ஐந்தாம் வேதம். J K SIVAN
பகவத் கீதை.
கர்மமும் ஞானமும்
''அர்ஜுனா, முன்பு ஒருகாலத்தில் பற்று இல்லாமல் செயல் புரிய வேண்டிய அவசியத்தை விவஸ்வானுக்கு நான் சொன்னேன். அவனிடமிருந்து சேதி மனுவுக்குசென்று, பிறகு இக்ஷ்வாகுவை அடைந்தது. பிற்பாடு வந்த பல ராஜ ரிஷிகள் இதை புரிந்து செயல்பட்டார்கள். காலம் செல்லச்செல்ல அது மெல்ல மெல்ல மறைந்துவிட்டது. இப்போது அதை மீண்டும் ஏன் உனக்கு சொல்கிறேன் என்றால் நீ எனது பக்தன் மட்டுமல்ல நண்பன் .விஷயம் புதிதல்ல, மேன்மையான தொன்மையான ரகசியம் ''
4.1- 4.3
'' கொஞ்சம் நிறுத்து கிருஷ்ணா.... என்ன சொன்னாய்?? நீ ? எந்த காலத்தி லேயோ யாருக்கோ சொன்னதா?? ‘’ இதோ பார் கிருஷ்ணா, நீ வசுதேவர் மகன், அவரையும் எனக்குதெரியும். நீ என் சமகாலத்தவன். எப்படி ஏதோ ஒரு முற்கால யுகத்தில் இருந்த விவஸ்வானுக்கு இதை போதித்தேன் என்கிறாய்? புரியவில்லை. எங்கோ இடைவெளி இருக்கிறதே கிருஷ்ணா?'' 4-4
''அர்ஜுனா நல்ல கேள்வி கேட்டாய். எனக்கும் உனக்குமே பல ஜன்மங்கள் இதுவரை முடிந்து விட்டன. ஆனால் நீ என்னென்ன ஜென்மங்கள் எடுத்துபிறந்து இறந்தவன். அவை யாவை என்பது நீ அறியமுடியாது. நான் பிறப்போ இறப்போ அற்றவன் அவ்வப்போது வெவ்வேறு உருவில் மாயையினால் மாற்றம்கொண்ட உருவில் தோன்றுபவன் எனவே எனக்கு ஒரே தொடர்ச்சியாக அவை அனைத்தும் தெரிகிறது. மேலும் எப்போதெல்லாம் தர்மம் பழுதடைந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை பாதுகாக்க நான் தோன்றுபவன். நல்லவர் வாழ தீயவர் வீழ நான் தேவையானபோது அவதரிப்பவன். என் அவதாரங்கள்பல. ஜன்மங்கள் எத்தனையோ. நீ எடுத்ததும் பல. ஆனால் நீ அவற்றை நினைவில் கொள்ள முடியாது. உன் நினைவு ஒரு அளவுக்குட்பட்டது. அந்தந்த பிறப்புசம்பந்தமாகவே மட்டும் செயல்படுவது. எனவே மக்களுக்கு நான் வேறு வேறு காலத்தில் கோலத்தில் தோன்றுவதே தெரியாது. 4. 5-7,
அர்ஜுனா, நான் யார் யார் எப்படி என்னை வழிபடுகிறார்களோ அவர்களை அந்தந்த உருவில் திருப்திப் படுத்துகிறேன். எந்த வகையில் என்னை வழிபட்டாலும் என் வழியை தான்அவர்கள் பின் பற்றியாகவேண்டும். என்னை பின்பற்றி என்னை அறிந்தவன் அடுத்த பிறப்பின்றி என்னை அடைவான். எல்லோருக்கும் இது பொதுவானது. சகல பந்தபாசம் விலகி இந்த்ரிய கட்டுப்பாடோடு என்னை சரணடைந்தவன் ஞான அக்னியில் ஸ்புடம் போடப்பட்டு பரிசுத்தமாகி தெய்வ நிலை அடைவான். நான் பக்தர்கள் நாடும் வழியில் அவர் களுக்கு அருள்பவன்.'' 4.8-11
இந்த இடத்தில் அற்புதமான நம்மாழ்வார் பாசுரம் ஒன்று நினைவில் கொள்ள வேண்டும்.
அவரவர் தமதம தறிவறி வகை வகை
அவரவர் இறையவ ரென அடி அடைவர
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் வழி வழி அடியனின் றனரே.
''பக்தர்கள் அவரவர்கள் அறிவிற்கு எட்டியபடி அந்தந்த வகையில் பகவானை தேடி அவன் திருவடி அடைகிறார்கள். பகவானும் அந்த வகையில் அவர்கள்விருப்பப் படி அவர்களை குறைவில்லாமல் அருள் பெற வைக்கிறான். அவரவர் மார்கத்தில் வழி பட்டாலும் எல்லோரும் ஸ்வதந்திரமாக அவன் அடியைப் பெற அருள்கிறான். இவ்வளவு அருமையான , இனிமையான, எளிமையான தமிழை நம்மாழ்வாரால் தான் எழுத முடியும்.
எத்தனையோ தெய்வங்களை தேவதைகளை உருவகப் படுத்தி பக்தியோடு வணங்குகிறார்கள். தர்மம் வீண் போகவில்லை. அவை என்னை நேரடியாகஆராதிக்காவிட்டாலும் கூட என்னிடமே வந்தடைகிறது. ஆகவே என் அருள் பெற்று பயன் அடைகிறார்கள்'' என்கிறான் கிருஷ்ணன்.
(ஊரிலிருந்து மனைவி எழுதிய கடுதாசு அந்த ஊர் போஸ்ட் மாஸ்டரிடம் ஜாக்ரதையாக அளிக்கப் பட்டு,இந்த ஊர் போஸ்ட்மேன் மூலமாக என்னை வந்தடைவதுபோல)
'' இதையும் கேள் அர்ஜுனா,குணங்களுக்கு தக்கவாறு தான் நான்கு பிரிவுகளாக அளித்தேன். ஏனென்றால் எல்லோரும் ஞானப் பாதையிலோ, போர் குணத்திலோ, பொருள் ஈட்டுவதில் நாட்டம் கொள்வதிலோ, சேவை செய்வதில் ஈடுபாட்டிலோ காணப் படுவதால் அவரவர்களின் செயலுக்கு தக்கவாறு கூட்டாக செயல்பட இந்தஏற்பாடு. எல்லோரும் ஒரே குணத்திலோ, ஒரே செயலிலோ எந்த காலத்திலும் இருக்கமுடியாதே. சுதந்திரமாக அவரவர் விருப்பபடி குணம் செயலின் படி வாழ்பவர்கள் தத்தம் செயலில் பலன் கருதாமல் ஈடுபட்டு மோக்ஷம் எய்த இந்த ஏற்பாடு. சிக்கலோ அருவருப்போ இதில் ஏதும் இல்லையே. குணத்தின், விருப்பத்தின் அடிப்படையில் தானேஇந்த க்ரூப். 4.12-14
‘அர்ஜுனா, திரும்பவும் சொல்கிறேன். செயலில் செயலற்ற நிலை -- நாம் செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் எனக்கு அர்ப்பணமாக செய்யப்படுகிற செயல் அவனை புத்திமானாக்குகிறது. அவனே யோகி. விருப்பு வெறுப்பு இன்றி ஒரு வேள்வியாக பலனெதிற் பாராமல் செய்பவனின் கர்ம பலன் அவனை தீண்டாது.
இந்த சரீரம் ஒருயாத்திரை போகிறது. போகிற போக்கில் அதற்குண்டான செயல்களை புரிவது கடமை மட்டுமே. பலன் நமக்கில்லை''
(ஸ்டேஷனில் டிக்கெட் வாங்கினாலும் டிக்கெட் கொடுத்தவர் நம்மை தூக்கிப் போவதில்லை. ஏதோ ஒரு ரயிலோ பஸ்ஸோ , விமானமோ கர்ம ஸ்ரத்தையாக நம்மைதூக்கிக்கொண்டு வேகமாக ஓடுகிறது. அது தான் இந்த உடலும் அதன் இந்த்ரியங்களும்.)
நமது முன்னோர்கள் இதை அறிந்தவர்கள். அவர்களை போல் நீயும் உன் செயலில் ஈடுபடு . 4.15.
அர்ஜுனா, உனக்கு செயலைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறேன். அறிந்தால், தீமை உன்னைவிட்டு விலகும். எது செயல், எது செய்யக்கூடாதது, எது செய்யாமலே இருப்பது. செயலின் நடைமுறை பலவாகும். கொஞ்சம் கஷ்டம் புரிவது. ஒரு கர்மத்தை செய்யும்போதே அதன் செயலின்மை, அதேபோல் செயலின்மையில் உள்ள செயல் இரண்டையும் அறிபவன் ஞானி. அவன் அனைத்தையும் செய்பவன்.கர்ம பலன் மீது விருப்பின்றி, மனநிறைவோடு எவரையும் சாராமல் தானாகவே ஸ்வதர்மத்தோடு கர்மம் புரிபவன் உண்மையில் கர்மாவை பண்ணாதவன். ஆசையற்றவன், புலனை அடக்கியவன், கவலையற்றவன்.உடலை பாதுகாப்பதில் மட்டும் செயல்புரிபவன் -- இவனை பாபம் அணுகாது. 4.15-21.
சித்தம் என்பது மனதை குறிக்கும். செயலற்று பெற்றதில் மனநிறைவுடன் பொறாமையற்று, வெற்றிதோல்வி, இன்ப துன்பங்களை சமமாக பாவித்து செயலில் ஈடுபட்டாலும் அந்த செயலோடு சம்பந்தமற்றவன். 4.22. (புரியும்போது புரியட்டும். அதுவரை யோசிக்கவேண்டும்)
செய்வதை ஒரு யாகம் போல, பக்தியோடு இறைவனுக்கு செயலின் பலனை அளித்து, பற்று பாசமற்று புத்தியில் ஆத்ம ஞானத்துடன் உறுதியான மனதுடன் செயல்படுபவன் அந்த செயல்களுடன் விலகி நிற்கிறான்.
யாகமாக,யஞமாக ஜலத்தை அர்ப்பணிக்கிறானே, பக்தன் அந்த ஜல பாத்திரமும் ப்ரம்மம். ஜலமும் ப்ரம்மம், அவன் மூட்டும் அக்னியும் ப்ரம்மம். அவனது செயலே ப்ரம்மம். மனதை நிலை தவறாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அவன் ப்ரம்மத்தையே அடைவதால் அவனும் ப்ரம்மம் தான்.
யே தனது மனதை நிலைக்கச் செய்யும் ஒருவன், {முடிவில்} தனது இலக்கான அந்தப் பிரம்மத்தையே அடைகிறான். அவனது செயல் முறையில் ப்ராணனை (மூச்சை) மேலிழுத்து, உள்ளே நிறுத்தி, கீழே அனுப்பி, பிராணாயாமம் செய்வதும் சேர்ந்தது தான். 4: 23-29
வேதங்கள் சொல்லும் யஞங்கள் பலப்பல. எல்லாம் செயல் படுபவை தான். இது பற்றிய ஞானம் இருந்தால் போதும். 4: 30-32.
அர்ஜுனா, நமஸ்கரித்தல், ஆத்ம விசாரம், பரோபகார சேவை, இவற்றால் ஞானம் அடையலாம். சத்தியத்தை அறியக்கூடிய ஞானிகள் உனக்கு அதை போதிப்பார்கள். இதெல்லாம் தெரிந்தால் உனக்கு மதி மயக்கம் ஏற்படாது. இந்த அண்ட பகிரண்டத்தின் ஜீவர்களை உன்னில் காண்பாய். அவற்றில் உன்னை, எல்லாவற்றையும் என்னில் காண்பாய். 4: 33-35
எத்தனையோ பாபங்களை செய்தவனும் ஞானம் எனும் படகோடு பாப சமுத்திரத்தை கடக்கமுடியும். 4:36
எப்படி பெரிய மரத்தை எரித்தால் சாம்பலாகிறதோ அதுபோல் ஞானம் செயல்களை சுட்டெரிக்கும். சாம்பலாக்கும் . 4.37
ஞானம் ஒன்றே பரிசுத்தமாக்கும். 4.38 நம்பிக்கை அவசியம். தீவிரமாக முழுமுயற்சியுடன் ஈடுபடவேண்டும். ஞானம் அப்போது தான் பெறமுடியும். இதற்கு கால அளவு கிடையாது. விரைவிலேயே மனம் அமைதிபெறும். 4.38-39 சந்தேகப்பிராணியாக உள்ளவன் அழிகின்றான். என்றும் எங்கும் துன்பம் தான் அவனுக்கு. 4.40 சுய கட்டுப்பாடுடன் மனஉறுதியுடன் செயல்படுபவன் எதாலும் கட்டுப்படாமல் சுதந்திரமாக செயல்படும் ஞானி . 4.41.
ஆகவே அர்ஜூனா , உன் மனதின் அறியாமையை விடு. எழுந்திரு ஞானம் எனும் வாளால் யோகத்தில் நிலைத்து வீறு கொண்டு ஏழு. உன் கடமையை செய் '' 4.42.
No comments:
Post a Comment