ஐந்தாம் வேதம் J K SIVAN
மஹா பாரதம்
'' விராடனின் பசுக்கள் மீண்டன''
கோபம் வந்தால் அதை எவர் மீதாவது கொட்டினால் தான் அடங்குகிறது. பாவம் அதைப் பெறுபவனோ, பெறுபவளோ உண்மையில் நமது கோபத்துக்கு எந்த வித சம்பந்த மில்லாதவர்களாகக் கூட இருக்கலாம். ஆபிஸில் முதலாளி, பெரிய அதிகாரியிடம் டோஸ் வாங்கினவன் எவ்வளவு அதிக பக்ஷ காரத்தோடு மனைவி மேல் காரணமில்லாமல் எரிந்து விழுகிறான். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்களே. இங்கு அது போல் இல்லை. துரியோதனாதிகளை, கர்ணனை, பார்த்தவுடன் அர்ஜுனன் பொங்கினான். அவனை எதிர்த்தவர்கள் மேல் அவன் செலுத்திய அஸ்திரங்கள் எண்ணற்றோரை விழுங்கியது. என்ன செய்வது? குறுக்கே வந்தால் புலி யாராக இருந்தாலும் அடித்து தானே கொல்லும்.
ஆகவே யார் யார் அர்ஜுனனிடம் அடிபட்டார்கள், கொல்லப் பட்டார்கள், எப்படி, எவ்வளவு ரத்தம், எத்தனை உடல், அதில் யானை,குதிரை, உடைந்த தேர் என்று கணக்குச் சொல்ல ஆரம்பித்தால் இந்த பாரதக் கதை முடிவதற்குள் என் காலமே கூட முடிந்து விடலாம். எனவே நண்பர்களே நான் விவரம் தரப் போவதில்லை.
'' ஜனமேஜயா, தனியாக எவராலும் வெல்லமுடியாததால் இப்போது எல்லா வீரர்களும் ஒன்று கூடி அர்ஜுனனை எதிர்க்க முனைந்தார்கள். முன்னிலும் வெகு பலத்துடனும் கோபத்துடனும் அர்ஜுனன் அவர்களை சூறையாடியதில் கௌரவ சேனை எண்ணிக்கையில் சுருங்க ஆரம்பித்தது. பீஷ்மர் தானே எதிர் வந்து அர்ஜுனனைத் தாக்கினார். அவரை மனதில் வணங்கிவிட்டு அர்ஜுனன் தனது வீரத்தை காட்டினதில் அவர் மனம் மகிழ்ந்தது. பலே என்று அவர் வாய் தானாகவே அவனை மெச்சியது. ஆனாலும் அவரது சூரிய வெப்ப அம்புகள் அவனை நோக்கி பாய்ந்தன. அர்ஜுனன் இதை எதிர்பார்த்தவன் அல்லவா? சரியான அம்புகளால் அவற்றை தடுத்தான். தாக்கினான். அவர் கொடிமரம் நொறுங்கியது. வெண் குடை சாய்ந்து வீழ்ந்தது. தேர் குதிரைகள் விழுந்தன, தேரோட்டியும் யமனுலகம் சென்றான்.பீஷ்மர் வில்லும் ஒடிந்தது. பீஷ்மர் மற்றொரு வில்லெடுத்து எண்ணற்ற சக்தி ஆயுதங்களை பிரயோகிக்க, அவற்றை தக்கவாறு தடுத்தான் அர்ஜுனன். யுத்தம் நீண்டது. கடைசியில் அர்ஜுனன் செலுத்திய சக்தி வாய்ந்த அஸ்தரம் பீஷ்மர் மார்பை தாக்கி அவர் நிலை குலைந்து மயங்கி தேரில் சாய்ந்தார். மயக்கமடைந்தவர்களை கொல்வது யுத்த மரபல்ல. எனவே அவர் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டார்.
இனி துரியோதனன் பீஷ்மரின் பாதுகாப்பு இன்றி காணப்பட்டான். அர்ஜுனன் அவனை நெருங்கினான். அதற்குள் மற்ற வீரர்கள் அர்ஜுனனி டமிருந்து துரியோதனைக் காக்க அவனை தாக்கினார்கள். அர்ஜுனன் அவர்களையும் துரியோதனனையும் சேர்த்து தாக்கினான். நெற்றியில், காதருகில் அம்பு துளைக்க துரியோ தனன் திரும்பி ஓடினான். அவனை மீண்டும் யுத்தத்துக்கு அழைத்த அர்ஜுனனை துரியோதனன் திரும்பித் தாக்கியபோது படுகாயமுற்றான். மயங்கி தரையில் விழுந்த துரியோதனனை அப்புறப்படுத்தினார்கள் மற்ற வீரர்கள். நேரமாவதை உணர்ந்த அர்ஜுனன் முன்னிலும் வேகமாக தாக்க அவனது தேவலோக அஸ்த்ரங்களை சமாளிக்க முடியாமல் திணறினர் கௌரவர்கள் அனைவருமே. தேவ தத்தம் வெற்றியை அறிவிக்க முழங்கியது. கையில் வில் ஒடிந்து, அம்புகள் பயனின்றி மயங்கி நின்றனர் கௌர வீரர்கள் .
''உத்தரா, அனைவரும் மயங்கி நிற்கின்றனர். உடனே சென்று நீ துரோணர், கிருபர், கர்ணன், பீஷ்மர் அஸ்வத்தாமா, அனைவரின் வஸ்த்ரங்களை எடுத்து வா போ'' என்றான் அர்ஜுனன் . அதற்குள் அனைத்து ஆனிரைகளையும் விராட தேசத்துக்குள் விரட்டி விட்டன அர்ஜுனன் அம்புகள். மெதுவாக கண் விழித்த துரியோதனன் பீஷ்மரிடம், ''எப்படி ஒருவனாக அர்ஜுனன் நம்மை எதிர்த்து, உங்களிடமிருந்து தப்ப முடிந்தது?'' என்று கேட்டான்.
''துரியோதனா, அர்ஜுனன் மகா சக்தி வாய்ந்தவன். நம் அனைவரையும் மயக்க நிலையில் துவளச் செய்தாலும் நம் ஒருவரையும் அவன் கொல்லவில்லையே. எளிதில் நம்மை தீர்த்துக் கட்டி இருக்கலாமே. இதிலிருந்து அவனது தர்மம், நேர்மை, வீரம், அனைத்தையும் யோசித்துப் பார். மரியாதையாக ஊர் திரும்பு. நீ செய்த தகாத காரியத்தை நேர் படுத்தி, அவன் விராடனின் பசுக்களை மீட்டு திரும்பிவிட்டான். அவன் வந்தது அதற்காகவே.
முட்டாள் தனமாக பாண்டவர்களை எதிர்ப்பதை இனியாவது தவிர். இந்த அனுபவம் ஒரு பாடமாக இருக்கட்டும்''என்கிறார் பீஷ்மர்.
திரும்பிச் சென்ற அர்ஜுனனை தொடர்ந்து யுத்தம் புரிவது இயலாத காரியம் என்று புரிந்து கொண்டு பீஷ்மர் சொல்லுக்கு மறுப்பு இன்றி தலையைக் குனிந்து கொண்டு ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான் காயங்களோடு துரியோதனன்.
அர்ஜுனன் தூரத்திலிருந்து கௌரவ சேனை திரும்புவதை பார்த்து புன்முறுவல் செய்தான்.
'உத்தரா, தேரை உனது அரண்மனைக்குத் திருப்பு. எல்லா பசுக்களும் வீடு நோக்கி திரும்பிவிட்டன. ஒரு முக்யமான விஷயம். இது உனக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கட்டும். நானோ, மற்ற பாண்டவர்களோ உன் தந்தையிடம் பணியாட்க
ளாக இருப்பதை காட்டிக்கொள்ளாதே. தக்க நேரத்தில் யுதிஷ்டிரர் அறிவிப்பார். நாங்கள் பாண்டவர்கள் என்று அறிந்தால் விராடன் பயப்படுவார். கௌரவர் சேனையை நீ ஒருவனாகவே வென்றதாகவும் ஆனிரைகளை மீட்டதாகவும் அறிவித்து விடு.'' என்றான் அர்ஜுனன்.
''ஐயோ, இந்த வீர சாகசம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. இதை நான் செய்ததாக சொன்னால் என்னாலே கூட என்னை நம்பமுடியாதே. இருந்தாலும் நான் உங்களுக்கு கொடுத்த வாக்கின் படி நானாக உங்களை காட்டிக் கொடுக்க மாட்டேன். இது சத்தியம்'' என்றான் உத்தரன்.
உத்தரன் தேர் மீண்டும் மயானத்து வன்னிமரம் அருகே சென்று நிற்க, உத்தரன் அனைத்து பாண்டவ ஆயுதங்களையும் முன்போல் அந்த மரக்கிளையில் ஜாக்ரதையாக மறைத்து வைத்து விட்டு தேரில் ஏறினான். ப்ரஹன்னளை தேரை ஓட்டினாள் .
''உத்தரா எல்லா பசுக்களுக்கும் ஆகாரம் அளித்துவிட்டு குளத்தில் ஸ்நானம் செய்வித்து அவைகளோடு நாம் மாலை திரும்புவோம். அதற்குள் உன் ஊர் எல்லை வந்ததும் பசுக்களை நீ மீட்டு வந்த செய்தியை மகாராஜாவுக்கு தெரிவித்து விடு.''
த்ரிகர்த்தர்களை வென்று அவனது செல்வத்தை மீட்டு மிக்க மகிழ்ச்சியோடும் வெற்றியோடும் திரும்பிய விராடன் மற்ற நான்கு பாண்டவர் களோடு அரண்மனையை அடைந்தான். அரசவையில் உத்தரனைத் தேடிய விராடன் ''எங்கே உத்தரன்?'' என்று கேட்டபோது அரண்மனை பெண்கள் பதிலளித்தார்கள்.
''மஹாராஜா, நீங்கள் இல்லாதபோது கௌரவ சேனை, பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன் அனைவரோடு நமது பசுக்களை எல்லாம் கடத்திக் கொண்டு போய் விட்டார்கள். அவர்களை எதிர்க்க யாரும் இல்லாத நிலையில் உத்தரன் தேரை எடுத்துக்கொண்டு ப்ரஹன்னளையை தேரோட்டியாக வைத்துக்கொண்டு தனியொருவனாக கௌரவ சேனையை எதிர்த்து பசுக்களை மீட்டச் சென்றுள்ளான்.'' என்றனர்.
''ஆஹா. என் சிறு பிள்ளை எப்படி அவ்வளவு பெரிய மகா சைன்யத்தை தனி ஒருவனாக எதிர்கொள்ளத் துணிந்தான். சேனையை உடனே வடக்கே திருப்புங்கள் உடனே கிளம்புவோம் உத்தரனைக் காப்பாற்ற வேண்டும். கௌரவ சேனையை எதிர்த்து உத்தரன் உயிர் தப்புவது கடினம் . ஆணும் பெண்ணும் இல்லாத ஒரு நபும்சகனை நம்பி என் மகன் சென்றிருக்கிறானே. இந்நேரம் உயிரோடு இருப்பானா என்றே சந்தேகமா யிருக்கிறது'' என்று அங்கலாய்த்தான் விராடன்.'
'அரசே, கொஞ்சமும் கவலைப்படத் தேவை யில்லை, எப்போது ப்ரஹன்னளை உத்தர னோடு சென்றிருக்கிறாளோ, நிச்சயம் உத்தரன் கௌரவர்களை முறியடித்து பசுக்களை வெற்றிகரமாக மீட்டு வருவான்'' என்று மகிழ்ச்சியோடு சொன்னார் கங்க பட்டர்.
No comments:
Post a Comment