6. சயன நரசிம்மர்
நரசிம்மன் எங்கும் இருப்பவர். உலகெங்கும் வியாபித்தவர். ஆந்திராவில் 3-4ம் நூற்றாண்டில் ஒரு சில சிற்பங்கள் சிங்க முகம் நான்கு கைகளுடன் காட்டுகின்றன. அமர்ந்த கோலத்தில் , ஒருகால் தொங்க விட்டுக்கொண்டு, இரு காலும் மடங்கி, குத்துக்கால் இட்டு உட்கார்ந்த நிலையில், நின்ற கோலத்தில் எல்லாம் நரசிம்மனை தரிசித்திருக்கிறோம். ஆனால் படுத்துக்கொண்டு இருக்கும் நரசிம்மனை பார்த்திருக்கிறீர்களா? . நான் பார்த்தேன். திருவதிகையில் ஒரு ஆலயத்தில் சயன நரசிம்மர். தெற்கு நோக்கி ஜம்மென்று படுத்துக்கொண்டிருக்கிறார். அசப்பில் பெருமாள் மாதிரி. முகம் தான் அவரைக் காட்டிக் கொடுக்கும். அவரை எங்கே பார்ப்பது? சொல்கிறேன்.
நரசிங்க புராணத்தில் நரசிம்மன் திருவக்கரையில் இருந்த வக்ராசுரன் என்பவனிடம் மோதி அவனை கொன்று விட்டு ''உஸ் அப்பாடா'' என்று களைப்பாற திருவதிகைக்கு வந்து படுத்த கோலம். போக சயனம். தாயார் காலருகே வழக்கம்போல். திருவதிகையில் சர நாராயண பெருமாள் கோவிலில் அவரை காணலாம். தாயார் ஹேமாம்புஜவல்லி. உலகிலேயே படுத்திருக்கும் நரசிம்மர் இவர் ஒருவர் தான். தி ருவதிகை எங்கிருக்கிறது ? கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே.
700 ஆண்டுகளுக்கு முன்பு வேதாந்த தேசிகர் திருவந்திபுரம் செல்லும்போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டி ருக்கிறார். சிவனைப்போலவே இந்த சயன நரசிம்மருக்கும் ஒவ்வொரு பிரதோஷத்தின் போது சிறப்பு பூஜை. மீதி வைஷ்ணவ கோவில்களில் கை கூப்பி நிற்கும் கருடாழ்வார் இந்த கோவிலில் கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்குள்ள கருடாழ்வாருக்கு பெருமாள் திரிபுர சம்ஹாரத்தின் போது சங்கு, சக்கரங்களை வழங்கியதாக புராணம் கூறுகிறது.
1,300 வருடங்களுக்கு முன்பு ஓம் என்ற வடிவில் திருவதிகை கிராமம் இருந்ததாம். சரநாராயண பெருமாள் மார்க்கண்டேய மகரிஷி மகள் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். திரிபுர சம்ஹாரத்தின் போது சிவபெருமானின் போருக்கு பெருமாள் சரம் (அம்பு) கொடுத்து உதவிய தால் சரநாராயண பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். மஹா பாரதம் முடியும் தருண காலத்தில் அர்ஜுனன் இங்கே வந்ததாக ஒரு ஐதீகம்.
மூலவர் சரநாராயண பெருமாள் முழுவதும் சாளக்கிரமத்தால் (கருங்கல்) ஆனவர்.
இப்போது தான் தெரிகிறது ஆண்டாளுக்கு கூட படுத்திருக்கும் நரசிம்மனை தெரியும் என்று. '' மாரி மலை முழைஞ்சில் மன்னி கிடந்து ''உறங்கும் சீரிய சிங்கம்'' ..... என்கிறாளே .
கோவில் காலை 6.30 முதல் 11 மணிவரை. மாலை 5.30 முதல் 8.30 வரை. நரசிம்மர் அப்பாயிண்ட்மெண்ட் டைம்.
No comments:
Post a Comment