ஹனுமத் பிரபாவம் - J.K. SIVAN
இன்று ஹனுமத் ஜெயந்தி. எங்கள் நங்கநல்லூருக்கும் ஆஞ்சநேயருக்கும் நெருங்கிய சம்பந்தம். அவர் இலங்கையில் அசோக வனத்தை தேடி சீதையை கண்டுபிடித்தது பழைய கதை. நங்க நல்லூருக்குள் நுழைந்து அதை புரட்டி போட்டுவிட்டது புதுக் கதை. இன்னொரு வயல்வெளியாக அசோகவனமாக கிடந்த நங்கநல்லூரை அநேக கட்டட அசுர வேக வாகனங்கள் ஓடும் நகரமாக மாற்றிவிட்டார். காலை மாலை இரவு என்று வந்தோர்க் கெல்லாம் சுவையான ஆகாரம் சஞ்சீவியாக உயிர்வாழ அளிப்பவர் . வயிற்றுக்கு மட்டுமா செவிக்கு தான் எத்தனை அற்புத படே படே நிகழ்ச்சிகள். ஜேஜே என்று எப்போதும் கூட்டம். அதனால் காய்கறி, கடைகள் ,வியாபாரம், வண்டிகள், ஆட்டோ. வங்கிகள்,துணி கடைகள், அடேயப்பா ஆஞ்சநேயர் வந்தால் எல்லாமே வந்துவிடும் போல் இருக்கிறது. காற்றில் அனைத்தையும் சுழற்றி கொண்டு வந்து விடுபவர். மாருதி, வாயு புத்ரன் அல்லவா.
இந்த வருஷம் ஆஞ்சநேயர் ஜெயந்தி கொஞ்சம் மறக்க முடியாத நாள் எனக்கு.
கூடுவாஞ்சேரியில் ஸ்ரீ யோக சந்தோஷ பீடம் நிறுவனத்தார் இன்று என்னை அழைத்து ஸ்ரீ த்ரிநேத்ர சதுர்புஜ நவகிரஹ யோக ஆஞ்சநேயர் முன்பாக நான் எழுதிய ''ஐந்தாம் வேதம் '' எனும் மகா பாரத முழுமையான நூலுக்காக பாராட்டி அடியேனுக்கு ''அபிநவ வியாசர்'' என்று ஒரு விருது தரப்போகிறார்களாம். பாவம் வியாசர்!
ஆஞ்சநேயர் பற்றி சேகரித்த சில அபூர்வ விஷயங்கள் சொல்கிறேன்.
எண்ணமுடியாத பக்தர்களால் வணங்கப்படுபவர் ஹனுமான். தைரியம், நோயற்ற ஆயுள், ஆரோக்யம்,
பயமின்மை, சக்தி, சொல்வன்மை எல்லாம் அள்ளித்தருபவர். வடக்கே வாய்க்கு வாய் பஜ்ரங்க் பலி. வாயு புத்திரன் ஹனுமான் சிவனின் அம்சம். பரம ராம பக்தன்.
அஞ்சனை தேவலோக அழகி. ''நீ காதல் வசப்பட்டால் உன் முகம் வானரமுகமாகும்'' என்று ஒரு ரிஷியால் சாபம் பெற்றவள். பூமியில் கேசரி என்கிற வானர ராஜாவை காதலித்து முகம் மாறி அவன் மனைவியாகிறாள். சிவ பக்தை. சிவனை நோக்கி தவமிருக்க, ''அஞ்சனா, உன் ரிஷி சாபம் நீங்க நானே உனக்கு மகனாகப் பிறக்கிறேன்'' என்று சிவன் அருள, அந்தநேரம் அயோத்தியில் தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் வளர்த்து அதில் பாயசம் வர, அதை அவன் தனது மூன்று மனைவிகளுக்கு தர, முதல் மனைவி கௌசல்யாவின் பாயசத்தில் ஒரு சிறு பாகம் ஒரு பருந்தால் கவரப்பட்டு அது பறந்து அஞ்சனை தவமிருக்கும் இடம் வந்து வாயுவால் அவள் கையில் விழ, அவள் அதை சிவப்ரசாதமாக உண்ண, வாயு புத்திரனாக ஆஞ்சநேயன் பிறக்கிறான். இப்படி சுவாரஸ்யமான ஒரு வரி கதை.
சீதை தனது நெற்றியில் நடு வகிட்டில் சிந்தூரம் தடவிக்கொள்வதை பார்த்த ஹனுமான் ''இது எதற்கு ?'' என வினவ, ''இது கணவனின் மீது மனைவிக்கான, பாசம், தியாகம்,நேசம், பக்தி, நட்புக்கு பதிவிரதா அடையாளம்''
''ஓஹோ. என் ராமன் மீது எனக்கு அளவு கடந்த நேசம் பாசம், பக்தி உண்டே'' என்று தனது உடல் முழுதும் சிந்தூரம் பூசிக்கொள்கிறார் ஹனுமான் . அவர் பக்தியை மெச்சி ''எவர் சிந்தூர ஹனுமனை வணங்குகி றார்களோ அவர்கள் துன்பம் விலகும் என்று ராமன் ஆசீர்வதிக்கிறார் '' என்று வடக்கே ஹனுமான் சிகப்பாகவே எங்கும் காண்கிறார்.
''ஹனு'' என்றால் தாடை. ''மான் '' என்றால் அது உருமாறியவன் என குறிக்கிறது. பால ஹனுமான் சூரியனை பழம் என கவ்வ முயற்சிக்க, இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் அவன் முகத்தில் தாக்க, தாடை உருவம் இழக்கிறபடியால் ''ஹனுமான் '' என்ற அடையாளப்பெயர் .
ஹனுமான் இலங்கையில் தனது வாலிலிட்ட தீயால் ராவணனின் தேசத்தை எரித்த போது அவரது நுனி வால் கடலில் மூழ்கி குளிர்ச்சி பெறும்போது அவரது சில வியர்வைத் துளிகளை ஒரு பெரிய மீன் (மகரம்) உண்டு அதற்கு ஒரு மகன் பிறக்கிறான். அவன் தான் மகரத்துவஜன். ஆஞ்சநேய புத்ரன் என்பார்கள். சென்னையில் ஆஞ்சநேயர் மனைவி
நாரதர் ஒரு கலகம் பண்ணுகிறார். ராமன் அயோதஹி அரசனாகி ஆண்டபோது ராமனுக்கும் ஹநுமானுக்கும் இடையே ஒரு பூசலை உண்டுபண்ண நேராக அங்கே இருந்த ஹநுமானிடம் ''இங்கு உள்ள எல்லா ரிஷிகளையும் உபச்சாரம் செய். அந்த விஸ்வாமித்ரரை மட்டும் கண்டு கொள்ளாதே'' என்கிறார்.
''ஏன் ?'' என்கிறார் ஹனுமான்.
''விஸ்வாமித்ரர் ஒரு ராஜாவாக இருந்தவர் மற்ற ரிஷிகள் போல் இல்லை. அதனால் தான் '' - நாரதர்.
ஹனுமான் அவ்வாறே செய்ய விஸ்வாமித்ரர் அதை லக்ஷியம் பண்ணவில்லை. நாரதர் விஸ்வாமித்ரரை அணுகி ''என்ன திமிர் பார்த்தாயா ஹநுமானுக்கு, உன்னை அவமதித்தான் '' என்று உசுப்பி விட்டு அந்த கோபக்கார ரிஷி ராமனிடம் சென்று ''ராமா, இந்த திமிர் பிடித்த ஹநுமானுக்கு மரண தண்டனை கொடு '' என்று சொல்ல, குருவின் வார்த்தை மீறமுடியாமல் ஹனுமனை அம்புகளால் துளைக்க ஹனுமான் ராமநாம ஜபம் சொல்லிக்கொண்டிருந்ததால் அம்புகள் பயனற்று கீழே விழுகின்றன. ப்ரம்மாஸ்திரமும் சக்தியற்று போகிறது. இப்படி ஒரு கதை. ஹனுமானின் ராம பக்தி உலகிற்கு தெரிய இந்த நாடகம் என்கிறார் நாரதர்.
ராமாயண யுத்தம் முடிந்து தவம் செய்ய புறப்பட்ட ஹனுமான் தனது நகங்களால் ஹிமாலய மலைப் பாறைகளில் முழு ராமாயணத்தையும் வால்மீகி போல் எழுதினார் என்பார்கள். ஒருநாள் அந்தப் பக்கம் வந்த வால்மீகி மலைப்பாறைகள் முழுதும் இருந்த ராமாயணத்தை படித்து விட்டு ''அடடா நான் இவ்வளவு விவரமாக எழுதவில்லையே, இதல்லவோ சிறந்தது '' என்று தான் எழுதிய ராமாயணம் பயனற்றது என்று விசனம் கொள்கிறார். வால்மீகி ராமாயணம் உலகில் சிறப்பாக பரவவேண்டும் என்பதற்காக ஹனுமான் பாறைகளில் தான் எழுதிய ராமாயணத்தை அழித்து விடுகிறார் என்று ஒரு விபரம்.
பீமனின் கர்வத்தை ஒடுக்க அவன் சௌகந்தி புஷ்பம் தேடி வரும்போது அவனால் தனது வாலைக்கூட நகர்த்தமுடியாமல் செய்து தான் அவன் சகோதரன் வாயு புத்ரன் என்று ஹனுமான் காட்சி அளித்து ஆசீர்வதிக்கிறார்.
ராம அவதாரம் முடிவுறும் சமயம், ஹனுமான் தான் மானுட உரு நீங்கி வைகுண்டம் திரும்புவதை ஹனுமான் சகிக்கமாட்டான் என்று அறிந்து ''ஹனுமா என்னுடைய மோதிரம் கீழே விழுந்து பாதாளம் சென்றுவிட்டது. அதை தேடி எடு.'' என்கிறார். ஹனுமான் பாதாள லோகம் செல்கிறான். அங்கு பாதாள லோக அதிபதி ''ஆஞ்சநேயா, ராமனின் மானுட அவதாரம் முடியும் நேரம் அவரது மோதிரம் கீழே விழுந்து மறையும்'' என்று நான் அறிவேன்'' என்கிறான். அவன் மீண்டு வருவதற்குள் ராம அவதாரம் முடிந்தது.
'' குழந்தாய் ஆஞ்சநேயா, இந்தா உன் உதவிக்கெல்லாம் என் பரிசு என்று தனது முத்து மாலையை அவனுக்கு அணிவிக்கிறாள் சீதை. அதை எடுத்து ஒவ்வொரு முத்தாக கடித்து எறிகிறார் ஹனுமான்.
'' விலைமதிப்பற்ற இந்த முத்துக்களை ஏன் இப்படிவீணாக்கினாய் ஹனுமா?''
''ராமனின் நாம சம்பந்தமில்லாத எதுவும் எனக்கு மதிப்பற்றது தாயே. இதோ பாருங்கள் என்று தனது மார்பை பிளந்து காட்டுகிறார் ஹனுமான். அங்கே சீதா - ராமன்''
ஹநுமானுக்கு ஸமஸ்க்ரிதத்தில் 108 நாமங்கள் உண்டு.
No comments:
Post a Comment