Sunday, April 7, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J K SIVAN
மஹாபாரதம்

செவிடன் காதில் ஊதிய சங்கு

மகரிஷி, நீங்கள் சொல்லும் விதம், என்னை என் முன்னோர்கள் காலத்துக்கே கொண்டு சென்று விடுகிறது. அது எப்படி ஒவ்வொரு சம்பவமும் நேரில் பார்த்தது போலவே வர்ணிக்கிறீர்கள்'' என்று வியந்தான் ஜனமேஜயன்.

'ஜனமேஜயா, இது தெய்வம் சம்பந்தப்பட்ட விஷயம். மனதால் அவனை நீ வேண்டினால் அவன் உன் மனக்கண் முன்பு வந்து நிற்பான். '' என்னடா நடந்தது ஹஸ்தினாபுரத்தில்?'' என்று கேள். அவனே நடந்ததை விலாவரியாக சொல்வான். நான் அதைக் கேட்டு தான் உன்னிடம் சொல்கிறேன். நான் அவனது பேசும் கருவி என்று எடுத்துக் கொள் '' என்கிறார் வைசம்பாயன மகரிஷி.

நீ கேட்குமுன்பே நான் மேலே நடந்த மற்ற விஷயங்களையும் சொல்லிவிடுகிறேன். பொழுது விடிந்தது. கிருஷ்ணன் தனது நித்ய அனுஷ்டானங்களை முடித்து, அலங்கரித்துக் கொண்டான். கிருஷ்ணன் துரியோதனன் அரண்மனையில் அவனது அரசவையில் நுழைந்ததுமே அனைவரும் தாமாகவே, தம்மை அறியாமல், தத்தம் ஆசனத்திலிருந்து எழுந்து நின்றனர். துரியோதனனும் கூடத்தான். கிருஷ்ணன் அனைவரையும் குசலம் விசாரித்தான்.

''நாரதர்,கண்வர் மற்றும் பல ரிஷிகள் வந்துள்ளனர். அவர்களும் வரட்டும். அவர்கள் அமர்ந்த பிறகே மற்றவர் அமர்வது மரியாதை' என்று கிருஷ்ணன் சொல்ல, பீஷ்மர் உடனே ரிஷிகளை வரவேற்றார்.

அங்கு கூடியிருந்த அத்தனை பேரும் உணர்ச்சி வசத்தில் ஆழ்ந்து தவிக்கையில் அவர்கள் நடுவில் மஞ்சள் பீதாம்பரத்தோடு கிருஷ்ணன் துளசி மாலைகள் அணிந்து சிரித்த முகமாக அமர்ந்திருந்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

துரியோதனன் க்ரிஷ்ணனை தங்களோடு போஜனத்திற்கு அழைத்தபோது கிருஷ்ணன் ''துரியோதனா வேண்டாமப்பா' என்று மறுத்துவிட்டான்.

''ஏன் கிருஷ்ணா, நீ இருவர் பக்கமும் வேண்டியவனாயிற்றே. இருவருக்குமே உதவியவனாயிற்றே. உனக்காக விருந்து தயார் செய்திருக்கிறேனே. எதற்கு வேண்டாம் என்கிறாய் ?''

"துரியோதனா, உனக்கு தெரியாததா. தூதுவனாக வந்தவன் முதலில் தான் வந்த காரியத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு பிறகே விருந்தோம்பலில் பங்கேற்க வேண்டும்''

''அதெல்லாம் இல்லை கோவிந்தா. நீ தூதுவனாக வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் எங்களுக்கு மிகவும் வேண்டிய நண்பன். உன்னோடு எங்களுக்கு யுத்தமா,கோபமா சொல்?''

அரசவை அமைதி காத்தது. கிருஷ்ணன் என்ன பேசப்போகிறான் என்று அனைவரும் காத்திருந்தபோது தொண்டையை கனைத்துக் கொண்டு கிருஷ்ணன் திருதராஷ்டிரனை நோக்கி பேசினான்:

''குரு வம்ச அரசே, திருதராஷ்ட்ர மஹாராஜா, இரு பக்கமும் எவரும் உயிர்சேதம் அடையக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் நான் இங்கே வந்து இதைப் பேசுகிறேன். உங்களுக்கு தெரியாததை எதுவும் நான் புதிதாக சொல்லப் போவதில்லை. எல்லோரும் இன்புற்றிருக்க, அமைதி தேவை. யாருமே அவரவர்களுக்கு உதவ வந்தவர்களின் நாசத்துக்கு காரணமாக இருக்கக் கூடாது. குரு வம்சத்தில் யார் தவறு செய்தாலும் அதை தடுத்து செயல்படவேண்டியது இங்கு கூடியுள்ள பெரியோர் பொறுப்பு. உங்கள் மகன் செய்த அநியாயத்தையும் அநீதியையும் உடனே நிவர்த்தி செய்து அனைவரையும் பாதுகாக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. அவர்கள் தவறு செய்யாமல் அடக்கினால் உங்களுக்கு லாபம் கிட்டும். உங்கள் அணியோடு பாண்டவர் அணியும் தோளோடு தோள் நின்றால் உலகில் எவராலும் உங்களை வெல்ல முடியாதே. பாண்டவர்களோ, உங்கள் மகன்களோ அழிந்தால் என்ன சுகம் உங்களுக்கு கிட்டும்? தந்தையை இளம் வயதில் இழந்த பாண்டவர்களுக்கு தந்தையாக இருப்பவர்கள் தாங்கள். எண்ணற்ற துன்பங்களை உங்கள் மகன் தந்தபோதிலும் பொறுமையாக, அமைதியாக சொன்ன சொல் தவறாமல் பதிமூன்று வருஷ காலம் வனவாசம் முடித்தவர்கள் பாண்டவர்கள். எனவே அவர்களுக்கு உரிய சம பங்கை உடனே அளிப்பது ஒன்றே நியாயம். எத்தனையோ முறை பாண்டவர்களை அழிக்க உன் மகனும் மற்றவர்களும் திட்டமிட்டாலும் அனைத்திலும் மீண்டு இன்றும் உங்கள் மீது அன்போடும் மரியாதையோடும் தான் யுதிஷ்டிரன் இருக்கிறான். உங்களோடு ஒத்துழைக்கவும் தயார், எதிர்க்கவும் தயார் என்ற நிலையில் உள்ளான். நீங்கள் தான் தக்க முடிவெடுக்க வேண்டும்.'' என்றான் கிருஷ்ணன்.

ஆசையோ, விருப்பமோ, கோபமோ, லாபம் கருதியோ, விவாதமோ, உணர்ச்சி வசமோ எதாலும் நான் அமைதியோ குணத்தையோ இழப்பவன் அல்ல. நியாயத்திலிருந்து பிரழ்பவன் இல்லை. எனக்கு நீ நன்மையோ தீமையோ ஒன்றுமே புரியவில்லை. அன்போ, எதிர்ப்போ காட்டவில்லை. ஆனால் நீ பிறவியிலிருந்தே உன் சகோதரர்கள் பாண்டவர்களுடன் பகை உணர்ச்சி கொண்டவன். அவர்களோ நற்குணங்களின் பிறப்பிடம். ஒன்று தெரிந்துகொள். நற்குணங்களை வெறுப்பவன் என்னையே வெறுப்பவன். அவர்களிடம் அன்புள்ளவன் என்னிடம் அன்புள்ளவன். பாண்டவர்களுக்கும் எனக்கும் ஒரே ஆத்மா. தீய எண்ணங்களை மனதில் நிரப்பியவன் எந்த சுகத்தையும் அனுபவிக்க முடியாது. பாபங்களில் உழல்வான். இத்தகையவன் அளிக்கும் உணவை நான் ஏற்க வழியில்லை. எனவே விதுரனின் வீட்டில் அவன் அளிக்கும் உணவை மட்டுமே ஏற்கனவே ஏற்றுவிட்டேன். ' அங்கே பீஷ்மன், துரோணர், கிருபர் ஆகியோர் என்னைக் கண்டார்கள், ''எங்கள் இல்லத்துக்கு உணவருந்த வாருங்கள் என்று அழைத்தனர். அவர்களிடமும் ''உங்கள் எண்ணத்துக்கும் அழைப்புக்கும் நன்றி. நீங்கள் போகலாம்'' என்று அனுப்பி விட்டேன் '' என்றான் கிருஷ்ணன்.

''துரியோதனா , சுருக்கமாக ஒரு விஷயம் புரிந்துகொள்.
பேராசை, பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருப்பவன். நீதி, நியாயம், சாஸ்திரம், நேர்மை அனைத்தையும் புறக்கணிப்பவன் என்றுமே நண்பர்களுக்கே எதிரியானவன். நம்ப முடியாதவன். மரியாதை தெரியாதவன். அகங்காரம் கொண்டவன். முட்டாள். யார் எடுத்துச் சொன்னாலும் நல்லவற்றை ஏற்காதவன்.

நீ பீஷ்மன், துரோணர், கர்ணன், ஜயத்ரதன், அஸ்வத்தாமா ஆகியோரை பெரிய பலமாக நம்பிக்கொண்டிருக்கிறாய் . இவர்கள் பாண்டவர்களை எளிதில் வென்று கொல்வார்கள் என்ற எண்ணம் உனக்கு. உனது சேனை அளவில் பெரியது. கர்ணன் ஒருவனே பாண்டவர்களை அழிக்க முடியும் என்று நினைக்கிறாய். நீ சமாதானத்தை நாடு. பாண்டவர்களுக்கு உரிமையானதைத் தந்துவிடு .

என் பேச்சு செவிடன் காதில் ஊதிய சங்கு ஆனாலும் பரவாயில்லை. நான் உனக்கு நியாயத்தை எடுத்துச் சொல்லத்தான் வந்தேன். என் மீதும் உனக்கு சந்தேகம் இருக்கலாம். பாண்டவர்களோடு என்னையும் எதிரியாக நினைக்கலாம். எனக்கு உன் மீதுள்ள அன்பும் பாசமும் பாண்டவர்கள் மீதுள்ளவற்றுக்கு கொஞ்சமும் குறைவானதல்ல.ல் புரிகிறதா?'' என்றான் கிருஷ்ணன்.

''துரியோதனா , ஒரு தாயோ தந்தையோ குழந்தைக்கு அறிவுரை சொல்வது போல் நான் உனக்கு உணர்த்துகிறேன். உன்னைப்பற்றியோ, உன்னுடன் கூட்டு சேர்ந்துள்ளவர்களைப் பற்றியோ நன்றாக தெரிந்தும் நான் ஏன் இங்கு வந்தேன் என்றால் எவனொருவன் பிற உயிர்களை அழிவினின்றும் காப்பாற்ற முயல்கிறானோ, அந்த பலன் அவனது முயற்சியில் அவன் தோற்றாலும் அவனுக்கு பயனளித்து நன்மை தரும். அதே போல் தீமை, தீங்கு செய்ய எண்ணம் கொண்டவன், அதைச் செய்யாவிட்டாலும் அந்த பாபம் அவனைத் தீண்டும். எனவே அமைதியாக யுத்தத்தினால் விளையும் அழிவை எடுத்துச் சொல்லி சமாதானத்தை நிலைநாட்ட உயிர்ப்பலியை நீக்க, மீட்க பாடு படுகிறேன். சமாதானத்தால் விளையும் நன்மை எடுத்துச் சொல்கிறேன். நான் என் முயற்சியில் தோற்றாலும் என்கடமையில் நான் சிறிதும் தவறவில்லை என்ற மன திருப்தி கொள்வேன். பாண்டவர்களின் நியாயமான கோரிக்கையை விட்டுக் கொடுக்காது நான் யுத்தத்தை நிறுத்தி அமைதியாக இருபக்கமும் வாழ வகை செய்யும் இந்த கடைசி முயற்சியில் இப்போது தோற்றால், துரியோதனா, உன் விதியை நீ அனுபவித்தே தீர வேண்டும்.'

'ஒருவேளை எனக்கே தீங்கு செய்ய முற்பட்டாலும் என் சக்தியை நீ அறியும்படி செய்வேன்.''

அங்குள்ள அனைவருக்கும் கிருஷ்ணன் பேச்சு திருப்தியாக இருந்தும் வெளியே காட்டிக் கொள்ள முடியாமல், துரியோதனன் எதிரே வாய் பேசாமல் மௌனமாக இருந்தனர்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...