ஐந்தாம் வேதம் J K SIVAN
மஹாபாரதம்
விநாச காலே விபரீத புத்தி:
எண்ணவே முடியாத அளவு செல்வம் கொழித்திருந்தால் அதற்கு பெயர் என்ன என்று சொல்வது?
பேசாமல் மஹா பாரதம் என்று சொல்லிவிடலாம். அவ்வளவு அற்புத விஷயங்கள் அதில் இருக்கின்றன. ஆண் பெண் குழந்தைகள் என்று எம்மதத்தினராயினும், எம்மொழியினராயினும் அவர்களைக் கவரக் கூடிய சக்தி அதற்கு இருப்பதால் தான் அது அன்றும் இன்றும் என்றும் அழியாத இதிகாசமாக இருக்கிறது.
மகரிஷி, கிருஷ்ணன் ஹஸ்தினாபுரத்தில் கௌரவர்களின் சபையில் சமாதானமாக யுத்தமின்றி பாண்டவர்களுக்கு நேர்மையான நீதியான பங்கு கேட்க முயன்றது, அவன் பேச்சு எல்லாமே ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. மேலே சொல்லுங்கள்'' என்றான் ஜனமேஜயன்.
'ஜனமேஜயா, இந்த நேரத்தில் பரசுராமர் சொன்ன ஒரு கதை உனக்கு சொல்கிறேன் கேள். தம்போபவன் என்று ஒரு ராஜா. தலை கொழுத்தவன். தன்னை யாராலும் வெல்ல முடியாது என்று எல்லோரையும் கொடுமைப் படுத்திக் கொண்டிருந்தான். ஒரு பிராமணர் அவனிடம் ஒருநாள்
'அரசே, உங்களையும் மிஞ்சக் கூடிய பலசாலி இருவர் உள்ளனர்'' என்றனர்.
''அப்படியா, யார் அந்த இருவர் என்னைவிட சக்தி வாய்ந்தவர்கள்? ராக்ஷசர்களா, அரசர்களா , எந்த ஊர்? ''
''அவர்கள் இருவரும் முனிவர்கள். நரன், நாராயணன் என்று பேர். கந்தமாதன பர்வதத்தில் தவம் புரிகிறார்கள். அவர்களை முடியுமானால் வெல்லுங்கள்''
ராஜா தம்போபவன் பெரும்படை திரட்டிக்கொண்டு நர நாராயணர்களை தேடிச் சென்றவன் ஒரு வழியாக அவர்களைக் கண்டுபிடித்தான். எலும்பும் தோலுமாக ஒட்டிய உடலுடன் இருந்த அந்த ரிஷிகளை கண்டு வணங்கினான். இவர்களா? என்று அதிசயித்தான்.
'எதற்கு இங்கு வந்தாய் அரசே?''
''நான் உலகமெல்லாம் வென்றேன். எனக்கு எதிராக எவரும் இல்லை. உங்களைப் பற்றி கேள்விப்பட்டு உங்களையும் வெல்ல விருப்பம்'
''அப்பனே, இங்கு விருப்பு, வெறுப்பு, அகம்பாவம், ஆயுதம் எதுவும் கிடையாதே. இங்கு எவ்வாறு யுத்தம் நடக்கும்?''
"இல்லை, எப்படியாவது உங்களையும் வெல்லவேண்டும் என்று தான் வந்தேன்.... '' என்றான் ராஜா.
'ஒ, அது தான் உன் விருப்பம் என்றால் சரி யுத்தம் செய் என்னோடு'' என்று ரிஷி நரன் சொல்லிவிட்டு ஒரு கட்டு தர்ப்பையை எடுத்து அவன் எதிரே போட்டார். ராஜா தனது பலத்த சேனையை ஏவி அஸ்த்ரங்களையும் சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் அவர் மீது பொழிந்தான். தர்ப்பைகள் அத்தனை ஆயுதங்களையும் பொடியாக்கி, அந்த வீரர்கள், கண் காது மூக்கு எல்லாம் சேதமாகி விழுந்தனர். ராஜா நிராயுத பாணியாக நின்றான். அவனால் எந்த தர்ப்பாயுதங்களையும் எதிர்க்க முடியாமல் துவண்டான். சாஷ்டாங்கமாக நரன் காலில் விழுந்தான்.
''எழுந்திரு, தம்போபவா, இனியாவது அடக்கமாக நடந்து கொள். பிராமணர்களுக்கு தக்க மரியாதை, உபசாரங்களைச் செய். பிழைத்துப் போ''
அன்றிலிருந்து அந்த ராஜா திருந்தினான். அகம்பாவம் விலகியது. அந்த நரன் தான் அர்ஜுனன். அவனை வெல்ல முடியுமா கௌரவர்களால்?
இந்த கதையை துரியோதனன் சபையில் கண்வ ரிஷி சொல்கிறார்.
துரியோதனன் இந்த கதையைக் கேட்டு பேசாதிருந்தான்.
கண்வ ரிஷி ''துரியோதனா, யுதிஷ்டிரனோடு போரிடாதே. சமாதானமாகப் போ. பாண்டவர்களோடு இந்த உலகை புகழோடு ஆள்வாய்.'' என்றார். நாரதரும் கண்வருமாக நிறைய மேற்கோள்கள் காட்டி தர்மம் நியாயம் நேர்மை பற்றி புராண கதைகளும் நிறையவே சொன்னார்கள்.
'' ஆகவே, துரியோதனா, புரிந்து கொள் தெய்வீக சக்தி நிறைந்த பீமார்ஜுனர்களை உன்னால் வெல்ல முடியாது. தர்ம தேவதை, விஷ்ணு ஆகியோரை எதிர்த்து நீ எப்படி வெல்வாய்? கிருஷ்ணனின் சக்தியை புரிந்து கொள்'' என்றார் நாரதர்.
இதைக் கேட்டதும் துரியோதனன் விலா வலிக்க சிரித்தான். கை கொட்டிக்கொண்டே,
''ரிஷிகளே, நான் யார், என் சக்தி என்ன என்று எனக்கு நன்றாகவே தெரியும். தேவையில்லாத பேச்சு இதெல்லாம்'' என்று நெற்றியை சுருக்கிக் கொண்டு கர்ணனைப் பார்த்து இடி இடியென சிரித்தான் துரியோதனன்.
திருதராஷ்டிரன் இதெல்லாம் பார்க்க முடியாவிட்டாலும் காதால் சம்பாஷணைகளை கேட்டவன் பேசினான்:
''மகரிஷி, நீங்கள் எல்லோரும் நல்லவற்றையே சொல்கிறீர்கள் . என் மனமும் அதையே தான் நாடுகிறது. ஆனால் ஒன்றும் நான் செய்வதற் கில்லையே. கிருஷ்ணா, நீயும் எது ஒருவனை மோக்ஷ பதவி அடையச் செய்யும் என்று அறிவுரை கூறினாய். நியாயம் தர்மம் நேர்மை பற்றியெல்லாம் எடுத்துச் சொன்னாய். என்னால் சுதந்திரமாக எதுவும் செய்வதற்கில்லையே. என் சொல் என் மகனுக்கு எடுபட வில்லை. நீயே சொல் அவனுக்கு. பீஷ்மர், காந்தாரி, விதுரன் எல்லோரும் அவன் நலத்தை விரும்பினாலும் அவன் தன்னிச்சையாகவே எல்லாம் செய்பவன்'' என்றான் திருதராஷ்டிரன்.
No comments:
Post a Comment