ஒரு மஹனீயரை அறிவோம்
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஸ்ரீரங்கத்தில் தேசிகர் வாழ்ந்த சமயம் அக்ஷோப்ய முனி என்கிற த்வைத ஆசார்யனுக்கும் வித்யாரண்யர் எனும் அத்வைத ஆச்சார்யனுக்கும் ஒரு விவாதம் . தத்வமஸி எனும் மஹா வாக்ய சித்தாந்தத்தை பற்றி தான் விவாதம். இந்த சர்ச்சைக்கு தீர்ப்பளிக்கிறார் வேதாந்த தேசிகர். அவர் அக்ஷோப்யரின் த்வைத சார்பு வாதம் தான் சரியானது என்று தீர்மானமாக கூறுகிறார். இதனால் வெகுண்ட வித்யாரண்யர் தேசிகரின் சத தாசனியில் குறைகள் சொல்ல ஆரம்பித்தார். அவரால் எதுவும் குறை காண முடியாவிட்டாலும் ''சா'' என்று அக்ஷரம் வரும் ஒரு இடத்தை தவறு என சுட்டிக்காட்டினார். அது சரியானது என விளக்க தேசிகர் ''சகர சமர்த்தன'' எனும் நூலை இயற்றினார். இதெல்லாம் 1336ல் நடந்தது என்று தெரிய வருகிறது. சரித்திரம் இந்த சம்பவம் நடந்த காலம் தவறு . வித்யாரண்யரால் விஜயநகரம் ஸ்தாபிக்கப்பட்டதே 1335 ல் தான். அக்ஷோப்ய முனி காலம் பிற்பட்டது. 1357-58ல் தான் தேசிகரின் வித்யா மஹத்வம் பிரபலமானது என்கிறது சரித்திரம். மேற்கண்ட சாஸ்த்ரார்த்த விவாதம் நடந்தது உண்மை தான் என்று 15ம் நூற்றாண்டில் மூன்றாம் ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்திரர் குருபாரம்பரிய பிரபாவம் எனும் நூலில் இந்த சம்பவத்தை குறிப்பிடுகிறார்.
ஸ்ரீரங்கத்தில் தான் சுவாமி தேசிகர் அந்திம காலத்தை கழித்தார். அவர் விண்ணுலகெய்தியது நவம்பர் 14, 1369 என்று ஒரு குறிப்பு. இதுவும் சரியா? 1371-72ல் ஒரு செப்பேட்டுக்காகவோ, கல்வெட்டுக்காகவோ ரெண்டு ஸ்லோகங்கள் எழுதினார் என்ற ஒரு செய்தி அவர் மறைந்த தேதி தப்பு என்று காட்டவில்லையா? என்று சிலர் வாதம். அதெப்படி சொல்லமுடியும். சுவாமி தேசிகன் அந்த ஸ்லோகங்களை தனது வாழ்நாளில் எழுதி இருந்ததை பிற்பாடு கல்லில் பொறித்தார்கள் என்று ஒரு சமாதானம் வைத்துக்கொள்ளலாம். எது சரி எது தப்பு என்று யாருக்கு தெரியும்? அது அவசியமானதும் அல்ல. அற்புதமான அவர் வாக்கு அல்லவோ முக்கியம். ஸ்ரீரங்கத்தில் சுவாமி தேசிகன் மறைந்த சமயம் ஆலயமணி ஒலிக்கவில்லை. அதன் நாதம் எதிரொலிக்கவில்லை. சுவாமி தேசிகன் கண்டாவதாரம் அல்லவா? திருப்பதி வெங்கடாசலபதியின் ஆலய மணி அம்சம் என்பது பற்றி விவரமாக எழுதுகிறேன். வடகலை ஸ்ரீ வைஷ்ணவ முன்னோடியாக வணங்கப்படுபவர். சுவாமி தேசிகன் உணர்த்திய ஸ்ரீ வைஷ்ணவ விசிஷ்டாத்வைத சம்பிரதாயத்தை இன்றும் வடகலை வைஷ்ணவர்கள் பின்பற்றிவருகிறார்கள். ஒட்டுமொத்தமாக வடகலை தென்கலை சம்பிரதாய ஸ்ரீ வைஷ்ணவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டு வணங்கப்படும் ஆசார்யன் சுவாமி தேசிகன்.
16ம் நூற்றாண்டில் அப்பய்ய தீக்ஷிதர் சுவாமி தேசிகனின் கவித்துவம் பற்றி புகழ்ந்து பாராட்டி இருக்கிறார்.
தேசிகனின் வேதாந்த ஞானத்தை அதே நூற்றாண்டில் வாழ்ந்த தொட்டாச்சார்யார் வியந்து போற்றி இருக்கிறார். அவரது தத்வ ஞானத்தை சிலாகித்து ஸ்ரீனிவாச தாசர் புகழ்ந்துள்ளார். சாதாரண மக்களாலும் ஏகோபித்து புகழ்ந்து பாராட்டப்பட்ட விந்தை மனிதர் சுவாமி தேசிகன். ஸ்ரீ ராமானுஜரின் விசிஷ்டாத்வைத சித்தாந்தம் சுவாமி தேசிகனை மிகவும் கவர்ந்தது. ஆகவே அவர் அத்வைத வாதிகளை எதிர்த்தார். லோகாச்சார்யார் ரங்கநாதனின் மூர்த்தியை பாதுகாக்க தனது உயிரையே பலி கொடுத்தவர் என்பது ஒருபுறமிருக்க, ஸ்ரீ சுவாமி தேசிகன் ஸ்ரீ பாஷ்யத்தை பாதுகாக்க காட்டிலும் மேட்டிலும் அலைந்து அதை மதவெறியர்களால் அழியாமல் காப்பாற்றிக் கொடுத்தவர்.ஸ்ரீ சுவாமி தேசிகன் ஒரு அவதார புருஷர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
அக வாழ்வில் அவரது மனத்தில் எழுந்த எண்ண அலைகள் அவரது காவியங்களில், வேதாந்த நூல்களில் காணப்படுகிறது. அவரது புற உலக வாழ்விலும் அவ்வாறே வாழ்ந்தவர் அவர். சிறந்த மனிதாபிமானி. தனது கருத்துக்களை, ஞானத்தை சிறப்பாக மற்றவர் போற்றியபோதெல்லாம் தயங்காமல் எல்லாம் ஸ்ரீ ராமானுஜரின் கருத்துகள், அவரளித்த தர்மம், ஸ்ரீ ராமானுஜரின் லோகோபகார சிந்தனையின் பிரதிபலிப்பு என்றே எளிமையாக கூறிக்கொண்டவர். ஸ்ரீ ராமானுஜர் தான் என்னை உள் நின்று வழி நடத்துபவர் என்று தான் சுவாமி தேசிகன் எப்போதும் சொல்வார். ஒரு ஆத்ம ஞானியாக எளிமையாக எல்லோராலும் விரும்பப்பட்டு வாழ்ந்தவர். நடமாடும் தெய்வமாக கருதப்பட்டவர். ஸ்ரீமன் நாராயணனிடம் பிரபத்தி செய்வது, சரணடைவது, தவிர வேறெதுவும் ஜீவனுக்கு முக்கியமல்ல என்று முடிவாக உபதேசித்தவர். நியாய சித்தஞ்சனா அவர் எழுதிய உயர்ந்த உரைநடை வேதாந்த நூல். வைணவ ஆச்சார்யர்களில் ஏராளமாக நூல்களை தமிழிலும் ஸமஸ்க்ரிதத்திலும் நிறைய எழுதியவர் அவர் ஒருவர் என்று சொல்லலாம்.
No comments:
Post a Comment