Thursday, May 9, 2019

GEETHANJALI

 கீதாஞ்சலி      J.K. SIVAN 
ரவீந்திரநாத் தாகூர்  

நாம்  ஆமை முயல் ஓட்டப்போட்டி கதை  தெரிந்தவர்கள்.முயல் வேகமாக ஓடி அங்கங்கே நின்று கர்வத்தால் தோற்றது.  ஆமை  கருமமே  கண்ணாயினார்  ரகம் . மெதுவாக விடாமல் நடந்து வெற்றி பெற்றது.  நான்  வெற்றி பெறுவேனோ மாட்டேனோ தெரியாது. மெதுவாக  ஒவ்வொன்றாக  எனக்கு கண்ணில் பட்ட, விருப்பமான அனைத்து  ஆன்மீக  விஷயங்களையும் தொட்டு ஒவ்வொன்றாக எழுதும்  தீராத தாகம் என்னை செலுத்துகிறது.  கீதாஞ்சலி நூற்றுக்கும் மேலானது. ஒவ்வொன்றாக அனுபவித்து இன்று எட்டாவது கீதாஞ்சலி பாடல்:

                   8.     வேஷம் கலையட்டும் 

The child who is decked with prince's robes and who has jewelled chains round his neck loses all pleasure in his play; 
his dress hampers him at every step.
In fear that it may be frayed, or stained with dust he keeps himself from the world, and is afraid even to move.
Mother, it is no gain, thy bondage of finery,
if it keep one shut off from the healthful dust of the earth, 
if it rob one of the right of entrance to the great fair of common human life.

அது  ஒரு ஏழை மக்கள் வாழும்  பகுதி.  அநேகமாக  சிறுவர்கள் சிறுமிகள் முழு ஆடை இன்றி, சந்தோஷமாக மண்ணில் புரண்டு விளையாடுபவர்கள்.  கிருஷ்ணா,   உன் மேனி முழுதும் மண். ஆபரணங்கள் எதுவும் இல்லாதவன். அரையில் ஒரு ஆடை, தலையில் ஒரு மயிலிறகு.கையில் ஒரு மூங்கில் குழல்.  உன்னைப்போன்று  அந்த  குழந்தைகள் விளையாடுகிறார்கள்.  ஏழை பணக்காரன் வித்யாசம் தெரியாத தெய்வங்கள்.

ஒரு குழந்தையை  பிடித்து குளிப்பாட்டி, எண்ணெய் தடவி தலை சீவி, முடிந்து, கிரீடம் வைத்து, உடல் முழுதும் சந்தனாதி வாசனை திரவியங்களை தடவி,  பளபளவென்று  புத்தாடை உயர்ந்த பாட்டில் அணிவித்து,  காலில் கையில்  அணிகலன்கள், காலுறை, மிதியடி  எல்லாம் மாட்டி  இளவரசனாக நடக்கச் செய்கிறாள் ஒரு தாய்.  ''ஜாக்கிரதையாக  நட.  நகைகள்  எதுவும் கீழே விழுந்து விடப்போகிறது''   கண் மண் தெரியாமல் ஓடி ஆடிய குழந்தை இப்போது அப்படி உற்சாகமாக சந்தோஷமாக நகர முடியுமா?

 நிறைய  தாய்மார்களை நம்ஊரில் பார்த்திருப்பீர்கள்..கொளுத்தும் வெயிலிலும் குழந்தைக்கு பட்டு சட்டை, காலில் சாக்ஸ், காலணி, அதற்குள் காலில் நிறைய தண்டை கொலுசு, மோதிரம், கழுத்து வலிக்க தங்க வைர நகைகள், தலையில் தொப்பி, கீழே இறக்கி விட்டால் விலை உயர்ந்த ஆடை அழுக்கு படும், கசங்கிவிடும் என குழந்தையை விளையாட தரையில் விடாமல்  கைக்குள்ளேயே  சிறை...குழந்தை அழாமல் என்ன செய்யும்?. 

மேலே கதையில் சொன்ன குழந்தை தனது ஆடை, ஆபரணத்தை ரசிப்பானா?  நடக்கவே  பயப்படுவான்.  ஆடை அழுக்கு பட்டால்?  ஆபரணம் ஏதாவது கழன்று கீழே விழுந்தால் ?  

''அம்மா,  போதும்  நீ  செய்து விட்ட அலங்காரம்!  எனக்கு இதெல்லாம் வேண்டாமே!   என்  சுதந்திரத்தை இது பறித்து   விட்டதே.  சந்தோஷத்தை தின்றுவிட்டதே.  என் இயற்கையான  வாழ்வின் சுகம்  கொள்ளை போய்விட்டதே''  என்று குழந்தையின் மனம் கதறி இருக்குமோ? 

மண்ணில் பிறந்தவன் மண்ணோடு பழகி மண்ணிலே தானே  மறையவேண்டும்.!! மண்ணின் வாசனையில் திளைத்து விளையாடி  இயற்கையாக வாழ்ந்து மகிழாமல்  நாடக மேடை  வேஷ வினோத அலங்காரம்..ஏன்?  எல்லோருடனும் சேர்ந்து சுகமாக  இயற்கையாக  வாழாமல் இது  என்ன மனித வாழ்க்கை!.

தாகூர் தாத்தா  அற்புதம் நீங்கள்!

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...