ஒரு பழைய நினைவு - செருகுடி கிராமம்
ஓடுகிற கால் நிற்காது என்பார்கள். ஒரு சின்ன மாற்றம். கால் என்பதை கார் என்று திருத்திக் கொள்ளவேண்டும். என் நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனின் கார் என்னை தூக்கிக்கொண்டு நிற்காமல் எத்தனையோ ஷேத்ரங்களுக்கு ஓடி இருக்கிறது. அதன் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை. அவர் தன்னுடைய ஊருக்கு ஒரு முறை கூட்டி சென்றார். திருவிடை மருதூர் திருப்பனந்தாள் அருகே செருகுடி என்று ஒரு பழைய க்ஷேத்ரம். சின்ன கிராமம். அங்கே விருபாக்ஷேஸ்வரர் கோயில், சாஸ்தா, மாரியம்மன் கோவில் சென்று தரிசித்தேன். ஒரு பெருமாள் கோயில் இருக்கிறது.
ஏறக்குறைய முப்பது நாற்பது குடும்பங்களின் ஆதரவோடு தான் செருகுடியில் ஒரு சிவன் கோவில், பெருமாள் கோவில், சாஸ்தா கோவில், மாரியம்மன் கோவில் எல்லாமே, நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த குடும்பங்களின் மூதாதையர் வாழ்ந்த ஊர் செருகுடி. இப்போது அங்கே அக்ரஹாரம் இல்லை. ஒன்றோ இரண்டோ பிராமண குடும்பங்களே வாழ்கின்றன. கோவிலை நம்பி அல்ல. ஆலயத்தில் வருமானம் விளக்குக்கு எண்ணெய் வாங்க கூட போதாது. சிவாச்சாரியார் பட்டாச்சாரியார் என்ற பெயரில் கிடைத்த சிலரை வைத்துக்கொண்டு ஏதோ அன்றாடம் விளக்கேற்றி வழிபட ஏற்பாடுகள் செயது வருகிறார்கள். தமிழ்நாட்டின் அலங்கோலம் இது.
வருஷத்துக்கொருமுறை அந்த ஊர்க்காரர்கள் கூடி ஒன்று சேர்ந்து சம்வத்சர திருமஞ்சனம், அபிஷேகம், பூஜைகள் திருக்கல்யாணம் என்று விமரிசையாக நடத்தி, வருவோர்க்கு அன்ன தானம் அளித்து கோலாகலமாக கொண்டாடு கிறார்கள். பிறகு திரும்பி போய் விடுகிறார்கள். நான் சென்றபோது அப்படி ஒரு விழா.
அமைதியான ஆளற்ற கோவில்கள். கவனிப்பு போதவில்லை. என்ன செய்வது? இந்தியாவின் முக்கால்வாசி கோவில்கள் அந்தந்த ஊரைச்சேர்ந்த ஒரு சிலரால் மட்டுமே இன்றுவரை ஏதோ கொஞ்சம் பராமரிக்கப்பட்டு ஓரளவு தலை தூக்கி நிற்கிறது. வருமானம் வந்தால் பக்தர்கள் வருமுன்பே அரசாங்க அதிகாரிகள், கட்சி ஆட்கள் உள்ளே நுழைந்து விடுவார்கள். நிர்வாகிகள் ஆகிவிடுவார்கள். பிறகு? ஊரறிந்த கதை இங்கு எதற்கு?
செருகுடிபற்றி மீண்டும் சொல்கிறேன். திருவிடைமருதூர் தாலுகாவை சேர்ந்த தஞ்சை ஜில்லாவில் ஒரு சிற்றூர். திருப்பனந்தாள்- பந்தநல்லூர் இடையே அமைந்துள்ளது. இதற்கு தேவ தீர்த்த புரம் என்று பெயர் வழங்கியதாகவும் போதாயன சூத்திரத்தை பின்பற்றிய அக்ரஹார பிராமணர்கள் வாழ்ந்தார்கள் என்று தெரிகிறது. இப்போது அதற்கான தடயம் ஒன்றும் காணோம். அதைப்பற்றி சொல்ல எவரும் இல்லை.
பஸ் வசதி காகிதப்பட்டறை என்ற அடுத்த ஊரிலிருந்து தான். நாலு ஐந்து தெருக்கள் கொண்ட ஊர் செருகுடி. வெயில் பட்டை தீட்டியது. குட்டைகள் குளங்கள் எல்லாமே வறண்டு அனல் காற்று வீசியது. ஆலயத்தில் நிற்க கூட முடியவில்லை. வெயில். மேலே சூடு. சில இடங்களில் கூரை இல்லை. ஒரு இடத்தில் சிமெண்ட் ஷெட்.
முதலாம் குலோத்துங்கன் நிறுவிய ஊர். பிரம்மதேசமாக நிறுவப்பட்ட இந்த ஊரின் பெயர் சோழகுலவல்லி சதுர்வேதி மங்கலம். தான் ஜெயித்த ஊர்களில் இருந்த பிராமணர்களை வரவழைத்து இந்த ஊரில் அவர்களுக்கு வாழ்வதற்கு தானமாக அளித்தான் சோழன்.
எங்களுக்கு போஜனம் ஏற்பாடாயிருந்தது. குடும்பத்தில் மூத்த அரும்பாக்கம் ஸ்ரீனிவாசன் அவர் ஒன்றுவிட்ட சகோதரர் சேதுராமன் ஆகியோர் சங்கல்பங்கள் எல்லோருக்காகவும் செய்து கொண்டு வழிபாட்டை தொடங்கி வைத்தனர். ஸ்ரீனிவாசன் சகோதரர் ரமேஷ் ஒரு துடிப்பான மனிதர். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு சிறப்பாக செய்யும் ஒருசிலரில் இவர் முக்கியமானவர். நிறைய ரமேஷ்கள் இருப்பார்களேயானால் அநேக கோவில்கள் புதுப் பொலிவு பெறும்.
ஒவ்வொரு ஊர்க்கார குடும்பமும் ஒன்று சேர்ந்து தமது பிறந்த ஊர் கோவில்களை பராமரிக்க வேண்டும். இதர மதத்தினருக்கு அக்ரஹாரங்களை இழந்துவிட்டு வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு அலறுவதில் என்ன பயன்.
No comments:
Post a Comment