புது வருஷம். J.K. SIVAN
வசந்த ருது மன மோஹனமே...... வசந்த ருது வந்தால் புது வருஷம்.....பிரளயம் முடிந்து ப்ரம்மா புதுசாக சிருஷ்டி ஆரம்பித்த நாள் என்று ஒரு ஐதீகம்.
புதுசு என்றால் பெரிசுகளுக்கு கூட ஒரு தனி உத்ஸாகம். பழசெல்லாம் நினைத்துப் பார்க்கும். காது கேட்காமல் பல்லில்லாமல் வாய் நிறைய சிரிக்கும்.
ஆம். நாம் எல்லோருமே புதுமை விரும்பிகள். புதுசா துணி, புஸ்தகம், படம், என்பதிலிருந்து ஆட்சிவரை புதியதைத் தேடுபவர்கள். அறுபது வருஷ ப்ரயோஜனமில்லாத அருதப் பழசுக்கு பதிலாக அஞ்சு வருஷ புதுசு தொடர்ந்து இருந்தாலே போதும் என்று புரிந்தவர்கள்.
இதில் என்ன ஒரு சந்தோஷமான விஷயம் என்றால் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள் நாம் இருக்கிறோம். அந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளில் புது வருஷம் வரும். நாள் முன்னாடி தெலுங்கு மொழி பேசுபவர்களுக்கு புத்தாண்டு. உகாதி என்று இந்த புது வருஷத்துக்கு பெயர். நமக்கு தமிழ் புத்தாண்டு சித்திரை நாளைக்கு. வடக்கே சிலர் குடி பட்வா என்றும் புது வருஷம் கொண்டாடுகிறார்கள். உகாதியும் குடி பட்வா கொண்டாடுபவர்கள் இந்த பெரிய தேசத்தில் பாதிக்கு மேல். ஆந்திர மஹாராஷ்ட்ரா ஜனங்கள். தெலுங்கு பேசுபவர்களுக்கு உகாதி, கன்னடக்காரர்களுக்கு யுகாதி, சிந்தி ஆசாமிகளுக்கு இந்த மாதிரி புது வருஷம் சேதி சாந்த் என்று நிறைய இனிப்புகளோடு இந்தியில் கொண்டாடப்படும். காஷ்மீர் காரர்கள் சும்மா இருப்பார்களா அவர்கள் பாஷையில் ''நாவ்ரே''. புது வருஷத்தில் பெயரே கோபமாக அடிக்க வருகிறாற்போல் இருக்கிறது இல்லையா. அது தான் காஷ்மீர். மணிப்பூரில் இந்த புது வருஷத்துக்கு என்ன பெயர் தெரியுமா? எங்கே சொல்லிப்பாருங்கள். அதற்குள் புது வருஷம் போய் அடுத்தநாள் வந்து விடும். எங்கே சொல்லுங்கள் அதன் பெயரை :'' சஜிபு நொங்மா பண்பா சீய்ராஒபா'' . நான் தான் ஓடிவிட்டேனே. என்னை நீங்கள் எப்படி அடிக்க முடியும்?
என்ன பேர் வைக்கலாம் எப்படி அழைக்கலாம் என்பது இருக்கட்டும். அன்று எல்லோருமே மொத்தத்தில் வீடுகளை சுத்தமாக்குவார்கள். பழசு வெளியேறும். புது துணிகள் மாவிலை, தென்னை ஓலை தோரணங்கள். குடி என்றால் பொம்மை. மரப்பாச்சி யாக கூட இருக்கலாம். வீட்டு வாசலில் மூங்கில் பொம்மைகள் வேப்பிலை அலங்காரம் பண்ணி நிறைய தொங்கவிடுவார்கள். குளிக்காதவர்கள் கூட காலையிலேயே குளித்து எண்ணெய் தடவி தலை வாரி நெற்றிக்கு எது வழக்கமோ அதை பூசி நிறைய பேர் புதுவருஷ பஞ்சாங்கம் அந்தந்த பாஷையில் படிப்பதை கேட்க போய்விடுவார்கள். சாயந்திரம் கேளிக்கைகள், டான்ஸ். கூத்து கும்மாளம், சாப்பாடு.
நமக்கு தெரிந்த ஒரு வழக்கம். துன்பம், கசப்பான நிகழ்ச்சிகள் போக வேப்பம்பூ வெல்ல பச்சடி. வேப்பம் பூ துயரத்தையும் வெல்லம் சந்தோஷத்தையும் சேர்த்து அனுபவித்ததை நினைவூட்ட. பச்சை மிளகாய் கோபம். உப்பு : பயம் . புளி : அருவருப்பு. அரை பழுத்த மாங்காய் : ஆச்சர்யம் இதெல்லாம் சேர்ந்தது தானே மனித வாழ்க்கை. நாம்ப கொழுக்கட்டை பண்ணுவோமே அதுபோல் பூரண போளி என்று ஒரு பக்ஷணம் மஹாராஷ்ட்ரர்கள் பண்ணுவார்கள். இது மாதிரி ஒன்றை பொப்பட்டு (bobbattu ) என்று தெலுங்கர்களும் ஹோலிகே, ஒப்பட்டு என்று கன்னடியர்களும் பண்ணுவார்கள்.
"எல்லோரும் ஒன்றாக கூடி மகிழ்ந்து வாழ என்ன பாஷை பேசினால் என்ன? எந்த பக்ஷணம் இனிப்பாய் ஏதேதோ பேரில் சாப்பிட்டால் என்ன? நாம் எல்லோரும் இந்தியர்கள். பாதார தேச புண்ய பிரஜைகள்.
இந்த வருஷத்துக்கு ராஜா சனி. போதுமா? அதனால் அக விலை குறையுமாம். மந்திரி : சூரியன். திருடர் பயம் அக்னி பயம் இருக்குமாம். ஜனங்களுக்கு அநேக உள் வெளி விரோதங்கள் உண்டாகுமாம். பேப்பரில் நல்ல செய்தி வர வாய்ப்பில்லையோ? அநேக ஜனங்கள் கர்மத்தை விட்டவர்களாக இருப்பார்கள் என்கிறதே வருஷ பலன். இதற்கு பஞ்சாங்கம் எதற்கு? நமக்கே தெரியுமே.. நாளுக்கு நாள் யார் நித்ய கர்மாநுஷ்டானங்கள், பித்ரு கடன், தேவ கடன், எல்லாம் செயகிறார்கள்? நாம் கண்டிப்பாக மாறவேண்டும்.
சேனாதிபதி: சந்திரன். இந்த வருஷ மழை பலன் பற்றி எவ்வளவு மழை பொழியும் என்று நமக்குத் தெரியாத ஒரு அளவை, அப்பனையங்கார் குமாரர் அண்ணாவையங்கார் காலத்திற்கும் பிறகு வாரிசு ஐயங்காரின் சாஸ்த்ரோக்தமாக கணிக்கப்பட்ட கம்சபுர சுத்த வாக்ய பஞ்சாங்கம் சொல்கிறது எப்படி என்றால்:
''தேவமானத்தால், 100 யோஜனை உயரம், 60 யோஜனை அகலம் உள்ள ஒரு பெரிய மரக்கால் நிறைய மழை பொழியுமாம்!! இது எத்தனை லிட்டர் என்று யாராவது சொன்னால் தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில் ரெண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்ய ஒரு டிக்கெட் இலவசமாக தருகிறேன். இவ்வளவு மழையும் பாதி சமுத்திரத்தில் பெய்யும். ஐந்தில் நான்கு பாகம் மலைகள் மீது, ஐந்தில் ஒரு பாகம் பூமியிலும் பெய்யுமாம். ஜாக்கிரதையாக நீரை சேமித்து வைத்துக்கொள்ள கற்க வேண்டும். இந்த வருஷத்துக்கென்று ஒரு வெண்பா இந்த பாம்பு பஞ்சாங்கத்தில் இருக்கிறது: அது
பார விகாரி தனில் பாரண நீரும் குறையும்
மாரி இல்லை வேளாண்மை மத்திபமாம்
பயம் அதிகம் உண்டாம் பழையோர்கள் சோரர் சம்பாத்ய
உடைமை விற்றுண்பர் தேர்.
இருப்பதை எல்லாம் விற்று தான் அரிசி வாங்க வேண்டும் போல இருக்கிறது. தண்ணீர் வாங்கவேண்டும். GST கட்டவேண்டும். வேளாண்மை தான் சொல்பம் என்கிறதே. மாரி எனும் மழை இல்லை என்கிறதே. இந்த பாடல் எனக்கு சோர்வைத் தருகிறது. இருந்தாலும் பஞ்சாங்கம் சில இடங்களில் மழை பலமாக பெய்ய வாய்ப்பு உண்டு என்கிறதே. கிருஷ்ணனுக்கு தான் வெளிச்சம்!
முடிவாக ஒரு விஷயம் சொல்லட்டுமா. சாத்திரங்களை பொய்யாக்க இறைவன் அருள் நமக்கு உண்டு. நாம் ஜப்பானியர் போல் உழைப்போம் .அதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். ஜாதி மத வித்யாசம் வேண்டாம். நாமெல்லாரும் ஒரே மண்ணில் பிறந்தவர்கள், வளர்ந்தவர்கள் மறைபவர்கள் என்று எண்ணம் இருந்தால் போதும். நம்மைப் பிரித்து அதன் மூலம் ஆதாயம் தேடுபவர்களை தீய சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை ஒதுக்குவோம். உழைப்பவர்களை உண்மையானவர்களை நமது பிரதிநிதி களாக ஆக்குவோம். நம்மை வைத்து சம்பாதித்து தம் குடும்ப முன்னேற்றஅடையும் கூட்டம் நமக்கு வேண்டாமே. நாம் முயன்றால் வேண்டியதை பெறலாம். முயற்சி திருவினையாக்குமே . என்றும் ''தெய்வம் துணை நமக்கு பாப்பா'' பாரதி சொன்னது போல் இறைவன் துணையிருப்பான். நமது நம்பிக்கையில் அஸ்திவாரம் அவனாகவே இருப்பான். அப்புறம் எல்லாமே நல்ல நாள் தான் நமக்கு. பொழுது போகாதபோது அப்பனையங்கார் குமாரர் அண்ணாவையங்கார் வாரிசு ஐயங்காரின் கணிப்பு எல்லாம் படிப்போம். மனதார வாழ்த்துக்கள்.
ReplyForward
|
No comments:
Post a Comment