தென்னை மர கதை J.K. SIVAN
பேரன் தமிழ் பாடத்தில் ஒரு பாட்டு மனப்பாடம் பண்ணிக்கொண்டிருந்தான். ''தாத்தா, இதுக்கென்ன அர்த்தம்?''
நன்றி ஒருவற்கு செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா, நின்று
தளரா வளர் தெங்கு தானுண்ட நீரை
தலையாலே தான் தருத லால்
''ரொம்ப அருமையான ஒரு பாடல் டா இது. ஒளவையார் எழுதிய தமிழ் புலவர் மூதுரை என்று சில பாடல்கள் எழுதி இருக்கிறாள். அது ஒரு அற்புதமான நூல். ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டியது மட்டுமல்ல. தினமும் படித்து குழந்தைகளுக்கு சொல்லவேண்டிய ஒரு சிறந்த பாடம். அதில் ஒன்று தான் இது. உனக்கு புரியும்படியாக சொல்கிறேன்.
நமது வீட்டில் பின் புறம் இரண்டு தென்னை மரம் இருக்கிறதே அதற்கு தினமும் நீ தண்ணீர் ஊற்றுகிறாயா?
''எதுக்கு தாத்தா அதுக்கு தண்ணி ஊத்தணும். அது தான் பெரிசா ஆயிடுத்தே. சின்னதா இருந்தபோது அப்பா தினமும் ஊத்துவா. வளர்ந்துடுத்து இப்போ.''
''அதாலே என்ன பிரயோஜனம் கோபு?
'' ஏன் தாத்தா மறந்து போயிட்டியா. போன ஞாயிற்றுக் கிழமை கூட அப்பா ஒரு ஆளை விட்டு தேங்கா இளநீர் பறித்து நீ கூட இளநீர் குடிச்சிட்டு இனிமையா இருக்கு என்று சொன்னியே''
''ரொம்ப ரைட்டுடா. உனக்கு ஞாபகம் இருக்கா என்று பார்த்தேன். எப்போதோ சிறிதாக இருந்த போது வீட்டில் கைகால் அலம்பிய வீணாக போகும் நீரை ஒரு சிறு பாத்தி கட்டி அதற்கு வேரில் நீர் படும்படியாக உன் அப்பா பண்ணினார். அந்த உதவியை நன்றாக மனதில் வைத்துக்கொண்டு அந்த தென்னை மரங்கள் வேரில் பாய கீழே ஊற்றிய கழிவு நீருக்கு பிரதியுபகாரமாக இனிமையான இளநீரை பெரிதாக காய்களை தாங்கி தனது தலைமேல் வைத்து நமக்குமரியாதையோடு, மனப்பூர்வமாக தருகின்றன.
இதைப்போலவே தான் நாம் நமக்கு யாரோ ஒருவர் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அந்த நேரத்தில் அந்த உதவி இந்த உலகை விட பெரியதாக நமக்கு உதவியதே என்று எண்ணி நன்றிக்கடன் பட வேண்டும். எனவே தான் நாம் எப்போதும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். பலன் எதிர் பாராமல் - இதைத்தானே கீதையில் கிருஷ்ணனும் ஞாபகப்படுத்துகிறார். சொல்லியிருக்கிறேனே. பலன் தானே எங்கிருந்தோ எதிர்பாராமல் மற்றொருவர் மூலம் நமக்கு வரும்.
''சரி இதை பற்றி ஒரு கதை சொல்கிறேன் கேள். பேரனுக்கு தாத்தா சொல்லும் கதைகள் ரொம்ப பிடிக்கும். பள்ளிக்கூடத்தில் நண்பர்களிடம் சொல்வான். சிலசமயம் டீச்சரம்மா கூட கேட்டுவிட்டு வேறு வகுப்புகளில் சொல்வாளாம்..
''வடக்கே ஒரு குளிர் ரொம்ப மிகுந்த மலைப் பிரதேசம். சிம்லா டார்ஜிலிங் மாதிரி என்று வைத்துக்கொள். அதன் ஒரு மலைப்பாதையில் ஒருநாள் ராஜு தனது சைக்கிளில் போய்க்கொண்டிருந்தான். அவன் அங்கே வசிப்பவன். நல்லவன். தட்டு முட்டு சாமான் விற்கும் செய்யும் ஒரு சிறு கடை வைத்திருந்தான். அவன் மனைவி வேறொரு இடத்தில் ஏதோ ஒரு கடையில் உதவி வேலைக்குப் போவாள். ஒருநாள் ராஜு தனது ரிப்பேர் கடைக்கு போகும்போது எதிரே வழியில் ஒரு விலையுயர்ந்த கார் நிற்பதை கண்டான்.
அதை ஓட்டி வந்த வயதான மாது குளிரில் கலங்கி என்ன செய்வது என்று திகைத்து நிற்பது வேதனையளித்தது. வெகுநேரமாக நிற்கிறாள். யாரும் கண்டு கொள்ளவில்லை. தன சைக்கிளை அவள் அருகில் நிறுத்தி
" அம்மா நான் இப்பகுதியில் வசிக்கிறேன். எதாவது உதவி தேவையா?"
'' ரொம்ப நல்லது அப்பா '' என்று சொன்ன அவள் முகம் கவலையாலும், பசி , களைப்பாலும் வாடியிருந்ததையும் , குளிரில் நடுங்குவதையும் கவனித்தான். காரை கவனித்தான். காரின் ஒரு சக்கரத்தின் டயர் பஞ்சர் ஆகி இருந்ததை கண்டதும் அவனுக்கு புரிந்து விட்டது.
" அம்மா. பெரிய ரிப்பேர் எதுவும் இல்லை. நீங்கள் காரில் உட்காருங்கள். நான் சரி செய்துவிடுகிறேன்" என்று சொல்லி அடுத்த கணமே காரில் இருந்து ரிப்பேர் சாதனங்களுடன் காரின் அடியில் புகுந்து வேலை செய்தான்.
கைகளில் சில்லறை சிராய்ப்பு காயத்துடன், ரத்தம் வடிய, ஒருவாறு ஸ்டெப்னி டயர் எடுத்து மாட்டி காரை ஓடும்படி செய்து விட்டான். உடலில் மண்ணுடன், கைகள் அழுக்கு படிந்து, கரைகளுடனும் ரத்தத்துடனும் காரின் அடியிலிருந்து வெளி வந்த ராஜுவிடம்
"தம்பி நான் டெல்லியிலிருந்து இந்த வண்டியை ஓட்டி வருகிறேன், இங்கு வரும்போது தான் இவ்வாறு ஆகிவிட்டது. நீ செய்த உதவிக்கு நன்றி, எவ்வளவு தந்தாலும் அது இந்த சமயத்தில் நீ செய்த உதவிக்கு ஈடாகாது. என்றாலும் எவ்வளவு கொடுக்கவேண்டும் என்று சொல்கிறாயா? "
ராஜு சிரித்தான். "அம்மா நான் கார் மெக்கானிக் இல்லை. எதோ என்னால் உங்களுக்கு உதவ முடிந்ததே என்று ஆண்டவனிடம் நன்றி சொல்வேன். எனக்கு வாழ்க்கையில் பல கட்டங்களில் பலர் எதிர்பாராமல் உதவியிருக்கிறார்கள். ஆகவே இது எனக்கு கடமை என்று நினைக்கிறேன்"
உங்களுக்கு எனக்கு ஏதாவது செய்யவேண்டும் என தோன்றினால் யாரேனும் உதவி நாடி தவிக்கும்போது உடனே உங்களாலான உதவி செய்யுங்கள். அப்போது என்னை நினைத்துகொள்ளுங்கள். "
அந்த பெண்மணி கண்களில் நன்றி கண்ணீர் ரெண்டு சொட்டு. கார் பறந்து சென்றது. மன திருப்தியுடன் சைக்கிளை மிதித்துக்கொண்டு வீடு திரும்பினான் ராஜு .
காரில் சென்ற பெண்மணி வழியில் எங்காவது சாப்பிட இடம் தேடியவள் ஒரு சுமாரான உணவு விடுதி ஒன்றை கண்டு காரை நிறுத்தி உள்ளே சென்றாள். அங்கு ஒரே ஒரு நிறைமாத கர்ப்பிணி மட்டும் தான் அப்போது இருந்தாள். கார் ஓட்டிவந்த பெண்மணியை புன்னகையுடன் அந்த பெண் வரவேற்றுச் சூடான நீர் கொடுத்து, சுத்த டவல் கொடுத்து கை முகம் எல்லாம் துடைத்து கொள்ளுங்கள் என உபசரித்தாள். வயிறு நிறைய ருசியான உணவு பரிமாறினாள்.
பில் 155 ரூபாய் என்றாலும் 500 ரூபாயை கர்ப்பிணி கையில் திணித்தாள். " இதோ ஒரு நிமிஷம் இருங்கள், பக்கத்தில் சென்று இதை மாற்றி பாக்கி பணம் கொண்டு வருகிறேன்" என்று கர்ப்பிணி அடுத்த கடைக்கு ஓடினாள்."
கார் ஒட்டி வந்த முதியவளுக்கு ஏனோ திடீரென்று ராஜுவின் முகம் மனதில் தோன்றியது. தனக்கு தானே தலையை ஆட்டி மனதில் தோன்றிய எண்ணத்தை ஆமோதித்தாள். சிரித்துக்கொண்டே மூதாட்டி மேசையின் மேல் இருந்த ஒரு டிஷ்யு பேப்பரில்
"பாக்கி ஒன்றும் இல்லை" என்று எழுதி வைத்து விட்டு வெளியில் சென்று காரில் பறந்து விட்டாள்.
சிறிது நேரத்திலேயே பாக்கி பணத்துடன் வந்த கர்ப்பிணி, மூதாட்டியை காணுமே என்று வியந்தவள் , அவள் உட்கார்ந்திருந்த மேசையின் மேல் தட்டின் அடியில் டிஷ்யு பேப்பரில் என்னவோ எழுதியிருக்கிறதே என்று எடுத்து பார்த்தவள் - அதன் அடியில் முழுசாக ஒரு ஐநூறு ரூபாய் நோட்டும் மற்றும் ஒரு சின்ன காகிதத்தில்
" உனக்கு நான் உதவியது என் கடமை, எனக்கு ஒருவன் ஏற்கனவே இன்று உதவியதின் தொடர்ச்சி இது . நீயும் இந்த உதவி சங்கிலியை விடாமல் தொடர்ந்து வளரவிடு " என்று எழுதியிருந்ததை கண்ணீர் மல்க படித்தாள் .
ரூபாயையும் காகிதத்தையும் மடித்து தனது கைப்பையில் வைத்துகொண்டு தன் வேலையை தொடர்ந்தாள்.
மேசை துடைப்பது, வரும் விருந்தினரை உபசரிப்பது, உணவளிப்பது, பில் செட்டில் பண்ணுவது கடைசியில் எல்லா பொருள்களையும் கழுவி, துடைத்து, மீண்டும் சுத்தமாக அது அது அந்த அந்த இடத்தில வைப்பது, -- அனைத்து வேலையும் வழக்கம்போல் செய்து முடித்து கடையைப் பூட்டிக்கொண்டு சென்று வீட்டு வேலைகளையும் ஒருவாறு முடிந்து , இரவு படுக்கும்போது மணி பத்து.
நாள் முழுதும் அவள் அந்த மூதாட்டியையும் அவள் கொடுத்த பணத்தையும், காகிதத்தில் எழுதியிருந்த
தையும் நினைத்தே அதிசயத்தில் இருந்தாள். அருகில் படுத்திருந்த கணவனை திருப்பி
"ஏங்க, இன்னிக்கு ஒரு விசித்ரம் நடந்ததுங்க'' என்று எல்லாவற்றையும் ஒப்பித்தாள். கவலைப்பட்டுகிட்டே இருந்தீங்களே. அடுத்த வாரம் ஆஸ்பத்திரிக்கு 500 ரூபாய் குறையுது என்ன செய்றது, எப்படி டெலிவரிக்காக பணம் கட்டறதுன்னு கேட்டீங்களே. - கடவுளா பாத்து இன்னிக்கு வழி காட்டினாரு பாத்திங்களா" இல்லேன்னா எப்படிங்க அந்த அம்மா கரெக்டா நமக்கு தேவையான பணத்தை கொடுக்கணும்" என்றாள்.
''கடவுளே உன் அருளை யார் அறிவார் என்று மனமுருகி வேண்டினான் அவள் கணவன்! ராஜு
No comments:
Post a Comment