ஐந்தாம் வேதம் J K SIVAN
மஹா பாரதம்
''வெற்றி யார் பக்கம்?''
இப்போதுள்ள சூழ்நிலையில் நாம் சாதாரண மக்களவை தேர்தலுக்கு , மாநில அவை தேர்தலுக்கு போட்டியில் யார் வெல்வார்கள் என்றே தெரியாதபோது போட்டியிடுபவர்கள் அவரவர் தாம் வென்றுவிடுவோம் என்று சொல்லும்போது, மகா பெரிய சைன்யங்கள் கொண்ட கௌரவப்படையின் தலைவனான துரியோதனன் தான் எதிரிகளை வெல்வேன் என்று சொல்லமாட்டானா?. காரசாரமாக விவாதம் அவனது அரசவையில் நடந்தது.
துரியோதனன் முகம் சிவந்தது. அவனுக்கு தனது தந்தை திருதராஷ்டிரனின் போக்கு பிடிக்கவில்லை.
''தந்தையே, நான் பேசிப் பயனில்லை. உங்கள் மனம் பாண்டவர்களின் பெருமையும் வீரத்தையும் நிரப்பிக் கொண்டிருக்கிறது. நான் செயலில் காட்டுகிறேன். பாண்டவர்கள் அழிவதை நீங்கள் பார்க்கமுடியாது. ஆனால் அறியப்போகிறீர்கள். அவர்கள் சேனையை நிர்மூலமாக்குவேன்.''
கர்ணன் வாய் திறந்தான்.
''அரசே, பாண்டவர்களையும் அவர்கள் சேனையும் அழிப்பது என் ஒருவனின் வேலை. பீஷ்மர் துரோணர் உங்களோடு துணையாக இருக்கட்டும்''.
பீஷ்மர் குறுக்கிட்டார்.
''என்ன உளறுகிறாய் கர்ணா? உன் நேரம் வந்துவிட்டதால் மதி மயங்கிவிட்டாய். தலைவன் அழிந்தான் என்றால் கௌரவர்கள் அனைவரும் அதற்கு முன்னரே அழிந்தார்கள் என்று அர்த்தம். காண்டவ வனத்தை அர்ஜுனன் ஒருவனே அழித்தான். அக்னிக்கு இரையாக்கினான். கிருஷ்ணன் துணை நின்றான். கிருஷ்ணனும் சாமான்யன் அல்லன். உன்னை விட பல மடங்கு சக்தி வாய்ந்த ராக்ஷசர்களை தனி ஒருவனாக கொன்றவன். இருவராக அர்ஜுனனும் கிருஷ்ணனும் எதிரில் நிற்க, உன் நாகாஸ்திரம், உன் ஆயுதங்கள் அனைத்துமே உன்னோடு சேர்ந்து அழியும்''
கர்ணன் கோபமாக பதிலளித்தான். காலால் பூமியை உதைத்துக்கொண்டு கைகளை உலுக்கிக்கொண்டு பேசினான்:
''பீஷ்மர் சொல்வது வாஸ்தவமாகவே இருக்கட்டும். இனியும் நான் அவரோடு இணைந்து யுத்தத்தில் பங்கேற்க மாட்டேன். அவர் அமைதியாக ஒதுங்கியபிறகு நான் எனது வீரத்தை உலகத்துக்குக் காட்டுகிறேன்'' என்று சொல்லிவிட்டு அரண்மனையை விட்டு தனது வீட்டிற்கு சென்றுவிட்டான் கர்ணன்.
பீஷ்மர் ''ஆஹா என்று சிரித்தார். எவ்வளவு வீரன் கர்ணன் பார்த்தீர்களா. எல்லா எதிரிகளையும் தலையைச் சீவிவிடுவேன் என்று அனைவர் முன்னே வீரப் பேச்சு பேசியவன் இனி எப்படி அதைச் செய்யப் போகிறான். பரசுராமரை ஏமாற்றி வித்தை கற்றுக் கொண்டவனை அவரே கண்டுபிடித்து சபித்து விட்டார். அந்த வித்தை எப்படி அவனுக்கு கை கொடுக்கும்?
துரியோதனன் எழுந்து, ''பீஷ்ம பிதாமகரே, நாம் எல்லோரும் மனிதர்கள், கடவுள்கள் அல்ல. பாண்டவர் களுக்கு இருக்கும் அனைத்து சக்தியும், வசதியும், புகழும், சேனையும், பல மடங்கு நம்மிடம் கூடவே இருக்கிறது. இப்படி எதற்கெடுத்தாலும் பாண்டவர்களையே உயர்த்திப் பேசி, வெற்றி அவர்களுக்கே நிச்சயம் என்று சொல்கிறீர்களே . உங்களையும், உங்களைப் போன்ற எண்ணம் கொண்ட துரோணர், கிருபர், போன்றோரை நம்பி நான் போரில் இறங்க நான் தயங்குகிறேன். யோசிக்கிறேன். என் உடன் பிறப்புகள், கர்ணன், போன்று என்னை ஆதரிப்பவர்களோடு நான் போரில் வெல்வேன். ''
விதுரன் எழுந்து ''ஒரு போரில் வெற்றி என்பது அதிக பட்ச வீரம்,சாமர்த்தியம், ஆயுத பலம், தர்மம், நியாயம், கடவுள் அனுக்ரஹம் உள்ளவனுக்கு மட்டுமே உரித்தானது. இரு சாராரும் வெற்றி அடைய வழியில்லை. திருதராஷ்டிரா, போரில் பீஷ்மர் முதலானோர் விராட நகரிலேயே அர்ஜுனன் சாகசத்தைக் கண்டு வியந்தனர். இப்போது பீமன்,துருபதன், விராடன் சேனைகளும், ஏன், கிருஷ்ணனும் துணை நிற்க வெற்றி என்னைப் பொருத்தவரை பாண்டவருக்கு தான் என்று தோன்றுகிறது. நீ போரை தவிர்த்து யுதிஷ்டிரனோடு நட்பு கொள்வது நல்லது. இப்போதாவது நாங்கள் சொல்வதைக் கேள்.
துரியோதனனும் கர்ணனும் இதைக் கேட்டு ஏளனமாக விதுரனைப் பார்த்து கொக்கரித்தனர். விதுரன் தலைகுனிந்து ஆசனத்தில் அமர்ந்தான்.
திருதராஷ்டிரன் கனைத்தான். சபை அமைதியானது. திருதராஷ்டிரன் ''விதுரா, நீ உடனே சென்று இங்கே காந்தாரியையும் வியாசரையும் அழைத்து வா. அவர்களும் இங்கே உள்ளவர்களோடு சஞ்சயன் கேட்டதை சொல்லட்டும்.'' என்றான். விதுரனோடு காந்தாரி, வியாசர் இருவரும் சபையில் வந்து அமர்ந்தார்கள். திருதராஷ்டிரன் ''சொல் சஞ்சயா, நீ உபப்லாவ்யத்தில் கேட்டதை இவர்களும் கேட்கட்டும்.'' சஞ்சயன் பேசினான்:
'' அரசே, இந்த மூன்று உலகத்தையும் ஒரு தராசுத் தட்டில் வைத்து மற்றொன்றில் கிருஷ்ணனை வைத்தால் அவை அவனுக்கு ஈடாகாது . தெய்வீக சக்தி கொண்ட கிருஷ்ணன் அர்ஜுனனோடு யுத்தத்தில் இறங்கினால், வெற்றி அவன் எங்கிருக்கிறானோ அங்கேயே என்பது முடிவான விஷயம். பாண்டவர்களை முன் வைத்து அவனால் கௌரவர்கள் அழிவது நிச்சயம். அவனே காலம், பிரபஞ்சம்,, அனைத்து அசைவுகளும்.'' என்றான் சஞ்சயன்.
'' கிருஷ்ணனின் சக்தி என்னால் அறியமுடியவில்லையே. நீ எப்படி உணர்ந்தாய் சொல் சஞ்சயா?'' -- திருதராஷ்டிரன்.
" அஞ்ஞானத்தில், இருளில் சிக்கியவர்கள் கேசவனை அறியமாட்டார்கள். அவன் சர்வ காரணன். பூரணன்.
''துரியோதனா, கேட்டாயா, இனியாவது கிருஷ்ணனை சரணடைவாய்'' என்றான் திருதராஷ்டிரன்.
' அர்ஜுனனோடு நண்பனாய் உள்ள கிருஷ்ணனை நான் தெய்வமாக கருதவில்லை.' என்றான் துரியோதனன்.
காந்தாரி குறுக்கிட்டு, 'ஏ, முட்டாளே, தந்தை சொல்வதைக் கேளாமல் தனக்கும் தெரியாமல் அகந்தையால் தலை கொழுத்த நீ பீமன் உனக்கு கற்பிக்கப் போகும் பாடத்தில் முடியப்போகிறாய்.''
வியாசர் "அலை பாயும் மனத்தால், கட்டுப்பாடில்லாத மனத்தால் ஜனார்தனனைப் புரிந்து கொள்ள முடியாது'' என்றார். .
அமைதி அங்கே நிலவியது... அடுத்து என்ன நடக்கப்போகிறது?
No comments:
Post a Comment