சித்தர்கள், மஹான்கள் J K SIVAN .
ஆண்டவன் பிச்சை
''அர்ச்சனைக்கு பூ இருக்கிறதா?
''ஆண்டவன் பிச்சை'' யாகிவிட்ட மரகதத்தின் முருகன் பாடல்கள் மாமியார் காவேரியம் மாளால் ஒளித்து வைக்கப்பட்டு பல வருஷங்கள் கழித்து ஒரு இரும்பு பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டு அவை துளியும் செல்லரிக்கப்படாமல் மீட்கப்பட்டு சிறந்த முருகபக்தர் ஸ்ரீமான் திருப்புகழ் மணி அவர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டது அல்லவா?
பாலா என்ற ஒருவர் அன்று சாயந்திரமே மரகதத்தை வந்து சந்தித்து '' அம்மா, உங்கள் பாடல்கள் தெய்வீகமணம் வீசுகிறது. அற்புதமாக இருக்கிறது. உடனே அச்சில் ஏற வேண்டும் என்று திருப்புகழ் மணி ஐயர் முடிவெடுத்துவிட்டார்'' என்று சொன்னதோடு, திருப்புகழ் மணி குழுவினர் திருத்தணியில் 31.12.1948 அன்று நடத்திய படி உத்சவ பிரசாத விபூதி பாக்கெட்டையும் கொடுத்தார். அதில் ஒரு காகிதத்தில் ஒருபக்கம் அருணகிரிநாதர். இன்னொரு பக்கம் முருகன் படங்கள் இருந்தன . நமக்கு ரமணரை தெரிவதற்கு முன் அண்ணாமலை என்றால் அருணகிரி நாதர் ஞாபகம் தான் எல்லோருக் கும் வரும். இதில் ஒரு அதிசயம் என்ன தெரியுமா? அந்த விபூதி பாக்கெட்டுடன் வந்த காகிதத்தில் ஒரு பக்கம் முருகன் படம் இருந்ததே அந்த உருவத்தில், அதே ஆபரணம், உடையோடு தான், மரகதத்தை முருகன் அன்று காலை சந்தித்து தரிசனம் தந்து ''என்னை பாடமாட்டாயா, இனி பாடு '' என்றான். இதை அதிசயம் என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்வது?
27.3.1950 அன்று மரகதம் உறவுகளோடு திருவண்ணாமலை ரமண மஹர்ஷி ஆஸ்ரம தரிசனத்துக்கு சென்றாள் . இரவு பத்து மணி அப்போது. அருணாச்சலேஸ்வரர் ஆலயம் வெளிக்கதவு கதவு மூடியாகி விட்டது இருந்தும் எப்படியோ பாதிபேர் மரகதத்தோடு உள்ளே சென்றுவிட்டார்கள். வெளியே உள்ளவர்கள் காவலாளியிடம் க்ராதி கம்பிவழியாக விளக்கை அணைக்கும் முன்பு சற்று பெருமானை தரிசிக்கமுடியுமா என்று வேண்டினார்கள்.
உள்ளே சென்றவர்கள் அருணாச்சலேஸ் வரரை தரிசித்தார்கள். அம்பாள் சந்நிதி அடையும்போது ஒரு அழகிய இளம் சிறுவன் அர்ச்சகராக, அம்பாள் சந்நிதியின் படியில் அமர்ந்து இனிமையான குரலில் பாடுவதை கண்டார்கள். அவன் அவர்களை பார்த்து
'அம்பாளுக்கு அர்ச்சனை பண்ண பூ பழம் இருக்கிறதா?'என்று கேட்டான்.
''இல்லையே வாங்க நேரம் கிடைக்க வில்லையே '' என்று வருந்தி னார்கள்.
''பரவாயில்லே, உள்ளே தட்டில் புது புஷ்பம் பழம் எல்லாம் கொஞ்சம் இருக்கிறது. அர்ச்சனை பண்ணுகிறேன்''
என்று எழுந்தான். சந்நிதி கதவை திறந்தான். தீபமேற்றி பூஜை அர்ச்சனை செய்து பிரசாதம் அளித்தான். அவர்களிடம் தட்டில் போட காசு கூட இல்லை. மரகதத்திடம் ஒரு பழைய செப்புக்காசு, ஓட்டை காலணா நாணயம், பையில் இருந்தது. அதை அவனிடம் நீட்டி னாள். சிறுவன் அதை தனது சுண்டு விரலில் மோதிரம் போல் அணிந்துகொண்டான்.
''இது போதும், நாளைக்கு முழு தக்ஷிணை வாங்கிக்கிறேன்'' என்றான்.
''உன் பேர் என்னப்பா?'' - மரகதம்.
''தண்டபாணி''
அம்பாள் தரிசனம் முடிந்து வெளியே திரும்பியபோது, விளக்குகள் அணைந்தது.
மரகத்தைத்தவிர மற்றவர்கள் வெளியே வேகமாக வந்துவிட்டார்கள். அந்த பையன்
மரகதத்தின் கையைப் பற்றி எங்கோ ஒரு சந்நிதிக்கு அழைத்து சென்றான். அது ஒரு சிறிய முருகன் சந்நிதி. அங்கு தான் அருணகிரி நாதருக்கு கம்பத்து இளையனார் காட்சி தந்த இடம்.
''நான் இங்கே தான் அம்மா எப்போதும் இருப்பேன்'' என்றான் தண்டபாணி. நிறைய விஷயங்கள் அவளுக்கு சொன்னான்.
பிறகு மற்றவர்களிடம் அவளை வெளியே அழைத்து சென்று கொண்டுவிட்டான்.
''நீங்க ஜெயிச்சுட்டேள் . உங்களை இருட்டி லிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட்டேன்.'' என்றான் சிரித்துக்கொண்டே. அடுத்த கணம் மறைந்து போனான்.
இரவு சத்திரம் ஒன்றில் தங்கிவிட்டு மறுநாள் காலை தரிசனத்துக்கு மரகதமும் மற்றவர்களும் சென்றபோது
''இங்கே தண்டபாணி என்று ஒரு சிறுவன் இருக்கிறாரே அவர் எங்கே? அவரைப் பார்க்கவேண்டும்'' என்றாள் .
''தண்டபாணியா?? உங்களுக்கு சர்ச்சை பண்ணி வைத்த்தாரா? ராத்திரி பத்து மணிக்கா?'' என்று கேட்ட அர்ச்சகர்கள் சிரித்தார்கள்.
''தண்டபாணி என்ற பையன் எங்களில் யாரும் இல்லையே. எப்படி நீங்கள் உள்ளே சென்று பூஜை, அர்ச்சனை எல்லாம் நேற்று ராத்திரி நடந்திருக்கும்?'' நாங்கள் தான் எல்லா சந்நிதி கதவுகளையும் பூட்டிவிட்டு சென்றுவிட்டோமே'' என்கிறார்கள்.
''இல்லையே , நாங்கள் உள்ளே வந்து அண்ணாமலையார், தரிசனம் பண்ணிவிட்டு அம்பாள் சந்நிதிக்கு வந்தபோது தண்டபாணி படியில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்தாரே.. கதவை திறந்து புஷ்பம் பழங்கள் எல்லாம் இருக்கிறது அர்ச்சனை பூஜை பண்ணுகிறேன் என்று தரிசனம் பண்ண வைத்தாரே. என்னை முருகன் சந்நிதிக்கு அழைத்து சென்று தரிசனம் செய்வித்தாரே ....'' என்றாள் மரகதம்.
அவள் குரல் அர்ச்சகர்களுக்கு கேட்கவில்லை. சிரித்துக்கொண்டே போய்விட்டார்கள்.
''பாவம் ஏதோ மரை லூஸ் போல இருக்கிறது'' .
தண்டபாணி தான் அவர்கள் அன்றாடம் அர்ச்சனை செய்தும் காணாத கம்பத்திளையனார் என்று அந்த சாதாரணர்களுக்கு எப்படி தெரியும்?. அவன் அருணகிரிக்கு அதே ஆலயத்தில் '' முத்தைத்தரு'' என்று முதல் வார்த்தை எடுத்துக் கொடுத்து திருப்புகழை பாடவைத்தவன். மரகதத்தை அவ்வாறே பாடவைத்து ''ஆண்டவன் பிச்சை'' யாக்கினவன் என்று அவர்கள் எப்படி அறிவார்கள்?
No comments:
Post a Comment