மார்கழி விருந்து J.K SIVAN
மார்கழி 30ம் நாள்
செல்வத்திருமால்
''வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.''
மேலே கண்டது கோதை நாச்சியார் அருளிச்செய்த திருப்பாவையின் முடிவுக்கான கடைசி பாசுரம். இதை பலஸ்ருதி என்று சொல்வது வழக்கம். ஒவ்வொரு முக்கிய ஸ்லோகத்தையும் , மந்திரத்தையும் , உச்சாடனம் செய்தால், விடாமல் சொன்னால் இன்ன பலன் கிடைக்கும் என்று அளிக்கும் பலஸ்ருதி .
'' இந்த சுலோகம் சொல்லுங்கள் ஸார் , பாராயணம் பண்ணுங்கள் மாமா , அதன் பிரகாரம் நடக்கவும்'' என்று ஒன்றை பற்றி ஒருவர் மற்றொருவரிடம் சொன்னால்,
'' ஓஹோ அப்படியா, இதைச் செய்தால், இதன் படி நடந்தால், எனக்கு என்ன பயன், என்ன பலன்?'' என்று கேட்பவர்கள் நம்மில் அநேகர் இருப்பதை அந்த இளம் பெண் கோதை நாச்சியார் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்து வைத்திருக்கிறாள். அவர்களை, (நம்மை) திருப்திப்படுத்த அவள் கொடுத்த வாய் மொழி இது .
மார்கழி முடிந்தவுடன் தான் உத்தராயண புண்ய காலம் ஆரம்பமாகிறது. இந்த முப்பது ஆண்டாள் பாசுரங்களை எத்தனையோ மகான்கள் வியாக்யானம் செய்திருக்கிறார்கள். அனுபவித்து உரையாற்றி யிருக்கிறார்கள், பிரசங்கித்து வருகிறார்கள். பாடிக்கொண்டும் வந்திருக்கிறார்கள் இன்று வரை.
இங்கொன்றும் அங்கொன்றுமாக சில பெரிய விஷயங்களைத் தொடுகிறது என்பதைத் தவிர என்னுடைய இந்த மார்கழி விருந்து கட்டுரைகள் பாராயண புத்தகமல்ல. குழந்தைகளுக்கும் சில பெரியவர்களுக்கும் திருப்பாவையை எளிதில் அறிமுகம் செய்ய என்னாலான ஒரு சிறிய முயற்சி என்று தான் சொல்வேன் .அப்படித்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.
கோதையின் திருப்பாவை முப்பது பாசுரங்களும் தினமும் விஷ்ணுசித்தரிடம் விளக்கம் கேட்ட ஆலய பட்டாச்சார்யர் என்னவோ கேட்கிறாரே, அது என்ன ?
''சுவாமி, நீங்கள் இன்று விளக்குகின்ற பாசுரம் தான் மார்கழிக்கான கடைசி பாசுரம் என்று அறியும்போது இனி தொடராதே என்கிற வருத்தம் மிகவும் இருக்கிறது '
' அப்படிச் சொல்லவேண்டாம். இதற்கு முடிவே கிடையாது. ஒன்றில்லை எனில் மற்றொன்று. இந்த பாசுரத்தில் ஆண்டாள் கேசவா மாதவா என்று கிருஷ்ணனை அழைக்கிறாள். ''க '' என்பது பிரமனைக் குறிக்கும் சொல். ''ஈசா'' என்பது சிவனைக்குறிக்கும் சொல். (க+ஈசா = கேசவா). மும்மூர்த்திகளும் ஒன்றே என்ற அழகான வார்த்தை. மாதவா என்பது மஹாலக்ஷ்மி .தாயாரை உடையவர் என்று பொருள். திருப்பாற்கடலைக் கடைந்ததில் கிடைத்தவள் மகா லக்ஷ்மி. (இந்த கோதை, தன்னை அரங்கனை அடைய வந்த மஹாலக்ஷ்மி என்பதை விளக்குகிறாளோ?)
முதல் பதினைந்து பாசுரங்களிலும் மற்ற பெண்களுடன் யமுனையில் நீராடி அன்றாடம் நோன்பு நோற்பதையும், 16வதில் நந்தகோபன் அரண்மனையை அடைவதையும் , அடுத்த 5 பாடல்களை நந்தகோபன், பலராமன், முதலானோரை துயிலெழுப்புவதையும், 23வது பாசுரத்தில் கண்ணனை துயில் எழுப்பி அவனை சிம்மாசனத்தில் அமரச்செய்வதையும், மற்ற இருபாடல்களில் பரிபூர்ண சரணாகதித்வம் பற்றியும் 26ல் விரதத்துக்கு தேவையான பொருள்களை வேண்டுவதையும், 27ல் அந்த ஆயர்பாடிச் சிறுமிகளுக்கு சன்மானம் கேட்பதையும், 28வதில் அவனது மேன்மையை எடுத்துச்சொல்லி தாங்கள் செய்த நோன்பில் ஏதேனும் தவறுகள், குறைபாடுகள் இருப்பின் அவற்றை க்ஷமிக்க வேண்டுவதையும், 29ல் நோன்பின் நோக்கத்தை அருளிச்செய வேண்டுவதையும், 30ல் அதை அடைந்தனர் என்ற பலஸ்ருதியையும் எத்தனை அழகாக மணி மாலையாக அந்த பட்டர்பிரான் வளர்த்த கோதை தொடுத்து அளித்திருக்கிறாள். பலே பெண் அந்த ஆண்டாள்.
திருப்பாவையை மனதில் பக்தியோடு, நம்பிக்கையோடு படித்து பாராயணம் செய்பவர்க்கு நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும். இதற்கு கண்ணன் அருள் புரிவான். 'வாரண்டி, கேரண்டீ' இதுதான்.
இந்த பாசுரம் திருப்பாவையை பூர்த்தி செய்கிறது. ஒரு அழகிய மணிமாலையில் ஒரு மணி உதிர்ந்தாலும் மாலைக்கு மதிப்பில்லையே. அது போல் இந்த முப்பது பாசுரங்களையும் முழுமையாக பாடி வேண்டுவோர்க்கு பொங்கும் மங்களம் எங்கும் தங்கும் என்பது சான்றோர் வாக்கு.
திருப்பாவை 30 பாடல்கள் முடிந்து விட்டது என்பதால் இத்துடன் எனது ''தடா'' க்கள் காலியாகவில்லை. இனிமேல் தான் அக்கார அடிசலே வருகிறது. ஆண்டாள் அரங்கனை அடையப் போகிறாள். பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்துகொண்டு வருகின்றன. திருமண அழைப்பு உங்களை அடையப்போகிறது. அதிகமாக பொங்கல் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொண்டால் ஆண்டாள் கல்யாண சாப்பாடு நிறைய சாப்பிடமுடியாதே. நாளை வயிற்றை காலியாக வைத்துக்கொண்டு காத்திருக்கவும்.
No comments:
Post a Comment