Thursday, May 9, 2019

AINDHAM VEDHAM


 ஐந்தாம் வேதம்       J K SIVAN 
பகவத் கீதை 
                    
             
            இரட்டை  லாபம்

ஸ்ரீமத் பகவத் கீதையில்   பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு ஞானோபதேசம் செய்யும் விஷயம் பதினெட்டு அத்யாயங்களில் வேத வியாசர் தருகிறார்.   இன்று  நாம் தொடுவது அதில் ஒன்பதாவது அத்யாயம்.  அதாவது கீதையின் நட்ட நடுவில் உள்ள ''ராஜவித்யா ராஜ குஹ்ய யோகம்'' என்ற பெயரில் தரப்பட்ட  புனித கீதோபதேசம். .

 ஸ்ரீ ஞானதேவர் தனது இறுதி சமாதி நிலையில் இந்த அத்தியாயத்தை ஜபித்தவாரே  பூத உடலை நீத்தார் என்று  ஸ்ரீ  பக்த விஜயத்தில் வரும்.  சொல்லில் அடங்காத,  நேருக்கு நேராக பகவானால் ''ப்ரத்யக்ஷாவக'' என்று சொல்லப் பட்ட  நேரடி அனுபவம் இதில் விளக்கப் படுகிறது.

கீதை வைதிக தர்மத்தின் சாரம். பகவானின் திரு நாமமே வேதங்களின் சாரம்.  வேதங்களை உணர்ந்தவர் மட்டுமே மோக்ஷம் அடைய முடியும் என்ற நிலையிலிருந்து எல்லோருக்குமே அது கிட்டுவதற்கான வழி  தான்  பகவன் நாமாவைச் சொல்வது.  கலியுகத்தில் இது ஒன்றே  நமக்கு அதி முக்கிய வழி.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லும் சுலப வழி இது: 
'நீ அன்றாடம் செய்யும் சாதாரண கர்மங்களை  எல்லாம்  கூட  ஒரு யக்ஞம்  செய்வதாக கருதி பகவன் நாமாவோடு  கலந்து செய்யும்போது உனக்கு மோக்ஷம் காத்து நிற்கும்.''  என்கிறார்.  எளிமையாக புரியும். 

மாடிக்குப்  போகும்போது ஒவ்வொரு படியாக காலை வைத்து  ஏறி உயரே போகிறோம்.  எவ்வளவு உயரமாக இருந்த போதிலும் சுலபமாக  மேலே  செல்கிறோம்.  அது போல் அன்றாட கர்ம யஞங்களால் உயர்ந்து பரம்பொருளைப்  பற்றி விடலாம்.   ஆண்டவனை  ஆழ் கடலில் அடியிலோ,   மேலே உச்சி வானில்  எங்கோ  தேட வேண்டாம்.  எப்போதும் நம் அனைவரின் எதிரிலும்  எங்கும்  அவன் நின்று கொண்டு தான் இருக்கிறான். அவன் அனைத்துருவிலும் சரா சரங்களாக காட்சி அளிக்கிறானே.  நாம் தான் உணரவில்லை.  

நேற்று கூட எனக்கு ஓரு  அரிய சந்தர்பம் கிடைத்தது.  குழந்தைகள் மத்தியில் அளப்பரிய மகிழ்ச்சி உற்றேன்.  ஸ்ரீமான் கைங்கரிய சேவை என்று ஒரு ஸ்ரீரங்க நிறுவனம்  ''சம்மர் ஸ்பிரிச்சுவல்  கேம்ப்''  ஒன்று  நங்கநல்லூரில் நடத்தினார்கள்.   ஏழுநாள் மாதா, பிதா, ஆச்சார்ய, அதிதி தேவோ பவ''   என்ற தலைப்பில் அநேக  விஷயங்களை  குழந்தைகளுக்கு இலவசமாக போதித்தனர்.    அதில் என்னையும் அழைத்து  நான் குழந்தைகளுக்கு   கிருஷ்ணனை ராமனை கொஞ்சம்  அறிமுகப் படுத்தப் போனவன் அங்கே அநேக 
கிருஷ்ணர்களை,  ராமர்களைக்  கண்டு அவர்களோடு சில நேரம் அன்பிலே, உண்மையான  நேசத்திலே ஆழ்ந்து,  கலந்து எனை மறந்தேன்.  அதை விவரிக்க வார்த்தையே இல்லை. இதில் முக்கியம்  என்னவென்றால்  கிருஷ்ணனின் பால பருவ லீலைகள்.   அது ஒன்றே கிருஷ்ண பக்தர்களை  வயது வித்தியாசமின்றி, ஆண்பால் பெண்பால் என்று அனைவரையுமே அதிகமாக  ஈர்த்து  பரவசமடையச் செய்கிறது.  கண்ணன் கழலிணை   அடைய  அதிக படிப்போ, காரியங்களோ வேண்டாம். கள்ளமில்லா உள்ளம் ஒன்றே போதும்.  பெண்கள்  ஆண்களை விட இதில் அதிக மார்க் பெறுகிறார்கள் என்பது கண்கூடான  உண்மை.

பாரதத்தில் '' ஜனக- சுலபா சம்வாதம்''  என்று ஒன்று.    வியாசமுனிவர்  கர்ம யோகியான  ஜனக மகா ராஜனை ஒரு சாதாரண பெண் சுலபாவிடம் அனுப்பி   ''பிரம்ம வித்யை '    யை 'அவளிடம் கற்றுக்கொண்டு வா''  என்று அனுப்பும் விஷயம். அது.   கர்மம்  தூய பாவனை நிரம்பியதாக, சேவை உணர்ச்சி மயமானால் அதுவே யக்ஞம்.  

கீதையின் இந்த ஒன்பதாம் அத்யாயத்தில்  கர்மயோகமும் பக்தியோகமும் இனிமையாக இணைகிறது.   பக்தியோடு பகவானிடம் ஒன்றி விடுதல் பக்தியோகம். ராஜ யோகத்தில்  பக்தியோகம் கர்மயோகம் இரண்டும் கலக்கிறது. கர்மம் செய்யும்போது பலனை தூர எறிந்துவிடு  என்று அர்த்தம் இல்லை. அந்த பலனை எதிர்பார்க்காதே. அதை கிருஷ்ணனுக்கு அர்ப்பணம் செய்து விடு. ''பலனெல்லாம் போகட்டும் கண்ணனுக்கே'' -  சர்வம் கிருஷ்ணார்ப்பணம் - WORK IS  WORSHIP  - செய்யும் தொழிலே தெய்வம்  -- எல்லாமே இது தான்.
ரொம்ப அழகான ஏற்பாடு இது.   பிறருக்கு அன்னம் இடுகையில் அந்த பிராமணருக்கு போஜனம் ஏற்க தகுதி உண்டா என்று யோசிப்பவர்கள்  முதலில்  தாங்களே அந்த அன்னத்தை அன்று புசிக்க தகுதியா னவர்களா  என்று  யோசித்து  பார்ப்பதில்லை. வந்தவன் கிருஷ்ணனாகவே கூட இருக்கலாமே. வீட்டுக்கு வந்தவன் அதிதி. அவனுக்கு உபசாரம் பண்ணுவது ஆண்டவனைச் சேரும். பகவானுக்கு அர்ப்பணம் செய்யும்போது தகுதி,  தகுதி இன்மை அனைத்துமே  காணாமல் போய் விடுமே.  நம்முடைய அறிவு என்பதே பகவான் அளித்தது. எந்த காரியமானாலும் அதன் பலன் பகவானுக்கே  என்று  எண்ணும்போது   அது  தூய்மைப் படுகிறது.  எச்சில் பழம்  சபரி கொடுத்ததை ராமன் விரும்பி ஏற்று அவளுக்கு மோக்ஷம் தந்தானே.  மறந்து போய்விட்டோமா?

பால்யா  என்று ஒரு வேடன். கொலைஞன். அவனது அம்புகள்  குறி பார்த்தது  ரெண்டு வகை. ஒன்று  அவனிடமிருந்து தப்பிக்க பயந்து ஓடும் மிருகங்கள். அல்லது அவனை எதிர்  நோக்கும்  கோபமான கொடிய மிருகங்கள்.  அவன்  ஒருமுறை  நாரதரைக் கொல்ல  அம்பு குறி வைத்தான்.  அவர் அசையாமல் அவனை அன்போடு  பார்த்து சிரித்தார். பார்வையில் அளவற்ற அன்பு. பாசம். சாந்தம்.  இது அவனுக்கு புதிது அல்லவா?  அவனை  கையிலிருந்து வில்லும் அம்பும்  கீழே  நழுவுகிறது.

''ஏனப்பா வில்லையும் அம்பையும் கீழே போட்டுவிட்டாய்?''
''சுவாமி,   உங்களைப்  பார்த்ததும்  கொல்லவேண்டும்  என்ற எண்ணம் மறைந்து போய்  என்னை என்னவோ செய்து விட்டது. என்னை அறியாமலே கை வில்லையும் அம்பையும்  கீழே போட்டுட்டு   என் கைகள் குவிந்து உங்களைக் கும்பிட வைத்து விட்டது''

இது தூய மனதின் தன்மை.  கொலை வேடன்  ஒருவன்  கூட வால்மீகியாக மாறி  ராமாயணம்  எழுத முடிந்தது அல்லவா?.
கண்ணாடி நமது முகத்தை   நாம் எப்படி அதன் எதிரே  வைத்துக் கொள்கிறோமே அப்படியே  தானே  காட்டும். நாம் செய்யும் காரியங்கள் நல்லவை, தூய்மையானவை என்று  மனதில் பட்டால் அது கண்ணாடி செய்தது போல் அவற்றை  நல்லதாக ஆனதைக்  காட்டும். பக்தியோடு நாம்  கர்மங்களை செய்யும்போது அதன் பலன் சொல்லி முடியாது.    

 நாம மகிமை  எப்படிப் பட்டது தெரியுமா. பல வருஷங்களாக இருளடைந்த ஒரு அறையில் ஒரு கணத்தில்  தீக்குச்சி  வெளிச்சம் அதை போக்கிவிடுவதைப் போல, பல பிறவிகளின் பாபங்களை போக்க வல்லது  பகவானின் நாம பாராயணம்.

ஒரு பெண்  துவாரகையில் இருந்தாள். எது செய்தாலும் 'கிருஷ்ணார்ப்பணம்' என்று மனதார சொல்பவள்.    தினமும் காலையில் சாணி உருண்டையை  எடுத்து  வாசலில் கரைத்து தெளிக்கும்போதும்  ''கிருஷ்ணார்ப்பணம்' என்பது வழக்கம்.  என்ன  ஆயிற்று?    தினமும்  துவாரகை கிருஷ்ணன் கோவில் அர்ச்சகர்  கிருஷ்ணன் முகத்தில் இருந்த சாணி ஜலத்தை   துடைத்து கழுவி சுத்தம் செய்யும்போது   எதற்கு கிருஷ்ணன் முகத்தில் சாணி கரைத்த ஜலம் என்பதன்  காரணம் தெரியாமல் தவித்தார்.  

ஒருநாள்  அந்த பெண் பக்தையின்  அந்திம நேரம் வந்தது  கிருஷ்ணன் வைகுண்டத்தில் இருந்து புஷ்பக விமானம் அனுப்பி அவளை அழைத்து வர சொன்னபோதும்  அந்த விமானத்தை பார்த்து வழக்கம்போல  ''கிருஷ்ணார்ப்பணம்'  என்றாள் . விமானம் கிருஷ்ணன் கோவில் மீது மோதி உடைந்தது. அவள் கிருஷ்ணனை அடைந்து விட்டதால் கிருஷ்ணன் கோவில் அர்ச்சகருக்கு  அவன் முகத்தில் சாணி கழுவும் வேலை அன்றுமுதல் இல்லாமல் போனது. இது தூய பக்தி.  இதை ஒரு சாதாரண கதை  கொள்ளாமல் அதில் தொக்கி நிற்கும்  தூய பக்தி பாவத்தை உணர்ந்தால்,  கதை  என்ன சொல்லவந்ததோ  அந்த  விஷயம் புரியும்.

நமது அன்றாட உறக்கம் கூட ஒரு வகையில் சமாதி நிலை தான். நமது எல்லா போகங்களையும் பகவானுக்கு அர்ப்பணித்து விட்டு தன்னை மறந்து நாம் தூங்குவது நிச்சயம் சமாதி யோகம் தான். தினமும் படுக்கும் முன்பு  வேறு எந்த எண்ணமும் இல்லாமல் நன்றியோடு ஸ்ரீ கிருஷ்ணா, என்று மனதார ஒரு முறை நினைத்து கண்ணை மூடி  தூங்கினால் போதும்.

பக்தியில்  நீ இதுவரை  எவ்வளவு கொடுத்தாய்? எவருக்கெல்லாம் கொடுத்தாய்? என்ற  கணக்கு இல்லை. எந்த பாவனையோடு கொடுத்தாய் என்பது தான் முக்கியம்.   'பத்ரம் புஷ்பம் பலம் தோயம்'' --  ஒரு  சின்ன இலை, ஒரு உத்தரணி ஜலம், ஒரு சிறு பழம், ஒரு சிறு பூ,  இதில் ஏதாவது ஒன்றைக்  கூட  நீ மனதார, உயர்ந்த  சுயநல கலப்படமற்ற,பக்தியோடு  எனக்கு கொடுத்தால்  அதுவே  போதுமே எனக்கு''  என்கிறான் கிருஷ்ணன்.   பேருக்கோ , உருவுக்கோ, பொருளின் விலைக்கோ, அங்கே  மதிப்பு இல்லை.  அர்ப்பண பாவனை ஒன்று தான் பிரதானம்.  சாக்கிய முனிவர் என்பவர்  புஷ்பங்கள் எங்கும் கிடைக்கவில்லை  என்பதால் சிறு கற்களை சேகரித்துக்கொண்டு  புஷ்பங்களாக அவற்றை பாதித்து  எதிரே சிவலிங்கத்தின் மீது போட்டு  அர்ச்சித்தார் என்று கதை நமக்கு தெரியாதா?  எச்சில் பழத்தை சபரி ராமனுக்கு கொடுக்கவில்லையா?

பிரபஞ்சத்தில்  எத்தனையோ கல்பங்கள்  தோன்றி மறையும். ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும்  எல்லா உயிர்களும்  பகவானை அடைந்து மீண்டும் அடுத்த கல்பத்தின் ஆரம்பத்தில் தோற்றுவிக்கப் படுகிறது.இதை தான் பிரளயம் என்போம்.  இந்த அத்தியாயத்தில்  முன் சொன்ன  கர்ம பலனை தனதாக்கிக் கொள்ளாதே என்று சொல்லியதன் அடுத்த செயலாக அதை பகவானுக்கே அர்ப்பணம் செய் என்று விலாவாரியாக  விளக்குகிறான் கிருஷ்ணன்.   ஒரு வயலில் நல்ல விதைகளை  வீசி எறிவதற்கும் ஊன்றி  மண்ணில் விதைப்பதற்கும் உண்டான வித்யாசம் இது. வீசி எறிவதை விட  விதையாக விதைத்தால் சிறியதாக இருந்தாலும்  பல விருக்ஷங்களாகி பலன் தரும் அல்லவா?   அது போல் ஆண்டவனுக்கு அர்ப்பணம் செய்த  போது பல மடங்கு புண்யம் சேருகிறது.ஆனந்தம்  தூய்மை அங்கே தங்குகிறது. அவனுக்கு அளிக்காமல் அவன் தந்த உணவை நாம் உண்பது  மேலே சொன்ன  வீசி எரியும் சமாச்சாரம் இல்லையா. ஆகவே தான் அவனுக்களித்து அதை அவன் பிரசாதமாக உண்பது. நமது முன்னோர்கள் எவ்வளவு கெட்டிக்காரர்கள்!


 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...