Sunday, April 14, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்      J K  SIVAN 
மஹா பாரதம்.

            இதோ வந்து விட்டது  பாரத யுத்தம் 
             

கேகய அரச குமாரர்கள், த்ரிஷ்டகேது, காசி ராஜன், ஸ்ரேனிமதன். வசுதனன், சிகண்டி, விராடன், யஜ்னசேனன், சுசர்மன், குந்திபோஜன், த்ரிஷ்டத்யும்னன் மக்கள், அனந்த்ரிஷ்டி, சேகி தானன், சாத்யகி,    இன்னும் எத்தனையோ மகா ரதர்கள்.

அர்ஜுனனும்  கிருஷ்ணனும் தத்தம்  சங்கங்களில் ஒலி எழுப்பினார்கள். எங்கும் அது எதிரொலித்தது.  குருக்ஷேத்ரம் நோக்கி புறப்பட்டது.

எங்கு புல்வெளியோ,  எங்கு நீர் நிலையோ, எங்கு  சம தரையோ ,எங்கு நிழலோ, எங்கு  சைனியத்தை நிறுத்த வேண்டுமென்று  யுதிஷ்டிரன் தேர்வு செய்தான்.  அனைத்து மிருகங்களும் நிம்மதியாக உணவருந்தி நீர் பருகி  ஓய்வெடுத்தன. கிருஷ்ணனும் அர்ஜுனனும் சில வீரர்களை  தனித்து  எல்லா எல்லைகளுக்கும் பாதுகாவலாக நியமித்தனர்.

கிருஷ்ணனின் உத்தரவில் அவர்கள் தங்கியிருந்த இடத்தை சுற்றி  அகழிகள் வெட்டினர். அரசர்களுக்கு, பெண்களுக்கு, மருத்துவர்-நோயாளிகளுக்கு, மற்றவர்களுக்கு  எல்லாம்  உணவு தயார்செய்ய என்று  நிறைய  கூடாரங்கள் அமைக்கப் பட்டன.  வில்களில்  நாண்  பொருத்துபவர்கள், ஆயுதங்களை கூர்மைப் படுத்துபவர்கள், தேர்களுக்கு  பலகைகள் செய்வோர் ஆகியோர் மும்முரமாக வேலையை  ஆரம்பித்தனர்.

''வைசம்பாயனரே,  இப்படி பாண்டவ சைனியம் எண்ணற்ற வ்ரிஷ்ணிகள்,கேகயர்கள், ஆதித்யர்கள், மற்றும் அரசர்களால் புடை சூழ குருக்ஷேத்ரம் அடைந்ததை அறிந்து துரியோதனன் என்ன ஏற்பாடு செய்தான்?

கேள் ஜனமேஜயா:  ''கிருஷ்ணன் தனது சமாதான முயற்சி தோல்வியடைந்து யுதிஷ்டிரனிடம் சென்றான் அல்லவா?. கோபத்தால் அந்த கிருஷ்ணன் பாண்டவர்களை  போருக்கு ஊக்குவித்திருக்கிறான்.  கிருஷ்ணனுக்கு இந்த யுத்தம் நடப்பதில் மகிழ்ச்சி.  அர்ஜுனனும் பீமனும் அவன் சொல் தப்பாதவர்கள்.  யுதிஷ்டிரனும் பீமன் சொல்படி நடப்பவன்.  நம்மை எதிர்த்த  விராடன், துருபதன் ஆகியோர் அவர்களுக்கு  உறுதுணையாகி விட்டனர். இவர்கள் அத்தனைபேரையும் நாம்  அழிக்க வேண்டும்.   நமது சைன்யமும் சேனைத் தலைவர்களும் நாளை  குருக்ஷேத்ரம்   புறப்படவேண்டும்.''  துரியோதனன்,    துச்சாதனன் சகுனி கர்ணன் ஆகியோரிடம் இவ்வாறு சொன்னான்.

ஹஸ்தினாபுரத்தில் சேனை வீரர்கள் வெள்ளமாக குவிந்தனர். கவசங்கள் ஆயுதங்கள் தரித்து  தயாராயினர்.

இங்கே பாண்டவர் கூடத்தில்  யுதிஷ்டிரன்  ''கிருஷ்ணா  நீ  இருபக்கமும் எல்லாம் அறிந்தவன். எங்களுக்கு எது நன்மை பயக்குமோ அதை அறிவித்து வழிநடத்து''   என்றான்

''யுதிஷ்டிரா,   எல்லா நல்வழிகளையும் சொல்லியும்   துரியோதனன் கேட்கவில்லை. துர்புத்தி கொண்ட கர்ணன், துச்சாதனன், சகுனி ஆகியோர் பேச்சை நம்பி உன் பலத்தை குறைத்து மதிப்பிட்டு யுத்தத்தில் இறங்குகிறான் துரியோதனன்.. ஆகவே  அழிவை எதிர் கொள்ளவேண்டியது தான்'' என்றான் கிருஷ்ணன்.

''கிருஷ்ணா,  நம் குருமார்களையும், சகோதரர்களையும் நாம்  எதிர்த்து கொல்ல வேண்டியிருக்கிறதே
எங்காவது தவறு செய்கிறோமோ?'' என்றான் யுதிஷ்டிரன்.

அர்ஜுனன் குறுக்கிட்டு, அண்ணா, எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவையும் எல்லோரும் எடுத்துச் சொல்லிய பிறகே இந்த யுத்தம் என்று முடிவாகி இருக்கிறது.  ஆகவே  உங்களுக்கு  அந்த கவலை வேண்டாம்'' என்றான்.

துரியோதனன் படையை ஆயத்தம் செய்தான். எண்ணற்ற  யானை, குதிரைகள், தேர்கள், ஆயுத வீரர்கள் சேர்ந்தனர்.மலை போல் ஆயுதங்கள் குவிந்தன. 

அந்தக்கால  போர்ப் படை எவ்வாறு  தேர்வு செய்யப்பட்டது என்று அறிவோமா?

ஒவ்வொரு தேருக்கும் பக்க பலமாக  ஐம்பது யானைகள். ஒவ்வொரு யானைக்கும் துணையாக நூறு குதிரை வீரர்கள், ஒவ்வொரு குதிரையையும் சுற்றி ஏழு ஆயுதம் தாங்கிகள்.  இது போல் 500 தேர்கள். இது அத்தனையும் ஒரு சேனை.  
இது போல் பத்து சேனை ஒரு ப்ரிதனா.  
 பத்து  ப்ரிதனாக்கள் ஒரு வாஹினி. 
  இதுபோல் எண்ணற்ற  குழுக்கள்,  அவற்றின் பெயர் மட்டும் சொல்கிறேன்.  சேனா, வாஹினி, ப்ரிதனா, த்வஜினி, சாமு,  அக்ஷவ்ணி  வருதிம் .

 அந்த கால   யுத்த  சாஸ்திரம் இவ்வாறு இருந்தது. இருபக்கமும் சேர்த்து  மொத்தம்  பதினெட்டு அக்ஷோவ்ணிகள்,  துரியோதனன் சேனைத் தலைவர்கள்  கிருபர், துரோணர், சல்லியன், ஜயத்ரதன், சுதக்ஷிணன், கர்ணன், கம்போஜர்கள், கிரிதவர்மன், அஸ்வத்தாமன், புரிஸ்ரவாஸ், சகுனி மற்றும்  ஏனையோர்.

துரியோதனன், இரு கரம் கூப்பி  பீஷமரை பணிந்தான்.  ''இந்த மாபெரும் சேனைக்கு நீங்களே  ஒப்பற்ற தலைவர். நீங்கள் தலைமை தாங்கி இந்த போரை எங்களுக்காக நடத்தவேண்டும் ''  என்று கேட்டுக்கொண்டான்.

''துரியோதனா, பாண்டவர்களும்  உன்னைப்போல்  என் குழந்தைகளே, இருப்பினும் உனக்கு கொடுத்த வாக்கின் படி உனக்காக போராடுவேன்.  எனக்கு சமமாக யுத்தம் புரிபவன் அர்ஜுனன் ஒருவனே என்று அறிவேன்.  மற்றவர்கள் எவரையும் என்னால் அழிக்க முடியும்.  மற்றொன்றும் கூறுகிறேன் கேள்.  ஒன்று நான்  படைத் தலைவனாக இருக்கவேண்டும் அல்லது கர்ணன் பொறுப்பேற்க வேண்டும். அவன் அதிகம் பேசுகிறான். அவனோடு சேர்ந்து என்னால் யுத்தத்தில் தலைமை வகிக்க இயலாது. நீ முடிவெடு.''

கர்ணன் குறுக்கிட்டான்:  'துரியோதனா ,  இந்த பீஷ்மர்  உயிரோடு இருக்கின்றவரை நான் யுத்தத்தில் ஈடுபட மாட்டேன். அவர் யுத்தத்தில் மரணமெய்தினால் நான் தலைமை பொறுப்பேற்கிறேன்.  அர்ஜுனனை சுலபமாக எதிர்கொள்வேன்''  என்றான். எல்லோருடனும் கலந்து முடிவெடுத்தான் துரியோதனன்.  பீஷ்மர் சேனைத் தலைவராக நியமிக்கப் பட்டார்.  கௌரவ சேனை வெள்ளம்போல்  குருக்ஷேத்ரம் நோக்கி நகர்ந்தது.
                                            

                                                               

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...