Tuesday, April 9, 2019

GEETHAGOVINDAM



கீத கோவிந்தம்    J K  SIVAN 
ஜெயதேவர் 

                                                                பாரோ கிருஷ்ணய்யா....

கீத  கோவிந்தம்  என்றாலே  கிருஷ்ணனை, கோவிந்தனை, பாடலால் வழிபடுவது என்று புரியும்.   கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் ராதை மற்றும் அவள் நண்பிகள் கோபியரோடு  விளையாடிய  நிகழ்வுகள்.  கிருஷ்ணன் வாலிபன் இல்லை. சிறுவன். அவனது பிரேமையை  காமமாக சித்தரிப்பது நமது முகத்தை கண்ணாடியில் காண்பது போலத்தான்.   கண்ணாடியில் தெரிவது  கிருஷ்ணன் முகம் அல்ல. நமது முகம்.  ஒரு பன்றி  கண்ணாடியில் பார்த்தால்  அதன் முகம் தானே தெரியும்.  அதை காமுகன் கிருஷ்ணன் என்று  யாரோ ஒரு பன்றி சொன்னாலோ, அதை நம்பும் மற்ற பன்றிகளை என்ன சொல்வது?   அவை உண்ணும் மலத்தை விட கேவலம்.

ஸ்ரீ ஜெயதேவர் அருமையாக  அஷ்டபதி என்று எட்டு பதங்களில்  வர்ணிப்பது தான் கீத  கோவிந்தம்.  கேட்பவரெல்லாம் ஆடலாம்.  ஆடுபவரெல்லாம் பாடலாம்,  என்ற த்வனியில் அதிசயமாக  எல்லோர் மனதையும் கவரும்  ராகங்களில் பாடுகிறார்கள்.  ஸமஸ்க்ரிதத்தில்  12ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காவியம் இது. சம்பவங்கள் யமுனாநதி தீரம், கரை ஓரம், கண்ணன் ராதை  சகி என்று ஒரு தோழி -- இவர்களை வைத்துக்கொண்டு  ஸ்ரீமத் பாகவதத்தில் 29 முதல் 33 வரையான ஐந்து அத்யாயங்களை  பின்னணியாக கொண்டே  வர்ணித்திருக்கிறார்  ஜெயதேவர்.  முழுக்க முழுக்க  ராதையைப் பற்றிய கிருஷ்ணன் நினைவு, கிருஷ்ணனை தேடும் ராதையின் நினைவு  மட்டுமே இதன் கரு.  ஜெயதேவர் பாட, அவர் மனைவி பத்மாவதி ஒவ்வொரு வார்த்தையையும் அபிநயம் பிடித்து ஆடினாள் .

கண்ணன் இன்னும் தனியாக பசுக்களை கன்றுகளை மேய்க்க அனுமதிக்கப்படவில்லை. அப்பா நந்தகோபனுடன் செல்கிறான். யமுனையை ஒட்டிய விசாலமான வனங்களில் வழக்கம்போல் செல்கிறார்கள். கூடவே ராதையும் வருகிறாள். ராதை கண்ணனை விட சற்று பெரியவள். பொறுப்பான பெண். சாயங்கால வேளை . அடர்ந்த லவங்க, ஜாதி பத்திரி மரங்கள் கம்மென்று மணம் காற்றில் கலந்து வருகிறது. மேலே வானம் கருத்து விட்டது. மேகக்கூட்டங்கள் குடை பிடித்தால் போல் மேலே கவிந்து கிடக்கிறது. எந்த நேரமும் மழை பொழியலாம். இருட்டு சூழ ஆரம்பித்துவிட்டது.

நந்தகோபருக்கு இன்னும் வேலை பாக்கி இருக்கிறது. பசுக்களை ஒன்று திரட்டவேண்டும். கன்றுக்குட்டிகளை கயிற்றில் கட்டி அழைத்துவரவேண்டும். கிருஷ்ணன் அங்கும் இன்றும் சுற்றி கண்களை துழாவி பார்க்கிறான். இதை கவனித்த நந்தகோபன் ஒருகணம் யோசிக்கிறார். அருகே இருந்த ராதையைப் பார்த்தவுடன் அவளை அழைக்கிறார்;

ஹே ராதே, இங்கே வா. மேலே பார்த்தாயா எவ்வளவு கருமேகங்கள். இன்று அதிகமாகவே மழை கொட்டப்போகிறது. காற்று பலமாக வீசு கிறது. ஜாதி பத்திரி மரங்கள் பேயாட்டம் ஆட தொடங்கிவிட்டன.

ஆகாயத்தை மறைத்திருக்கிறதே இந்த கருநிற மேகங்கள். வெளிச்சம் குறைந்து போதாதென்று வெளிச்சத்தையும் தடுத்து கும்மிருட்டாக மாற்றும் அடர்ந்த தமலா மரங்களின் காடு. இருள் பயமுறுத்துகிறதே. இந்தப்பயல் குட்டி கிருஷ்ணன் கண்களில் பயம் தெரிகிறது. நடுங்குகிறான் பார்த்தாயா ஒ ராதா, சீக்கிரம் சீக்கிரம், ஓடு, ஜாக்கிரதையாக வீட்டுக்கு கூட்டிச்செல். ரெண்டு பேரும் உடனே நேராக வீட்டுக்கு கிளம்புங்கள். இந்த இருளைப்பார்த்து பயப்படப்போகிறான் '' என்று பதறுகிறார் கிருஷ்ணனின் வளர்ப்பு தந்தை நந்தகோபன்.

''ஆஹா அப்படியே என்று கிருஷ்ணனை அணைத்தவாறு ராதா கிளம்பிவிட்டாள். நந்தகோபர் காட்டுக்குள்ளே வேறு பக்கம் சென்று விட்டார்.

ராதை நேராக வீட்டுக்கு கிருஷ்ணனோடு போனாள் ? அவன் தான் போக விடுபவனா? யமுனைக்கரையை ஒட்டிய வனத்தின் வழியாக ஒவ்வொரு மரத்தின் பின்னே ஓடி ஒளிந்து விளையாடிக்கொண்டு, செடி கொடிகளை அணைத்துக்கொண்டு அங்கே மரத்தில் ஊஞ்சல் கட்டி வைத்திருந்தார்களே அதில் ஆடிக்கொண்டு தனியாக பாடிக்கொண்டே நேரத்தை சந்தோஷமாக அல்லவோ கழிக்கிறார்கள்''

मेघैः मेदुरम् अंबरम् वन भुवः श्यामाः तमाल द्रुमैः नक्तम्
भीरुः अयम् त्वम् एव तत् इमम् राधे गृहम् प्रापय इत्थम् नन्द निदेशितः
चलितयोः प्रति अध्व कुंज द्रुमम् राधा माधवयोः जयन्ति यमुना कूले रहः केलयः 1.1

மேகை மேதுரம் அம்பரம் வனபுவ ஷ்யாமாஸ் தமால த்ருமை: நக்தம்
பீரோ: அயம் தவம் ஏவ தத் இமம் ராதேகிருஹம் ப்ராபய இத்யம் நந்த நிதேஷித:
சலிதயோ: பிரதி அத்வ குஜ திருமம் ராதா மாதவயோ : ஜயந்தி யமுனா குல ரஹ கேலய:

ஜெயதேவரின் மாமா ஒருதடவை ''ஜெயதேவா, ஏன் இப்படி பொழுதை வெட்டியாக கழித்து வீணடிக்கிறாய். ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடவேண்டாமா நீ ? என்று கேட்டபோது ஜெயதேவர் என்ன சொன்னார்.

' மாமா, நான் ஒரு கவிஞன். அற்புதமாக கவிகள் புனைய தான் யோசிக்கிறேன். கவிகள் புனைந்தும் வைத்திருக்கிறேன்''

''ஆமாம் பெரிய கவிஞன் நீ. அப்படி என்ன மற்றவர்களை விட உயர்ந்தவன் சொல்லேன் ?''

''மாமா, என் கவிகள் புதுமாதிரியானவை. என் தெய்வத்தை நான் ஒரு புதிய கோணத்தில் வைத்து ரசிப்பவன். மனிதனாகவும் இறைவனாகவும் சேர்த்து உருவமளித்து சம்பவங்கள் உண்டாக்கி வைத்திருக்கிறேன்.

''யார் அந்த உன் கடவுள். என்ன புது பாணியில் அவனைப் பாடி இருக்கிறாய் சொல் ?''

''கீத கோவிந்தம் -- அதன் பெயர். அவன் கிருஷ்ணன், கோவிந்தன், அவன் பால்ய லீலைகள் என் கவியில் முக்யத்வம் வாய்ந்தவை. அவனது பிரேமை தான் எனது லக்ஷியம். அவன் ராதையோடு சேர்ந்து வாழ்ந்த நேரம் தான் என் பாடல்கள்''

மாமாவுக்கு அசாத்திய கோபம். இதெல்லாம் ஒரு கடவுள் பற்றிய பாட்டா? சீறுகிறார் . மாமாவைப்போலவே நிறைய பேர் சீறுகிறவர்கள் கிருஷ்ணனை மனிதனாக மட்டுமே பார்ப்பவர்கள். அவன் உருவத்தில் மறைந்து கண்ணுக்கு புலப்படாத தெய்வீகத்தை, அதன் ப்ரேமையை உணர முடியாதவர்கள்.

மேலே சொன்னது தான் முதல் பாடல். எல்லோரும் பிரார்த்தனை, கடவுள் வாழ்த்து பாடி ஆரம்பிப்பார்கள்,
ஆனால் ஜெயதேவர் தான் வித்தியாசமானவர் ஆயிற்றே. கண்ணனின் சந்தோஷம், உலகத்தின் சந்தோஷம், அவன் விளையாட்டு பிள்ளை, அலகிலா விளையாட்டுடையார் யார் அன்னவர்க்கே அல்லவோ சரண் நாம்.
கண்ணனை ஜாக்கிரதையாக ராதையிடம் ஒப்படைக்கிறார் நந்தகோபன். நாம் ராதையை பிடித்துக் கொண்டால் கண்ணனை பிடித்துவிடலாம் என்கிறாரோ ஜெயதேவர்.
 கிருஷ்ணன் வேறு ராதை வேறா? பிரிக்கமுடியாதவர்கள் இல்லையா. ராதாகிருஷ்ணனில் ''ரா''வை பிரித்துவிட்டால் ''ஆ''தா கிருஷ்ணன் .ஆம் பாதி க்ரிஷ்ணனைத்தான் காணமுடியும் இல்லையா?. 

எல்லா கவிஞர்களும், புலவர்களும் கடவுள் வாழ்த்து பாடிவிட்டு தமது செய்யுளை ஆரம்பிப்பார்கள். ஜெயதேவர் முதலில் ராதையும் கிருஷ்ணனும்  பிருந்தாவனத்தில் ''வீட்டுக்குப் போ '' என்று நந்தகோபனால் அனுப்பப்பட்டு வீடு திரும்பாமல்  யமுனாநதி தீரத்தில்  மரச்சோலையில் விளையாடுகிறார்கள் என்று ஆரம்பித்துவிட்டு பிறகு   புதுவிதமாக ஸ்ரீமந்   நாராயணனின் தசாவதாரங்களை போற்றி புகழ்கிறார். அது தான் அவரது  கீத கோவிந்தத்தில்  கடவுள் வாழ்த்து!

वाग्देवता चरितचित्रितचित्तसद्मा
पद्मावतीचरणचारणचक्रवर्ती।
श्रीवासुदेवरतिकेलिकथा समेतं
एतं करोति जयदेवकविः प्रबन्धम्॥

ஜெயதேவரின் நாக்கில்  சரஸ்வதி வாசம் செய்தாளோ?  ராதை  கிருஷ்ணன் ஆகியோரின் பரம பக்தன் அவர்.

प्रलयपयोधिजले  धृतवानसि वेदम्
विहितवहित्रचरित्रमखेदं।
केशव! धृत
मीनशरीर जय  जगदीश हरे ॥१॥
கேசவா,  சர்வலோக நாயகனே,  உன் அவதாரங்களை எப்படி ஆரம்பித்தாய் நினைவிருக்கிறதா?  எங்கும் ஜல மயம் .  பிரளயம். ஒளியற்ற இருள்மயம்.   நிசப்தம்.  உயிர்கள் ஒன்றும் தென்படவில்லை.  ஒரு  பெரிய  மீனாக நீ வந்தாய்,  அத்தனை வேதங்களையும்  அழியாமல் நீரில் மூழ்கி கொண்டுவந்தாய். காப்பாற்றினவன்.வேதமூர்த்தி. உனக்கு ஜெயமுண்டாகட்டும். 

क्षितिरतिविपुलतरे तव तिष्ठति पृष्ठे
धरणिधरणकिणचक्रगरिष्ठे
केशव! धृतकच्छपरूप
जय  जगदीश हरे ॥२॥
அப்புறம்  என்ன செய்தாய் சொல்கிறேன் கேள். கேசவா,  லோகரக்ஷகா, அடுத்து ஒரு பெரிய ஆமை வடிவானாய். உனது மா பெரும் முதுகு ஓடு  தான்  கான்க்ரீட் போட்ட அஸ்திவாரம். அதன் மேல் தேவர்கள் மந்திரமலையை ஸ்தாபிதம் செய்கிறார்கள். அது தான் மத்து.  வாசுகியை கயிறாக்கி வடவரையை  மத்தாக்கி.....பாற்கடலை  தேவர்களும் ராக்ஷஸர்களை கடையப்போகிறார்கள்.   அடேயப்பா உன் பங்கு தான் .எவ்வளவு முக்கியம்?   ஜெயவிஜயீபவ . ஹரி  உன்னை வணங்குகிறேன்.

वसति दशनशिखरे धरणी तव लग्ना
शशिनि कलङ्ककलेव निमग्ना
केशव! धृत
सूकररूप जय  जगदीश हरे ॥३॥

கேசவா, நீ எடுத்த இன்னொரு  அவதாரம் மிகப்பெரிய   வராகமாக.  காட்டுப் பன்றி உருவில். உன் முகத்தில் இரு  வலுவானகோரைப்பற்கள். அலாக்காக, அப்படியே நிமிஷத்தில்  இந்த பூமியையே உன்னிரு கோரைப்பார்களால்  தூக்கி எடுத்து பூமியை கடலடியிலிருந்து மீட்டவன் நீ அல்லவா?  நீ பூமியை உன் கோரைப் பற்களால்  தூக்கியதை நினைக்கும்போது  வெள்ளி மய  முழு நிலவில்  சில கருந் திட்டுகள்  தெரிவது போல் தோன்றுகிறது. ஜெயவிஜயீபவ''   என்கிறார் ஜெயதேவர்.

तव करकमलवरे नखमद्भुतशृङ्गं
दलित हिरण्यकशिपु तनुभृङ्गम्।
केशव! धृत
नरहरिरूप जय  जगदीश हरे ॥४॥
ஓ  கேசவா,  அப்பப்பா  நீ  பாதி நரனாகவும்  பாதி சிம்மமாகவும் எடுத்த அவதாரம் ஆச்சர்யமானது.  சர்வ லோகநாயகா,  எவ்வளவு பொருத்தமாக  ஒரு  உருவத்தை எடுத்தாய். எப்படி  ஹிரண்ய கசிபுவின்  வரத்தை மீறாமல் அதே நேரம்  அவன் வரத்தால் மறுக்கப்படாத ஒரு  உருவாக  நீ இப்படி ஒரு அவதாரம் எடுத்து அவனை உன் கூறிய  நகங்களால் கிழித்து கொன்றாய்.  உன் மடியில் அவனை பார்க்கும்போது ஒரு மலர்ந்த ரோஜாமலரின் மேல் ஒரு கருவண்டு போல் இருந்தது.   ஜெயவிஜயீபவ .

छलयसि विक्रमणे बलिमद्भुत वामन
पदनखनीरजनितजनपावन
केशव धृत वामनरूप जय  जगदीश हरे ॥५॥
ஒரு மனிதன் உயரமாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. குள்ளமாக இருந்தாலும் அவனால் சாதிக்க முடியும் என்பதை  மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்று  ஒரு வாமனனாக அவதரித்து நிரூபித்தாய். கேசவா,  அகில லோக நாயகா, ஜெயவிஜயீபவ . குள்ளமாக இருந்தாலும் வெள்ளமாக மனதை அபகரித்து விட்டாயே  என்கிறார் ஜெயதேவர். 

क्षत्रियरुधिरमये जगदपगतपापं
स्नपयसि पयसि शमित भवतापम्
केशव! धृत
भृगुपतिरूप जय  जगदीश हरे ॥६॥
க்ஷத்ரியர்கள் பலத்தினால், அதிகார துஷ்ப்ரயோகம் செய்வதை கண்டிக்க, அவர்களது செருக்கை அடக்க, நீ பரசுராமனாக அவதரித்தாய்.  ரிஷி புத்திரனாக. கோடாலியை  ஆயுதமாக கொண்டு... என்ன விசித்ரம்  இது.  லோகநாயகா, உலகில் கொடுமை புரிந்து இம்சித்த க்ஷத்ரியர்களை ஒடுக்க   பிருகுவம்ச  பரசுராமனாக அவதரித்து  நீ   இந்த பூலோகத்தையே  க்ஷத்ரிய ரத்த வெள்ளத்தால் குளிப்பாட்டியவன் அல்லவா.  கேசவா,  அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா,  ஜெயவிஜயீ பவ .

वितरसि दिक्षु रणे दिक्पति कमनीयं
दशमुखमौलिबलिं रमणीयम्
केशव! धृत
रघुपतिरूप जय  जगदीश हरे ॥७॥

முற்றிலும் மாறாக, அமைதி தவழும் சாந்த ஸ்வரூபியாக, தசரத ராமனாக ஒரு அவதாரம் எடுத்தாய்.  கொடிய  தசகண்ட  ராவணனை தனிமனிதனாக சென்று வென்று கொன்றாய். தர்மத்தை , பித்ரு வாக்ய பரிபாலனத்தை  கடைப்பிடித்து  உதாரண புருஷோத்தமனாக  அவதரித்தாய்.  கேசவா  சர்வ லோக நாயகா. ஜெயவிஜயீபவ . 


वहसि वपुषि विशदे वसनं जलदाभं
हलहतिभीतिमिलितयमुनाभम्
केशव! धृत
हलधररूप जय  जगदीश हरे ॥८॥

உன்னில் ஒரு பங்காக, பலராமனை தோற்றுவித்தாய்.  நிறத்தில் அவனை வெண்ணிறமாகவும் உன்னை கருநீலவண்ணனாகவும் காட்டினாய். கேசவா, நீயும் அவனும் சகோதரனாக  ஒரே காலத்தில் இருந்ததாக காட்டினாய்.  கலப்பை ஆயுதபாணி அவன்.  நீ வெறும் புல்லாங்குழல் ஆசாமி.  சர்வலோக நாயகா, கேசவா, ஜெயவிஜயீபவ .''

निन्दसि यज्ञविधेरहह श्रुतिजातं
सदय हृदय दर्शितपशुघातम्
केशव! धृत
बुद्धशरीर जय  जगदीश हरे ॥९॥
கேசவா,  என்னை பொறுத்தவரை  நீ தான்  புத்தனாக அவதரித்தவன் . சர்வ  லோக நாயகா,   இல்லாவிட்டால் இவ்வளவு  கருணை யார் மனதிலாவது நிறைந்து காணுமா?  அஹிம்சா எண்ணம் உறுதியாக மனதில் தோன்றுமா?  கேசவா  ஜெயவிஜயீபவ 

म्लेच्छनिवहनिधने कलयसि करवालं
धूमकेतुमिव किमपि करालं
केशव! धृत
कल्किशरीर जय  जगदीश हरे ॥१०॥

எல்லோரும்  அடுத்து உன்னை எதிர்பார்ப்பது எப்படி தெரியுமா கேசவா, இந்த கலியுகத்தில் நீ ஒருநாள்  கல்கி எனும் அவதாரமாகத்தான் வரப்போகிறாய்.   அமைதியான மேகமற்ற கரு வானத்தில்  நெருப்பு துண்டம் போல பளிச்சென்று படு வேகமாக தோன்றும்   எரி நக்ஷத்ரம் போல்,  நீ திடீரென்று வருவாய் கேசவா. உன் கரத்தில் சக்திவாய்ந்த கூர்மையான வாள்  இருக்கும். அதற்கு தீனி வேதங்களை பழிக்கு, அவமதிக்கும்  கொடியவர்கள் ரத்தம். கோடானுகோடி அக்ரமக்கார  மிலேச்சர்கள் உன் வாளுக்கு இவ்வாறு பலியாகலாம். ஜெயவிஜயீபவ 

श्रीजयदेवकवेरिदमुदितमुदारं
शृ सुखदं शुभदं भवसारम्
केशव! धृत
दशविधरूप जय  जगदीश हरे ॥११॥

என்னப்பனே , கேசவா,  இவ்விதமாகத்தானே, நீ  அற்புதமாக  பத்து  விதமான அவதாரங்களை எடுத்தவன். சர்வமண்டல நாயகா, நான் தொடுத்த இந்த  பாமணிகளால் கோர்த்த  மாலையை சூடிக்கொள்கிறாயா?  இந்த ஜெயதேவன் மனம் நிறைந்து அளிக்கமுடிந்தது இதுதான்.  சந்தோஷத்தையும், நிம்மதியையும் உலகுக்கு அருள்வாய் ஜெயவிஜயீபவ .
 ஒன்று கவனித்தீர்களா,  ஜெயதேவர்  கிருஷ்ணாவதாரம் என்று ஒன்றை குறிப்பிடவில்லையே!!  ஆமாம் அவருக்கு தான் தெரியுமே. எல்லாம்  எதுவும், எப்போதும்  கிருஷ்ணனாகவே இருக்கும்போது  ''கிருஷ்ணனாக'' ஒரு அவதாரம் தேவையா??

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...