Monday, April 29, 2019

aindham vedham



ஐந்தாம் வேதம்    J K  SIVAN 
பகவத் கீதை 

                                                             
                                          
                          'ஒருநிலை,  வைராக்கியம்''                                                                                                                                                        
மஹா பாரதம் கதை எழுதுவது கடினம் என்று கூற மாட்டேன். மூலத்திலிருந்து பிறழாமல் ஒட்டி அணைத்துக் கொண்டுபோவது அது.  ஆனால் ஸ்ரீ கிருஷ்ணன் உபதேசித்த பகவத் கீதை விஷயம் வேறு வகை.

புரியாதது போல் இருக்கும் அழகாக புரியவைக்கும்.  புரிந்து கொள்வது என்பதற்கே  கொஞ்சம் முயற்சியும், பிரயாசையும், தகுதியும் வேண்டும்.  ஒண்ணாம்  கிளாஸ் பையன் காலேஜ் புஸ்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு படிக்கவோ, படித்தால் புரிந்து கொள்ளவோ முடியாதல்லவா? இதைப்  புரிந்து கொள்வதற்கு மனப் பக்குவம் தேவை. எண்ணற்ற மாமனிதர்கள் கீதைக்கு உரை எழுதியிருக்கிறார்கள். சமீபத்தில்  நான் இதை எழுத வேண்டிய நிர்பந்தத்தில் எதற்கு வந்தேன் என்றால், மகா பாரதம் எழுதும்போது இந்த 18 அத்யாயங்களையும் குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல முயல்வோமே என்ற எண்ணம் என்னுள் எழுந்ததால்  ராஜாஜி, பாரதியார், கண்ணதாசன், வினோபாஜி, காந்தி, விவேகானந்தர்  என்று  பலரைத் தேடி அவர்கள் சொன்ன  கீதையின் உரைகளை அசை போட்டேன் . சில இடங்கள் அல்ல, பல பகுதிகள், எளிதில் புரிபட வில்லை.   மேலும் மேலும் சிந்திக்க வைத்தது.   அசை போடா வேண்டியிருந்தது.    திரும்ப திரும்ப படித்து, யோசிக்க வைத்தது.  என் சிற்றறிவுக்கு எட்டியவரை அவற்றை  இன்னும் சுலபமாக்க கிருஷ்ணனையே  வேண்டி எழுத  ஆரம்பித்தேன். 

 கீதையை முழுமையுமாக தெரிந்து கொள்ள  விரும்புவோர்  மேற்சொன்ன ஆசிரியர்களைத் தவிரித்து, பிரபுபாதா, ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வர், அரவிந்தர் ஆகியோரையும் அணுகலாம். பொறுமை வேண்டும். விருப்பம் உள்ளே தோன்றவேண்டும். முக்யமாக நேரம் ஒதுக்க வேண்டும்.

ஆறாம் அத்தியாயத்தில் தியான யோகம் பேசப்படுகிறது. இதுவரை கர்மயோகம், சன்யாச யோகம் இவற்றில் எது சிறந்தது, எல்லோராலும் கடைப்பிடிக்க உகந்தது என்று கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொல்வது போல் நமக்கு வேதவியாசர் மூலம் சொன்னார்.   மனப் பயிற்சி எப்படி உதவும், என்று விளக்கினேன்.

கீதை உலக மக்கள் அனைவருக்குமே வாழ்வில் முன்னேற ஒரு சிறந்த  வழிகாட்டி, எளிய சாதனம் என்று கற்பூரம் ஏற்றி சத்யம் செய்யலாம். கீதை எவராலும் சுலபமாக அணுகத்தக்கது.  ஒவ்வொருவனையும்   கையைப் பிடித்து மேலே தூக்கக்   கூடியது. ''என்னால் எப்படி முன்னேற முடியும் என்று  மனம் பாசாங்கு இல்லாமல் சுத்தமாக நினைத்து கீதையைத் தொட்டால், அதன் அர்த்தமே எளிதாக புரியும். மனம் கட்டுண்டால், உயரிய நோக்கம், ஆவல் தோன்றி ஒவ்வொரு அடியாக முன்னேற முடியும்.கர்மம், விகர்மம், அகர்மம் எல்லாம் புறத்தே செய்யும் கர்மங்கள் சம்பந்தப் பட்டது என்று விளங்கியது அல்லவா?

இப்போது மனச் சாதனை பற்றி தெரிந்து கொள்வோம்.  மனது வைத்தால் நீ தேவனாகலாம்.

மனம் (சித்தம்) ஏகாக்ரதை என்கிற ஒருநிலைப் பாடு அடைவது, அதற்கேற்றவாறு வாழ்க்கையை ஒரு வரம்புக்குள் வைத்துக்கொள்வது, எல்லாவற்றையும், எல்லோரையும் சமமாக நோக்குவது ஆகியவையே  மனதைத்  தூய்மைப் படுத்தி முன்னேற வைக்கும். அந்த நிலை தான் தியான யோகம்.இதற்கு பயிற்சி யும்  வைராக்கியமும் அவசியம். எந்த காரியம் செய்தாலும் அதில் விளையும் இன்ப துன்பம், வெற்றி தோல்வி,புகழ் அவமானம்,சாதகனை அசைத்து விடாமல் சம நோக்குடன் இருப்பது தான் வைராக்கியம்.
வைராக்கியம் கொண்டவனால் தான் மனத்தை சித்தத்தை ஒரே நிலையில் இயங்கச் செய்ய இயலும்.

''அர்ஜுனா, அதோ மரம், அதன் உச்சாணி கிளை, அதன் மேல் இலைகள், அதன் நடுவே பட்சி பொம்மை, இதெல்லாம்   தெரிகிறதா?  என்று துரோணர் கேட்டதற்கு இதே அர்ஜுனன் என்ன சொன்னான்?

‘ஒன்றுமே தெரியவில்லை குருதேவா,   அந்த  பட்சியின் கழுத்து ஒன்றே தெரிகிறது''  என்று த்ரோணாரைப்பார்க்காமலேயே பதிலளித்தான்  அர்ஜுனன்.
''சரி அதை வீழ்த்து'' 
 அடுத்த  கணம்  ஒரே அம்பில் எதன் மீதும் படாமல் பக்ஷியை வீழ்த்தினான்.   அது தான் concentration, ஏகாக்ரம். மனதை அலைய விடாமல் ஒரே லட்சியத்தில் நிறுத்துவது. 
நாம்  கோவிலுக்கு சென்றாலும் மனதை பொங்கல் பிரசாதத்தின் மேலும், எப்படி வரிசையில் போகாமல் சுலபமாக உள்ளே சென்று தரிசிப்பது, வாசலில் இருக்கும் புது செருப்பு, தரிசனம்  முடிய இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்,  திரும்ப பஸ் சீக்கிரம் கிடைக்குமா,  இரவு என்ன சாப்பிடுவது இவற்றின் மீது எல்லாம் எண்ணங்களை சிதற அடிக்கிறோம். 
பிரார்த்தனை பண்ணும்போதும்  இதே கதி. மனதை ஓடவிட்டு  வெறும் கண்ணை மூடிக்கொண்டு என்ன பயன்?  மனிதன் பஞ்ச  இந்திரியங்களுக்கு, ஐம்புலன்களுக்கு அடிமை ஆகிவிட்டால் ஏகாக்ரம் எப்படி சாத்தியமாகும்.?

உலக வாழ்வில் நாம் புரியும் அனைத்து காரியங்களும் சொந்த லாபம் கருதியோ, பூர்வ ஜென்ம வாசனைகளின் த்ருப்திக்காகவோ ,புற விஷயங் களுக் காகவோ பயன் பட்டால் இறுதி நாள் இன்பத்திற்கு என்ன வழி?  கடைசிக் கணம் புனிதமாக இருக்கவேண்டாமா? பகல் பூரா செய்த எல்லா வேலையும் புனிதமாக செய்தால் இரவு நிம்மதியாக பிரார்த்தனை யோடு உறங்குவது சுகமல்லவா? வாழ்கையை செப்பனிட்டு அமைத்துக் கொண்டால் பயணம் சுகமாக  போகவேண்டிய இடத்துக்கு சவுகரியமாக செல்ல முடியுமே. 

மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரி அல்ல. அவயவங்கள் ஒன்று தான்.  ஒருவன் தேவனாகவும் அடுத்தவன் மிருகமாகவும் இருப்பது எதனால்?  ஒரே களிமண்ணில் செய்த பானைகள் தானே?  ஒவ்வொருவனும் மேலே உயரத்துக்கு செல்ல முடியும். உயர்வதற்கு வழி உண்டு. நிறைய பேர் ஏற்கனவே உயரே சென்றிருக்கிறார்கள். சென்று கொண்டிருக்கிறார்கள்,  தனது குறை நோக்காமல் அடுத்தவர் குறையில் கவனம் செல்வதால்  தான் நமது முன்னேற்ற  தடை.  தனது குறை உணர்ந்து அதை தவிர்ப்பவன் உயர்கிறான். சித்தம் ஏகாக்ரதை  பெற இது முதல் படி. அடுத்தது வாழ்க்கை முறை. தனக்கென்றான  வரம்புக்குள் வாழ்வது. 

உடல் நலத்துக்கு எது அவசியம்?   முறையான சரியான அளவு, குறித்த நேர உணவு, தூக்கம்.  இதில் அதிகமோ குறைவோ இருந்தால் உடல் க்ஷீண மடையும். ருசிக்கு அடிமையாகாமல் உடல் பாதுகாப்புக்கு எது தக்கதோ அந்த உணவு அந்த அளவில் பெற மனக் கட்டுப்பாடு வேண்டும்.  கடற்கரையில் காற்று வாங்கப் போய் அறுபது ரூபாய் தேடி எடுத்துக் கொடுத்து, ஆறு வெங்காய பஜ்ஜி சாப்பிட்டு  ஆறாயிரம் ரூபாய் டாக்டரிடம் கொடுக்கிறோமே, அது யாரால்?  நம்முடைய  நாக்கை அடக்க முடியாததற்கு தண்டனை தானே?  வயிற்றுப் போக்கு,  வயிற்று வலி, வாந்தி, தலைவலி இதெல்லாம் இதற்கிடையே போனஸ். ஐம்புலன்களை தவறான வழியில் ஓடாமல் நிறுத்தி பிடித்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர மன உறுதி வேண்டும். இந்த ஐம்புலன்களுக்கு நாம் எஜமான் இல்லை. உள்ளே ஆத்மா தான் எஜமான். நம் மனதை  இந்த ஐம்புலன்களின்  விருப்பப் படி அவற்றை    திருப்திபடுத்த  அலைய விட்டால் உள்ளே இருக்கும்  உண்மை எஜமான் தண்டிக்கிறான். அது தான் நம் உடலே படும் அவஸ்தை.  மேலே சொன்னது.

அடுத்ததாக கிருஷ்ணன் முக்கியமாக நமக்குச்  சொன்னது சம நோக்கு. நல் நோக்கு. இதைப் பெறாத வரையில்  சித்தத்தில்  ஏகாக்ரம் கிடைக்காது.  உலகில் மனிதனைத் தவிர மற்ற உயிர்கள் எல்லாம்  ஏதோ ஒரு வித பயத்தில் தான் எப்போதும் வாழ்ந்து வருகின்றன. டிவியில்   யூ ட்யூபில்  எல்லாம்  காடுகளில், நீர்நிலைகளில், மலைகளில், உயிர்வாழும்  ஜந்துக்கள், பறவைகள்,  விலங்குகள் அன்றாட  வாழ்க்கைக்கு பயப் படும் அவஸ்தையை வேடிக்கையாக  பார்க்கிறோம். ஒவ்வொரு கணமும் உயிர்மேல் நம்பிக்கை இல்லாத  ஜீவனம்.  

தன்னம்பிக்கை மனிதனுக்கு கொடுக்கப்பட்ட வரப் பிரசாதம். தன் மீது இருக்கும் நம்பிக்கை உலகில் காணும் அனைத்து  பகவானின் சிருஷ்டிகள் மீதும் இருக்க வேண்டும். எல்லாமே தூயவை, கடவுள் சிருஷ்டியில் அனைத்தும் புனிதமானது இதில் எதற்கு,  என்ன பயம், அன்பல்லவோ  இருக்கவேண்டும் ?  என்ற நோக்கம் தான் சம நோக்கம். குற்றம் நமது பார்வையில் தான் இருக்கிறது.

ஒரு குட்டிக் கதை சொல்கிறேன்.  

ஸ்ரீ ராம தாச சுவாமிகள் ராமாயணம்  ஸ்லோகங்கள்  எழுதிக் கொண்டிருந்தார். ஒரு இடத்தில் அனுமான் இலங்கையில் சீதையைத் தேடும்போது அங்கே ராவணனின்  அரண்மனை நந்தவனங்களில் வெண்மையான நிறம் கொண்ட மலர்களை பார்த்தான்  என்று எழுதினார். ராமாயணம் என்ற சொல் எங்கே கேட்டாலும் அங்கே தான் ஹனுமான் இருப்பானே? 

 ' எதற்கு இந்த மனிதர்  இப்படி எழுதியிருக்கிறார்?   அங்கே   வெள்ளை யாக எந்த பூவையும் நான் பார்க்கவே இல்லையே ,  செக்க ச்  சிவந்த பூக்கள் அல்லவோ எங்குமே காணப் பட்டது. இவர் தப்பு தப்பாக அல்லவோ எழுதுகிறார் என்று  தோன்றியது.  ஹனுமான்  தான் சிரஞ்சீவி ஆயிற்றே.  உடனே  ராம தாசர் முன்னே தோன்றி,

 ''நீங்கள் யார் அய்யா அசோக வனத்தில், நான் கண்டதெல்லாம்  வெள்ளை நிற  மலர்கள் என்று தவறாக எழுதுகிறீர்கள்.  நீர்  பார்த்தீரா?  நான்  பார்த்தேனா? அனைத்தும் செக்கச் செவேலென்று அல்லவோ நான் அங்கே மலர்களை பார்த்தேன்.''

''ஆஞ்சநேய  ப்ரபோ.   க்ஷமிக்கவேண்டும்.   நீங்கள் பார்த்தவை எல்லாமே  வெள்ளை  நிற புஷ்பங்கள் தான் '' என்றார் ராமதாசர். இருவருமே  தமது வாக்குவாதத்தை நிறுத்தவில்லை.  சரி  ராமனையே கேட்போம் என்று ராமனிடம் முறையிட

''ஹனுமா,  ராமதாசர்  ஞான திருஷ்டியில் கண்ட புஷ்பங்கள் வெள்ளை நிறம் தான். ராவணாதிகள் மேல் கடுங்கோபம் கொண்ட உன் கண்கள் சிவந்திருந்ததால் எல்லாமே சிவப்பாக உன் கண்ணில் பட்டது.'' என்றார். 

 நாம்  வெயிலில் கருப்பு  'ரேபான்' RAYBON   கண்ணாடி அணிந்து வெயிலையே நிறம் மாற்றி பார்க்கி றோமே அது போல்.

‘ஏ,   உலகமே  நீ நல்லது. என்னை மகிழ்விக்க  நீ ஏராளமாக எங்கும் இருக்கிறாய். நான் தான் உன்னை சரியாக நோக்க வில்லை.  ஜவஹர்லால் நேரு  டேராடூன்  சிறையில் இருக்கும்போது இமய மலை பனி சிகரங்கள் பூதாகாரமாக எதிரே தோன்றியதைப்  பார்த்து

 ''its solidity, and imperturbability looked down upon me with the wisdom of a million  years and mocked at my varying humours and soothed my fevered mind'' 

என்று எழுதியதை  என் பள்ளிக்கூட காலத்திலிருந்தே  பல முறை படித்து ரசித்திருக்கிறேன். நீண்ட கடல், திறந்த புல் வெளி, உயர்ந்த மலைத் தொடர், அமைதியான பள்ளத் தாக்கு, சல சல வென்று ஓடும் நதி, கூட்டமாக பறக்கும் பறவைகள், சுதந்திரமாக திரியும் விலங்குகள், எதற்கு இவைகளையெல்லாம் சென்று விடுமுறை நாளில்  காண்கிறோம்.  மனத்தை உறுதிப் படுத்த.  புத்துணர்ச்சி பெற.   ஒருநிலை பயிற்சி பெற. புறத்திலேயே  இவ்வளவு சாதனங்கள் இருக்கும்போது ஆழம் காண முடியாத, எல்லையில்லாத அக உலகில் எத்தனை அமைதி தரும் அழகிய, அற்புத   சாதனங்கள் இருக்கிறது தெரியுமா?

பக்தி,   ஞானம்,  என்பவை எவ்வளவு பெரிய மலைகள், ஆறுகள், கடல்கள். அவையல்லவோ சாந்தி தரும். வெளியே தெரியும் கல்லும், மண்ணும், காற்றும்  அகண்ட வெளியுமே  இவ்வளவு இன்பம் கண்ணுக்குத் தரும்போது அகத்தே மலர்ந்துள்ள சிருஷ்டி   இன்னும் எவ்வளவு பெரிய, எத்தனை,  இன்பம்,  அமைதி  தரும்!

சித்தத்தில் உண்டாகும் குழப்பம் தான் ஏகாக்ரம் அடையமுடியாமல் தடுக்கிறது.  இது இயற்கைக்கு மாறானது. நாமே தருவித்துக் கொள்வது. குழந்தைப் பருவத்தில் தான் நமது சித்தம் ஏகாக்ரதையை இயல்பாக பெறுகிறது. காரணம் சித்தம் தூய்மையாக இருக்கும் காலம் அது. கொஞ்சம் கொஞ்சமாக நாம் செயற்கையாக வாழ  பழகி விட்டோம். பாழாகி விட்டோம். பிள்ளைமனம் கொள்ளை போய்  விட்டது. கள்ளம், கபடம்,  சுயநலம்,  எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக   நம்மோடு கூடவே வளர்ந்து விட்டது.

இதுவரை   ஏகாக்ரதை,  வரம்புக்குட்பட்ட வாழ்க்கை, சமநோக்கு என்பதை பார்த்தோமல்லவா. இனி வைராக்கியம் பற்றி பேசுவோமா? இதற்குப்  பயிற்சி என்ன தெரியுமா?  ஒரு வயலில் பயிரிட நாம் என்ன செய்கிறோம். நிலத்தை பண்படுத்தி, புல்  பூண்டு செடி கொடிகளை வேரோடு களை  பிடுங்கி, அவற்றை அழிப்பது ஒரு முதல் வேலை.  பிறகு  நீர்வார்த்து, உரமிட்டு, விதை விதைத்து  பாதுகாத்து வளர்ப்பது.  என்ன புரிகிறது?   ஒன்று அழித்தல்  மற்றொன்று ஆக்கல். சரிதானா ?  ஒன்று விடாமல்  தீய எண்ணங்களை, ஸம்ஸ்காரங்களை வேரோடு களைந்து நல்ல எண்ணங்களை  விதைத்து  மனதை பக்குவப் படுத்தி வளர்க்கும் பயிற்சியில் விளைவது வைராக்கியம்.

அனுமனுக்கு  சீதை  அவன் சேவையை மெச்சி  பட்டாபிஷேகத்திற்கு பிறகு  தனது விலையில்லா  சிறந்த  முத்து மாலையை  பரிசாக அளித்தாள். .ஹனுமான் என்ன செய் தான்?  ஒவ்வொரு முத்தாக எடுத்து கடித்து ருசித்து வெளியே துப்பிவிட்டான். மாலை காலி. ''என்ன இது ஆஞ்சநேயா?''  என்று கேட்டதற்கு  ''இதில் எதிலுமே  என் ராமன் தென்படவில்லையே'' என்றான்.  மனத்தில் நோக்கம் இருக்க வேண்டும்.

''எதிலும்  நான் இருப்பதை காண்பாய் அர்ஜுனா. எதுவும் என்னிடத்தில் இருப்பதையும் உணர்வாய். அப்படிக் காண்பவன் என்னை எப்போதும் எதிலும் காண்பவன் அல்லவா? நானும் அவனை எப்போதும் என் நோக்கில் தானே  வைத்துக்கொண்டிருக்க வேண்டும்!

அப்படிப் பார்ப்பவன் நானாகி  விடுகிறானே. நானே அவன். அவனே நான்' ..இது தான் சமதர்சனம்

ஒரு கணம் யோசிப்போம்.  இது வரை கண்ணன் சொன்னது நடைமுறையில் முடியாததா?  இல்லை, உண்மையான உழைப்பும், முயற்சி, தன்னம்பிக்கை  கண்டிப்பாக  முதலில் வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தான் முன்னேறவேண்டும். ஆத்மாவினாலேயே ஆத்மாவை முன்னேற்ற  வேண்டும்.  ஒரு பிறவியில் இது முடியாது போனாலும் இனி வரும் பிறவிகளில் தொடர்ந்து வரும்போது சுலபமாகிவிடும்.   மரணம்  முடிவில்லாத  தூக்கம்.  சாதாரண அன்றாட தூக்கம் சில மணி நேரங்களே. தூக்கத்திற்கு பின் நாம் புத்துனச்சி பெறுகிறோமே,  அது போல் இனி வரும் பிறவிகளும்  ஏற்கனவே செய்த முயற்சியால் பாக்கி உள்ள முயற்சியை எடுக்கவோ  முடிக்கவோ  உதவும். பளுவைக்குறைக்கும் .

மேலே தொடர்வோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...