Sunday, January 6, 2019

NOSTALGIA



எனது முதல் டாக்டர் J.K. SIVAN

முனுசாமி ஒரு சாதாரண பெயர். அனைவருக்கும் எத்தனையோ முனுசாமிகளை தெரிந்திருக்கும். எனக்கும் அவ்வாறே தான் அல்லவா? ஆனால் இந்த குறிப்பிட்ட முனுசாமி கொஞ்சம் வேறே மாதிரியான ஆள்.

கருவலாக முகம் சுருங்கி, முன் தலை முடியிழந்து, அருகில் ரெண்டடி முன்னால் இருந்தாலே கவர்னர் பீடி மணத்தோடு, விரிசல் விட்ட பெரிய காய்ந்த கீழ் உதடுகளோடு, சுருங்கிய கண்கள், ஒட்டிய கன்னங்களின் மேல் முள் தாடியோடு, விரக்தியாக ஒரு பார்வையுடன், ஐந்தடி தாண்டாத உயரம். தலையில் எப்போதுமான அடையாளம், ஒரு அழுக்கு நீல துணியில் முண்டாசு, இடது கால் தாங்கி தாங்கி நடந்து கொண்டு கையில் ஒரு பெரிய கித்தான் பை, கக்கத்தில் ஒரு சிறிய அலுமினிய பெட்டியோடு உங்களுக்கு யாராவது தெரியும் என்றால் அது தான் நான் சொல்லும் முனுசாமி.

முனுசாமியை நீங்கள் இப்போது தேடவோ பார்க்கவோ முயல அவசியமில்லை. 70 வருடங்களுக்கு முன்பு நான் பார்த்தபோதே அவருக்கு 50க்கு மேல் வயது என்பார். சரியான வயது தெரியாது என்பார்.

முனுசாமி யார்? இந்த கேள்விக்கு உடனே ஒரு வார்த்தையில் பல பதில்கள் என்னால் சொல்ல முடிகிறது. காரணம் என் அனுபவம். முனுசாமி ஒரு டாக்டர், நாவிதர், கிருஷ்ணன் வேஷதாரி, ஜோசியர். நாதஸ்வர வித்வான். இது அத்தனையுமே சரியான விடைகள்.

முனுசாமி கக்கத்தில் வைத்திருக்கும் அலுமினிய பெட்டியில் நாவித உபகரணங்கள் இருக்கும். அவை என்ன என்றால் முக்கியமாக ஒரு சிறிய முகம் பார்க்கும் கையகல கண்ணாடி. தண்ணீர் வைக்க ஒரு அலுமினிய கிண்ணம். ஒரு சாணைக்கல், ஒரு தோல் பட்டை. அதுவும் கத்தி தீட்டவே. . சில கத்திகள், கத்திரிக்கோல், பிளாஸ்டிக் சீப்பு, ஒரு பயங்கர மெஷின். அதை புல்டோசர் போல நெற்றியிலிருந்து பின் மண்டை வரை செலுத்தும்போது மண்டையை அது படுத்தும் பாடு எனக்கு தான் தெரியும். ஒரு கட்டிங் ப்ளேயர் போல் அதை அமுக்கி அமுக்கி முனுசாமி அதை நகர்த்தியபோது தலை முடியை வேரோடு அது பிடுங்கும். கிருஷ்ணா! நீ அப்போதெல்லாம் எங்கு போனாய் என்னை காப்பாற்றாமல்? புல் வெட்டுவதுபோல் வெட்ட வேண்டிய அந்த பயங்கர உபகரணம் ஏனோ வேரோடு பிடுங்கும் ஆபத்தான ஆயுதமாக அல்லவோ இருந்தது. அதை எங்கள் எல்லோர் தலையிலும் செலுத்தினால் தான் எங்கள் அப்பா நாலணா காசு கொடுப்பார்.

''முனுசாமி மெஷின் கொண்டுவந்திருக்கியா? என்பது தான் அவர் கேட்கும் முதல் கேள்வி. இந்த கேள்வி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை. அதுவரை எங்கள் தலைகளில் செடி முளைக்க அனுமதி. ஆகவே அந்த ஹிட்லர் முனுசாமி எங்களை படாத பாடு படுத்தினான். ஒரு தலைக்கு நாலணா. இதை மாதத்திற்
கொருதரம் ஏன் செலவு செய்யவேண்டும் என்று என் தந்தையார் விருப்பப்படி மூன்று மாதம் முடி வளராதபடி பண்ணுவதற்கு அந்த மெஷின் உதவியது. நாங்கள் எவ்வளவோ கெஞ்சியும் முனுசாமி இரக்கமின்றி ஒரு அங்குலம் நீளம் முடி கூட விட்டு வைக்க மாட்டான். படு பாவி. கத்தி வேறு பல இடங்களில் காதிற்கு பின்னால், பின்னந்தலையில், எல்லாம் காயப்படுத்தும். எரிச்சல் உள்ளேயும் வெளியேயும் எங்களுக்கு. முடிதிருத்த அமரும் முன்பே எங்கள் ஆடைகள் அகற்றப்பட்டு நாங்கள் மூன்று சகோதரர்களும் பழனி ஆண்டியாக கோவண தாரிகள். முடி எடுப்பு விழாவுக்குப் பிறகு நேராக வீட்டின் பின்புறம் கிணற்றடியில் அமர்ந்து எங்கள் அம்மா வாளியால் ராட்டினம் ஓசைப்பட நீர் மொண்டு எங்கள் தலைகளில் கொட்டி அபிஷேகத்திற்கு பிறகு தான் வீட்டில் உள்ளே அனுமதி. இந்த எல்லா அக்ரமமும் எங்கள் வீட்டு வேப்ப மரத்தின் அடியில் தான் நடக்கும். அது தான் ''முனுசாமி முடி திருத்தகம்.''
முடி வெட்டியபின் சாஸ்திரத்திற்கு கையகல கண்ணாடியை எங்களிடம் கொடுப்பான். அதில் பார்த்தால் என்னையே எனக்கு அடையாளம் தெரியாது. ஏறக்குறைய மொட்டை தலை. அரை இஞ்சு தாவரம்.

எங்களுக்கு - எனக்கு, என் அண்ணன்கள் ரெண்டுபேருக்கு, அப்பாவுக்கு, இவ்வளவு பேருக்கும் முனுசாமி '' முடி திருத்த (படு பாவி ''முடி எடுக்க'') உதவிக் கொண்டிருக்கும்போதே பக்கத்து வீட்டில் இருந்து கோபாலக்ரிஷ்ணனிடமிருந்து குரல் வந்து விடும். ''என்ன முனுசாமி ஆச்சா. சீக்கரம் வா! '' சுப்ரமணிய அய்யர் குரல் எதிரொலிக்கும்.

''வந்துட்டேன் சாமி. இதோ... இதோ'' --'' இதோ'' நேரம் ஓடிக்கொண்டே இருக்கும். அப்பா எல்லார் தலையும் பார்த்து முழு திருப்தி (திருப்பதி!!) பெற்ற பின்னே தான் ஒரு ரூபாயை கொடுப்பார். முனுசாமி பேரம் பேசுவான். எங்கப்பா தான் ஜெயிப்பார். நாலு பேருக்கு என்பதால் டிஸ்கவுன்ட் கேட்பார். முனுசாமி கஸ்டமர் ஸேடிஸ்பேக்ஷன் என்பதற்காக கொடுத்ததை வாங்கிக்கொண்டு நகர்வான்.

நகர்வதற்கு முன்பு இதில் விட்டதை அடுத்ததில் பிடிப்பான். அவன் தான் சகல கலா வல்லவன் ஆயிற்றே. இப்போது முனுசாமி டாக்டர். எனக்கு என் சகோதரர்களுக்கு எங்காவது சொத்தைப்பல், அஜீரணம், வயிற்று வலி, சுளுக்கு, அடிபட்ட காயம், சிரங்கு, இது போன்ற எந்த வியாதி இருந்தாலும் தானே கண்டுபிடித்து எல்லாவற்றிற்கும் வெள்ளை வெள்ளையாக சில பொடிகள் சிறுசாக பொட்டலம் கட்டி கித்தான் பையில் வைத்திருப்பதில் சிலவற்றை வழங்குவான். தேனில் குழைத்து சாப்பிட வேண்டும்.

பல்லில் குழி இருந்தால், லேகியம் போல, புளி போன்ற கெட்டியான ஒன்றை பல்லில் வைத்து ஒரே அழுத்து அழுத்துவான். வலிக்கும். எரியும் கூட. இதற்கு அப்பா கேட்டதை கொடுத்திடுவார். நான்கு பேருக்கும் வீட்டில் பெண்கள் சொன்ன வியாதிகள் அனைத்திற்கும் ஏறக்குறைய ஒரே சூரணம் மாதிரி பல அளவில், பல பொட்டலங்கள் கை மாறும். அனைவரின் வியாதிக்கும் மருந்திற்கான பீஸ் அதிக பட்சம் நாலு ரூபாய் கைமாறும். எனது கடை வாய் பல் ஒன்று இடது பக்கம் வெகுநாட்களாக குழி விழுந்து கொண்டு வந்ததை முதலில் மூடிய டாக்டர் முனுசாமி. என்னால் மறக்க முடியாதவர்.

முனுசாமியின் அடுத்த அவதாரம் நாதஸ்வர வித்துவான். ஊரில் எந்த உத்சவம் ஆனாலும் எவர் வீட்டில் கல்யாணம், விசேஷம் ஆனாலும் முனுசாமியின் ''நாத (அப)ச்வர இன்னிசை. பாட்டுக்கும் இசை என்கிற ஒசைக்கும் சம்பந்தமில்லாமல் அவரது மருமகன் தவில் வாசித்து கெட்டவார்த்தையில் திட்டு வாங்குவதை பார்த்திருக்கிறேன். இந்த அவதாரத்தில், முனுஸ்வாமி நெற்றியில் பட்டையாக விபுதி, கழுத்தில் உருத்ராட்சம். ஒரு அழுக்கு ஜிப்பா-- ஒரு காலத்தில் வெண்மையாக இருந்து சாமியாராக காவி ஏறியது-- காலில் செருப்பு கிடையாது. அவர் சின்ன பையன் ஒத்து. மாப்பிள்ளை தவில். இது நாதஸ்வர வித்வான் முனுசாமி கோஷ்டி..

முனுசாமியின் இன்னொரு பக்கம் கபட நாடக சூத்ர தாரி கிருஷ்ணன். பல்லாவரம் பின்னால் அப்போதெல்லாம் ஒரு கிராமத்தில் தான் முனுசாமியின் ஜாகை. அந்த ஊரில் அடிக்கடி தெருக்கூத்து நடைபெறும். அதற்கு வசனம் எழுதுவது பாடுவது எல்லாமே இசை ஞானி முனுசாமி தான். முக்யமான அயன் ராஜபார்ட் , கிருஷ்ணன் வேஷம் அவருடையது தான். நாலேமுக்கால் அடி உயரத்தில் கையில் புல்லாங்குழலோடு தலையில் ஒரு அட்டை கிரீடம், முகம் கை மார்பு, கழுத்து எல்லாம் விஷம் போல நீல நிற சாயம், கண்கள் ஒடுங்கி முனுசாமி நடமாடி வர கோபியர்கள், பீடி பிடிப்பதை நிறுத்திவிட்டு ஆட வந்து விடுவார்கள். (கோபியர்கள் அவர் நண்பர்கள். பெண் வேஷ தாரிகள். உற்சாகமூட்ட தான் கிருஷ்ணருக்கும் கோபிகளுக்கும் கவர்னர் பீடி கொஞ்சம் தேவைப்படும். முனுசாமி உபயம்.)

மரத்திற்கு பின்னால் சென்று ரெண்டு இழுப்புக்கு பிறகு உற்சாகம் பிறக்கும். தீவர்த்தி வெளிச்சத்தில் இரவெல்லாம் மஹா பாரதம் காட்சிகள் நடைபெறும். இதற்கு முனுசாமி எல்லாரிடமும் முன்கூட்டியே வசூல் பண்ணிவிடுவார். இது போதும் நடிகர் முனுசாமி பற்றி சொல்ல.

முனுசாமிக்கு ரெண்டு மனைவிகள். அவர்கள் சண்டை தீர்க்கவும் கிருஷ்ணன் முனுசாமி உதவுவார். அவர்கள் ரெண்டு பேருமே மருத்துவ நிபுணர்கள். எங்கு யாருக்கு ஊரில் பிரசவம் நடந்தாலும் இவர்கள் தான் முதலில் பிரசவம் கவனித்து குழந்தை ஆணா பெண்ணா என்று முதலில் வெளியே வந்து சொல்வார்கள். பிரசவம் வீட்டிலேயே தான் நடக்கும் அப்போதெல்லாம். நர்சிங் ஹோம் என்றால் என்ன? சிசேரியன் என்பது ஒரு கெட்ட வார்த்தையா என்று கேட்கும் காலம்?

வலி எடுத்தால் சொல்லி அனுப்பினால் - டெலிபோன் கிடையாது. ரெண்டு பெண்களும் வந்து இரவெல்லாம் உள்ளே படுத்திருப்பார்கள். வெந்நீர் போட்டு அண்டா அண்டா வாக ரெடியாக இருக்கும். முனுசாமியின் கத்தி அவர்களிடம் இருக்கும் தொப்புள் கொடி அறுக்கும் கத்தி...!!

இந்த இடத்தில் தான் ஜோசியர் முனுசாமி வருகிறார். நாள் நக்ஷத்ரம் , நேரம், காலம், யோகம்,கர்ணம் என்றெல்லாம் பேசி எந்த ராசி, என்ன எதிர்காலம் என்றெல்லாம் பிறந்த சிசுவுக்கு நிர்ணயித்து சொல்வார். அதற்கும் பீஸ் ஐந்து ரூபாய் உண்டே.

பிறகு மற்றவை ஞாபகப்படுத்தி சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...