ஐந்தாம் வேதம் J K SIVAN
மஹா பாரதம்
பதினெட்டு அக்ஷோவ்ணி சைன்யங்கள்
மீண்டும் நடந்ததை நினைவு கூர்வோம். துரியோதனன் சபையில் விதுரன் கதறினான். '' ஓ தேவவ்ரதா, பீஷ்மா, இந்த குரு வம்சம் அழிந்த க்ஷீண கதியில் நீ அல்லவோ அதை உயிர்ப்பித்தவன். அதெல்லாம் இதற்காகவா? இந்த கேடு கேட்ட, பேராசைக்காரன், பொறாமை பிடித்த துரியோதனன் நமது வம்சத்துக்கே ஒரு கறை, நீ அவனை ஆதரிக்கிறாயே? நீ வளர்த்த வமிசம் அழிய நீயே காரணமா? இந்த உலகமே அழியவேண்டும் என்று நீ தீர்மானித்தால், இதோ என்னையும் திருதராஷ்டிரனையும் எங்காவது காட்டிற்கு அனுப்பிவிடு. நீயும் வா. அப்படி இல்லாவிட்டால் நீயே இந்த ராஜ்யத்தை பாண்டவர்களோடு எடுத்து நடத்து. மொத்தத்தில் எல்லோரும் அழியும் நேரம் வந்துவிட்டதே.'' விதுரன் விசனத்தோடு பேசிவிட்டு அமர்ந்தான்.
காந்தாரி தெளிவாக எடுத்துச் சொன்னாள் :
''அரசர்களே நன்றாக ஆலோசியுங்கள். குரு வம்ச சாம்ராஜ்யம் பீஷ்மன் ஆதிக்கத்தில் மேற்பார்வையில் திருதராஷ்டிரன் கண் பார்வை இன்றி அரச பீடம் ஏற இயலாததால், பாண்டு அரசனாகி, அவனுக்கு பிறகு அவன் மகன், பேரர்கள் என்று ஆளப்படவேண்டியது. பாண்டுவின் மறைவிற்கு பிறகு திருதராஷ்டிரன் வசம் அரசு பீடம் ஒப்புவிக்கப் பட்டு, விதுரன் உதவியில் யுதிஷ்டிரனே அடுத்த இளவரசனாகவேண்டியவன். துரியோதனா, நீ எதற்கு முறை தவறி இதன் மேல் ஆசைப் படுகிறாய்? பீஷ்மர் உள்ளவரை அவரே நிர்வாகம் பண்ணுவார். நீ யுதிஷ்டிரனுக்கு உறுதுணையாக அல்லவோ விளங்கவேண்டும்?''
திருதராஷ்டிரன் ''ஆமாம் அது தான் முறை '' என்று ஆமோதித்தான். ''ஆமாம் துரியோதனா , உனக்கு உரிமையில்லாத அரசுக்கு நீ ஆசைப் படுவது தவறு. பிறர் சொத்தில் சுகம் காண விழைவது பேடித்தனம்.''
என்றான் திருதராஷ்டிரன்.
உபப்லாய வனத்தில் யுதிஷ்டிரனிடம் நடந்ததெல்லாம் கிருஷ்ணன் விவரித்தான்.
''மேற்படி பீஷ்மர், திருதராஷ்டிரன், காந்தாரி, துரோணர், எல்லோரும் சொல்லியும் துரியோதனன் செவியில் எதுவும் ஏறவில்லை. எழுந்து வெளியே சென்றுவிட்டான் .''நமது படைகள் குருக்ஷேத்ரம் நோக்கி நகரட்டும். பீஷ்மர் தான் தலைமை வகிப்பார் என்று சொன்னான். பதினோரு அக்ஷோவ்ணி சேனை நம்மிடம் இருக்கிறது.'' என்றான் துரியோதனன்.
'நான் சமாதான பேச்சு முறிந்தவுடன் யுத்தத்தில் பாண்டவர்கள் சக்தியை எடுத்து சொன்னேன். அதற்கும் அவன் மசியவில்லை. என் விஸ்வரூபத்தை காட்டினேன். சர்வ சக்தியை புரிய வைத்தேன். திரிதராஷ்டிர
னிடமே அரசுரிமை இருக்கட்டும். பீஷ்மர் துரோணர் விதுரன் மேற்பார்வையில் யுதிஷ்டிரன் அவர்களை பணிந்து ஆள்வான் என்றும் கூறினேன். பாதி ராஜ்ஜியம் கேட்டேன், ஐந்து ஊர்கள், ஐந்து கிராமங்கள் கூட கேட்டேன். வேறு வழியில்லை யுத்தம் ஒன்றே அவர்கள் அழிவை நிரூபணம் செய்யப் போகிறது. இது தான் அங்கு நடந்தது'' என்று முடித்தான் கிருஷ்ணன்
'' நீ சொன்னது எதையுமே துரியோதனன் துளியும் லட்சியம் செய்திருக்க மாட்டானே கிருஷ்ணா'' என்றான் யுதிஷ்டிரன்.
''ஆம். பெரிதாக இடி இடி என்று சிரித்தான். பீஷ்மர் குறுக்கிட்டு ''துரியோதனா, யோசி, சந்தனுவிற்கு பிறகு நான் அரசனாகவேண்டியவன் அதை வேண்டாம் என்று திரஸ்கரித்தபிறகு எனது தம்பி விசித்திர வீர்யனை அரசனாக்கினேன். அவனும் இறந்தான். வம்சம் அழியாமல் காக்க வியாசர் அருளால் மூன்று குழந்தைகள் பிறந்து, திருதராஷ்டிரன் கண்ணற்றவனாக பிறந்ததால், அடுத்து பிறந்த பாண்டு அரசனானான். பாண்டுவிற்கு பிறகு அவன் வம்சமே ஆளவேண்டியது தான் முறை. யுத்தம் வேண்டாம். யுதிஷ்டிரனோடு சமாதனமாகப் போ''. என்று பீஷ்மர் வலியுறுத்த, அவரைத் தொடர்ந்து அறிவுரை செய்த துரோணர், விதுரன், தாய் காந்தாரி, அனைவரையும் அலட்சியப் படுத்தினான் துரியோதனன்.'' என்றான் கிருஷ்ணன்.
யுதிஷ்டிரன் பெருமூச்சு விட்டான். பீமார்ஜுன நகுல சகாதேவர்களை நோக்கினான். ''கேட்டீர்களா கிருஷ்ணன் சொன்னதை. என்ன நடந்தது என்று? யுத்தம் ஒன்று தான் முடிவு என்று ஆகிவிட்டது. நம்மிடம் ஏழு அக்ஷோவ்ணி சைன்யம் உள்ளது. மாபெரும் வீரர்கள் அதை நடத்தி செல்வார்கள்.
சகா தேவா, நீ சொல், நம் பாண்டவ ஏழு அக்ஷோவ்ணி சேனைக்கு சகல ஆயுதங்களிலும் தேர்ச்சி பெற்ற அனுபவமிக்க மாவீரன், துரோணர், பீஷமரை எதிர்க்க கூடிய தகுதியான சேனா நாயகன் யார்.?
''விராடன் இதற்கு ஏற்றவன் என்று எனக்கு படுகிறது' என்றான் சகாதேவன்.
''நகுலா, உன் கருத்து என்ன? யார் சரியான சேனைத் தலைவன்?''
'' பீஷ்மாதி வீரர்களை எதிர்க்க துருபதன் தலைமை சிறந்ததாகும் என்று எனக்கு தோன்றுகிறது'' என்றான் நகுலன்..
''அர்ஜுனா நீ என்ன சொல்கிறாய்?''
' அண்ணா, யாகத்தீயில் பிறந்தவன், துரோணரைக் கொல்வதற்கென்றே அவதரித்தவன் த் ருஷ்டத்யும்
னன் சேனாதிபதி பதவிக்கு உகந்தவன் என்று தோன்றுகிறது' என்றான் அர்ஜுனன்.
பீமன் தன் பங்கிற்கு ''பீஷ்மரை எதிர்க்கும் சக்தி சிகண்டி ஒருவனுக்கே. அவனே முன்னின்று சேனாதிபதியாக படைகளை நகர்த்திச் செல்ல தகுந்தவன்'' என்றான். முடிவாக அண்ணா நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லவில்லையே என்கிறார்கள் பாண்டவர்கள்.
''நான் என்ன நினைக்கிறேன் என்றால், நமது வெற்றி, தோல்வி, நமது பலம், பலவீனம், எல்லாம் தெரிந்தவன் கிருஷ்ணன் ஒருவனே. அவன் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் கிருஷ்ணனின் வழி நடத்தல் ஒன்றினாலே தான் நமது சைன்யம் மேலே செல்லும்'' என்று யுதிஷ்டிரன் முடிவாக கூறினான். .
எல்லோர் கண்களும் கிருஷ்ணனையே பார்த்தன. கிருஷ்ணன் புன்சிரிப்புடன் ''பாண்டவ சகோதரர்களே நீங்கள் முன் மொழிந்த அனைத்து மகா வீரர்களும் சேனையை அங்கங்களாக பிரித்து தலைமை வகிக்க சரியானவர்கள். தலைவனாக த்ருஷ்டத்யும்னனே போரை நடத்தட்டும்''.
கிருஷ்ணனின் முடிவை அனைவரும் மனப்பூர்வமாக ஆதரித்து மகிழ்ந்தனர். சேனை தயாராகியது. யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், ரதங்கள், ஆயுதம் தாங்கிகள், அனைவரும் அணிவகுத்தனர். எங்கும் போரின் பேரரவம் கேட்டது. கவசம் ஆயுதங்கள் ஏந்தி அனைவரும் தயாராயினர். பெண்கள் திரௌபதியின் தலைமையில் தனியே அணி வகுத்தனர். நோயாளிகள், மருத்துவர்கள் வேதமோதும் பிராமணர்கள் ஆகியோர் தனியே ஒரு குழுவாக சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக மாவீரர்கள் எல்லா பக்கத்தையும் காத்துச் சென்றனர். மருந்துகள், கூடாரங்கள், ஆயுத பெட்டிகள், துணிமணிகள், உணவுப் பண்டங்கள், படுக்கைகள், அனைத்தும் சேகரிக்கப் பட்டன. பாண்டவர்கள் சைனியம் குருக்ஷேத்ரம் நோக்கி புறப்பட்டது. ஒரு உலகமே இடம் பெயர்வது போல் காணப்பட்டது.
No comments:
Post a Comment