ஜெயதேவர்
2. சீக்கிரம் வீட்டுக்கு திரும்புங்கள்
கண்ணன் இன்னும் தனியாக பசுக்களை கன்றுகளை மேய்க்க அனுமதிக்கப்படவில்லை. அப்பா நந்தகோபனுடன் செல்கிறான். யமுனையை ஒட்டிய விசாலமான வனங்களில் வழக்கம்போல் செல்கிறார்கள். கூடவே ராதையும் வருகிறாள். ராதை கண்ணனை விட சற்று பெரியவள். பொறுப்பான பெண். சாயங்கால வேளை . அடர்ந்த லவங்க, ஜாதி பத்திரி மரங்கள் கம்மென்று மணம் காற்றில் கலந்து வருகிறது. மேலே வானம் கருத்து விட்டது. மேகக்கூட்டங்கள் குடை பிடித்தால் போல் மேலே கவிந்து கிடக்கிறது. எந்த நேரமும் மழை பொழியலாம். இருட்டு சூழ ஆரம்பித்துவிட்டது.
நந்தகோபருக்கு இன்னும் வேலை பாக்கி இருக்கிறது. பசுக்களை ஒன்று திரட்டவேண்டும். கன்றுக்குட்டிகளை கயிற்றில் கட்டி அழைத்துவரவேண்டும். கிருஷ்ணன் அங்கும் இன்றும் சுற்றி கண்களை துழாவி பார்க்கிறான். இதை கவனித்த நந்தகோபன் ஒருகணம் யோசிக்கிறார். அருகே இருந்த ராதையைப் பார்த்தவுடன் அவளை அழைக்கிறார்;
ஹே ராதே, இங்கே வா. மேலே பார்த்தாயா எவ்வளவு கருமேகங்கள். இன்று அதிகமாகவே மழை கொட்டப்போகிறது. காற்று பலமாக வீசு கிறது. ஜாதி பத்திரி மரங்கள் பேயாட்டம் ஆட தொடங்கிவிட்டன.
ஆகாயத்தை மறைத்திருக்கிறதே இந்த கருநிற மேகங்கள். வெளிச்சம் குறைந்து போதாதென்று வெளிச்சத்தையும் தடுத்து கும்மிருட்டாக மாற்றும் அடர்ந்த தமலா மரங்களின் காடு. இருள் பயமுறுத்துகிறதே. இந்தப்பயல் குட்டி கிருஷ்ணன் கண்களில் பயம் தெரிகிறது. நடுங்குகிறான் பார்த்தாயா ஒ ராதா, சீக்கிரம் சீக்கிரம், ஓடு, ஜாக்கிரதையாக வீட்டுக்கு கூட்டிச்செல். ரெண்டு பேரும் உடனே நேராக வீட்டுக்கு கிளம்புங்கள். இந் த இருளைப்பார்த்து பயப்படப்போகிறான் '' என்று பதறுகிறார் கிருஷ்ணனின் வளர்ப்பு தந்தை நந்தகோபன்.
'
ஆஹா அப்படியே என்று கிருஷ்ணனை அணைத்தவாறு ராதா கிளம்பிவிட்டாள். நந்தகோபர் காட்டுக்குள்ளே வேறு பக்கம் சென்று விட்டார்.
ராதை நேராக வீட்டுக்கு கிருஷ்ணனோடு போனாள் ? அவன் தான் போக விடுபவனா? யமுனைக்கரையை ஒட்டிய வனத்தின் வழியாக ஒவ்வொரு மரத்தின் பின்னே ஓடி ஒளிந்து விளையாடிக்கொண்டு, செடி கொடிகளை அணைத்துக்கொண்டு அங்கே மரத்தில் ஊஞ்சல் கட்டி வைத்திருந்தார்களே அதில் ஆடிக்கொண்டு தனியாக பாடிக்கொண்டே நேரத்தை சந்தோஷமாக அல்லவோ கழிக்கிறார்கள்''
भीरुः अयम् त्वम् एव तत् इमम् राधे गृहम् प्रापय इत्थम् नन्द निदेशितः
चलितयोः प्रति अध्व कुंज द्रुमम् राधा माधवयोः जयन्ति यमुना कूले रहः केलयः 1.1
மேகை மேதுரம் அம்பரம் வனபுவ ஷ்யாமாஸ் தமால த்ருமை: நக்தம்
பீரோ: அயம் தவம் ஏவ தத் இமம் ராதேகிருஹம் ப்ராபய இத்யம் நந்த நிதேஷித:
சலிதயோ: பிரதி அத்வ குஜ திருமம் ராதா மாதவயோ : ஜயந்தி யமுனா குல ரஹ கேலய:
ஜெயதேவரின் மாமா ஒருதடவை ''ஜெயதேவா, ஏன் இப்படி பொழுதை வெட்டியாக கழித்து வீணடிக்கிறாய். ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடவேண்டாமா நீ ? என்று கேட்டபோது ஜெயதேவர் என்ன சொன்னார்.
' மாமா, நான் ஒரு கவிஞன். அற்புதமாக கவிகள் புனைய தான் யோசிக்கிறேன். கவிகள் புனைந்தும் வைத்திருக்கிறேன்''
''ஆமாம் பெரிய கவிஞன் நீ. அப்படி என்ன மற்றவர்களை விட உயர்ந்தவன் சொல்லேன் ?''
''மாமா, என் கவிகள் புதுமாதிரியானவை. என் தெய்வத்தை நான் ஒரு புதிய கோணத்தில் வைத்து ரசிப்பவன். மனிதனாகவும் இறைவனாகவும் சேர்த்து உருவமளித்து சம்பவங்கள் உண்டாக்கி வைத்திருக்கிறேன்.
''யார் அந்த உன் கடவுள். என்ன புது பாணியில் அவனைப் பாடி இருக்கிறாய் சொல் ?''
''கீத கோவிந்தம் -- அதன் பெயர். அவன் கிருஷ்ணன், கோவிந்தன், அவன் பால்ய லீலைகள் என் கவியில் முக்யத்வம் வாய்ந்தவை. அவனது பிரேமை தான் எனது லக்ஷியம். அவன் ராதையோடு சேர்ந்து வாழ்ந்த நேரம் தான் என் பாடல்கள்''
மாமாவுக்கு அசாத்திய கோபம். இதெல்லாம் ஒரு கடவுள் பற்றிய பாட்டா? சீறுகிறார் . மாமாவைப்போலவே நிறைய பேர் சீறுகிறவர்கள் கிருஷ்ணனை மனிதனாக மட்டுமே பார்ப்பவர்கள். அவன் உருவத்தில் மறைந்து கண்ணுக்கு புலப்படாத தெய்வீகத்தை, அதன் ப்ரேமையை உணர முடியாதவர்கள்.
மேலே சொன்னது தான் முதல் பாடல். எல்லோரும் பிரார்த்தனை, கடவுள் வாழ்த்து பாடி ஆரம்பிப்பார்கள்,
ஆனால் ஜெயதேவர் தான் வித்தியாசமானவர் ஆயிற்றே. கண்ணனின் சந்தோஷம், உலகத்தின் சந்தோஷம், அவன் விளையாட்டு பிள்ளை, அலகிலா விளையாட்டுடையார் யார் அன்னவர்க்கே அல்லவோ சரண் நாம்.
கண்ணனை ஜாக்கிரதையாக ராதையிடம் ஒப்படைக்கிறார் நந்தகோபன். நாம் ராதையை பிடித்துக் கொண்டால் கண்ணனை பிடித்துவிடலாம் என்கிறாரோ ஜெயதேவர். கிருஷ்ணன் வேறு ராதை வேறா? பிரிக்கமுடியாதவர்கள் இல்லையா. ராதாகிருஷ்ணனில் ''ரா''வை பிரித்துவிட்டால் ''ஆ''தா கிருஷ்ணன் .ஆம் பாதி க்ரிஷ்ணனைத்தான் காணமுடியும் இல்லையா?.
No comments:
Post a Comment