கவிதைக்கோர் காளி தாசன் 2
J K SIVAN
உலக இலக்கியப் பலகணியில் மிக உயரத்தில் எட்டாத உச்சத்தில் இருப்பவன் காளிதாசன். எத்தனையோ மேல்நாட்டு அறிஞர்கள் அவனது காவியங்களை பேராசையோடு படித்து எடுத்துச் சென்று பெரும் புகழ் அவரவர் நாட்டில் பெற்று திகழ்கிறார்கள். ஆனால் அவன் பிறந்த இந்த மண்ணில் அவனை சீந்துவார் இல்லை. வடமொழி வேண்டாம் என்று கூட்டமே கத்துகிறது. ஆட்சி பொறுப்பில் இத்தகைய மொழி விரோதிகள் இருந்தால் வடமொழியோ காளிதாசனோ எவருக்கு தெரியும். யார் அறிவார்கள்? மஹா கவி காளிதாஸ் படத்தின் ''யார் தருவார் இந்த அரியாசனம்'' பாட்டு மட்டுமாவது தெரிந்ததே. நன்றி.
வியாசர் வால்மீகிக்கு அடுத்த படி காளிதாசன் மட்டுமே. உணர்வுகளை பிழிந்து தருவதில் அவன் மன்னன்.
வால்மீகியை ரசித்து காளிதாசன் எழுதிய ரகுவம்சம் எனும் ராமர் பரம்பரை பற்றிய காவியம் அக்ஷர லக்ஷம் பெறும்.
அபிஞான சாகுந்தலம் என்பது சகுந்தலையைபற்றி துஷ்யந்தன் நினைவு கொள்வதாக ஒரு கற்பனை ஓவியம். மேனாட்டாரை மயக்கிய முதல் காவியம். குறைந்தது 50 பேராவது மேலைநாட்டு மொழி பெயர்ப்பாளர்கள் இதற்கு. இதில் ஒரு சீனரும் உண்டு. நமக்கு தெரிந்த CID சகுந்தலா இல்லை இவள். துஷ்யந்தன் சகுந்தலா கண்டதும் காதல் முதல் கல்யாணம் வரை 7 காட்சிகள்.
விக்ரம ஊர்வசியம் - ராஜா புருருவன் தேவலோக அப்ஸரஸ் மங்கை ஊர்வசி இருவரின் காதல் பற்றிய நூல்.
மாளவிகாக்னி மித்ரம் - இது மற்றுமொரு காதல் ஓவியம்.
குமார சம்பவம் - வடக்கே முருகனை கார்த்திகேயன், குமார் என்றால் தான் தெரியும். கார்த்திகேயன் பிறப்பு பற்றிய நூல் இது.
மேக தூதம் - மேகத்தை ஒருவன் தூதுவனாக அனுப்பும் அற்புத கற்பனை நூல். நமக்கு சத்தி முற்றப் புலவர் நாரையை தூதுவிடும் ''நாராய் நாராய், செங்கால் நாராய்....'' பாடலாவது தெரிந்தால் நூற்றுக்கு 99 மார்க். இந்த நாரை விடும் தூது, புகழேந்தியின் நளவெண்பாவில் அன்னத்தை தூது விடுவது எல்லாமே காளிதாசனை அடி ஒற்றிய கற்பனைகள்.
காளிதாசன் பிரயோகிக்கும் உவமைகள் உலகப் பிரசித்தி பெற்றவை என்று மேனாட்டு கவிஞர்கள், அறிஞர்களே கைதட்டி புகழ்கிறார்கள்.
பாரவி, தண்டி, பாணபட்டர் , வல்லபதேவர், ஜெயதேவர், ராஜசேகரன் போன்ற ஸமஸ்க்ரித வல்லுநர்கள், கவிஞர்களே காளிதாசனை மெச்சுகிறார்கள். இரண்டாயிரம் வருஷங்கள் ஓடிவிட்டது. ஆனாலும் காளிதாசனுக்கு ஈடாக சொல்ல இன்னும் எவருமே பிறக்கவில்லை. காளிதாசன் வாழ்க்கை பற்றிய குறிப்புகள் இல்லை. அவன் எழுத்தில் அவன் குணம், ரசனை, ஞானம், அறியமுடிகிறது.
ரகுவம்சத்தில், அவன் விவரிக்கும் மலைகள், ஆறுகள், கிராமங்கள், நகரங்கள், ராஜாக்கள், மக்கள் தொழில் முறை, வாழ்க்கை பற்றி சொல்கிறான். அவன் அநேக இடங்களை பற்றி அறிந்திருப்பது தெரிகிறது. மத்திய இந்தியாவில் ராமகிரியில் இருந்து, ஹிமாசலத்தில் அலகா நகரி வரை குறிப்பிடுகிறான். அஸ்ஸாம் , வங்காளம் , உத்கல், பாண்டியநாடு, கேரளம், சிந்து, காந்தாரம், எல்லாம் பற்றி சொல்கிறானே. அவனது கல்வி அறிவு அவன் எழுத்தில் புலப்படுகிறது. கீதை, உபநிஷத், ராமாயணம், மஹா பாரதம், ஆறு தரிசனங்கள், சங்கீதம், நாட்யம், ஓவியம், வேதங்கள், வான சாஸ்திரம், எல்லாவற்றையும் அலசுகிறான்.
குமார சம்பவத்தில் அவனது சிவபக்தியும் ரகுவம்சத்தில் விஷ்ணு பக்தியும் புலப்படுகிறது.
எப்படியோ ஏமாற்றி அரசகுமாரி வித்யோத்தமாவுக்கு ஒன்றுமறியாத மூடன், ஞான சூன்யம், காளிதாசன் கணவனாகிறான். அவனை திருத்த அவள் வழிபடும் சரஸ்வதியை வேண்டுகிறாள். அவனும் வேண்டுகிறான். ஒரு கேள்விக்கு பதில் சொல்லி விட்டு நீ என்னை சந்திக்கலாம் என்று காளிதாசனிடம் சொல்கிறாள்:
अस्ति कश्चित् वाग् विलासः? – உன் வாக் விலாசத்தை வெளிப்படுத்த ஏதாவது செய்திருந்தால் காட்டு? '' . காளிதாசன் புறப்படுகிறான். சரஸ்வதியை தொழுகிறான், த்யானிக்கிறான். அவள் அருளால் ஞானம் பெறுகிறான். அரண்மனை திரும்புகிறான்.
''வித்யா, இதோ நீ கேட்ட கேள்விக்கு பதில் என்று தனது மூன்று உலகப் பிரசித்தி பெற்ற மூன்று காவியங்களை அளிக்கிறான். குமாரசம்பவம் ''அஸ்தி '' என்ற சொல்லிலிருந்து ஆரம்பிக்கிறது. . மேகதூதம் कश्चित् என்ற முதல் வார்த்தையுடனும் ரகுவம்சம் वाग् (வாக்) என்ற சொல்லிலிருந்தும் ஆரம்பிக்கிறது.
பலே காளிதாஸா !
No comments:
Post a Comment