Tuesday, April 2, 2019

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம் J K SIVAN
மஹா பாரதம்
''திருதராஷ்டிரன் புலம்பல்..'

திருதராஷ்டிரனின் குரல் எங்கும் எதிரொலித்தது. அவனது மனக்குமுறல் வெகுநாளாக மனதில் ஆழத்தில் இருந்து இப்போது பீறி எழுந்தது. சபையில் எல்லோருமே கேட்கும்படியாக ஒலித்தது.

''ஆம், பீமன் எமதர்மன் தான். யாருக்கோ அல்ல, நிச்சயம் என் பிள்ளைகளுக்கு, சிறுவயதிலேயே விளையாட்டுக்கு '' டேய், பீமா இந்த பனைமரத்தின் உச்சியில் ஏறு வாயா'' என்று துரியோதனன் கேட்டபோது, ' இதன் உச்சியில் என் கால் படவேண்டுமா இதோ பார்' என்று அந்த வளர்ந்த பனை மரத்தை வேரோடு பிடுங்கி ஒடித்து அதன் உச்சிக் கிளையை தனது கால் கீழே போட்டு நின்றவன். அவனைக் கொல்ல எத்தனை முயற்சிகள், எல்லாவற்றிலும் மீண்டு வந்தவன். பெரியவனானதும் கிருஷ்ணனின் அன்பு வேறு சேர்ந்து விட்டதால், அவன் எப்படி ஜராசந்தனைக் கொன்றான் என்று கதை கதையாக சொன்னார்கள். எவராலும் அவனுக்கு நிகராக முடியாது. மேலும் நான் கேள்விப்பட்டது, சமீபத்தில் அவன் ஒரு சில நிமிஷங்களில் துளியும் சத்தம் இன்றி கீசகனைக் கூழாக்கியது, ஏக சக்ரபுரத்தில் பகா சூரனை வதம் செய்தது, இதெல்லாம் தவிர திரும்பி திரும்பி என் மனத்திரையில் தோன்றுவது நான் காண முடியாத, ஆனால் கேட்க முடிந்த , அடிக்கடி என்னை தூக்கத்திலிருந்து எழுப்பி கதறச் செய்யும் அவன் கோபக் குரல் தான்....

''துரியோதனா உன் தொடையைப் பிளந்து உன் ரத்தத்தையும், உன் சகோதரர்கள் அத்தனை பேர் மார்பைக் பிளந்து அவர்களது ரத்தத்தையும் குடித்து என் தாகம் தீர்ப்பேன்......'' இதே சபையில் அன்று நான் கேட்டது இன்னும் நடுங்க வைக்கிறது.

இந்த யுத்தம் வந்தால் நடக்கப் போவது அது தான் என்று சஞ்சயா நீயும் இப்போது கூறி விட்டாய்.'' என்று அரற்றினான் திருதராஷ்டிரன். ,

''ராஜ்ஜியம், மக்கள், பெருமை, கௌரவம், சுற்றம், எல்லாம் போய் நான் மட்டும் இருந்து எப்படி வாழப் போகிறேன்? யாருக்காக? எல்லாவற்றிற்கும் காரணம் அந்த சூதாட்டம், அதையும் நானே ஏற்பாடு பண்ணி, யுதிஷ்டிரனை அழைத்ததால் அல்லவோ ? வேண்டாம் என்றவனை கட்டாயப் படுத்தினேன். என் வார்த்தைக்கும், என் மேல் உள்ள மரியாதையாலும் கட்டுப்பட்டான். விளைவு ?
எனக்கு தெரிந்தது பாதி தான்.. எல்லா ராஜ்யமும், சொத்தும், சுகவாழ்வும். மீதி? இதோ இப்போது தெரியப்போகிறது. அப்போதே விதுரன் பலமுறை தடுத்து எடுத்து சொன்னான் . காதில் ஏறவில்லை. அவனை ஏசினேன். அவமதித்தேன். விரட்டினேன். இப்போது? இன்னும் கூட முட்டாள் துரியோதனன் புரிந்து கொள்ளவில்லையே. பீமனும் அர்ஜுனனும் நிமிஷத்துக்கு நிமிஷம் என் அழிவை நோக்கி, என் மக்கள், குல நாசத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இதோ அருகே அருகே வந்து கொண்டிருக் கிறார்களே.

ஒரு வேளை கர்ணன் அவர்களை தடுத்து காப்பானா? பீஷ்மர் துரோணர்கள் தடுப்பார்களா? நம்பிக்கை மின்னலாக தோன்றி மறைகிறதே. ஒரு வேளை துரியோதனன், துரோணர், கர்ணன் அல்லது அர்ஜுனன் இறந்தால் சமாதான தூது விடுவானா? யார் சொல்ல முடியும்?
ஹுஹும். யாரைக் கேட்டாலும் அர்ஜுனன் வெல்ல முடியாதவன் என்கிறார்களே. அவனே எல்லோரையும் கொல்வேன் என்கிறான். ஐயோ பீமன் வேறு சபதம் செய்திருக்கும்போது எங்கே சமாதான தூது? . எவர் இருப்பார் என் பக்கம் சமாதானம் பேச? இறந்தபின் எதற்கு சமாதானம்?

தெரியாததை எல்லாம் சொல்லிக் கொடுக்க அந்த சக்திமிக்க கிருஷ்ணன் வேறு அவர்கள் பக்கம் இருக்கிறானே. முக்காலமும் உணர்ந்தவன். அவனுக்கு இப்போதே தெரிந்திருக்குமோ முடிவு?? சஞ்சயன் சொல்வதைப் பார்த்தால், இங்கே எவன் அர்ஜுனன், கிருஷ்ணன், பீமனுக்கு சமம்? எவன் அந்த காண்டிபம் வில்லுக்கு நிகர் உடையவன்? வெற்றிக்கு வழிகாட்டி கிருஷ்ணன் என்று எல்லோரும் பேசிக்கொள்வது காதில் விழுகிறதே.
இந்த யுத்தம் நிச்சயம் நடக்கக் கூடவே கூடாது. சமாதானம் ஏற்பட்டால், யுதிஷ்டிரன் என்னைக் காப்பாற்றுவான். நேர்மையானவன். என் பிள்ளைகள் உயிர் தப்புவார்களே. என்னால் தான் யுத்தம் என்கிறானே யுதிஷ்டிரன்? நானா, நானேவா காரணம்?'' சொல் சஞ்சயா?'' என்றான் திருதராஷ்டிரன்.

''அரசே, நீங்கள் மதி நுட்பம் உள்ளவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். எப்படி நீங்கள் உங்கள் மகன் அறியாமையால் யுத்தத்தை வரவழைத்தால் அதைத் தடுக்காமல் இருக்கிறீர்கள். பாண்டவர்களை எதிர்ப்பது சீறி வரும் அலை கடலை வெறும் கையால் தடுப்பது போல் என்று தெரியாதா? ஒரு தகப்பானாகவாவது அல்லது தோளுக்குயர்ந்த நண்பனாகவாவது, இந்த நாட்டின் மூத்த மஹாராஜாவாகவாவது அவனுக்கு நீங்கள் புத்தி சொல்ல வேண்டாமா?

அரசே தப்பாக நினைக்க மாட்டீர்களே, நானே பார்த்ததைச் சொல்லட்டுமா? யுதிஷ்டிரனும் சகுனியும் சூதாடி எல்லா ஆட்டத்திலேயும் யுதிஷ்டிரன் வரிசையாக தோற்று சகல சம்பத்தையும், அதிகாரத்தையும், சுற்றத்தையும், நாட்டையும், வீட்டையும், குடும்பத்தையுமே இழந்தான். அவ்வளவும் இப்போது துரியோதனன் பெற்று விட்டான் என்று முடிவைச் சொன்னபோது நீங்கள் எப்படி சந்தோஷமாக ''துரியோதனன் இதை ஜெயித்தானா , ஆஹா, அதையும் ஜெயித்தானா! என்று ஒரு குழந்தையைப் போல் சிரித்தீர்கள் தெரியுமா?.
மேலும் விஷத்தை விட கொடிய வார்த்தைகளை துரியோதனன், கர்ணன் ஆகியோர் பாண்டவர்களைப் பற்றி பேசிய போது , கண் தான் தெரியவில்லை, காதால் கேட்டு ஒன்றுமே அதற்கு நீங்கள் எதிர்ப்பு சொல்லவில்லையே .

ஒரு முறை கந்தர்வ பிரதேசத்தில் நுழைந்து பிடிபட்டு, உங்கள் மகன் மற்றும் அவனைச் சேர்ந்தோர் அனைவரும் ஆழம் காணமுடியாத ஒரு கடலில் போடப்பட்டபோது, அர்ஜுனன் தான் அந்த கடலை வற்ற வைத்து துரியோதனன் உயிரை மீட்டவன். ஞாபகம் இருக்கிறதா?

இப்போது காலம் கடந்துவிட்டது. இன்னும் கொஞ்ச காலத்தில் உங்கள் மக்கள் அனைவரும், அவர்களைச் சார்ந்தோரும் இல்லை என்று ஆகப்போகிறார்கள். நானும் விதுரனும் எவ்வளவோ எடுத்துச் சொன்னோம். சூதாட்டம் வேண்டாம் என்று. நீங்கள் கேட்க வில்லை. அதன் பலன் எதிரே இப்போது கௌரவ சேனையின் அனைத்து உயிரையும் பணயம் கேட்கிறது. THOSE DESIROUS OF HAVING THE BOOK AINDHAM VEDHAM TWO VOLUMES CAN CONTACT 9840279080




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...