சிவ வாக்கியர்
உயர்ந்த ஆனால் எளிய அறிவுரை.
சிவ வாக்கியர் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு முரட்டு சித்தர். அவர் வார்த்தைகள் கூரிய ஆயுதத்தை போல் மனதை தாக்குபவை. அதில் உயர்ந்த வேதாந்த தத்துவம் இருக்கும். உன்னத பக்தி இருக்கும். சிந்தனை தெளிவாக இருக்கும். வார்த்தை படிக்க இதமாக இருக்கும். சொற்கள் நடமாடும். நர்த்தனம் புரியும். அழகு தமிழ்.
சிவவாக்கியர் நடந்து போய்க்கொண்டே இருக்கிறார். ஒரு கூட்டம் சிவபக்தர்கள் நிறைய பேர் ஆடி பாடி, சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து, அலங்கரித்து, மந்திரங்கள் ஓதி, டாங் டாங் என்று மணி அடித்து வழிபடுகிறார்கள். சில கணம் அங்கே நிற்கிறார் சிவவாக்கியர். சற்று தொலைவில் அவர் கவனம் போகிறது மலைக் கல் பாறைகள் அருகே சிலர் கனமான சம்மட்டியால் அந்த பாறைகளை பிளந்து உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். டங் டங் என்று கல் பிளக்கும் சப்தம் காதை துளைக்கிறது. அவர் மனதில் எண்ணங்கள் பளிச்சிட மேலே நடக்கிறார். ஒரு பெரிய மாளிகை அங்கே ஏதோ விசேஷம் போல இருக்கிறது. வாசல் அழகாக அலங்கரிக்கப்பட்டு பளபளக்கும் கரிய நிற கல் வழவழவென்று பாலிஷ் போட்டு பாவி அதன் மேல் நிறைய பேர் நடந்து உள்ளே போவதும் வருவதுமாக இருக்கிறார்கள். சிவவாக்கியர் அதையும் பார்த்து விட்டு கடந்து போகிறார். அவர் தன்னையே இத்தனை மக்களுமாக கருதிக்கொண்டு அவர்களைக் கேட்பது போல தன்னையே கேட்டுக்கொள்ளும் அற்புத பாடல் இது சர்வம் ப்ரம்ம மயம். அருவமே உருவம் என்ற கோட்பாடு கொண்ட பாடல்.
'' அடா மனிதர்காள் , என் கேள்விக்கு என்ன பதில்? ஒரு பக்கம் மிகுந்த ஓசையோடு ஒரு கடின கருங்கல் பாறையை பிளக்கிறாய் ? வீட்டுகட்டவோ எதற்கோ அது தேவையானது.. அதே மலைக்கல் இன்னொரு பக்கம் அழகாக செதுக்கப்பட்டு எல்லோராலும் நடந்து தேய்ந்து , வழுவழுப்பாக, மெழுகு தடவி பளபளப்பாக மாளிகை வாசலில் படியானது. இன்னொரு பக்கம் பார்க்கிறேன். அதே மலைக் கல். அதை உருளையாக செதுக்கி, தேனும் பாலும் பன்னீரும் இளநீரும் அபிஷேகம் பண்ணப் பட்டு, அலங்கரிக்கப் பட்டு, மந்திரங்கள் ஓதியபடி புஷ்பங்கள் நிறைய சாற்றி, சிவலிங்கமாக வழிபடப்படுகிறது . அந்த ஈஸ்வரனுக்கு எந்த கல் உகந்தது?
ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே.
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே.
ஹே மானிடர்காள் , ஒருவன் இறந்துவிட்டான், அவனைச் சுற்றி அவன் சுற்றம் உறவு எல்லாம் மாரில் அடித்துக்கொண்டு தரையில் புரண்டு அழுகிறது. அப்போது அவர்களை நோக்கி பேசுகிறார் சிவவாக்கியர். ஒரு உண்மை சொல்கிறேன் கேட்கிறீர்களா? உங்களுக்கு புரியவேண்டும் என்று அற்புதமான உதாரணங்கள் சொல்லட்டுமா?
காராம்பசு வேளா வேலைக்கு மடி நிறைந்த பாலை படிப் படியாக அளந்து பாத்திரம் நிறைந்தது. பசுவின் மடியில் இருந்து வந்த பால் மீண்டும் பசுவின் மடிக்கு செல்ல முடியுமா? தயிரை கடைந்தாய், வெண்ணையும் மோரும் நிறைய சொம்பு சொம்பாக நிறைந்தததே , அது மீண்டும் தயிராகுமா? சங்கு பூம் என்று ஒலித்ததே எல்லோரும் கேட்டோம். அந்த ''பூம்'' சப்தத்தை மீண்டும் சங்குக்குள் செலுத்த முடியுமா? மரத்தில் வளர்ந்து பருத்து கனிந்த கனி தொப் என்று கீழே விழுந்ததே. மீண்டும் மரத்திற்கு தாவுமா? அழகாக மணம் வீசி மலர்ந்த மலர் உதிர்ந்ததே செடியில் அது மறுபடியும் தொற்றிக்கொள்ளமுடியுமா? அது போலவே தான் உடலை விட்டு பிரிந்த ஆத்மா மீண்டும் அதே உடலில் புகாது. இது இயற்கை. இறைவன் நியதி.
கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
விரிந்த பூஉதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே.
கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
விரிந்த பூஉதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே.
அப்பனே, நான் நீ என்றெல்லாம் பேசுகிறாயே, அதெல்லாம் எது? உனக்கும் எனக்கும் நடுவில் என்ன இருக்கிறது? அது எது? உன் ராஜா யார், உன் குரு யார் என்றால் இதோ என்று கை நீட்டி காட்டுகிறாயே அவர்களையும், மற்றும் நாம் காண்பது யாவையும் உண்டாக்கியது யார்? இதற்கு முன் இருந்ததை, இருந்தவர்களை, அழித்தது யார்? கண்ணுக்கு தெரிந்து பரந்த பூமி வானம் அதற்கப்பால், அதற்கப்பால், அதற்கப்பால்? தெரியுமா உனக்கு? ராம ராம ராம என்று சொல்லிப்பார் .எல்லாம் புரிய ஆரம்பிக்கும்.
நானதேது நீயதேது நடுவில் நின்றது ஏதடா
கோனதேது குருவதேது கூறிடுங் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராமராம ராமஎன்ற நாமமே.
கோனதேது குருவதேது கூறிடுங் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராமராம ராமஎன்ற நாமமே.
No comments:
Post a Comment