கிரேக்க கதைகள் J K SIVAN
தீஸியஸும் மினோடாரும்
நான் எப்போது முதல் முதலாக கிரேக்க கதைகளை அறிந்தேன்? பள்ளிக்கூடத்தில் சொல்லி தரவில்லையே? வீட்டிலும் என் அத்தை, பாட்டி, அம்மாவுக்கு பாரத ராமாயண பாகவத, பக்தவிஜய கதைகள் தான் தெரிந்தது. ஆமாம் நாம் நான் பெரியவனாக ஆகி நானே வாடகைக்கு புத்தகங்களை வாங்கி படித்த காலத்தில் அநேக விஷயங்கள் தெரிந்து கொண்டேன். 18-20 வயது இருக்கலாம். மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி எதிரே காய்கறி கழிவுகள் சொதசொத என்று சேறாக இருப்பதில் காலை ஊன்றி எதிரே வரிசையாக இருந்த மாடிகளில் ஒன்றில் ஜெயா லெண்டிங் லைப்ரரி இருந்தது. நாலணா ஒரு புத்தகம் ஒருநாள் வாடகை என்று வரதராஜன் வசூலிப்பார். டெபாசிட் என் விஷயத்தில் கிடையாது. வழக்கமானவன் என்பதால்.
இனி என் நினைவில் மறக்க முடியாதபடி பதிந்து விட்ட கிரேக்க வீரர்கள் கதை சொல்கிறேன். இதை என் வீட்டில் என் அண்ணன் குழந்தைகளுக்கு, என் குழந்தைகளுக்கு பேரன்களுக்கு சொல்லியிருக்கிறேன். இப்போது உங்களுக்கு.உங்கள் வீட்டில் இருக்கும் வாண்டு சிண்டுகளுக்கு நீங்கள் எடுத்து சொல்லுங்கள்.
நமது ராமாயண பாரத கதைகளில் வரும் வீராதி வீரர்கள், சக்தி வாய்ந்தவர்கள், ராக்ஷஸர்கள் போல் கிரேக்க இதிகாசங்களிலும் உண்டு. ஹெர்குலஸ், அட்லாஸ், ஜீயஸ் போன்ற பெயர்கள் இன்னும் நிறைய பேருக்கு தெரிந்திருக்கிறது அல்லவா? சில பெயர்கள் கடவுள் பெயர்கள். சினிமாக்கள் வந்திருக்கிறது. நான் சில்ட்ரன் தியேட்டரில் நாலணா கொடுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் திருவல்லிக்கேணி வாலாஜா தெருவிற்கு நடந்து சென்று பார்த்திருக்கிறேன்.
பழங்கால கிரேக்க கதைகள் அக்கால வாழ்க்கையை அபூர்வமாக சித்தரிக்கும். ஏன் எப்படி என்று விஞ்ஞான பூர்வ கேள்விகளை கேட்க கூடாது. அதி அற்புத கற்பனையில் கதை நம்மை எங்கோ கொண்டுபோகும்.
ஏதென்ஸ் என்ற பெரிய ராஜ்யத்தில் ட்ரோஜன் ஒரு சின்ன ஊர். அதற்கு ராஜா பீதியஸ் .அவனுக்கு ஈத்ரா என்று ஒரு அழகிய பெண். அவள் மகன் தீஸியஸ். அவன் அப்பா எங்கே என்று அவனுக்கு தெரியாது. ஏன் என்றால் அவன் அம்மாவுக்கு நிறைய நண்பர்கள். ஒருவன் பொசிடோன், அவன் நமது வருணனைப் போல் சமுத்திரங்களுக்கு எல்லாம் கடவுள். பொசிடோனுடைய சகோதரன் ஜீயஸ் ஒரு பெரிய கடவுள். அம்மாவின் இன்னொரு நண்பன் ஒரு ராஜா. ஏதென்ஸ் நகரை ஆண்ட ஈஜியஸ் . தீஸியஸ் ஒரு நாள் வீட்டை விட்டு நடந்து அப்பாவை கண்டுபிடிக்க சென்றான். ஏதென்ஸ் போய் சேர்ந்தான். வழியில் எத்தனையோ எதிரிகள் அவனை தாக்கி கொல்ல முயன்றார்கள். தீஸியஸ் அனைவரையும் கொன்று விடுகிறான். மீடியா எனும் மந்திரக்காரி அவர்களில் ஒருவள். கிரீட் தேசத்து ராஜா மினோஸ் ஆட்கள் தீசியஸுடன் சண்டையிட்டு தோற்கிறார்கள்.
மினோஸ் ஆண்ட அந்த கிரீட் என்னும் ஊரில் ஒரு ராக்ஷஸன் இருந்தான். அவன் பாதி மனிதன் பாதி காட்டு மாடு. அவனுக்கு மினோடார் என்று பெயர். அவனை ராஜா மினோஸ் வளர்த்து வந்தான். ஒரு பெரிய பாதாள குகையில் மினொடார் இருப்பான். மினோஸ் ராஜாவின் மகன் அன்ட்ரொகியாஸ் என்பவனை ஏதென்ஸ் நாட்டு வீரர்கள் ஒரு முறை கொன்றுவிடுகிறார்கள். ஆகவே வருஷாவருஷம் மினோஸ் ஏதென்ஸிலிருந்து ஏழு ஆண்கள் ஏழு பெண்களை பிடித்து வந்து மினோடாருக்கு ஆகாரமாக போடுவது வழக்கம். மினோஸ் ஆட்சி இவ்வாறு கொடுங்கோல் ஆட்சியாக இருந்ததால் ஏதென்ஸ் மக்கள் பயத்தில் எந்நேரம் நாம் சாவோமோ மினோடாருக்கு ஆகாரமாகிவிடுவோமோ என்ற பயத்தில் வாழ்ந்தார்கள். மினொட்டார் மினோஸ் ராஜாவின் மகன் என்று கூட நாட்டில் பேச்சு. ரெண்டு வருஷங்கள் ஏற்கனவே பலி கொடுத்தாகி விட்டது. இது மூன்றாவது வருஷம் . ஆகவே மீனோடருக்கு ஆகாரமாக 7 ஆள் பிடிக்க வந்தார்கள் மினோஸ் தூதர்கள். தீஸியஸ் தானே வலிய சென்று ஒரு ஆளாக மீனோடருக்கு இரையாக ஒப்புக் கொள்கிறான்.
தீஸியஸை ராஜா மினோஸ் முன்னால் கொண்டு நிறுத்துகிறார்கள். ராஜா மினோஸுக்கு ஒரு செல்லப்பெண். ஆர்யாட்னே என்பவள். தீஸியஸை அரசபையில் பார்த்தவுடனே அவன் மீது கண்டதும் காதல் கொள்கிறாள்.
தீஸியஸை சிறையில் அடைக்கிறார்கள். நள்ளிரவு ஆர்யாட்னே சிறைச்சாலையில் ரகசியமாக தீசியஸை சந்திக்கிறாள்.
''தீஸியஸ், நீ பயப்படாதே, நான் உன்மேல் அளவு கடந்த காதல் கொண்டவள். நீ என்னை கல்யாணம் பண்ணிக்கொள்வாயா?''
'ஏ முட்டாள் பெண்ணே, நான் நாளை காலை நீங்கள் வளர்க்கும் பாதி மாடு பாதி மனிதன் ராக்ஷஸன் மினோடா ரிடம் அகப்பட்டுக்கொண்டு உயிர் விடப்போகிறேன் என்று உனக்கு தெரியும். இன்னும் சில மணிநேரங்களில் கல்யாணமா? நமக்கா?''
''தீஸியஸ், நீ கொஞ்சமும் கவலைப்படாதே. நீ என்னைக் கல்யாணம் செய்து கொள்வதாக இருந்தால் சொல். மினோடாரை எப்படி ஜெயிப்பது கொல்வது என்ற ரகசியம் எனக்கு தெரியும். உனக்கு இப்போதே சொல்கிறேன்''
''ஓ அப்படியா. சரி, இப்போவே நான் உன் கணவன் சரிதானா? மினோடாரை கொன்றுவிட்டால் அப்புறம் யாருக்கும் அவனால் கஷ்டம் பயம் இல்லை. அதற்காக தான் நான் தானாகவே இங்கே வந்தேன். என் உயிர் போனாலும் பரவாயில்லை அவனை முடித்துவிட வேண்டும் என்பது என் லக்ஷியம்'' அந்த இளவரசி சில ரகசியங்களை சொல்கிறாள். ஏதோ ஒரு வஸ்துவை மூடி அவன் கையில் கொடுக்கிறாள்.
தனது உடைக்குள் ஒளித்து வைத்திருந்த ஒரு சங்கிலியை மெதுவாக எடுக்கிறாள் ஆர்யாட்னே. தேவ லோகத்தில் சிறந்த ஒரு கருமான் ஹிபீஸ்டஸ் தயார் செய்தது. அந்த சங்கிலியை வீசுகிறான் தீஸியஸ், அது வளைந்து வளைந்து வெளிச்சம் காட்டிக்கொண்டு அந்த இருட்டு குகையில் அவனை அழைத்து போகிறது. எங்கும் இருட்டு. பயங்கரமான ஓலங்கள், நாற்றம். தீஸியஸ் தைரியமாக எலும்புகள், மீது நடந்து போகிறான். வளைந்து வளைந்து செல்கிறானே , திரும்புவானா? உயிருடன் திரும்பினால் வழி தெரியுமா? டீடாலஸ் என்கிற மந்திரவாதி அமைத்த குகை அது. நடு குகையில் அதோ தெரிகிறான் மினோடார் . பிரம்மாண்டமாக படுத்துக் கொண்டிருக்கிறான். அவன் கண்கள் நெருப்பு மயமாக இருக்கிறதே. உறுமுகிறான். அவன் எழுந்திருப்பதற்குள் சங்கிலி அவன் மேல் விழுகிறது. வலை பின்னுகிறது. தன்னிடமிருந்த ஒரு மந்திர சக்தி வாய்ந்த கத்தியால் மீனொட்டார் மீது பாய்ந்து அவன் கழுத்தின் அடிப்பாகத்தில் கத்தியை செருகுகிறான். அங்கே தான் மினோடார் உயிர் நிலை இருக்கிறது என்று ஆர்யாட்னே சொன்னது ஞாபகம் வருகிறது. மினோடார் இதை எதிர்பார்க்கவில்லை. தடுக்கிறான். அதற்குள் சங்கிலி அவனை பிணைக்கிறது. அந்த வலையோடு அவன் மோதிக்கொண்டிருக்கும்போது மீண்டும் மந்திரக் கத்தியால் அழுத்தி மினோடார் அடித்தொண்டையில் குத்துகிறான் தீஸியஸ். சிறிது நேரம் சமாளித்து விட்டு மினோடார் சங்கிலி வலையிலிருந்து மீளமுடியாமல் கத்திக்குத்து உயிர்நிலையை தாக்க அப்படியே சாய்ந்து ரத்த வெள்ளத்தில் உயிர் விடுகிறான்.
மினோடார் இறந்தவுடன் மந்திரக் கத்தி காட்டும் வெளிச்சத்தில் சங்கிலி தொடர் வழியாக தீஸியஸ் மீண்டும் அந்த குகைவாசலுக்கு வருகிறான். மினோஸ் ராஜாவுக்கு செய்தி போகிறது.
''அடடா மினோடாரை வென்ற கொன்ற மாவீரன் தனது மகளுக்கு ஏற்ற கணவன்'' என்று ராஜாவும் தீர்மானிக்க ஆர்யாட்னே கழுத்தில் மூன்று முடிச்சு போடுகிறான் தீஸியஸ். அடுத்த ராஜா கிரீட் தேசத்துக்கு அவன் தான் என்று நான் சொல்லவேண்டுமா? ஏதென்ஸ் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள். அது சரி, தீஸியஸ் அப்பா யார், என்னவானார்? யாருக்காவது தெரிஞ்சால் சொல்லுங்கள். தீஸியஸின் வீராவேச கதைகளில் எதிலாவது வரலாம். காத்திருப்போம்.
No comments:
Post a Comment