Monday, January 21, 2019

KARMAS



                                            கர்ம பலன்  - J.K. SIVAN 

''வாங்கோ  சாமா ராவ்.  ரொம்ப நாளா காணோமே.எங்கே போயிருந்தீர்கள்?''   நண்பர்  சாமா ராவ்  என்கிற  ரிட்டயர்டு ரயில் அதிகாரி நண்பரை கேட்டேன்.

''வடக்கே  ஒரு சுற்று.    முக்கியமான ஊர்களில் எல்லாம்  சில  கோவில்களை  பார்த்துட்டு  ஒரு ரெண்டு மாசம் அங்கங்கே தங்கிட்டு  வந்தேன்.  ரயில் உத்யோகத்தில் இது தான் ஒரே சௌகர்யம்.''

"கொடுத்து  வைத்தவர்.   நான் புத்தகத்தில், படத்தில்,  தான் பார்க்கிறேன். நல்ல கர்மபலன் உங்களுக்கு ''  என்றேன்.  பிடித்துக் கொண்டுவிட்டார்.

''உங்களை ஒன்று கேட்க வேண்டும் சார். எந்த கர்மாவுக்கு  என்ன தண்டனை இந்த ஜென்மத்தில், அடுத்ததிலே?'' என்று ஒரு சிட்டிகை  மூக்குப்பொடி உறிஞ்சிக் கொண்டே கேட்டார் சாமா ராவ். 

''ராவ்ஜி  எனக்கு தெரிந்து  மூணு கர்மா.  சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா  ஆகாமி கர்மா.
மாற்றி மாற்றி பிறவி  இருக்கிறோம். என்னவா இருந்தோம், ஆடோ மாடோ, கோழியோ குதிரையோ எதுவாக பிறந்திருந்தாலும் புதுசா மிருகங்களை பக்ஷிகளை எல்லாம் எந்த கர்மாவும் ஒட்டாது. 
'ஏன் ?''
''மிருகங்கள், பக்ஷிகள், எல்லாம் ஒரு காரணத்தை உத்தேசித்து எந்த காரியத்தையும்  செய்வதில்லை. ஆகவே  பகவான் சிருஷ்டியில் பழைய கர்மத்தை தொலைப்பதற்காக அந்த பிறவிகள் எடுக்கும்படியாக ஒரு  பகவான் ஏற்பாடு.  அடுத்தது எந்த பிறவி என்றும் தெரியாது. ஒரு பூனை அடுத்ததில் நாயாக பிறந்தால்  பூனை குணம் தோன்றாது.  ஆத்மா  மனித பிறவி எடுப்பதற்கு முன்  ஏறக்குறைய  84 லக்ஷம் விதமான தேக பிரயாணங்களை  மேற்கொள்ளவேண்டி இருக்கிறது என்றால் யோசியுங்கள். 

மனித பிறவியில் தான் நமது மனதில் தோன்றும் காரியங்களை செயகிறோம். ஒரு சுதந்திரம்  என்று அதில் ஈடுபட்டு அனுபவிக்கிறோம். இதில் செய்யும் நல்ல தீய  காரியங்களுக்கு தகுந்தபடி அடுத்த பிறவி அமையும்.  மனசாட்சி நாம் செய்யும் காரியங்களை அமைதியாக பார்த்துக்கொண்டே இருக்கிறது. கிருஷ்ணன் பேசாமல் இருதயத்தில் அமர்ந்து நாம் செய்வதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான். அவனை கூப்பிட்டால் தானே வருவான். எப்போது அவனை நினைப்போம், கூப்பிடுவோம்  என்று ரெடியாக காத்திருக்கிறான். உலக பந்தங்களில் சிக்கி  ''நமக்கு நாமே  திட்டத்தில்''  சொத்து, சுகம், தேடும்போது அவனை விட்டு விலகிப்
போகிறோம். அதற்கு  அவன் என்ன செய்வான்? ''வைகுண்டம் வா'' என்று கையைப் பிடித்தா அழைத்து போவான்? சரி போ,   இன்னும் சான்ஸ் தருகிறேன் என்று  அடுத்தடுத்து பிறவிகள் தருகிறான்.  மனித  பிறவி ஒரே ஒரு தரம் மட்டும் பெறுவது அல்ல. நல்ல தீய கர்மாக்களுக்கு தக்கபடி பிறப்புகள்  தொடர்ந்து  அமையும். விடாமல் தீய செயல்கள் எண்ணங்களையே கொண்டவன்  மனிதனாக பிறப்பினும்   தரத்தில் தாழ்கிறான்,  இல்லாவிட்டால்  செயலுக்கு தகுந்த  வேறு ஏதோ  பிறவி பெறுகிறான். நாம் செய்யும் கர்மாக்கள் அனைத்தும் அந்தராத்மாவுக்கு அத்துபடி. 

அப்பனே, நீ செய்த  கர்மாக்கள் பெரிய மூட்டையாக இருந்தால் எப்படி ஒரே பிறவியில் அதன் பலனை நல்லதோ கெட்டதோ  முழுதுமாக அனுபவிக்க முடியும். அதற்கு தான் பல பிறவிகள்.   இப்படி மூட்டையாக  சேர்த்து வைத்த கர்மா தான் சஞ்சித கர்மா. சஞ்சி  என்றால் பை என்று கூட சொல்வார்களே. 

''சார்  பிராரப்த கர்மா என்றால் என்ன ?''

''இதோ பாருங்கோ  சாமா ராவ்,   இப்போது எடுத்த பிறவியில் எந்த கர்மாவை, எவ்வளவு கர்மாவை  நம்மால் கடன் தீர்க்க முடிகிறதோ, நல்லதோ கெட்டதோ, அது தான் பிராரப்த கர்மா.  இது சஞ்சித கர்மாவின் ஒரு பகுதி மட்டும்.    மொத்தம்  இதுவரை 20, 000 கர்மாவுக்கான  பலனை நீங்கள்  சந்திக்கவேண்டும்.  அதில்  இந்த பிறவியில் கிட்டத்தட்ட  1000 க்கான பலனை அனுபவிக்க இயலும் என்று வைத்துக் கொண்டால்  மீதி 19,000. அதோடு இந்த பிறவியில் நீ புதிதாக சேர்த்துக்கொண்ட   100 என்று வைத்துக்கொண்டால்  இனி வரும் பிறவிகளில் 19,100 பாக்கி பலன் அனுபவிக்க வேண்டியது இருக்கிறது.   புரிகிறதா?'
பிராரப்த  கர்மாவை தள்ளிப்போட முடியாது. அனுபவித்தே தீரவேண்டும். சிலர் பகவானே எனக்கு ஏன் இத்தனை கஷ்டம் என்று அழுகிறார்கள். எனக்கு எதுவுமே நல்லதாக நடக்கவில்லையே என்று ஏங்குகிறார்கள். அதெல்லாம் ப்ராரப்தத்தின் வினை தான். 

ஆகாமி கர்மா என்றால் என்ன ?
''வேறு ஒன்றுமில்லை.  பழைய மூட்டை  சஞ்சித கர்மாவில் அனுபவிக்கவேண்டியது. அதோடு  இந்த கர்மாவில் அனுபவித்து முழுதும்  முடியாத சொச்சம்  எல்லாம் சேர்ந்த கலவை.  பழைய கடன்  இப்போது புதிதாக சேர்ந்த தீர்க்காத கடன் மேல் வட்டி ரெண்டும் சேர்ந்தது. புரிகிறதா?

இதிலிருந்து என்ன தெரிகிறது.  இந்த பிறவியோடு, அல்லது ஒரு பிறவியோடு  எல்லா கர்மபலனும் தீர்ந்து
விடாது. வழியே இல்லை. நமது ஆயுட்காலம் போதாது.  நல்லதை விட  பாபகர்மா அதிகரித்துக்கொண்டே போனால் எங்கே முடிவு? 
பழைய கர்மாவை குறைக்க நாம் செய்யும் காரியங்கள் புது கர்மா.  ஒரு வஸ்துவை எரிக்கும்போது தீ கொழுந்து விட்டு  அதை எரிக்கிறது. அதோடு புகையும்  சூழ்கிறதே  அதுபோல் .  புகை தான் புது கர்மா.
ஒருவனுக்கு தீங்கு செய்து அவன்  துன்பப்பட்டால், அதே துன்பத்தை நீயும் அனுபவிப் பதில் இருந்து தப்ப முடியாது.  ஒருவனை சந்தோஷப்படுத்தினால், உன்னால் அவனுக்கு நல்லது கிடைத்தால், உனக்கும் அதே சந்தோஷம்,  இன்பம் ஒரு பிறவியில் கிடைக்கும்.   '' இட்டார்க்கு இட்ட பலன் என்றெழுதி விட்ட சிவனும் செத்து விட்டானோ' என்று ஒரு பக்தர் பாடியது நினைவுக்கு வருகிறது.     கம்ப்யூட்டரில்  எல்லாத்தையும்  ''செலக்ட்'' பண்ணி  ஒரு வினாடியில்  ''டிலீட்''  (DELETE ) பண்ணமுடியும்.  வாழ்க்கை கம்ப்யூட்டர் இல்லையே  என்ன செய்வது?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...