Sunday, January 27, 2019

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம் J.K SIVAN
மஹா பாரதம்.
மஹா பாரதத்தில் ராமாயணம்

மார்க்கண்டேய மகரிஷி வருகிறார் என்றாலே அவரோடு பல கதைகளும் நம்மை வந்தடையும் என்பது நமது அனுபவத்தில் இதுவரை தெரிந்தது தானே. யுதிஷ்டிரனுக்கு இராமாயண கதைகள் எடுத்து சொல்கிறார்.

''மாரீசா, ஒரே வழி தான் உனக்கு. ஒன்று என் கையால் மரணம். அல்லது நான் சொல்வது போல் நீ தந்திர மந்திரங்களால் ராம லக்ஷ்மணர்களை அப்புறப்படுத்தி சீதையை தனிமைப் படுத்த வேண்டும். ஒருவேளை ராமனாலோ லக்ஷ்மணனாலோ நீ கொல்லப்படலாம். வெற்றிகரமாக முடித்தால் உனக்கு ராஜ போகம் என்னால். யோசித்து முடிவெடு. ரெண்டே நிமிஷம் டைம்.'' என்றான் ராவணன்.

தனது முயற்சி வெற்றியடைந்தாலும், தோல்வி அடைந்தாலும் என்றும் ராம லக்ஷ்மணர்களாலோ அல்லது ராவணனாலோ மரணம் என்பது நிச்சயம் என்றிருந்தபோது, ராமன் கையால் மரணம் அடைவதே உசிதம் என்று மாரீசன் முடிவெடுத்து ராவணன் திட்டத்துக்கு உடன்பட்டு பொன்னிற மாய மானாக சீதை முன் நிற்கிறான் .

பிறகு நடந்தது தான் தெரியுமே. சீதையின் விருப்பத்தை நிறைவேற்ற மாரீச மாயமானை ராமன் தொடர்ந்து காட்டுக்குள் ஓடி, சாகுமுன் மாரீசன் ராமன் குரலில் 'ஹா லக்ஷ்மணா, ஹா சீதா'' என்று கதற, சீதை காவலுக்கு நின்ற லக்ஷ்மணனை ராமனைத் தேடிப் போக விரட்ட, ராவண போலி சந்நியாசி காவி உடை, கமண்டலத்தோடு சீதையை நெருங்கி தான் யார் என்று சொல்லி, அவள் மயங்கி விழுந்ததும், அவளை முடியைப் பிடித்து இழுத்து தனது தேரில் (மகாபாரதத்தில் வியாசர் இவ்வாறு தான் எழுதுகிறார்) அவளைக் கடத்தி இலங்கை செல்கிறான்.

வழியே கழுகரசன் கிழ ஜடாயு சீதையின் கூக்குரல் கேட்டு ராவணனைத் தடுத்து சண்டை போட்டு வெட்டுப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக கீழே விழ, சீதை தனது ஆபரணங்களை எல்லாம் புஷ்பக விமானத்திலிருந்து கீழே வீச, ஒரு மூட்டையாக ஆபரணங்கள் ரிஷ்யமுக பர்வத்தில் சுக்ரீவனிடம் கிடைக்க, சீதை இலங்கையில் அசோகவனத்தில் சிறைப்பட்டாள் .

மாரீச மாயமானைக் கொன்ற ராமன் வேகமாக தனது குடிலை நெருங்குமுன் வழியே லக்ஷ்மணனைக்கண்டு சீதையை தனியே விட்டு வந்த காரணம் அறிந்து, சீதையைக் காணாமல் வாடி,, தேடி, வழியில் ஜடாயுவை சந்தித்து ராவணன் சீதையை கடத்திய விபரம் அறிந்து லக்ஷ்மணனோடு ரிஷ்யமுக பர்வதம் நோக்கி நடக்கிறான். ராவணன் எந்த திசையில் சென்றான் என்று அறிவதற்குள் ஜடாயு தென் திசை ஜாடை காட்டி மரணம் எய்துகிறான். தந்தையின் நண்பன் ஜடாயுவுக்கு ஈமக் கிரியைகள் செய்து விட்டு தண்டகாரண்
யத்தில் தெற்கு நோக்கி நடக்க வழியே தலையற்ற பெரிய வயிறு கொண்ட ஒரு ராக்ஷசன், கபந்தன், எதிர்த்து லக்ஷ்மணை நீண்ட கரங்களால் பிடிக்கிறான். ராமனும் லக்ஷ்மணனுமாக கபந்தனின் நீண்ட கரங்களை துண்டாக்கி அவனை கொல்கிறார்கள். கபந்தன் உடலிலிருந்து ஒரு கந்தர்வன் அதி சுந்தர ரூபனாக வெளிப்பட்டு ராமனை வணங்குகிறான்.

''யார் நீ?''

''ஸ்ரீ ராமா, நான் விஸ்வவசு. ஒரு பிராமணன் சாபத்தால் இந்தக் கணம் வரை ஒரு ராக்ஷசனாக வாழ்ந்து அவதிப்பட்டேன். நான் இந்த வனத்தில் வெகு காலமாக உழல்கிறேன். என்னை விடுவித்து மோக்ஷம் அருளிய உங்களுக்கு ஒரு சேதி சொல்வேன். ராவணன் என்ற லங்காதிபதி சீதையை கடத்தி இலங்கைக்கு தூக்கி சென்று விட்டான். நீங்கள் நேராக பம்பா நதிக்கரை ஓரமாக உள்ள ரிஷ்யமுக பர்வதத்தில் வாழும் சுக்ரீவன் என்ற வானர அரசனை சந்தியுங்கள் அவன் உதவுவான். ராவணனை அவன் அறிவான்.''

''அப்புறம் என்ன ஆயிற்று?'' என்று கேட்ட யுதிஷ்டிரனுக்கு மார்கண்டேய ரிஷி விவரமாக சொன்னது:

சுக்ரீவன் தனது அருகில் இருந்த நால்வர்களில் ஒருவனான ஹனுமானிடம் ''அதோ வருகிறார்களே யார் இந்த இரண்டு புதியவர்கள்? ஒருவேளை வாலியின் ஆட்களோ என்று விசாரித்து வா'' என ஆணையிட, ஹனுமான் முதன் முதலாக ராமரைச் சந்திக்கிறான். ஹனுமான் மகிழ்ச்சியோடு அவர்களை சுக்ரீவனிடம் அழைத்து செல்ல, சுக்ரீவன் சீதையின் ஆபரணங்களை காட்ட பிறகு சுக்ரீவனுக்கு உதவ ராமன் ஒப்புக்கொள்ள, அவன் வாலியை போருக்கு அழைக்க, தனது மனைவி தாரை சொல்லியும் கேளாமல் வாலி சுக்ரீவனோடு மோத, வாலி வதம் முடிந்து சுக்ரீவன் கிஷ்கிந்தா அரசனாகி, வானரப் படை திரட்டி சீதையை தேட சுக்ரீவன் வாக்களிக்கிறான் .

இலங்கையில் அசோக வனத்தில் திரிஜடை என்கிற ராக்ஷசப் பெண் மட்டுமே சீதைக்கு அனுகூலமாக இருந்து, தான் கண்ட கனவில் ராவணாதியர் அழிவு, ராமனின் வரவு, எல்லாம் எடுத்து சொல்கிறாள். ராவணனால் உனக்கு ஒரு ஆபத்தும் இல்லை. ஏனென்றால் நள குவேரன் சாபத்தால் ராவணன் எந்த பெண்ணையும் அவள் விருப்பத்துக்கு மாறாக நெருங்க முடியாது என்கிறாள்.

மார்கண்டேய ரிஷி மேலும் யுதிஷ்டிரனுக்கு ராமாயணத்தை விவரிக்கிறார்:

சொன்ன கெடு முடிந்தும் சுக்ரீவன் படைகளோடு வரவில்லை. கார்காலம் முடிந்து லக்ஷ்மணன் சுக்ரீவனுக்கு ராமனின் பராக்ரமத்தை உணர்த்தி ''வாலி போன வழி நீயும் போகவேண்டுமா? கடமையை நிறைவேற்று '' என்று அறிவுறுத்த சுக்ரீவன் தவறை உணர்ந்து வேகமாக செயல்படுகிறான். வானரவீரர்கள் பல்வேறு திசைகளிலும் தேட ஹனுமான் தென் திசை நோக்கி வீரர்களோடு பயணிக்கிறான். ஹனுமான் கடலைத் தாண்டி இலங்கையில் அசோக வனத்தில் சீதையை தரிசித்து ராமனின் முத்திரை மோதிரத்தை சீதை பெற்று, அவளது கணையாழியை ராமனுக்கு அடையாளமாக பெற்று வருகிறான்.

ஹனுமான் ராமனிடம், அவர்கள் சீதையைத் தேடி தெற்கே எல்லா இடங்களிலும் தேடி காணாமல் ஒரு வனத்தில் ஜடாயுவின் சகோதரன் சம்பாதியை சந்தித்து அவன் மூலம் இலங்கைக்கு வழி தெரிந்து கொண்டு, கடலைத் தாண்டியது, கடலில் மைனாகத்தை சந்தித்து, மாய ராக்ஷசியின் வாயிலிருந்து வெளியேறி தப்பி இலங்கிணியை வென்றது, சீதையை சந்தித்தது இலங்கையை தீக்கிரையாக்கியது எல்லாம் சொல்கிறான்.

வானர சைன்யம் கடற்கரையை நெருங்கி சமுத்ரராஜன் ராமனை சந்தித்து, பிறகு நளன் , நீலன், ஜாம்பவான், ஹனுமான் ஆகியோர் பாலம் அமைக்கிறார்கள். விபீஷணன் ராவணனால் விரட்டப்பட்டு தனது வீரர்களுடன் ராமனை சரணடைகிறான். ஒரு மாத காலத்தில் நளன்இலங்கைக்கு பாலம் கட்டி அமைத்து வானர சைன்யம் இலங்கை சென்று, அங்கதன் ராவணனிடம் தூது செல்கிறான். ராவணன் அங்கதனைக் கொல்ல ஆணையிட்டு, அங்கதன் தப்பி, ராமனிடம் செல்கிறான். யுத்தம் மூள்கிறது. இலங்கைக் கோட்டைகள் தகர்க்கப் பட்டு, சர்வ நாசமடைகிறது. ராக்ஷசர்கள் எண்ணற்றோர் பலியாகிறார்கள். ராவணனின் பலமிக்க சேனாதிபதிகள், ப்ரஹஸ்தன் , தும்ரக்ஷன் ஆகியோரும் மாளவே, கும்பகர்ணன் தூக்கத்திலிருந்து எழுப்பப் படுகிறான்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...