Wednesday, May 22, 2019

bathragiriyaar



சித்தர்கள், மஹான்கள்            J K SIVAN                                        
பத்திரகிரியார் 


                                         ஒரு  புலம்பல் -  புதுமாதிரி 

 பர்த்ருஹரி என்ற வடநாட்டு மன்னன் அரசு,  மனைவி மக்கள் துறந்து சன்யாசியாகி  ஊர் சுற்றுகிறான். அவன் தென்னகம் வந்து திருவிடைமருதூரில் தனது குரு பட்டினத்தாரோடு    ஸ்ரீ மகாலிங்க ஈஸ்வரன்ஆலய வாசலில் தங்கினான் என்று சொல்வார்கள். பர்த்ருஹரி ஸமஸ்க்ரிதத்தில்  எழுதிய நீதி சதகம், வைராக்கிய சதகம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு சொல்லி வருகிறேன். அவன் தமிழில் பத்திரகிரியாராக புலம்புவது இது. நூற்றுக்கணக்கில் இருக்கிறது. அவ்வப்போது சொல்லி வருகிறேன். பிடிக்கிறதா?  பத்ருஹரி எப்போது பட்டினத்தாரை பார்த்தான், பத்திரகிரியாரானான், தமிழ் கற்று பாடல் இயற்றினானா -- இந்தக்கேள்விகளுக்கு எனக்கே பதில் தெரியாது உங்களுக்கு எப்படி சொல்வது.  புலம்பல் ரொம்ப பிடிக்கிறது அவ்வளவு தான்.

தமிழறிந்தவர்கள் பாத்திரகிரியாரின் புலம்பலை அனுபவித்திருப்பார்கள்.  வைராக்கியம், வாழ்க்கை எனும் மாயை, நிலையாமை, இறை அன்பு எல்லாம் கலந்த ஒரு ஏக்கம் கலந்த வேண்டுதல் தான் இந்த புலம்பல்.  இன்றும் சில படித்து அனுபவிப்போம்.  எளிதில் புரியும். அர்த்தம் தேவை இல்லை.

வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி
யம்பழமும் ஓடும்போல் ஆவதினி எக்காலம்?
(மாதரின்றி உலக வாழ்வேது? இருந்தும் இந்த சேர்க்கை  பழுத்த புளியம்பழம் ஒடோடு ஓடாமல்  தனித்திருப்பது போல் வாழ்வது எப்போதோ?)

பற்றற்று நீரில் படர்தா மரை இலைபோல்
சுற்றத்தை நீக்கிமனம் தூர நிற்பது எக்காலம்?
(தாமரை இலைத்  தண்ணீரைப் போல  உற்றார் சுற்றம் எதனுடனும் ஒட்டாமல் தூர விலகி மனம் தெளிந்து  உலகில் வாழ்வது எப்போது?)

கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையைக் காணாமல்
தேடித் தவிப்பவன் போல் சிந்தை வைப்பது எக்காலம்?
(பல காலம் கூட இருந்து அனுபவித்து திடீரென்று பிரிந்த துணைவனைத் தேடுவது போல் உன்னைத்தேடுவது, உன் மேல் சிந்தனையை தேக்குவது எப்போது )

எவ்வனத்தின் மோகம் எப்படி யுண்டப்படிபோல்
கவ்வனத் தியானம் கருத்து வைப்பது எக்காலம்?
(யவ்வன மோகம் நிரந்தரம் அல்ல. அப்போது அதன் மேல் வைக்கும்  அன்பு, ஆசை, போல் உன்மேல் இடைவிடாது தியானம் செய்யும் எண்ணம் எப்போது வரும்)

கண்ணால் அருவி கசிந்து முத்துப் போல் உதிரச்
சொன்ன பரம்பொருளை எண்ணுவது எக்காலம்?
(ஆஹா அந்த ஆனந்த எண்ணம் நினைக்கும்போது கண்களில் ஆறாக நீர் பெருகி  கண்ணீர்த்துளிகள் முத்துக்கள் போல் சிதறுகிறதே. அதுபோல் உன்னை மனம் எண்ணுவது எப்போது?)

ஆகம் மிகவுருக அன்புருக என்புருகப்
போகஅனுபூதி பொருந்துவதும் எக்காலம்?
 (உள்ளம் வாடி, வருந்தி, இளகி, உருகி அன்பு ப்ரளயமாகி பெறுக உன் ஆனந்த அருள் என் மனதில் சேர்வது எக்காலம்?)

நீரில் குமிழிபோல் நிலையற்ற வாழ்வை விட்டுநின்
பேரின்பக் கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம்?                                                                                                            (கிறுகிறுவென்று சுற்றிக்கொண்டு பல்வேறு வர்ணங்களைக்காட்டும்  நீர்மேல் குமிழி கண் மூடி திறந்து பார்ப்பதற்குள் காணாமல் போகிறதே, அது போல் தான் சாஸ்வதம், நிரந்தரம் என்று நாம் நினைக்கும் இந்த உலகவாழ்க்கை.  இதை மனதில் கொண்டு என்றும் நிரந்தரமான உனது ,நினைவில் கிடைக்கும் பேரின்பத்தை, உன் கருணையை  மனதில் நிறுத்திக்கொண்டு  ஆனந்த வாழ்வு வாழ்வது எப்போதோ?)

 அன்பை உருக்கி அறிவை அதன் மேல்புகட்டித்
துன்ப வலைப்பாசத் தொடக்கறுப்பது எக்காலம்?
(அர்த்தம் வேண்டுமா இதற்கு?)

கருவின் வழி அறிந்து கருத்தைச் செலுத்தாமல்
அருவி விழிசொரிய அன்பு வைப்பது எக்காலம்?
(உடல் மேல் கவனம் வேண்டாமே, எண்ணம் சிதறட்டுமே, கண்களில் பக்தியால் அருவி கொட்டட்டுமே. உன் மேல் தீராத அன்பு என்னை நீக்கத்திருப்பது எக்காலத்தில்?)

தெள்ளத் தெளிய தெளிந்த சிவானந்ததேன்
பொழியப் பொழிய மனம் பூண்டிருப்பது எக்காலம்?
(இது எனக்கே புரிகிறதே, உங்களுக்கு புரியாதா?)

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...