Monday, January 21, 2019

BHARATHIYHAR

மகா கவி பாரதியார் - J.K SIVAN

சிட்டுக்குருவியின் சேதி

சிட்டுக்குருவி பற்றிய சேதி தெரியுமா? சுத்தமாக மறைந்து விட்டன. முன்பெல்லாம் எங்கள் வீட்டில் மாதத்திற்கு ரெண்டு முறை மின்விசிறிமேல் , எலக்ட்ரிக் மீட்டர் பெட்டி மேல், உத்தரத்தில் ஜன்னல் மேல், கொல்லை கதவு மேல், பரணில் கண்டா முண்டா சாமான்கள் இடுக்கில் எல்லாம் கூடு கட்டும். விர்ரென்று பறந்து நூறு தடவை வீட்டிற்குள் நுழையும். மின் விசிறியில் அடிபட்டு பாவம் சிலது விழும். சிலது காப்பாற்றி இருக்கிறேன். விடிகாலையிலிலிருந்தே வீட்டில் கலகலவென்று அதன் கீச் கீச் சப்தம் கேட்டு பல காலம் ஆகிவிட்டது. செல்போன் டவர்கள் குருவிகளை தின்றுவிட்டன என்கிறார்கள். எனக்கு செல் போனை விட குருவிகள் ரொம்ப பிடிக்கும்.

மஹாகவி பாரதியாருக்கும் குருவி பிடிக்கும். 1909ல் செல் போன் இல்லை. டவர்களும் இல்லை. பொன்னு ராஜமாணிக்கம் பிள்ளை 1909ல் (120 வருஷங்களுக்கு முன்) பாரதியின் புதுச்சேரி நண்பர். அவருக்கும் குருவி பிடித்து ''கவிஞரே குருவி பாட்டு ஒன்று எழுதுங்கள்'' என்று சொல்லி பாரதியார் இந்த பாட்டை குருவியோடு பேசி கேள்வி கேட்டு அது பதில் சொல்வது போல் எழுதினார். பாரதி பாடும்போது அவருடைய சுதந்திர தாகம் தீரவில்லை. தாகத்தோடு தான் குருவி போல மறைந்து போனார். என்ன தெளிவு! கற்பனை!, கனிவு! பரந்த மனம், தேச விடுதலை ஏக்கம் -- குருவியிடம் கூட நாம் கற்றுக்கொள்ள பாடங்கள் நிறைய இருக்கிறது.

''அருவி போல கவி பொழிய - எங்கள் அன்னை பாதம் பணிவேனே.
குருவி பாட்டை யான் பாடி அந்த கோதை பாதம் அணிவேன்.

கே: ''சின்னஞ்சிறு குருவி - நீ செய்கிற வேலை என்ன?
வன்னக்குருவி நீ வாழும் முறை கூறாய்?''
குருவி: ''கேளடா மானிடவா - எம்மில் கீழோர் மேலோர் இல்லை.
மீளா அடிமை இல்லை,- எல்லோரும் வேந்தரென திரிவோம்.

உணவுக்கு கவலையில்லை,- எங்கும் உணவு கிடைக்குமடா.
பணமும் காசும் இல்லை- எங்கு பார்க்கினும் உணவேயடா
சிறியதோர் வயிற்றினுக்காய்- நாங்கள் ஜென்மமெல்லாம் வீணாய்
மறிகள் இருப்பதுபோல் - பிறர் வசந்தனில் உழல்வதில்லை.

காற்றும் ஒளியுமிகு - ஆகாயமே எங்களுக்கு
ஏற்றதொரு வீடு -இதற்கெல்லை ஒன்றில்லையடா.
வையகம் எங்குமுளது -உயர் வான பொருளெல்லாம்
ஐயமின் றெங்கள் பொருள் - இவை எம் ஆகாரமாகுமடா

ஏழைகள் யாருமில்லை - செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வுகள் தாழ்வுமில்லை - என்றும் மாண்புடன் வாழ்வமடா.
கள்ளம் கபடமில்லை - வெறும் கர்வங்கள் சிறுமையில்லை
எள்ளற்குரிய குணம் - இவை யாவும் உம் குலத்திலடா.

களவுகள் கொலைகளில்லை - பெருங் காமுகர் சிறுமையில்லை
இளைத்தவர்க்கே வலயர் - துன்பம் இழைத்துமே கொல்லவில்லை
சின்னஞ்சிறு குடிலிலே - மிகச் சீரழி வீடுகளில்
இன்னலில் வாழ்ந்திடுவீர் - இது எங்களுக்கு இல்லையடா.

பூநீறை தருக்களிலும், -மிகப் பொலிவுடை சோலையிலும்
தேனிறை மலர்களிலும்- நாங்கள் திரிந்து விளையாடுவோம்.
குளத்திலும் ஏரியிலும் - சிறு குன்றிலும் மலையினிலும்
புலத்திலும் வீட்டினிலும் - எப் பொழுதும் விளையாடுவோம்.

கட்டுகள் ஒன்றுமில்லை -பொய்க் கறைகளும் ஒன்றுமில்லை
திட்டுகள் தீதங்கள் - முதற் சிறுமைகள் ஒன்றுமில்லை.
குடும்பக் கவலையில்லை,- சிறு கும்பித் துயருமில்லை
இடும்பைகள் ஒன்றுமில்லை -எங்கட் கின்பமே என்றுமடா.
துன்பமென்றில்லையடா - ஒரு துயரமும் இல்லையடா
இன்பமே எம் வாழ்க்கை - இதற்கு ஏற்ற மொன்றில்லையடா
காலையில் எழுந்திடுவோம் - பெருங் கடவுளை பாடிடுவோம்
மாலையும் தொழுதிடுவோம் - நாங்கள் மகிழ்ச்சியில் ஆடிடுவோம்.

தானே தளைப்பட்டு - மிகச் சஞ்சலப்படும் மனிதா,
நானோர் வார்த்தை சொல்வேன் - நீ மெய்ஞ் ஞானத்தை கைக் கொள்ளடா
விடுதலையைப் பெறடா - நீ விண்ணவர் நிலை பெறடா
கெடுதலை ஒன்றுமில்லை - உன் கீழ்மைகள் உதறிடடா.

இன்பநிலை பெறடா -உன் இன்னல்கள் ஒழிந்ததடா
துன்பம் இனி இல்லை - பெருஞ் சோதி துணையடா
அன்பினைக் கைக் கொள்ளடா -இதை அவனிக்கிங்கு ஓதிடடா
துன்பம் இனியில்லை -உன் துயரங்கள் ஒழிந்ததடா

சத்தியம் கைக் கொள்ளடா - இனி சஞ்சலம் இல்லையடா
மித்தைகள் தள்ளிடடா - வெறும் வேஷங்கள் தள்ளிடடா
தர்மத்தை கைக்கொள்ளடா - இனிச் சங்கடம் இல்லையடா
கர்மங்கள் ஒன்றுமில்லை - இதில் உன் கருத்தினை காட்டிடடா

அச்சத்தை விட்டிடடா - நல் ஆண்மையைக் கைக்கொள்ளடா



இச் சகத்தின் மேலே நீ - என்றும் இன்பமே பெறுவையடா

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...