Friday, January 25, 2019

NOSTALGIA



நாம் இந்நாட்டு மன்னர்கள் J.K. SIVAN

ஒரு பழம் புத்தகம்.... ஏதோ ஒரு கதை அதில் கண்ணில் பட்டது....

ஒரு பழையகாலத்து பரந்து விரிந்த காடு. அதில் எல்லாம் நிறைய இருந்து எதுவுமே கிடைத்தது. அதை பல மிருகங்கள் மாற்றி மாற்றி பலகாலம் ஆண்டுவந்தன. ஒரு சிங்கத்தின் பிடியில் அது வெகுகாலம் இருந்ததாம். இந்த சிங்கம் கொடியது. அதால் தீமை தான் அதிகம். என்று ஒரு மான் புரட்சி செய்தது. ஏன் சிங்கம் நன்றாக தானே நம்மை ஆள்கிறது. என்று கரடிகள், குரங்குகள் கத்தின. இல்லை சிங்கம் நம்மை அழிக்கிறது. மற்றொரு காட்டுக்கு இங்கிருக்கும் ஆடு மாடுகளை அப்புறப் படுத்தி ஒவ்வொன்றாக இங்கே அழிந்துவிடும். வேண்டாம் இது இனிமேல் என்று மானும் அதை சேர்ந்த ஆடு மாடுகள் கத்தின. சிங்கத்திற்கு பல இடங்களில் எதிர்ப்பு அதிகரித்தது. '' சரி நான் போகிறேன். நீங்களே உங்கள் புது ராஜாவை நியமித்துக் கொள்ளுங்கள்'' என்று முடிவெடுத்த சிங்கம் சும்மா போகவில்லை. இதோ இந்த ஓநாய்க்கு உங்களோடு இருக்க பிடிக்கவில்லையாம். அதன் கூட்டத்துக்கும் ஒரு இடம் கொடுத்துவிட்டு மீதியை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று காட்டை ரெண்டு மூன்று துண்டாக்கிவிட்டது. மான்கள் ஆடுகள் குதிரைகள் குரங்குகள் சந்தோஷத்தால் கூத்தாடி தங்களுக்கு புதிய தலைவனாக இருக்க அந்த கிழ மானையே விரும்பினாலும் அது ஏற்காமல் ஒரு வரி குதிரையை அடையாளம் காட்டி அது பொறுப்பேற்றது. வரிக்குதிரை நல்லது மாதிரி தான் தெரிந்தது. அதனிடம் நிறைய எதிர்பார்த்த விலங்குகள் ரெண்டு மூன்று தலைமுறைகள் காத்திருந்தன. வரிக்குதிரை வம்சம் வரிசையாக கூட்டம் சேர்த்து வருஷங்கள் தான் ஓடியது. அதன் கூட்டம் சுபிக்ஷமாக வளர்ந்தது மற்றதெல்லாம் வாயைப் பிளந்து கொண்டு மேலே பார்த்தது...... இந்த காட்டில் எல்லாம் நிறைய இருந்தாலும் நமக்கு ஏன் இன்னும் ஒன்றும் கிடைக்கவில்லை? இந்த கேள்விக்கு பதில் தெரியாத விலங்குகள் காட்டில் ஒரு மாறுதல் உண்டுபண்ணி ஒரு காளை மாடு பொறுப்பேற்றது. அதால் முடிந்ததை செய்தது. இது வரிக்குதிரை கும்பலு க்கு பிடிக்கவில்லை.... ஏகப்பட்ட ரகளை ......

''.சே என்ன கதை இது..உப்பு சப்பு என்று ... மேலே படிக்க எனக்கு பிடிக்கவில்லை..

இன்று ஜனவரி 26. காலை 7 மணிக்கு கொடி ஏற்றுவார்கள்.... மிட்டாய் கொடுப்பார்கள். நான் எட்டு வயதில் சுதந்தர இந்தியப் பையன் ஆனவன். சூளைமேடு கார்பொரேஷன் ஸ்கூலில் முதல் நாளே சுப்ரமணிய அய்யர் சொல்லிவிட்டார். 'டே பசங்களா, நாளைக்கு காலம்பர 6 மணிக்கு எல்லோரும் இங்கே வரணும். டிரஸ் பளிச்சினு இருக்கணும். எவனாவது குளிக்காம, தலை சீவாம, அழுக்கு டிரஸ் சோட வந்தால் பிரம்பு பழம் ஒவ்வொரு கையில் அஞ்சஞ்சு சூடா கிடைக்கும். ஜாக்ரதை'' இப்படியே சுதந்திர தினம், ரெண்டு வருஷம் கழித்து குடியரசு தினம்.......யதேச்சாதிகாரத்தொடு குடியரசு விழா எங்களுக்கு. .

குடியரசு தினம் என்றால் என்ன என்று எங்கள் யாருக்குமே எதுவுமே தெரியவில்லை. பள்ளி மைதானத்தில் தூங்கு மூஞ்சி மரத்தின் அருகே உயரமாக ஒரு கம்பத்தில் கொடி ஏற்றி பாடுவார்கள், பெண்கள் கோலாட்டம் கும்மி அடிப்பார்கள். வரிசையாக நிற்க வைத்து மிட்டாய், கொடி எல்லாம் கொடுப்பார்கள். யாராவது ஏதாவது பேசின பிறகு தான் மிட்டாய் என்பதால் புரியாமலே அந்த பேசும் ஆள் எப்போது பேசி முடிப்பார் என்று காத்திருப்போம்.

காக்கி அரை நிஜாரை வீட்டிலே துவைத்து, அதை கையாலே அழுத்தி சுருக்கம் நீக்கி, பஞ்ச பாத்ரத்தில் தணல் நிரப்பி துணியால் பிடித்துக்கொண்டு தாழ்வாரத்தில் தரையில் அதற்கு மேற்படி ''இஸ்திரி'' போட்டு அதன் உடன்பிறவா அரைக்கை பச்சை கோடு போட்ட (என்னிடமிருந்த ஒரே ஒஸ்தி யான சட்டை ) ஒரு நல்ல சட்டைக்கும் இஸ்திரி போட்டு அணிந்து காலில் செருப்பில்லாமல் நடந்து வந்து 6 மணிக்கு பள்ளியில் முதல் சுதந்திர தினத்தை கொண்டாடியபோது எனக்கு வயது 11.

சரஸ்வதி, சரோஜினி டீச்சர்கள் எல்லாம் பெண்களை ஒருபுறமும் பையன்களை ஒருபுறமும் உயரம் பார்த்து கொடி கம்பத்தை சுற்றிலும் வரிசைப் படுத்தி நிறுத்தினார்கள். கொடி கம்பத்திற்கு முதல் நாளே பச்சை சிவப்பு வெள்ளை என்று எது முதலில் சிகப்பா பச்சையா என்று சுப்ரமணிய ஐயரிடம் பல முறை கேட்டுக்கொண்டு அப்பாதுரை கொடி கம்பத்திற்கு வர்ணம் பூசியது ஞாபகம் இருக்கிறது. சௌராஷ்ரநகர் கிருஷ்ணமூர்த்தி மரம், கொம்பு எல்லாம் குரங்கு போல் ஏறுவான். அவனை கொடி மர உச்சியில் ஏறச்சொல்லி கொடியை மடக்கி கயிற்று முடிச்சுக்குள் சுமாராக செருகி கயிற்றின் நுனியை இழுத்ததும் உடனே சரியாக அவிழுமாறு வைக்கணும் '' என்று சுப்ரமணிய அய்யர் உத்தரவு கொடுத்தார்.

தொட்டியில் நீர் நிரப்புவது, மரங்களின் இலைகளை பெருக்குவது, வேளா வேளைக்கு தூங்குமூஞ்சி மரக்கிளையில் தொங்கிய இரும்பு தண்டவாள துண்டை அடித்து மணி ஓசை எழுப்புவது போன்ற வேலைகளை செய்து வந்த அப்பாதுரை பள்ளிக்கூட தரை முழுதும் சுத்தமாக இலை தழை இல்லாமல் வைத்திருந்தார்.

சுண்ணாம்பு கோடுகள், நல்வரவு எல்லாம் வாசல் வரை கோலமாக எழுதி வைத்திருந்தது. வாழிய செந்தமிழ் பாட்டுபாடுவதற்கு ஆறு ஏழு பெண்கள் கடைசி நிமிஷம் வரை பயின்று கொண்டிருந்தனர். சரோஜினி டீச்சர் பாடிக் காட்டிக் கொண்டிருந்தாள் . ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு மாதிரி பாடுவாள். . வெகு நேரம் காத்துக் கொண்டு நிற்போம்.

ஏழரை மணிக்கு வடிவேல் நாயக்கர் வெள்ளை வேஷ்டி அரைக்கை கதர் ஜிப்பா நெற்றியில் பட்டையாக திருநீறு, குங்குமம். வெள்ளை மீசையோடு கை ரிக்ஷாவில் வந்து இறங்கினார். அப்போதெல்லாம் சூளைமேட்டில் அதிகம் சைக்கிள் ரிக்ஷா கிடையாது. குதிரை வண்டி, அல்லது கை ரிக்ஷா தான். ஒருவர் இருவர் போவதாக இருந்தால் கை ரிக்ஷா, நிறைய பேர் போனால் குதிரை வண்டி. வடிவேல் நாயக்கர் சூளை மேட்டில் ரெண்டு மூன்று கடைகள் வைத்திருந்தவர். துணிமணி, , மளிகை கடைகள். காந்தி பற்றி எல்லோரிடமும் பேசுவார்.

நாயக்கர் எல்லோரையும் தலையைச் சாய்த்து மிரள மிரள பார்த்து மேல் துண்டால் முகம் துடைத்துக் கொண்டார். அவருக்கு கூட்டம் பிடிக்காது. கூட்டத்தில் பேசுவது சித்ரவதை.

சுப்ரமணிய அய்யர் ''நமது நாட்டில் இன்று குடியரசு தினம். என்று ஒன்றிரண்டு வார்த்தைகள் இரத்தின சுருக்கமாக சொல்லி விட்டு ''நாயக்கர் ஐயா கொடியேற்றுவார். பேசுவார்'' என்றார்.

நாயக்கர் கிணற்றில் வாளியில் நீர் இறைப்பதைப் போல் சர் சர் என்று கயிரை இழுத்து அது கம்பத்தின் உச்சியில் திரும்பி நின்று நான் அவிழமாட்டேன் என்றதால் கிருஷ்ணமூர்த்தி மீண்டும் கம்பத்தின் மீது தாவி ஏறினான். அதை அங்கே மெதுவாக இழுத்து சரி செய்து திருப்பிவிட்டு இறங்கினான். அதற்குள் நாயக்கர் கயிற்றை இழுத்து கிருஷ்ணமூர்த்தி மீது மலர் மாரி பொழிந்தது.

''குழந்தைகள் பாடட்டுமே'' என்றார் நாயக்கர்.

சரோஜினி ஜாடை காட்ட பெண்கள் கோரசாக வாழிய செந்தமிழ், தாயின் மணிக்கொடி எல்லாம் பாடினர். டான்ஸ் ஆடினார்கள் .நாயக்கர் கைதட்டினார். உடனே நாங்கள் எல்லோரும் கை தட்டினோம்.

''உங்க கையாலே முட்டாய் கொடுங்கோ'' என்று சுப்ரமணிய அய்யர் சொல்லி நாயக்கரிடம் முதல் மிட்டாய் பெற்றார். பிறகு டீச்சர்கள். அப்பாதுரை, பிறகு சின்ன பெண்கள், சின்ன பையன்கள், அப்புறம் பெரிய பெண்கள் பையன்கள். நாயக்கர் பலசரக்கு கடை வைத்திருந்ததால் கோழி முட்டை சைஸில் கலர் கலராக மிட்டாய் சப்ளை பண்ணினார். அது பாதியிலேயே தீர்ந்தது விட்டதால். அச்சு வெல்லம் எமர்ஜென்சி சப்ளையாக கொண்டுவரச் சொல்லி எங்களுக்கு எல்லாம் அச்சு வெல்லக் கட்டி தான் கிடைத்தது. கோழிமுட்டை மிட்டாய் கிடைக்கவில்லை. முதல் குடியரசு ஏமாற்றம். நாயக்கர்வாள் குடியரசு தின வாழ்த்து செய்தி சொல்லுங்க '' என்று ஹெட்மாஸ்டர் சுப்ரமணிய ஐயர் சொல்ல
''நீங்களே எதாவது சொல்லிடுங்க'' என்ற நாயக்கருக்கு வியர்த்து கொட்டியது.
பிறகு வாசலில் தண்ணீர்ப்பந்தல் வைத்து வருவோர் போவோர்க்கு நீர் மோர் பொறி கடலை சப்ளை செய்ய சுப்ரமணிய ஐயரிடம் கொஞ்சம் அரிசி அவல் பொறி மூட்டை, சில மோர் பானைகள் எல்லாம் கொண்டுவரச் சொல்லி நாயக்கர் தந்து விட்டு கை ரிக்ஷாவில் உட்கார்ந்து இழுக்கப்பட்டு விரைந்தார்.

அப்போதைக்கும் இப்போதைக்கும் என்ன வித்யாஸம் என்று யோசித்தேன். அப்போது குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாமல் வளர்க்கப் பட்டோம். இப்போது அவர்களுக்கு தெரியாதது இல்லை. நாயக்கர் போன்றோர் உதவி செய்ய ஆசைப் பட்டார்கள். போட்டோ, பேப்பரில் படம் பேர், என்று ஆசைப்பட தெரியவில்லை. பேசவே தெரியாது. இப்போதும் மிட்டாய் கொடுக்கிறார்கள். நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று சுப்ரமணிய ஐயர் போல் இன்றும் நிறைய பேர் சொல்கிறார்கள். அர்த்தம் ஏனோ புரியவில்லை.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...