பேசும் தெய்வம் J.K. SIVAN
மகா பெரியவா
ஹே ஆபத் பாந்தவா....!
இது கட்டுக்கதையாக இருக்க முடியாது. ஏனெனில் நடந்த விஷயம், இதில் வரும் தீர்க்க தரிசி ஒப்பற்ற ஒரு மஹான். இந்த விஷயம் நாலு வருஷம் முன்னால் நான் படித்தது. இன்று கம்பியூட்டரில் இடம் இல்லாததால், a பழைய விஷயங்களை எல்லாம் அழித்துக்கொண்டு இருந்தபோது கண்ணில் பட்டது.
எப்போதோ நான் எழுதி வைத்திருந்ததை இப்போது மீண்டும் படிக்கும்போது இப்போது தான் எழுதி இன்னும் ஈரம் காயாதது போல் இருக்கிறது. மனதில் ஈரம் இருந்தால் எதுவும் காயவேண்டியது இல்லையே.
துரியோதனன் அரண்மனையில் எல்லோர் மனத்திலும் அதிர்ச்சி.என்ன நடக்கப்போகிறதோ என்று மனக் கொந்தளிப்பில் அனைவரும் அசையாமல், ஆனால் மனம் படபடக்க வியர்வை வெள்ளத்தில் அமர்ந்திருந்தனர். இதோ வந்துவிட்டான் சென்றவன். அழுகுரல் கேட்கிறது. ஒரு பெண் தலைமுடி பற்றி இழுத்து வரப்படுகிறாள். அவள் கணவன், இல்லை கணவர்கள், ஆமாம் ஐந்து கணவர்கள் அவளுக்கு, உலகத்தையே வெல்லக்கூடிய அதி தீர சூரர்கள் பொம்மையாக தலை குனிந்து அனாதைகளாக அமர்ந்திருக்கிறார்கள்.
இழுத்து வந்த பெண்ணை மானபங்கம் பண்ண தயாராகிவிட்டான் துரியோதனன். ''துச்சாதனா, அவளை நிர்வாணமாக்கு '' ... தம்பி ஆர்வமாக அவள் புடவையை பிடித்து அவிழ்க்கிறான். கதறுகிறாள். எவரும் உதவவில்லை... அந்த நிலையில் அவளை காப்பாற்ற ஒரு தெய்வம் அவளுக்கு உதவியது. எப்படி? அவள் கூப்பிட்ட குரலுக்கு பதிலாக?
கூப்பிடாமலே அந்த தெய்வம் ஒருவேளை உதவி இருக்குமோ? இருக்கலாம் என்று நிரூபித்தவர் ஒரு மஹான். பகவானுக்கு தெரியாதா? யாருக்கு எப்போது எந்த உதவி தேவை என்று. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி இது.
கர்நாடகம்-மகாராஷ்டிரம் எல்லைப் பகுதியில் மஹா பெரியவா விஜய யாத்திரை சென்று .கொண்டிருந்த நேரம். ஒரு கிராமத்தில் தங்க முடிவெடுத்தார் பெரியவா. ராம துர்கம் என்று பெயர் அந்த சிறிய அமைதியான கிராமத்துக்கு. கிராமம் ஒரு பெரிய ஆற்றின் கரையில் இருந்தது. ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுகிறது. பெரியவா ஒரு நதிக்கரையில் ஒரு ஓரமாக அமர்ந்து கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். மடத்தை சேர்ந்தவர்கள் வளைந்து சென்ற அந்த ஆற்றங்கரையில் ஒரு இடத்தில் ஸ்னானம் செயது ஜெப அனுஷ்டானங்கள் செய்தனர்.
சிறிது நிமிஷங்கள் கழித்து பெரியவா கண்களை திறந்தார். அருகே கண்ணில் தென்பட்ட சில மடத்து தொண்டர்களை அவசரமாக அழைத்தார். பெரியவா கூப்பிடுகிறார் என்று ரெண்டு பேர் ஓடி வந்தார்கள்.
' ரெண்டு பேர் மேல் துண்டுகளையும் இங்கே கீழே போடுங்கோ ''
'' ஏன் எதற்கு என்று எல்லாம் கேட்கவோ யோசிக்கவோ அவசியமில்லையே. பெரியவா வாக்கு தெய்வ வாக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும்'' -- ரெண்டு பேரும் மேல் துண்டுகளை கீழே போட்டார்கள்.
பெரியவா கண்கள் யாரையோ தேடின. நேரம் சில நிமிஷங்கள் ஓடியதை சொல்லியது. ஜன நடமாட்டமே இல்லை. எங்கிருந்தோ ஒரு சிறு பையன் கண்ணில் பட்டான். ஏழு எட்டு வயசு இருக்கலாம். மாடு மேய்க்கும் பையன். அவனை சைகையால் கை காட்டி அழைத்தார் பெரியவா.
தயங்கி தயங்கி அவன் அருகில் வந்தான். ஓ வென்று காற்றில் ஒலித்தவாறு, நுங்கும் நுரையுமாக கடல்போல் அந்த ஆறு அளவுக்கு மீறி ஓடிக்கொண்டிருந்தது. பெரியவா, பையன், தூர ஒன்றிரண்டு பக்தர்கள், மடத்து சிப்பந்திகள். வேறு யாருமே இல்லை.
மஹா பெரியவா கன்னடம் சரளமாக பேசுவார். அந்த பையனிடம் பெரியவா அவனுக்கு தெரிந்த ஒரே மொழியான கொச்சை கன்னடத்தில் "இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஒரதல்லி இதாளே, அந்த யங்குஸ்
தர்கடே கொடப்பா;" (இந்த இரண்டு வஸ்திரங்களையும் ஆற்றோரம் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் கொடு)
மெஷின் மாதிரி அந்த பையன் கீழே இருந்த அவர் காட்டிய ரெண்டு மேல் துண்டுகளையும் எடுத்துக் கொண்டு அவர் காட்டிய மேற்கு திசை நோக்கி நகர்ந்தான். ஆறு கிழக்கு மேற்காக வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வெள்ளம் வடிய இன்னும் ஒரு வாரம் மேலே ஆகலாம். யார் கண்டார்கள்? மேற்கு நோக்கி வளைந்து சென்ற ஆற்றின் கரையில் ஒரு சில மரங்கள் மறைப்பில் ஆற்றின் கரையில் நீரில் தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு அதிர்ச்சியில் ஒரு பெண் மரக்கிளையை பிடித்துக் கொண்டு நீரில் அமர்ந்திருந்தாள். அவளிடம் பெரியவா சொல்லியது போல் ''இந்தா'' என்று ரெண்டு துண்டுகளையும் கொடுத்தான். பிறகு அங்கிருந்து ஓடிவிட்டான்.. அவளும் அவற்றை இடுப்பிலும் மேலும் சுற்றிக்கொண்டு ஒரே ஓட்டமாக வீடு நோக்கி ஓடினாள்.
அந்தப் பெண், பாவம், கிட்டத்த்தட்ட அரைமணிக்கு மேலாக என்ன செய்வது என்று தெரியாமல் உடலை நீரில் மறைத்துக்கொண்டு யாராவது வருவார்களா, உதவுவார்களா என்று, கண்ணால் தேடிக்கொண்டிருந்தாள் . அவள் ஆடைகள் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விட்டதால் அவள் முழு நிர்வாணம். வெட்கம் பிடுங்கி தின்றது. பயம், எப்படி இந்த இக்கட்டில் இருந்து மீள்வது என்ற அதிர்ச்சி. இந்த நேரம் பார்த்து யாரோ ஒரு சாமியார் வேறு இங்கே சற்று தூரத்தில் வந்து உட்கார்ந்து விட்டாரே, அவர் ஆளுங்க குறுக்கே நெடுக்கே போறாங்க. இல்லேன்னா ஒரே ஓட்டமாக மரத்து மறைப்பில் ஓடி யாரையாவது துணி கேட்கலாம். எப்போ தொலைவாங்க இவங்க ?'' இது தான் அவள் எண்ணம்.
வேறு யார் கண்ணிலும் படாமல் எங்கோ இருந்த அந்த கிராமப் பெண்ணின் அவசர நிலை பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?. அந்த நெருக்கடியில் அவளுக்கு என்ன உதவி தேவை என்று எப்படி உணர்ந்தார்? அவர் அவளை பார்க்க வில்லையே. எப்படி ஒரு சின்ன பையன் கண்ணில் பட்டான்?. கூப்பிட்டவுடன் வந்தான். அவளுக்கு ஆடை கொடுத்தான். இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. அவசியம் இல்லை. நான் தான் முதல் பாராவில் மேலே சொல்லி விட்டேனே. பகவானுக்கு எப்போது யாருக்கு என்ன உதவி தேவை என்று தெரியுமே!. பெரியவா பேசும் தெய்வம் இல்லையா? Attached is a rare photo of Periyava lying down on a mat in the floor reading a holy book, with a stone step as pillow. Can we find another like Him?
No comments:
Post a Comment