கட்டபொம்மா இவ்வளவு முருக பக்தியா ?
J.K. SIVAN
ஒரு தேசத்தையே தலைமை தாங்கி நடத்தும் சக்தி திறமை நேர்மை வாய்ந்திருந்தும் அவன் ஒரு குறுநில மன்னனாக தான் வாழ்ந்தான். பாஞ்சாலங்குறிச்சி ஒரு அதிர்ஷ்டம் செய்த பூமி. அங்கே வாழ்ந்த அனைத்து மக்களும் சுபிக்ஷமாக மன்னனின் மேற்பார்வையில் தாயின் அரவணைப்பில் மகிழும் சேயாக பெருமிதம் கொண்டிருந்தனர். இது மற்ற பாளையங்களை எடுத்துகாட்டாக இருந்தது. பலர் கட்டபொம்மனின் ஆட்சியை போலவே தம்முடைய ஆளும் பாணியை மாற்றிக்கொண்டனர். எத்தனையோ புலவர்கள் கவிஞர்கள் பண்டிதர்கள் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி வந்து அவன் புகழ் பாடி பரிசில் பெற்று திரும்பினார்கள் .
ஒரு நிகழ்ச்சி சொல்கிறேன்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் எத்தனையோ குறிச்சிகள் என்ற பெயர் கொண்ட அழகிய கிராமங்கள். அவைகளில் ஒன்றுதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தாலங்குறிச்சி. அங்கே கந்தசாமிப் புலவர் என்பவர் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கவிஞர் ஆவார். பிறவியிலிருந்தே இரு கண்களிலும் பார்வை இழந்தவர். ஈழவர் எனும் சாதியினரான இவர் சீதக்காதி நொண்டி நாடகம், செந்திற் பெருமான் நொண்டி நாடகம், திருவனந்தபுரம் நொண்டி நாடகம் ஆகிய நூல்களைப் பாடியுள்ளார். நொண்டி சிந்து என்பது மிகவும் ருசியான பாடல் வகை. காவடிச்சிந்து போன்றது. இவர் கட்டபொம்மன் புகழ் கேட்டு அவனைப் பாடி பரிசு பெற விருப்பம் கொண்டார். கட்டபொம்மனைப் போலவே கந்தசாமி புலவர் தன் பெயர்கொண்ட திருச்செந்தூர் முருக பக்தர். முருகன் தமிழ்க்கடவுள் அல்லவா. கந்தசாமி புலவர் பாடும் பாடல்களில் முருகனுக்கு விருப்பம் அதிகமாகி நேரில் வந்து கேட்பாராம்.
கண்ணில்லாத இந்த கந்தசாமி புலவர் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் கொண்டவர்.
ஒருநாள் வாய் நிறைய வெற்றிலை சாறை குதப்பிக்கொண்டே அவர் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் அமர்ந்து கவி புனையும்போது அவர் வாயிலிருந்து வெற்றிலை சாறு எச்சில் ஆறுமுகனின் வஸ்திரம் மீது பட்டுவிட்டது.
இதை அறிந்த சிவாச்சாரியார் திடுக்கிட்டு இந்த கண்ணில்லாத புலவர் இப்படி செய்த்துவிட்டாரே என்ன நேருமோ என்று பயந்தார். அன்றிரவு ஷண்முகன் அந்த சிவாச்சாரியார் கனவில் தோன்றி ''நீர் கவலைப்படவேண்டாம். முத்தாலங்குறிச்சி கந்தசாமி புலவன் என் மீது அளவற்ற பக்தி கொண்டவன். பார்வையற்ற பாவலர் செய்தது பாவமில்லை. நான் அவருக்கு கண்ணளிக்க முடிவு செய்துவிட்டேன்.
ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை கண் தெரியாமல் பார்வையின்றியும் என்னை தரிசிக்க நடந்து திருச்செந்தூர் வருகிறார்.
இந்த முறை வந்தவருக்கு என் மீது நீங்கள் சாற்றியிருக்கும் மாலையிலிருந்து ஒரு பூவை எடுத்து அவர் கண்ணில் என் பெயர் சொல்லி ஒற்றுங்கள்'. முதலில் எந்த கண்ணில் ஒற்றுகிறீர்களோ அந்த கண்ணில் பார்வை திரும்பும்.
''முருகா ஆச்சர்யமாக இருக்கிறதே. கந்தசாமி புலவருக்கு ஒன்று கண்ணில் தான் பார்வை கிடைக்குமா. மற்றொன்றில்?
''இதை தான் அவரும் உங்களிடம் கேட்பார். அப்போது அவரிடம் மற்றொரு கண்ணிலும் பார்வை பெறவேண்டுமானால் என் பக்தன் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனிடம் போக சொல்லுங்கள். அவன் மற்ற கண்ணில் பார்வை தருவான் ''
அதிசயத்தோடு சிவாச்சாரியார் அடுத்த கடைசி வெள்ளிக்கிழமைக்கு காத்திருந்தார். மெதுவாக நடந்து கந்தசாமி புலவர் முருகன் மேல் பாடிக்கொண்டே வந்து சேர்ந்தார்.
வழக்கம்போல் திருச்செந்தூர் கடலில் ஸ்னானம் செய்துவிட்டு அவரை ஷண்முகன் சந்நிதிக்கு கூட்டி வந்தார்கள். மனமுருகி வெகுநேரம் பாடினார். அந்த பாடல்கள் எல்லாம் எங்கே போயிற்றோ. யாரவது எடுத்து வைத்திருந்து பாதுகாத்திருக்கிறார்களோ?
பாடி முடித்து பிரசாதம் பெற காத்திருந்தார் புலவர். சிவாச்சாரியார் ஷண்முகன் உத்தரவுப்படி ஒரு பூவை அவன் மேல் சாற்றியிருந்த மலர் மாலையிலிருந்து எடுத்து ஷண்முகா என வேண்டி அவர் கண்களில் ஓற்றினார்.
கண்களை மலங்க மலங்க விழித்து பார்வையின்றி திரிந்த புலவருக்கு அன்று எனோ கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கண்ணில் லேசாக முதலில் உருவம் தெரிந்து சற்று நேரத்தில் ஒரு கண்ணில் பார்வை துல்லியமாக கிட்டியது. மகிழ்ந்து போனார். உலகத்தை முதன் முதலாக வண்ணமயமாக கண்டு ஆனந்தித்தார். அடாடா எல்லோரும் எவ்வளவு பாக்கியசாலிகள் இந்த அற்புத உலகத்தை கண்டு களிக்க என்று குதித்தார். எனக்கு பார்வை தந்த முருகனே என்று திருச்செந்தூர் ஆறுமுகனை கண்டு மனதார வேண்டினார். எல்லோரையும் நீர் யார் என்று கேட்டு ஆனந்தமாக அவர்களை பார்த்து மகிழ்ந்தார். அப்புறம் தான் இன்னொரு கண்ணிலும் பார்வை கிடைத்தால் எவ்வளவு ஆனந்தமயமான இருக்கும் என்ற எண்ணம் வந்தது.
சிவாச்சாரியார் மூலம் ஷண்முகன் அருளால் பார்வை கிடைத்த விஷயம், மற்றோருக்கண்ணின் பார்வை பற்றி முருகன் அறிவுரை எல்லாம் தெரிந்தது.
''புலவரே, உங்களுக்கு மற்ற கண்ணிலும் பார்வை கிடைக்க நீங்கள் பாஞ்சாலங் குறிச்சி செல்லுங்கள் இது முருகனின் ஆணை'' என்று அவரை அனுப்பினார் சிவாச்சாரியார். உடனே விசாரித்து தெரிந்து கொண்டு நடந்தார் கந்தசாமி கவிராயர். காத்திருந்து கட்டபொம்மனை சந்தித்தார்.
''என்ன சொல்கிறீர்கள் கவிராயர், நான் உங்களுக்கு கண் தருவேனா? என் முருகன் சொன்னானா?'
வியப்பில் ஆழ்ந்த கட்டபொம்மன் மனம் நெகிழ்ந்தது. கோட்டையில் அவன் அன்றாடம் தொழுது வணங்கும் குலதெய்வம் ஜக்கம்மாள் கோயிலில் பூஜைக்கு ஏற்பாடு செய்தார்.
''வாருங்கள் என்னோடு என்று கந்தசாமி கவிராயரை ஒரு கையில் பிடித்து கொண்டு மறுகையில் உருவிய வாளுடன் கோயிலுக்கு நுழைந்தார். ஒரு கண் பார்வையில் கட்டபொம்மனின் உருவம், கம்பீரம் எல்லாம் கண்டு ரசித்த கவிராயர் அவன் உருவிய வாளுடன் ஜக்கம்மாள் ஆலயத்துக்குள் நுழைவது எதற்காக? புரியாமல் திகைத்தார். கந்தசாமி கவிராயருக்கு பொசுக்கென்று கோபம் வேறு வந்துவிடும். யாருக்கும் அஞ்சமாட்டார்.
''என்ன மன்னா இது. உன் குலதெய்வம் என்கிறீர்கள். தேவியின் ஆலயத்தில் அவள் முன் உருவிய வாளுடன் நிற்பது அவளை அவமதிப்பதாகும். உமது ஆணவம் இதில் தெரிகிறது. தேவியின் சன்னிதானத்திலும் அதிகார மமதையோடு உருவிய வாளுடன் நிற்கிறீர்களே. கொஞ்சமாவது பக்தி சிரத்தை இருந்தால் இப்படி செய்வீர்களா. நீங்களா எனக்கு கண் பார்வை தருபவர்? இதை எப்படி என் ஷண்முகன் அனுமதித்தான்? என்று கோபக்காக கத்தினார். கோயிலின் புனிதம் அரசன் செயலால் கெட்டுவிடும் என்ற ஆதங்கம் கவிராயருக்கு.
கட்டபொம்மன் கோபம் கொள்ளவில்லை. எதுவும் பேசாமல் ஜக்கம்மா தேவியை மனதில் துதித்து அவள் அணிந்த மாலையிலிருந்து ஒரு புஷ்பத்தை எடுத்து கவிராயரின் பார்வை அற்ற கண்ணின் மீது ஒற்றினார் . ஆச்சரியம் ஒன்று அங்கே நிகழ்ந்தது. கந்தசாமி கவிராயர் மறுகண்ணும் பார்வை பெற்றது!
கவிராயர் கோபம் குறையவில்லை.
அரசே அம்பாளை அவமதிக்கும் உம்மால் கிடைத்த இந்தப் பார்வை எனக்கு தேவையில்லை '' என்று கூறியவர் கட்டபொம்மனின் வாளை பிடுங்கி தன் கண்ணில் குத்திக் கொள்ள முயன்றார்.
அவரை ஆசுவாசப்படுத்தி தடுத்து கட்டபொம்மன் பதிலளித்தார்.
அவரை ஆசுவாசப்படுத்தி தடுத்து கட்டபொம்மன் பதிலளித்தார்.
''கந்தசாமி புலவரே, கட்டபொம்மன் கர்வம் கொண்டவன் அல்ல. ஜக்கம்மா திருச்செந்தூர் ஆறுமுகம் இருவருமே அவனது இரு கண்கள். அவர்களால் தான் உமக்கும் இரு கண்கள் கிடைத்தன. கவிராயரே நான் வாளை உருவி தயாராக வைத்திருந்ததற்கு எதற்கு தெரியுமா? என்னை நம்பி உம்மை அனுப்பிய ஆறுமுகன் மேல் பக்தியால். அவன் உத்தரவுப்படி என்னால் உமக்குப் பார்வை கிடைக்காமல் போனால் இந்த வாளால் என்னையே வெட்டிக்கொண்டு உயிர் துறக்கவேண்டும் என்ற எண்ணத்தால்'' கட்டபொம்மனின் நிதானமான பேச்சு கவிராயரை உலுக்கியது.
''ஷண்முகா, உன் பக்தன் கட்டபொம்மன் எவ்வளவு சிறந்தவன். நான் எவ்வளவு முட்டாள்''என்று கதறினார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு கவிராயரும், கட்டபொம்மனும் நெருங்கிய நண்பர்களானார்கள். கட்டபொம்மன் அடிக்கடி முத்தாலங்குறிச்சி சென்று புலவரை சந்தித்தான். அவன் குதிரையை நிறுத்தும் இடம் தாமிரபரணி ஆற்றின் கரையில் ''வீர பாண்டியன் கசம்'' என்று பேர் கொண்டாலும் ஒரு சிறு குட்டையாக மாறிவிட்டது. காலப்போக்கில் காணாமல் போய் ஒரு கடையாகலாம். .
இந்த சம்பவத்துக்குப் பிறகு கவிராயரும், கட்டபொம்மனும் நெருங்கிய நண்பர்களானார்கள். கட்டபொம்மன் அடிக்கடி முத்தாலங்குறிச்சி சென்று புலவரை சந்தித்தான். அவன் குதிரையை நிறுத்தும் இடம் தாமிரபரணி ஆற்றின் கரையில் ''வீர பாண்டியன் கசம்'' என்று பேர் கொண்டாலும் ஒரு சிறு குட்டையாக மாறிவிட்டது. காலப்போக்கில் காணாமல் போய் ஒரு கடையாகலாம். .
No comments:
Post a Comment