோவிந்தம் J.K. SIVAN
ஸ்ரீ ஜெயதேவர்

கீத கோவிந்தத்தின் சக்தி

ஜெயதேவர் எழுதிய கீத கோவிந்தம் பாடல்கள், ராஜா எழுதிய பாடல்கள் இரண்டும் பூரி ஜெகந்நாதன் முன்பு வைக்கப்பட்டு கதவு சாத்தப்பட்டு, மறுநாள் காலையில் ஜெகநாதனின் தீர்ப்பு என்ன என்று அறிய ராஜா ஆவலாக காத்திருந்தான். எது சிறந்தது, ஜெயதேவர் கீதகோவிந்தமா, என்னுடைய பாடல்களா?

மன்னனுக்கு உள்ளே ஒரு வருத்தம், சிறந்த பண்டிதர்கள் ஏற்கனவே சொன்னது தான் அந்த வருத்தத்துக்கு காரணம்.

''அரசே, நீங்கள் எழுதியது மிக நன்றாக இருக்கிறது. ஆனால், ஜெயதேவருடைய காவியத்தில் பத்தில் ஒரு பங்குகூட தேறாது என்று தோன்றுகிறது''

‘‘நீங்கள் ஜெயதேவருக்கு சாதகமாக பேசுகிறீர்கள். பகவானுடைய சந்நிதானத்தில் வைத்துப் பார்க்கலாம்” என்று எடுத்த முடிவு என்ன சொல்லப்போகிறது.?

பொழுது விடிந்து ஜகந்நாதன் ஆலய கதவு திறந்ததும் பகவானுடைய திருமுடியின்மீது ஜெயதேவரின் கீத கோவிந்தம் அலங்காரமாகத் திகழ்ந்தது. ராஜா எழுதிய காவியம் வைத்த இடத்திலேயே இருந்தது. இதைக் கண்ட அரசன் மனம் வருந்தவில்லை, மனம் திருந்தினான்.

‘‘பகவானே ஏற்றுக்கொள்ளும்படியான உங்கள் காவியத்துடன் நான் போட்டி போட்டேன்’’ என்று ஜெயதேவரிடம் மன்னிப்புக் கேட்டான்.

ஜெயதேவர் ‘‘அரசே! வருந்தாதீர்கள். பகவான் நாமம் வந்துவிட்டால் எல்லா பாடங்களுமே புனிதமானதுதான். நான் என் கீதகோவிந்தத்தின் கடைசியில் உங்களுடைய துதியையும் சேர்த்துக் கொள்கிறேன் என்றார். அரசன் ஜெயதேவரை தன் அரண் மனைக்கு வரும்படி அழைத்தார். இப்போது மிக பணிவுடன் அழைத்தால் பத்மாவதியும் ஜெயதேவரும் அரண்மனைக்கு வந்தனர்.

அரசர் தினமும் இன்னும் ஒருநாள் இருந்துவிட்டு போகுமாறு அன்புடன் வேண்டுவான். அப்படியே காலம் செல்ல செல்ல ஜெயதேவரின் சீடராகவே ஆகிவிட்டான் ராஜா.

ஒருநாள் ''ராஜா, இந்த அரண்மனை சுகங்கள் போதும். என்னுடைய ஆசிரமம் செல்ல அனுமதிக்கவேண்டும். நான் சில காலம் தீர்த்த யாத்திரை போக உத்தேசம்.'' என்கிறார் ஜெயதேவர். அரசனோ சில பரிவாரங்களுடன் தானும் உடன் புறப்பட்டான். ஜெயதேவர் மனைவி பத்மாவதியும் மகாராணியும் அரண்மனையிலேயே தங்கிவிட்டனர்.

ஒருநாள் மகாராணியும், பத்மாவதியும் பேசிக்கொண்டிருந்த போது பேச்சு ஒரு பெண் தன் கணவனுடன் உடன்கட்டை ஏறிய விவரத்தைப் பேசினார்கள். ராணி ‘‘இவள் எப்படிப்பட்ட பதிவிரதையாக இருக்க வேண்டும்?” என்று அதிசயித்தாள்.

''இல்லை மஹாராணி, தன் பதி இறந்துவிட்டார் எனக்கேட்ட உடனேயே இவள் இறந்திருக்க வேண்டும். இவ்வளவு தூரம் நடந்து வந்து உடன்கட்டை ஏறி இருக்கிறாளே!’’ என்று கூறினாள் பத்மாவதி.

ராணிக்கு, பத்மாவதியை சோதித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஆகவே அவள் திட்டமிட்டிருந்த
படியே, ஒருநாள் அரண்மனை சேவகன் பெரிதாக அழுது கொண்டு பத்மாவதி ராணி இருவரும் அமர்ந்திருந்த இடம் வந்தான்.

''என்ன விஷயம், எதற்கு அழுது கொண்டு இங்கு வந்தாய்? '' என்றால் ராணி.
அந்த தூதன் ‘‘ மஹாராணி, தீர்த்த யாத்திரையாகச் சென்ற நம்முடைய புரோகிதரை (ஜெயதேவரை) புலி அடித்துக் கொன்றுவிட்டதாம்” என்றான்

இதைக்கேட்ட பத்மாவதி ‘ஹா’ என்று அலறினாள். அடுத்த நிமிடம் அவள் உயிர் போய் விட்டது. விளையாட்டுக்காக இவ்வாறு செய்த ராணி திகைத்துவிட்டாள்.

இதற்கிடையே தீர்த்த யாத்திரை சென்றிருந்தவர்கள் எதிர்பாராமல் திரும்பிவிட்டனர். அரசர் வந்ததை பார்த்ததும் ராணி, தான் விளையாட்டாக செய்தது வினையாகி விட்டதை அழுதுகொண்டே சொன்னாள். அதைக்கேட்ட அரசனுக்கு கோபம் வந்தது.

‘ என்ன காரியம் செய்தாய் நீ முட்டாளே, நான் தெய்வமாக நினைப்பவர்களை நீ சோதித்தாயா? இப்போதே உன்னைக் கொன்று நான் என்னையும் மாய்த்துக் கொள்கிறேன்” என்று வாளை உருவினான். அவனை தடுத்து சமாதானப்படுத்தினார் ஜெயதேவர்.

‘‘பகவானுடைய விருப்பம் அதுவானால் அரசி என்ன செய்வாள்?’’ என்றார்.
'
'ஐயோ குருதேவா, நம் அரண்மனைக்கு தம்பதிகளாக வந்தீர்கள். என் மனைவியின் விளையாட்டு விபரீதமாகி விட்டதே. தாங்கள் மனைவியை பிரிந்திருப்பதை என்னால் தாங்க முடியவில்லை”

‘‘அரசே. உயிர் நீத்தவர்களை எழுப்பும் ம்ருதசஞ்சீவினி எனும் மூலிகைக்குச் சமமான கீதகோவிந்தத்தை பாடுகிறேன். கிருஷ்ணனை வேண்டி நான் பாடும் என் குரல் கேட்டு பத்மாவதி எழுந்திருக்கிறாளா

ஜெயதேவர் உருவில் பகவான் வந்து முன்பு ஓலையில் எழுதிய அந்த பாடலை எடுத்து ஜெயதேவர் பாடினார். தன்னை மறந்து கண்ணன்-ராதை தியானத்துடன் உருக்கமாக அந்தப் பாடலை பாடினார். ஜெயதேவருடைய குரல் பத்மாவதியின் உடலில் புகுந்து ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. பத்மாவதி மெதுவாகக் கண் திறந்து எழுந்து உட்கார்ந்தாள்.'' என்னே கண்ணன் அருள்.! கீத கோவிந்தம் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...