Tuesday, April 30, 2019

GITANJALI



கீதாஞ்சலி               J K SIVAN 
                             
ரபீந்திரநாத் தாகூர் 


                                                       அம்மாவின் பார்வை ....


''சென்னையில்  ஜோ  என்று  விடாத  பெரிய  மழை...''     இது   மே  மாத  செய்தி அல்ல.  ஒரு இனிமையான கனவு .  தூக்கத்திலாவது சில்லென்று காற்று வரட்டுமே.   மேலே  மின் விசிறி  அதிக சப்தம் போடுகிறதே தவிர காற்றை விரட்டுகிறது.   துரோகி. 

இப்போது தாகூரோடு கல்கத்தா  செல்வோம்:   

இது மழையா தூத்தலா?   சை .. விடாது நசநச என்று நாளெல்லாம் பெய்கிறதே என்று  முன்பு சொல்வேன்.  இப்போது  மழையே  நீ வேண்டும். ஏன் ரொம்ப நாளாகவே  உன்னைக்  காணோம்?  என் தெய்வமே  கிருஷ்ணா, நீ மழையாக வா. என் இதயம்  பாளம் பாளமாக  விரிசல் விட்ட  மழைகாணாத  வறண்ட  நிலமாகி விட்டதே.    வானத்தை உற்று நோக்குகிறேன். எங்குமே  கருமை கண்ணில் படவில்லை. தொடுவானம் வரை எட்டியவரை பார்த்துவிட்டேன். மலட்டு வானம். மேக  ஆடை இல்லாத நிர்வாண வானம்.  கொஞ்சமாவது ஒரு குட்டி மேகம்..    ஹுஹும்..   எங்காவது  மண் வாசனையை கிளப்பி விட  கொஞ்சம் தூத்தல்...ஹுஹும். 

கிருஷ்ணா. உன் கோபமான  சூறைக்   காற்றை கிளப்பி விடு. அனுப்பு.  இருண்ட  கரு நிறத்தோடு  மரண ஓலத்தோடு, உயிர்களை பலி வாங்க வரட்டுமே. அப்படி உன் விருப்பம் இருக்குமா? மின்னல் சாட்டையால் பளீர் பளீர் என்று வலிக்க வலிக்க  தாக்குவாயா? ஆகாசத்துக்கும் பூமிக்குமாக  நீண்ட சாட்டை அடியா?  எதையோ செய்.  ஆனால் இந்த அமைதியான  நீரற்ற நிலத்தில் வீசும்  காற்றிலும் தெரியும் உஷ்ணத்தை நீக்கு. உன்னிடமே இந்த வறட்சியை திரும்பப்  பெற்றுக்கொள்.  யார் கேட்டார்கள் இதை?   எங்களுக்கு வேண்டாம்.  அசையாமல் எல்லாம் வெப்பத்தில்  வாடும் இந்த அவஸ்தை போதும். இது கொடிய செயல்.  இதயத்தை ஏமாற்றத்தால்  எரிந்து  துயரால் வாடி துடிக்கச்  செய்யாதே. 

உன் கருணை மேகம் மேலே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக  பூமியை நோக்கி இறங்கட்டும்.  என் மனதில் தோன்றும்  ஒரு காட்சியைச்  சொல்கிறேன் கேள். 

 அப்பா  கொடியவராக கோபத்தோடு  எடுத்ததற்கெல்லாம் கோபித்து,  அடித்து , திட்டி,  சித்ரவதை பண்ணும்போது அம்மா பாவம் பேசாமல் நிர்க்கதியாக , கதவோரம், சுவற்றோரம், தலை குனிந்து  நின்று அத்தனையும் வாங்கிக்கொண்டு கண்களில் நீர் ததும்பி  தரையில் சொட்ட சொட்ட  பிறகு  வாய் பேசாமல் தீனமாக  வேறு வழியின்றி பார்ப்பாளே............  அந்த பார்வை தான் என் பார்வை இப்போது,   உன் வருகைக்காக, மழை ரூபமாக, கருணை உருவமாக நீ வரவேண்டும். வா வா  கண்ணா வா...


the rain has held back for days and days, my God, in my arid heart. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...