தமிழ் புலவர்கள். சித்தர்கள், மஹான்கள். J K SIVAN
ஆண்டவன் பிச்சை.
ஒரு நம்பமுடியாத அதிசயம்....
டாக்டர் கிருஷ்ணா ராவ் பிரபல டாக்டர் அப்போது. அதாவது சென்னையில் மைலாப்பூரில் நூற்றி இருபது வருஷங்களுக்கு முன்பு அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் ''ஆண்டவன் பரிசு, அல்லது ஆண்டவன் பிச்சை'' 1893ல் இந்த புத்தகம் உத்தரபிரதேசத்தில் சிவானந்தா நகரில் பிரசுரமானது. ஒருவரது வாழ்வில் இறைவன் குறுக்கிடுவானா? அப்படி குறுக்கிட்டான் என்று ஒருவர் சொன்னால் அது பொய்யா, இட்டுக்கட்டா? கதையா? நம்ப முடியாததா?? இதெல்லாம் வேண்டாத கேள்விகள். நடந்தது என்று எடுத்துக்கொண்டால் என்ன மோசமாகிவிட்டது? ஏன் நடக்கக்கூடாது? எல்லார் வாழ்விலும் நடக்காதது யாரோ ஒருவர் வாழ்வில் நடக்கக்கூடாதா? இந்த சம்பவம் அப்படி ஒரு அற்புதமானது.
120 வருஷங்களுக்கு முன் மைலாப்பூரில் ஒரு குடும்பம். வக்கீல் சங்கரநாராயண சாஸ்திரி சீதாலட்சுமி தம்பதிகள் அமைதியாக வாழ்க்கை நடத்தினார்கள். அவர்களுக்கு ரெண்டாவது குழந்தை ஒரு பெண்ணாக பிறந்தது. 6. 9.1899 அன்று பிறந்த அதன் பெயர் மரகதவல்லி. அதன் மூன்றாவது வயதில் அம்மா காலமாகி அப்பா ரெண்டாம் கல்யாணம் செய்துகொண்டார். அவர் மனது ஆன்மீகத்தில் சென்று புது மனைவியையோ குழந்தைகளையோ சரியாக பராமரிக்க இயலவில்லை. அவர் சகோதரர் வேங்கட சுப்பையருக்கு குழந்தை மரகதவல்லி ''மரகதம்மா'' மேல் ரொம்ப பாசம். பெண்கள் கல்விச்சாலைகளுக்கு போகாத காலம். வீட்டிலேயே படிப்பு சொல்லிக்கொடுத்தார். படிப்பில் மரகத்துக்கு அதிக பிடிப்பு இல்லை.
வாய் ரொம்ப பேசாது. மௌனமாகவே இருப்பாள். நூறு வார்த்தை கேட்டால் ரெண்டு வார்த்தை பதில். தாத்தா தண்டலம் ராமக்ரிஷ்ணய்யர் சமஸ்க்ரித வித்வான் ஆங்கிலம் தமிழ் மொழிகளிலும் நிபுணர். படித்த குடும்பம் . மரகதத்தை தவிர. குழந்தையாக இருந்தபோதே யாருடன் கல்யாணம் என்று நிச்சயமாகிவிடும். அம்மா வகை உறவில் குருசாமி ஐயர் தனது பிள்ளை நரசிம்மனுக்கு தான் மரகதம் என்று தாத்தாவிடம் நிச்சயம் பண்ணி விட்டார். ஒன்பது வயது மரகதத்துக்கு நரசிம்மனுக்கும் ஜாம் ஜாம் என்று 7 நாள் கல்யாணம் நடந்தது. நரசிம்மனுக்கு 20 வயது மரகத்துக்கு 9வயது. சாரதா சட்டம் அமுலுக்கு வராத காலம். ரெண்டு பங்களா நகைகள் சீதனத்தோடு மரகதம் கணவன் வீடு சென்றாள் . அம்மா போய்விட்டாலும் அம்மா வழி பாட்டி திருத்தணி முருகன் பக்தை. நிறைய முருகன் கதை சொல்லி இருக்கிறாள் மரகதத்துக்கு.
நவராத்ரி சமயம்.பாட்டி பக்கத்தில் படுத்துக்கொண்டிருக்கிறாள். கனவா நினைவா, என்ன வென்று சொல்வது. அழகன் முருகன் 12 வயது பையனாக மயில் மீது வருகிறான். மயிலோடு விளையாடிக்
கொண்டு மரகதம் அருகே நிதானமாக வந்து நிற்கிறான். சிரிக்கிறான். அவள் கையை பிடிக்கிறான். ''உன்னை எனக்கு பிடிக்கிறது'' என்கிறான். அவள் கையை உதறுகிறாள்.
''என்னோடு பேசு'' என்கிறான். அவள் கையால் ''இல்லை'' என்று ஜாடை காட்டுகிறாள்.
''வாயைத்திறந்து பேசு'' என்கிறான் எப்போதும் போல் மரகதம் வாய் திறந்து பேசவில்லை. சட்டென்று அவள் வாயை அவனே திறந்து அவள் நாக்கை இழுத்து தனது வேலினால் 'ஓம்' என்று எழுதுகிறான். அவளுக்கு ஷடாக்ஷரி மந்திரமான ''ஓம் சரவணைபவ '' என்ற மந்திரத்தை உபதேசிக்கிறான். '' உன்னை அப்புறம் பார்க்கிறேன்'' என்று சொல்லிக்கொண்டே அடுத்த கணம் மறைகிறான் பாலசுப்ரமணியன். பாட்டி பாட்டி என்று ஓடி பாட்டியிடம் தான் கண்ட கனவா காட்சியா அதை ஆவலோடு சொல்கிறாள்.
''பாட்டி இது உனக்கு எனக்கு மட்டும் தெரிந்த ரகசியம். யார் கிட்டேயும் சொல்லாதே'' என்கிறாள் மரகதம்.
என்ன அதிசயம். அக்கணம் முதல் மரகதத்தின் மனது முருகன் மேலே லயித்தது .அவன் மீது பாட வேண்டும் என்ற ஆசை பிறந்தது. பாட்டிக்கும் ஆச்சார்யம். மரகதம் நிறைய பேச ஆரம்பித்தாள்.
''போய் உன் அப்பாவிடம் சொல்லு பேசு'' என்கிறாள் பாட்டி. அப்பா வீட்டில் நூலக அறையில் ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். மரகதம் அந்த அறைப் பக்கமே வருவதில்லை.
''ஏன் இன்று இங்கே விஜயம் செயகிறாள்?'' என்று ஆச்சர்யம் அவருக்கு. குழந்தை மரகதத்தை வாரி மடியில் அமர்த்திக் கொள்கிறார்.
''என்னடி குழந்தே என்னை தேடி வந்திருக்கே?''
''உங்க கிட்டே பேசணும்''
அட பேசாமடந்தை பேசுகிறாளே என்று அவருக்கு ஆச்சர்யம். இதுவரை ஒன்றிரண்டு வார்த்தை மழலையாக பேசுபவள்.
மரகதம் முதன் முதலாக ஒரு பாட்டு பாடினாள். அற்புதமான வார்த்தைகள் சுத்தமான தாளம், ராக கட்டமைப்போடு அமைந்த பாடல்.
'' ஆஹா என் குழந்தே, உனக்கு யார் இதை கற்றுக்கொடுத்தது?''
' நீங்க சுப்பிரமணியன், முருகன் என்று வணங்குகிறீர்களே அந்த பையன் தான் கற்றுக்கொடுத்தான்'' மரகதம் பாடிய முதல் பாடலின் சாராம்சம்:
''முதலில் நீ ஒன்றானவன். பிறகு மூன்றானவன். பிறகு பலவானவன் .......';
சங்கரநாராயண சாஸ்திரி ஆகாசத்துக்கு தாவினார். அவ்வளவு சந்தோஷம். ''வெங்கடா சீக்கிரம் வா... என்று சகோதரர் வேங்கடசுப்பையரை அழைத்தார். அவரும் வந்து பாடலை மீண்டும் பாட சொல்லி கேட்டார்.
'' குழந்தே, முருகன் மேல் ஒரு பாட்டு இயற்றி பாடு. உன் புருஷன் மேலே ஒரு பாட்டு இயற்று. உன் அம்மா அப்பா மேலே பாடு... எல்லாம் உடனே செய்தாள் மரகதம். அப்புறம் ஒளவையார் மேல் ஒரு பாட்டு. பாஸ்கராச்சார்யர் மகள் லீலாவதி (கணித மேதை) மேல் ஒரு பாடல்.
வீடு சந்தோஷமயமாக காட்சி அளித்தது. மரகதத்திற்கு காயத்ரி தேவதை போல் வேஷம் இட்டு படம் எடுத்தார்கள்.
அதோடு சரி. இனி மரகதத்திற்கு இதன் மீதும் எவர் மீதும் பந்தமோ பாசமோ இல்லை. இனி அவளுடைய ஒரே ஸ்மரணை .....''ஓம் முருகா'' அவன் நேராக அவள் முன் தோன்றிய காட்சியே நிலைத்தது.
ஆண்டவன் பிச்சை தனது வாழ்வு பற்றி மேலே சொன்ன புத்தகத்தில் எழுதுகிறார்:
''எனக்கு சின்ன வயசு. அறியாத குழந்தை. என் மேல் திருத்தணி முருகன் கருணை கொண்டான். என்னை ஆட்கொண்டான். என்னை பாட வைத்தான். ஒவ்வொருநாளும் எனக்கு ஒரு ''பாமலர்'' கொடு. என்றான்.ஆண்டாள் எப்படி ரங்கன் மேல் திருப்பாவை ஒவ்வொருநாளும் எழுதினாளோ அப்படி. எனக்கு பாடல்கள் எளிதாக பாட வந்தது.
முதல் பாட்டு பாட அவன் என்னை ஊக்குவித்தது எப்படி தெரியுமா? எதிரே நின்றான். என் பன்னிரண்டு தோள்களை பாமாலையால் அலங்கரி. ஆஹா என் சிறு பிராயத்திலேயே என்னை அழைத்து இங்கே வா. நீ உலகுக்கு பைத்தியமாக இருந்தாலும் நீ என்னோடு இரு. நீ என்ன வேலை செய்தாலும் உன் மனதால் எல்லையற்ற பக்தியோடு அன்போடு என்னோடு இணைந்திரு. உன் இதயத்தில் என்றும் ஆழமான பக்தி என் மீது இருக்கும்'' என்றான் முருகன். எனக்கு பத்து வயது கூட ஆகவில்லை. சரியாக பேச்சு வராது. என்னை தன்னோடு இணைத்துக் கொண்டான் முருகன். ஒவ்வொருநாளும் அவன் மீது பாட வைத்தான். எனக்கு கல்யாணம் ஆகவில்லை அப்போது. சிலநாள் என் பாமாலை வண்ணவண்ணமாக நீளமாக இருக்கும். எனக்கு திருமணம் பண்ணினார்கள். என் மனதோ முருகன் மேல். அவன் தரிசனம் மனதில் இதயத்தில் நிறைந்திருந்தது. உடல் கணவனுக்கும் குடும்பத்துக்கும் உழைத்தது. என் இதயத்தில் அவனைத்தவிர எவருக்கும் இடம் இல்லை. இதை தான் ஒரு பாடலில் ''என் இறைவனின் அன்பெனும் ஆழ்கடலில் மூழ்கினேன். முருகன் என்ற முத்தை எடுத்தேன்'' என்கிறார் ஆண்டவன் பிச்சை.
அவரது பிரபல பாடல் '' உள்ளம் உருகுதையா முருகா... என்ற TMS பாடல் பற்றி முன்பே எழுதி
இருக்கிறேன்.
No comments:
Post a Comment