Saturday, March 23, 2019

 கொஞ்சம்  கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம்
                                J K SIVAN  

நமது ஸம்ப்ரதாயங்களில் சில விஷயங்களை நாம்  சரியாக  அறிந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு வீட்டிலும்  சுப அசுப காரியங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும். அப்போது கடைப்பிடிக்க வேண்டிய சிலவற்றை புரிந்து கொள்வோம்.

சுப்பிரமணியம்   வடக்கே  ஒரு குஜராத் நகரில்   மத்திய அரசாங்க  வேலை செய்கிறான். அவன் தாய் தந்தையர் குடும்பம் ஆந்திராவில் ஒரு கிராமத்தில்.  கூட்டு குடும்பம்.  அந்த குட்டி  சாம்ராஜ்யத்தின்  ராஜா  தாத்தா. அவர் சொன்னது தான் சட்டம். தாத்தா  வரன் பார்த்து  தூரத்து சொந்தம்  தஞ்சாவூர் கோபாலய்யர் பெண்ணை   சுப்ரமணியத்திற்கு நிச்சயம் பண்ணி விட்டார். அப்புறம் என்ன. நாள் பார்த்து தஞ்சாவூரில் ஜாம்ஜாம் என்று கல்யாணம் பண்ண கோபாலய்யர்  அலைகிறார்.  எல்லோருக்கும் பத்திரிகை வைத்தாகி விட்டது.  சுப்பிரமணியம் 10நாள் லீவ் போட்டு ஆந்திரா வந்து எல்லோரையும் அழைத்துக்கொண்டு  தஞ்சாவூருக்கு ரயில் பிரயாணம் மொத்தம் 22பேர்  செல்ல  ஏற்பாடாகிவிட்டது.
ரயில் பிரயாணத்திற்கு  ஒரு நாள் முன்பு  தாத்தா சுப்ரமணியத்திடம் டெலிபோனில் சொல்கிறார்: ''மணி உன் பெரியப்பா வுக்கு பெண் குழந்தை பிறந்திருக்காம். வ்ருத்தி. கல்யாணம் தள்ளி வைக்கணும் டா.  பிரசவ தீட்டு இருந்தால்  சுப காரியம் பண்ண கூடாதாம். புண்யாஹவாசனம் ஆனபிறகு தான் கல்யாணம்...''  சுப்ரமணியத்தின் அப்பா  தஞ்சாவூருக்கு  டெலிபோன் பண்ணி விட்டார். 

''சுவாமி, இது எப்படி சாத்தியம்?  எல்லா  சொந்தக்காரர்களும் வெளியூர், நாடுகளிலிருந்து வந்தாச்சு, பாதிபேர் வர. கல்யாண சத்திரம், சமையல், பந்தல் ஏற்பாடுகள் எல்லாம் பண்ணி ஆச்சு. நிறுத்த முடியாதே என்ன பண்றது''  அழாக்குறையாக சொல்கிறார் கோபாலய்யர்.  

''இல்லே   தாத்தா  கண்டிப்பாக  நல்ல காரியம் குடும்பத்திலே நடக்கும்போது தீட்டு கலப்பு  இருக்க கூடாது ன்னு சொல்லிட்டார்''  என்கிறார்  ராமநாதன், சுப்ரமணியத்தின் அப்பா. 

''கொஞ்சம்  டயம் கொடுங்கோ நானும் தஞ்சாவூர்லே  நிறைய  வேதம் படிச்சவா, சாஸ்திரம் தெரிஞ்சவா இருக்கா கேக்கறேன். மறுபடியும் போன் பண்றேன் '' --  கோபாலய்யர்.

''சுவாமி நான் இங்கே எல்லார்கிட்டயும்  கேட்டுட்டேன். அவா எல்லோருமே  இதை ஒரு சுப சூசகமாக எடுத்துக்கணும். கல்யாணம் நடக்கும்போது குடும்பத்திலே ஒரு குழந்தை, அதுவும்  லட்சுமி கடாக்ஷமா பெண் குழந்தை பொறந்திருக்குன்னா ரொம்ப  அதிர்ஷ்டம் என்கிறா. கல்யாணம் ஜாம் ஜாம்னு நடத்தலாம்''னு சொல்லிட்டா. நீங்கள் எல்லோரும் வந்து சேருங்கோ.''  என்று மூச்சு விடாமல் மறுபடியும் போன் பண்ணினார் கோபாலய்யர்.

ராமநாதனுக்கு ஒரு  புறம் அவர் அப்பா சொல்வது, மறுபக்கம் தஞ்சாவூர் நிலைமை. கோபாலய்யர் சிரமம் எல்லாம் தெரிகிறது. ஆந்திராவில் உள்ள தெலுங்கு சாஸ்த்ரிகளை அணுகுகிறார்.  அவர்களும்  பரவாயில்லை  தோஷம் இல்லை. பரிகாரம் ஏதாவது பண்ணிடலாம் என்று சொல்லிவிட்டார்கள்.

தாத்தாவிடம்  ''கல்யாணம் நடக்கட்டும் என்று சொல்லியபோது  ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதித்தார். 

இந்த கல்யாணம் நடக்கக்கூடாது. நடந்தால் நான் வரமாட்டேன். ஊரில் அனைத்து உறவினர்களுக்கும் போகக்கூடாது என்று சொல்லிவிடுவேன் என்று அப்படியே  பிடிவாதமாக இருந்தார். 

''நான் சொன்ன வார்த்தை கேட்காத என் பிள்ளை ராமநாதன் குடும்பத்தை  ஊர் கட்டுப்பாடு, குடும்ப ப்ரஷ்டம்''  தள்ளி வைத்து விட வேண்டும். யாரும் அவர்களோடு சம்பந்தம் எதுவும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் கட்டளை இட்டு
விட்டார் பொல்லாத தாத்தா.  முதல் பிள்ளை ராமநாதன்  குடும்பத்தோடு பேச்சு வார்த்தை இல்லை. 

இப்படியே படாத பாடு நிறைய பண்ணிவிட்டு  சுப்ரமணியம் கல்யாணமாகி ஐந்து வருஷத்தில் மண்டையை போட்டுவிட்டார்  தாத்தா. குடும்பம் அவரை கரையேற்றியது.  குடும்பத்தில் ஒரு  குழந்தையின் பிறப்பினால்  விரிசல் விட்டு பிரிந்த குடும்பம்  மீண்டும் ஒரு கிழவர்   இறப்பினால்  எல்லோரும் ஒன்று சேர்ந்தார்கள்.  ஒரு குழந்தை பிரசவம் ஒரு குடும்பத்தையே ஒரு கலக்கு கலக்கி விட்டு, கல்யாணம் நிற்கும்படியான அளவுக்கும் பண்ணிவிட்டது எதனால்?  

 சாஸ்திரங்கள்  சொல்வதை சரியாக புரிந்து கொள்ளவேண்டும்.  காலத்திற்கு ஒவ்வாததை சற்று  மாற்றிஅனுசரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் அவசியம்  ஏற்படுகிறது அல்லவா?  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...