Monday, March 11, 2019

SIVAVAKKIYAR


சித்தர்கள் மஹான்கள் J K. SIVAN
சிவவாக்கியர்

வாருங்கள் சிவ வாக்கியரே !-

மழை பெய்தால் மனதுக்கு சந்தோஷம். வான் மழை விடாது பெய்க என்று வாழ்த்துவார்கள் அப்போதெல்லாம். இப்போதும் அவசியம். இதோ இன்னும் மார்ச் முடியவில்லை, அதற்குள் வெயிலின் வெப்பம் தாங்கமுடியவில்லை. இதை தொடர்ந்து மின் வெட்டு, குடிநீர் பற்றாக்குறை தொந்தரவுகள் வருஷாவருஷம் வருவது தான். இந்த நேரத்தில் மழை பற்றி, குளுகுளு பிரதேசங்களை பற்றி கொஞ்சம் நினைத்தால் ஜம்மென்று இருக்குமல்லவா?

''அதே போல் தான் தாத்தா நீங்க சொல்ற விஷயங்கள் எல்லாமும். ரொம்ப மன நிறைவு தருது'' என்கிறார் என் எதிரே அமர்ந்திருக்கும் பழைய நண்பர் மாணிக்க முதலியார்.

'' முதலியார்வாள், இது நான் சொல்றதில்லே. மஹான்கள் நிறைய பேர் சொன்னது. நான் அப்பப்போ முடிந்த அளவுக்கு ஞாபகப் படுத்தறேன் எல்லாருக்கும். அவ்வளவு தான்.''

'சிவன் ஐயா, நீங்கள் எத்தனைமுறை சொன்னாலும் அலுக்காத மெய்மறக்கச் செய்யும் சிவ வாக்யர் பாடல்கள் ஒன்றிரண்டு இன்று சொல்லுங்களேன்'' என்று கேட்டார் முதலியார்.

முதலியார் ஒரு மரக்கடை முதலாளி. துடைப்பம், விரட்டி வியாபாரம் என்று தொடங்கி ஒரு இருபது வருடங்களில் மூன்று கிளைகளோடு பெரிய மரக்கடைகள் நாகப் பட்டினத்தில். இப்போது வியாபாரம் பிள்ளைகள் கையில் என்று விட்டுவிட்டு ஆன்மீக பயிற்சியில் ஈடுபடுபவர்.

எனக்கு பரம சந்தோஷம். ''கல்கண்டு திங்க சொல்றீங்க முதலியார். கசக்குமா?'' என்னுடைய ஒரு பழைய பச்சை கலர் டயரி புரட்டப் பட்டது. தொண்டையைக் கனைத்துக்கொண்டு பாடத்துவங்கினேன். ஓதுவார்கள் பாடும் ராகம்.

'மாறுபட்டு மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய்
ஊருபட்ட கல்லின் மீதே ஊற்றுகின்ற மூடரே,
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட்டுத் தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே.''

''என்ன அர்த்தம் புரியுதா முதலியார் ?
' என்னவோ மணி, வண்டு, எச்சி, கல், -- அபிஷேகம் மாதிரி ஏதோ... விளக்கம் நீங்களே சொல்லுங்க சார் '

'' தேன் அபிஷேகம் சிவலிங்கத்துக்கு பண்றதை சொல்றார். முட்டாள்களே, வழி தவறி எங்கெங்கோ போய் காட்டுக்குள் தேடி, வண்டுகளின் எச்சில் மூலம் சேகரிக்கப் பட்ட தேனை, வெயிலிலும் மழையிலும் உலர்ந்து நனைந்த சிவலிங்கம் என்ற பழைய கல்லின் மேல் கொட்டி வணங்கு
கிறீர்களே, புரிந்து கொள்ளுங்கள், தேவர்களுள் உள்ள பிணக்கை தீர்த்தவனும் அடிமுடி காணாத ஜோதியுமான என்னை அறிய முயலுங்கள். நான் கல்லில் மட்டும் இல்லையே'' என்கிறார் சிவன்'' .

சிவ வாக்கியர் கொஞ்சம் புரட்சியான எண்ணங்களை தைர்யமாக சொல்பவர். ஆனாலும் அவர் சிறந்த தெய்வ பக்தர். பின்னால் அவரே திருமழிசை ஆழ்வாராக வைணவ பக்தரானார் என்றும் சொல்வதுண்டு. இன்னும் ஒன்று சொல்லவா. இந்த பாடலைப் பார்ப்போமா ?

''சுரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோஷ தோஷ பாவமாயை தூரதூர ஓடவே
கரியதோர் முகத்தைஉற்ற கற்பகத்தை கைதொழக்
கலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஒதிடும் பிழை பொறுக்க வேண்டுமே

இந்த அஞ்செழுத்து மந்திரம் இருக்கிறதே ''ஓம் நமசிவாய'' இதன் சக்தி அளவிடமுடியாதது. முதலும் முடிவும் இல்லாதது மட்டுமல்ல அதுவே எல்லாமுமானது. முப்பத்து முக்கோடி தேவரும் வணங்கும் சிவனை இந்த நாம மந்திரத்தோடு உச்சரித்தால், தோஷம், பாவம், மாயை, துன்பம் சகலமும் விலகும். ஓடிவிடும். கரிய முகத்தோடு கூடிய சிவன் ஞான சிகரம். மோன விளிம்பு. ஏதோ அறியேன் பேதையாக பிதற்றுபவன் சிவ வாக்கியம் என்று தவறாக எதையாவது சொல்லியிருந்தால் க்ஷமிக்க வேண்டும். அவனுக்கே பித்தன், பேயன் சுடலையான் என்று தானே பெயர்...

இன்னும் ஒன்று. இது ஒரு அசாத்திய பாடல்: சிவ வாக்கியம் என்றாலே இது தான்:

''என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே

உள்ளே ஆழமாக போகவே வேண்டாம். மேலெழுந்தவாரியாக பார்த்தாலே அர்த்தம் புரியும்.
என்னுள்ளே உள்ள அவனை --'' உள்ளே கிட''க்கும் ''கட- வுள்' என்னிலேயே இருப்பதை இன்னிக்கு கார்த்தாலே வரைக்கும் மூடன் நான் அறியவில்லை, என்னுள்ளே அவன் இருக்கிறான் என்று எப்போது தெரிந்ததோ, எப்போது என்னால் அவனை உணர முடியுமோ, அதை உணர்ந்து கொண்டேனோ, அவனைப் புரிந்து கொண்டேனோ, ஆஹா, நான் அவனோடு உள்ளே கலந்து ஐக்யமாகி விட்டேன் சார். என்ன சந்தோஷம் ! மனசு பூரா அவன் கிட்டேயே. மனசு அவனை விட்டு வெளியே வரமாட்டேங்குது, சார் ''.

நமது இந்து பாரம்பரியத்தில் சிவ வாக்கியர் ஒரு பெரிய மைல் கல். ஆன்மீக தத்தவங்களை அப்படியே புட்டு புட்டு சுருக்கமாக வைத்து அழகிய தமிழில் அளிப்பவர். அவர் பாடல்களின் சந்தம் திருமூலருடையது மாதிரியே இருக்குமே. ரெண்டுமே ரெண்டு கண்கள். சிவ வாக்கியர் ஒரு சிறந்த சித்தர். அவர் சித்தம் சிவன் போக்குப்படியே தான் இருக்கிறது எனினும் ஆழ்ந்த அத்வைத அநுபூதி நிறைந்தது.

''முதலியார்வாள் , நேரமாகிறது அல்லவா. இன்னும் ஒன்றே ஒன்றோடு நிறுத்திக் கொள்கிறேன்.''
இது எல்லோரும் அறிந்த துணிச்சலான பாடல். படிப்பவர் எடுத்துக்கொள்ளும் பாங்கிற்கு உட்பட்டது. நாத்திகம் அல்ல. உயர்ந்த அத்வைத சாஸ்திரம். அருவத்தை உருவத்தில் (மட்டும்) தேடாதே என்று அறிவுறுத்தும் வகை.

''நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொண மென்று சொல்லு மந்திரமேதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ?''

அர்த்தம் தேவையில்லை. கல்லிலானான சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, நிறைய புஷ்பம் சார்த்தி, மொண மொண வென்று ஏதேதோ மந்திரம் எல்லாம் சொல்லுகிறாயே. அது பேசுமா? அதே நேரத்தில் கொஞ்சம் யோசி. உன்னுள்ளே சதா சர்வ காலமும் இருந்து கொண்டு அந்தராத்மா என்று பெயர் சொல்லுகிறாயே, அது இருப்பதை கவனத்தில் வைத்தாயா.? அது பேசுமய்யா, கொள்ளை பேச்சு பேசும்!! இருப்பதை விட்டு இல்லாததை தேடுகிறாய்.

(உயர்ந்த ஞானிகளுக்கு உருவ வழிபாடு தேவையில்லையே. நம்மைப் போன்றவர்களுக்கு தானே அவசியம். மேல் படிப்பு படிப்பவனுக்கு அரிச்சுவடி, வாய்ப்பாடு எதற்கு.?)

மனது உண்மையறியாது, உழல்வது எதற்கு சமம் என்று ஒரு அழகிய உதாரணம் வேறு சொல்கிறார் சிவவாக்கியர். கமகம வென்று நெய்மணக்க பாதாம் அல்வா கிண்டுகிறாயே, எவர் சில்வர் கரண்டி உள்ளே சுருண்டு வரும் அல்வாவை கிளருகிறதே. துளியாவது அந்த கரண்டிக்கு ஹல்வாவின் சுவை, அருமை தெரிகிறதா? அதுபோல் தான் மனத்தை பிளந்து உள்ளே புகாத, அவனை அறியாத உன் பூஜை?

ரொம்ப திருப்தி தாத்தா சார் மீண்டும் வருகிறேன். உங்களோடு நிறைய பேசவேண்டும். தெரிந்து கொள்ளவேண்டும். முதலியார் விடை பெற்றார்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...