ஐந்தாம் வேதம் J. K SIVAN
மஹா பாரதம்
கந்தர்வ கணவனின் வீரம்
'' என்ன கீசகனா கொல்லப்பட்டான்? யாரால்? நம்பவே முடியவில்லையே '' என்று விஷயம் கேள்விப்பட்ட அனைத்து விராட தேச பிரஜைகளும், அண்டை அசலை சேர்ந்தவர்களும் ஒட்டு மொத்தமாக அதிர்ச்சியிலும் அதிசயத்திலுமாக திகைத்தார்கள்.
விராடன் அரண்மனையில் பெரும் கூட்டம்,கூச்சல். கீசகன் உறவினர்கள் வந்து பார்த்து நடுங்கினர். மஹா பலசாலி கீசகனை யார் இப்படி ஒரு மாமிச உருண்டையாக பண்ணியது?. நிச்சயம் இது மனித யத்தனத்தால் முடியாதது. எனினும் அவனுக்கான ஈமக் கடன்களை முடிக்கவேண்டும் என்று ஆயத்தம் செய்தபோது த்ரௌபதியை சுதேக்ஷணை தனது அறையில் பார்க்கிறாள். கடும் கோபம் கொள்கிறாள்.
' இவள் புருஷனால் தானே என் சகோதரன் கீசகன் மாண்டான். பாவம் அவன் இவள் மேல் ஆசைப்பட்டதாலே தானே உயிரிழந்தான். அவன் உடலோடு இவளையும் சேர்த்து எரித்து விடுங்கள்'' என்று விராடனிடம் சொல்கிறாள். விராடனும் அதற்கு ஒப்புக்கொள்ள திரௌபதியைப் பிடித்து கீசகன் உடல் கிடந்த சிதையில் பிணைத்து சுடுகாடு நோக்கிக் கொண்டு சென்றனர். இப்படி ஒரு விளைவு உண்டாகும் என்று பாண்டவர்கள் எதிர்பார்க்க வில்லை. என்ன செய்வது என்று குழம்பிநின்றார்கள்.
திரௌபதி அரசவையில் அவர்கள் காதில் படும்படியாக உரக்க சொல்கிறாள்;:
''என் கந்தர்வ கணவர்களே இந்த அநியாயத்தை கண்டு வாளா விருக்காதீர்கள். உடனே வந்து என்னைக் காப்பாற்றுங்கள்'' என்று. இதெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பீமன் காதில் இது நாராசமாக விழுந்தது. அவன் விஷயம் என்ன என்று ஊகித்து ஒரு கந்தர்வன் மாதிரி உடை மாறுவேஷம் பூண்டு, ஆடை அணிந்து தன் அடையாளத்தை மாற்றியவாறு திரௌபதியைக் கொண்டு சென்ற மயானத்தை அந்த ஊர்வலம் வரும் முன்பே அடைந்து விட்டான். அங்கே ஒரு பெரிய மரத்தின் கிளையில் ஏறி அமர்ந்து அவர்கள் தூரத்தில் கீசகன் பிணத்தோடு திரௌபதியை கட்டி மயானத்தில் எரிக்க கொண்டு வருவதைப் பார்த்துவிட்டு, ஒரு பெரிய பனை மரத்தை வேரோடு பிடுங்கி கையில் எடுத்துகொண்டு அவர்களை நோக்கி ஒரு பெரிய சத்தத்தோடு ஓடினான்.
''அதோ இந்த பெண்ணின் கந்தர்வ கணவன் நம்மை தாக்கிக் கொல்ல வருகிறான் என்று அவர்கள் அங்கேயே சிதையை வைத்து விட்டு ஓடலாயினர்.''
''இல்லை ஓடவேண்டாம். அந்த பெண்ணை அவிழ்த்து விட்டு விடுவோம். அவளுக்கு தீங்கு செய்தால் தான் நம்மை அவன் கொல்வான் '' என்று கூட்டத்தில் யாரோ சிலர் அறிவுரை சொல்ல, திரௌபதியை சிதையிலிருந்து அவிழ்த்து விட்டு விட்டு திரும்பலாயினர். அதற்குள் பீமனின் பனை மரம் 105 பேரைக் கொன்றுவிட்டது. மற்றவர்கள் ஓடி விட்டனர்.
பீமன் திரௌபதியை ஆஸ்வாஸப்படுத்தி ''கவலை வேண்டாம். நான் உன்னை எந்நேரமும் கண் காணித்து வருகிறேன். பயமின்றி திரும்பிச்செல் இனி ஒருவரும் உன்னை நெருங்க மாட்டார்கள்'' என்று சொல்லி விட்டு வேறு வழியாக விராடன் அரண்மனை சமையல் அறையை நோக்கி எவரும் அறியாமல் சென்றான்.
விராட நகரில் எங்கும் பீதி சூழ்ந்தது. மக்கள் அதிர்ந்து போயிருந்தனர். விராடனிடம் முறையிட்டனர்.
''மகாராஜா, எந்த வேளை இந்த அழகிய பெண் இங்கு வந்து சேர்ந்தாளோ நமது மன்னர் கீசகன் உயிரிழந்தார். அவர் குடும்பத்தினர் கூட இருந்த மற்றவர்களில் 105 பேரும் ஒரு கணத்தில் ஒரு கந்தர்வனால் கொல்லப்பட்டனர். எங்களுக்கு அந்த கந்தர்வர்களைப் பற்றிய பயம் விலகவேண்டும். நீங்கள் இந்த பெண்ணை நாட்டை விட்டு அப்புறப்படுத்துங்கள். நாம் நிம்மதியாக இத்தனை காலம் வாழ்ந்தோம். இனியும் அவ்வாறே வாழவேண்டும்''.
விராடன் கதி கலங்கி இருந்தான். அவன் எப்படி சைரந்திரியை அழைத்து '' நீ இங்கிருந்து எங்காவது போய்விடு' என்று சொல்வது?. இதனால் அவள் கந்தர்வர்கள் கோபம் கொண்டால்?? பெண்ணோடு பெண் பேசட்டும் என்று சுதேக்ஷணையை விட்டு உத்தரவிடச் செய்தான்.
சுதேக்ஷணையும் அவ்வாறே பதவிசாக திரௌபதியை கூப்பிட்டு ''அம்மா சைரந்திரி, நீ பேரழகி, உன் அழகு எவரையும் மயக்க வல்லது. மீண்டும் எவராவது உன் வழியில் குறுக்கிட்டு இந்த தேசத்தில் உயிரழக்க விராட மஹாராஜா விரும்பவில்லை. நீ இப்போதே உனக்கு எங்கு விருப்பமோ அங்கு செல்லலாம் என்று உன்னிடம் சொல்ல எனக்கு கட்டளையிட்டார் '' என்றாள்.
'' மகாராணி. நல்லது அவ்வாறே ஆகட்டும். இன்னும் 13 நாள் கழித்து நான் செல்கிறேன். அதுவரை இங்கே இருப்பதால் உங்களுக்கு அநேக நன்மைகள் உண்டாகப் போகிறது. பொறுத்திருங்கள்'' என்றாள் சைரந்திரி.
சமையல் அறை வாசலில் நின்று தன்னை கவனித்தவாறு இருந்த பீமனைப் பார்த்து விட்டு அவன் காது கேட்க உரக்க வானை நோக்கி தொழுது ''என்னை காப்பாற்றிய கந்தர்வ கணவனே உனக்கு நன்றி தக்க சமயத்தில் என்னை காப்பாற்றினாய்'' என்றாள்
பீமனும் அவளை வணங்கி ''அம்மா உன் கணவர்கள் உன் மேல் அவ்வளவு பாசமும் அன்பும், நேசமும் கொண்டவர்கள், நன்றி மிகுந்தவர்கள். மறக்காதவர்கள் உன் கணவர்கள், உனக்கு கடமைப் பட்டவர்கள் என்று புரிகிறது'' என்று மூன்றாம் மனிதர்கள் வாழ்த்துவது போல சொன்னான்.
அன்று மாலை நர்த்தன சாலையில் அர்ஜுனனைப் பார்த்த திரௌபதி, ''ப்ரிஹன்னளா எப்படியம்மா இருக்கிறாய். உனக்கென்ன, மகராசி, நாட்டில் என்ன நடக்கிறது இந்த சைரந்திரி என்ன வித ஆபத்தில் இருக்கிறாள் என்றே எதுவும் தெரியாது. உனக்கு தான் எப்போதுமே ஆடல் பாடல் பெண்கள் கூட்டம்'' என்று ஏசினாள் .
''ஆமாம், சைரந்திரி நான் கேள்விப்பட்டேன் உன் கந்தர்வ கணவர்களில் ஒருவன் கீசகனைக் கொன்று உன்னை காப்பற்றினதாக தெரிந்தது. நான் அவனை வணங்கி உன்னை வாழ்த்துகிறேன். என் போன்ற பெண்ணால் என்னம்மா இந்த நிலையில் செய்ய முடியும். உதவி ஒருவருக்கு செய்யவேண்டும் என்றால் கூட மனம் தான் விழைகிறதே தவிர உடல் ஒத்துழைக்காதே. எல்லாம் கடவுள் சித்தம். நல்ல காலம் சீக்கிரமே வரட்டும்'' என்றான் பெண்ணாக இருந்த அர்ஜுனன்.
பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தில் ஒருவருஷம் மறைந்து வாழும்போது அவர்களை அல்லது அவர்களில் யாராவது ஒருவரையாவது கண்டுபிடிக்க எல்லா ஊர்களுக்கும் துரியோதனன் ஒற்றர்களை அனுப்பி இருந்தான்.
கீசகன் ஒரு கந்தர்வனால் கொல்லப்பட்ட செய்தி விராட தேசம் முழுதும் பரவி அதையும் தாண்டி, பாண்டவர்களைத் தேட துரியோதனன் அனுப்பியிருந்த ஒற்றர்களையும் அடைந்தது. விராட தேசத்தில் சுற்றிக்கொண்டிருந்த ஒற்றன் ஒருவனுக்கு இந்த சேதி கிடைத்தது. ஒருவேளை இந்த செய்தி துரியோதனனுக்குஉதவலாம் என்று கருதிய அவன் ஹஸ்தினாபுரம் நோக்கி நடந்தான்.
No comments:
Post a Comment