புலவர்கள். சித்தர்கள், மஹான்கள். JKSIVAN
ஆண்டவன் பிச்சை.
உன்னை .நினைக்கையிலே....
சதாசிவ ப்ரம்மேந்த்ர ப்ரம்ம ஞானியை தெரியாதவர்கள் இப்போது அவர் பெயரை மட்டும் தெரிந்து கொள்ளலாம். விவரம் தானாகவே சேகரிக்கலாம் அல்லது ஒருநாள் நான் மீண்டும் அவரைப் பற்றி சொல்லும் வரை என்னை ஜபிக்கலாம்/சபிக்கலாம் .
அவர் ஒரு அவதூதர். அவர் வாழ்ந்த காலம் அது. அவருடைய சிஷ்யர் ஒரு யோகி, பின்னவாசல் ராமகிருஷ்ணன் என்பவர். தபஸ்வி. அம்பாள் பக்தர். மணமாகியும் மனைவியை நெருங்கவிடவில்லை. அவள் அவர் சிஷ்யையாக அருகே இருக்க துடித்தும் அவர் நெருங்க விடவில்லை. அவள் இறக்கும் முன்பு கணவனை ''நீயும் ஒரு பெண்ணாகி என்போல் தவிக்க வேண்டும்'' என்று சாபம் கொடுத்தாள். சன்யாசம் பெற வழியில்லாமல் தவித்த ராமகிருஷ்ணன் தானே சந்நியாசியாக வாழ்ந்து சமாதி அடைந்தார். சமாதி யடையும் முன்பு அவர் குரு சதாசிவ பிரம்மேந்திரர் அவர் முன் தோன்றுகிறார்.
''உன் மனைவியின் சாபம் நிறைவேற ஒன்று நீ பெண்ணாக பிறக்கவேண்டும் இல்லாவிட்டால் ஒரு பெண்ணின் உடலில் உன் ஆத்மா தங்கி சாபம் நிறை வேறவேண்டும். இரண்டாவதுக்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 25 வருஷங்களாக முருகன் குடிகொண்ட மனதுள்ள ஒரு பெண்ணின் உடலில் உன் ஆத்மா புகுந்து செயல்படட்டும். இது போன்ற உன்னத தேகம் பக்தியும் தூய்மையும் கொண்ட பெண் தேகம் உனக்கு வேறு கிடைக்காது. உடனே செயல்படு. உன் மனைவியின் சாப நிவர்த்தி பெறு '' என்கிறார்.
மைலாப்பூரில் மாடியிலிருந்து தலை சுற்றி விழுந்த மரகதத்தின் உடலில் இதயத் துடிப்பு நிற்கும் நிலையில் சந்நியாசி ராமகிருஷ்ணனின் ஆத்மா அதில் குடியேறியது. இது உடனே நடந்ததா அல்லது பல வருஷங்கள் கழிந்ததுமா என்ற கேள்வி நமக்கு எதற்கு? இது ஆண்டவன் பிச்சை அம்மாளே சொன்ன விஷயம். இதில் கால நேரம் எதற்கு?
பிள்ளை குட்டிகள் கண்களில் சோகத்தோடு சுற்றி சூழ்ந்திருக்க மரகதம்மா கண் திறந்தாள். யாரையும் அவளால் அடையாளம் காண முடியவில்லை. மலங்க மலங்க எல்லோரையும் பார்த்தாள். குழந்தைகளோ கணவனோ, உறவோ தெரியவில்லையா, புரியவில்லை. சந்நியாசி ராமகிருஷ்ணனுக்கு எப்படி அவர்களை தெரியும்? ஆறுமாதம் படுத்த படுக்கை. மெதுவாக எழுகிறாள். கஞ்சி பருகினாள் .
உள்ளே ஒரு குரல் ஞாபகப்படுத்தியது. நேரம் வந்து விட்டது. இனி நீ வேண்டியதை, விரும்பியதை அடைவாய். ஊர் ஊராகப் போ. க்ஷேத்ரங்களை தரிசி. மரகதத்தின் அற்புதமான தேகம் ராமக்ரிஷ்ணனுடைய வாடகை வீடாயிற்று. இனி மரகதம் பெயர் மட்டும் கொண்டவள். வெளிப்பாடு அவள். உள்ளே ஒரு யோகி. மரணமடையாத மரகதம் ஆவலுடன் இணைந்த யோகியின் ஆத்மா. ரெண்டு ஜீவன்கள் அவள் தேகத்தில்.
பல வருஷங்களுக்கு பிறகு மரகதத்தின் வீட்டில் அவள் எழுதி, அவள் மாமியார் காவேரியம்மாள் அவற்றை ஒளித்து வைத்த பாடல்கள் காவேரியம்மாவின் பெட்டியில் ஒரு நாள் கண்டுபிடிக்கப்பட்டன. செல்லரித்த அவளது ரூபாய் நோட்டுகள், தஸ்தாவேஜ்கள், அவற்றிற்கு இடையே துளியும் பாதிக்கப்படாத மரகதத்தின் முருகன் பாடல்கள்!! என்னே முருகன் அருள்!!
வீட்டிலிருந்தவர்கள் அந்த முருகன் பாடல்களை அப்போது வாழ்ந்திருந்த சிறந்த முருக பக்த மஹான் திருப்புகழ் மணி அவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். மரகதம் அம்மாளின் முருகன் பாடல்கள் அச்சேறின.
புத்தகங்கள் அச்சேறிய மறுநாள் மரகதத்தின் முன்பு முருகன் புன்சிரிப்புடன் தோன்றி, முகவாயை பிடித்து மேல் நோக்கி திருப்பி கண்களோடு கண்களாக அவளை பார்த்து ''என்னைத் தெரிகிறதா?'' என்கிறான். ''சரவணபவா, ஷண்முகா, என்று கண்ணீர் மல்க அவன் காலடியில் விழுந்து வணங்குகிறாள் மரகதம்.
''நேற்று ஏன் என்னைப் பற்றி நீ எழுதிய பாடல்களை கொடுத்துவிட்டாய். என்னையோ என் மேல் பாடல்களோ பிடிக்கவில்லையா உனக்கு? இனி நான் உனக்கு தேவையில்லையா? பூமாலை, நகை ஆபரணங்களை விட பாமாலைகளை விரும்புபவன் நான். முன்பு நீ செய்தது போல் இனிமேல் என் மேல் பாடு'' என்றான் முருகன்.
''என் தெய்வமே!! என்று கதறுகிறாள் மரகதம். ''எல்லாமே மறந்து போச்சு. நான் யார்? என்னை பாடவைத்து நீ தானே, இனி உன்னை பாடக்கூடாது என்று எனக்கு கட்டளையிட்டு, நான் உன்னை பாடாமல் செய்ததும் உன் செயலே அல்லவா? உன்னை பாடிக்கொண்டே இருந்த குயில் இந்த கூட்டை விட்டு எப்போது பறந்து போனது? இந்தக்கூட்டில் வசிக்கும் பறவை யாரென்றும் உனக்கு தெரியாதா? முருகா, விளையாட இது நேரமா? இனி நான் உன்னை பாட வழி ஏது?'' என்றாள் மரகதம்.
''அதென்ன அப்படி சொல்லி விட்டாய். என்னை பாடமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்த ஆத்மா நீ இல்லை இப்போது? தேகம் மட்டும் தான் அப்படியே இருக்கிறது. ஆகவே நீ தாராளமாக பாடு. உனக்கு நான் தானே அந்த சக்தியை தந்தவன். பாட்டும் நானே பாவமும் நானே. உன்னை பேச, பாட, எழுத வைத்ததும் நானே. உனக்கு நீ யார் என்ற மயக்கம் இன்னும் தெளியவில்லை!. கலகலவென்று சிரித்த குமரன் மேலும் பேசினான்: ‘இது நீ கேட்ட முதல் தரிசனம். இந்த நாடகத்தில் இன்னும் பல காட்சிகளில் நான் வருவேன்.துன்பமும் இன்பமும் மாறி மாறிவரும். பேசாமல் எல்லாவற்றிற்கும் சாட்சியாக அமைதியாக இரு. என்னை நினை. எழுது.'' பளிச்சென்ற வெளிச்சத்தோடு மின்னல் போல எப்படி வந்தானோ அப்படியே முருகன் மறைந்தான்.
மரகதத்தின் முருகன் பாடல்கள் வெள்ளமாக வெளி வந்தன.
சிறந்த பதிவு வாழ்த்துக்கள்
ReplyDelete