Tuesday, March 19, 2019

sanyasam


                    துறவறம்  J K SIVAN  

சன்யாச லக்ஷணம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என்று ஒரு  ரி  நண்பர் கேட்டதால்   அதைப்  பற்றி சிந்தனை எழுந்தது. யோசித்தால் நாம் எவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.  எண்ணங்களை வரிசையாக ஓடவிட்டு  அரிசியில் கல் பொறுக்குவோமே  அது போல் கருத்துக்களை தேடி  பிடித்து  விவரம்  புரிந்துகொண்டு  சுருக்கமாக  விளக்க முடிந்த பிறகு  இதை எழுதுகிறேன். 


வாழ்க்கை  பல ரகம் என்று வைத்துக்கொண்டால்  அதில்  மிகச் சிறந்தது  துறவறம். வாழ்க்கையை விட்டு விலகினால்  தானே  துறவறம். அது எப்படி  வாழ்க்கையாகும்?  நல்ல கேள்வி.  ஆனால் வாழ்க்கையை விட்டு விலகினால்  என்பதற்கு  சரியான அர்த்தம் முதலில் தெரிந்து கொள்ள
வேண்டும்.  மனைவி மக்கள் வீடு வாசல், சொத்து எல்லாம்  விட்டு  விலகினால்  அவன்  குடும்பத்தை விட்டு தான்  விலகுகிறான்.அதே எண்ணங்களோடு,   இடம் மட்டும்  மாறி,  மாற்றி,  வாழ்கிறானல்லவா. இது  சன்யாசம் இல்லை.

எல்லாவற்றையும் துறந்து,  விருப்பத்தோடு, பற்றுகளை  நீக்கிக்கொண்டு உயிர் உள்ளவரை குடும்பத்தில்  உழன்றும்  அதில் அகப்படாமல் வாழ்கிறானே  அப்படிப்பட்ட  துறவியின் வாழ்க்கைக்கு  பேர் தான் ஆரம்ப சன்யாசம்.  ஜனகன் போன்றோர்  இல்லறத்திலேயே  துறவிகளாக  வாழ்ந்தவர்கள்.  பட்டும் படாதது போல்  என்று  இதைச் சொல்வோம். DETACHED  ATTACHMENT. தாமரை இலைத் தண்ணீர் வாழ்க்கை.  கடமையை  மிஷின் போல் செய்வான். ஆனால் அதில்  எந்த  பற்றும்  கொள்ளாதவன். தன்னுடைய  மனதில்  பற்றற்றான் பற்று ஒன்றையே  பற்றிக்
கொண்டு  வாழ்பவன்.  அந்த  கால  ரிஷிகள்  இப்படிதான்  வாழ்ந்தார்கள். யாஞவல்கியர் மனைவி  மைத்ரேயி உபநிஷத விவாதம் செய்தவள். வேதாந்தி. விஷ்ணுசித்தருடன் வாழ்ந்த  கோதை  அரங்கன் நினைவு ஒன்றிலேயே  காலம் கழித்த  பெண்  ஞானி.  ஒரே  பெண் ஆழ்வார்.

துறவறம்  சிறந்த  வாழ்க்கை.  துறவி  சமூக அரசியல், பொது வாழ்வில்  ஈடுபடாத  தனிமையில்  ஞான மார்க்கத்தில் மூழ்கி  மற்றவருக்கு  அதை  அருள்பவன். குடும்பம்,  உறவு,  பொருள்,  சொத்து  போன்ற பந்தம் எதுவும்  இல்லாதவன். எந்த இடமும் சொந்தம் இன்றி  அலைந்து கொண்டே இருப்பவன்.  அடுத்த வேளையைப்  பற்றி கவலை இல்லாதவன். பேர் புகழ் நாடாதவன்.

காவி உடை, தாடி, மணி மாலைகள், உடலில் சின்னங்கள் மட்டுமே  ஒருவனை ஞாநியோ துறவியோ ஆக்காது. அவன் பேர் புகழ் தேடாதவன். பேச்சைக் குறைத்தவன்.  அன்பால், கருணையால்  அனைவரையும் பேதமின்றி விரும்புபவன். அவனே கடவுளின் வாரிசு. நல்லதே நினைந்து நல்லதே புரிபவன். நல்லதே  எண்ணி  பேசுபவன்.  நல வாழ்வுக்கு அவன் ஒரு எடுத்துக் காட்டு.  ஆசா பாசங்கள்  அற்றவன்.

இந்த மாதிரி யோகிகளை,  துறவிகளை  நாம்  எங்கே  இப்போது பார்க்கிறோம்?. வெளிநாடுகளுக்கு பறக்கும் சுகவாசம் தேடும் பேச்சாளி களை மட்டுமே  காண்கிறோம்.  பணத்துக்கு  மதிப்பு வைத்து  காசு  பார்க்கும் இடத்தில் கருணை செத்துவிடும்.

அர்த்த  (பொருள் மேல்  பற்று)  காம  (விஷயானுபவங்களில் நாட்டம்)  கொண்டவன் என்ன  படித்தும்,  கற்றும், கேட்டும்,  ஞானியாக முடியாது. அவனிடம்  தர்மம் (நேர் வழி)  மோக்ஷம் (ஆன்ம  விடுதலை) காணாமல் போய் விடும். ஏன்  என்றால் இந்த  இரண்டையும்  பின் பற்றி  தேடுபவனை  சமூகம் ஏற்காமல்  கேலி செய்து,  ஏசுகிறது.

சந்தோஷம்  என்பது  செல்வத்தாலோ,  உற்றார்  உறவினரிடமிருந்தோ கிடைக்கும் வஸ்து இல்லை. ஒரு நல்ல குரு ஒருவரிடமிருந்தே   இவற்றின் மகிமை  அறிய முடியும். தெளிவு  பெற முடியும்.

சன்யாசம்  தியாகத்தை அடிப்படையாகக் கொண்டது  என்று  புரிகிறதா? அனுபவம் என்பது  தன் கடின சுய முயற்சி,  குருவின்  வழிகாட்டல் இவற்றின் மூலமாகவே கிடைப்பது.  பிரம்மச்சரியம், க்ரஹஸ்தம், வானப்ரஸ்தம் என்ற  மூன்று நிலைகளில்  அனுபவம் பெற்றவன் கடைசியில் முதிர்ச்சி பெற்ற  சந்நியாசியாவது  சம்பிரதாய  முறை.  இதற்கு அதிக காலம்  தேவைப் படும். அந்த கால மனிதர்கள் 100 வயது குறைந்த பக்ஷம்  வாழ்ந்தவர்கள்.  உணவை லக்ஷியம் செய்யாமல்   வனவாசம் உபவாசம் இருந்தவர்கள். அதிகமாக  பாடுபட்டவன் மட்டுமே  பிரம்மச்சாரியாக இருந்து குருவின் மூலம்  சந்நியாசியாக மாறுவான்.   இது டபுள் ப்ரோமோஷன் போல. சன்யாசத்திற்கு  வேத ஞானம்,  ஆத்ம  ஞானம்  அவசியம். குடும்ப  பொறுப்பு போன்றவற்றிலிருந்து  தப்ப சன்யாசம் கொள்பவன் போலி.   ஸ்ரீ நாராயண  தர்மம்  10வது  காண்டத்தில் சன்யாசியின்  லக்ஷணங்கள் பற்றி  மலையாளத்தில்  நாராயண குரு  சொல்கிறார்.   உடல்  மனம்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தவன் எளிதில் சன்யாசியாக முடியும். வெறும் வேத ஞானம் மட்டுமே  உதவாது. பெண்மையை  மதிப்பவன் சந்நியாசி, வெறுப்பவன்  அல்ல.  பெண்களும் சந்நியாசி யாகலாம்.  அநித்தியம்  நித்யம் குண பேதங்கள், வித்தியாசங்
களை  நன்கு உணர்ந்த,  உலக  ஆசா  பாசாங்களை உறவு பந்தங்களை அறுத்தெறிந்த  வித்தியாசமற்ற, அபேத,  ஞானம், திட சித்தம்  உடைய பெண்  சன்யாசியாக போற்றப் படுவார். ஆண்  பெண் பேதம்  சந்யாசத்தில் இல்லை. ஆசார்யன், குரு  ஆகியோர்  ஆசியோடு  தீக்ஷை பெற்றபின்  சன்யாசம் கொள்வது ஒன்றே முறை. உயிருள்ள  ஜீவன்கள்  அனைத்தும் ஒன்றே  என்ற அன்போடு  கருணையோடு  நெருங்குபவரே  சந்நியாசி.

 சந்நியாசி  முதலில்  குருவின் அனுமதி பெற்று,  ஹோமங்களில்  பரிசுத்தப் படுத்திக்கொண்டு, முண்டனம் செய்து, குருவை  வலம் வந்து சரணாகதி அடைந்து கரம் கூப்பி காவி வஸ்த்ரம் பெற்று  கமண்டல ஜல பாத்ரம்  வாங்கிக்கொண்டு, குருவைப்பணிவோடு  பின் தொடர்பவன்.  இது  மடங்களில்  அனுசரிக்கப்படுவது. பாரம்பரியமாக வரும்  சடங்கு.   அவனுக்கு என்று அன்றாட  நித்ய கர்மாக்கள் உண்டு.  த்யானம், பிரார்த்தனை, பூஜை, உபவாசம், ப்ராணாயமம் என்று குரு வகுத்த  வழியில் செல்பவன்.  மடத்திலோ,  ஆலயங்களிலோ , கடற்கரையிலோ, நதிக்கரையிலோ,குகையிலோ, பிரம்மச்சாரி எவனுடனாவதோ வசிப்பவன்.  மனக்கட்டுப்பாடின்றி எவர் வீட்டிலும்  வசிக்க கூடாது.  ஒழுக்கக் குறைவுக்கு இடம் கொடுக்கக் கூடாது.

மூன்று நாளுக்கு மேல் எங்கும்  ஒரே இடத்தில் தங்கக் கூடாது.  பந்தம் எதுவும்  ஏற்படக் கூடாது.  மற்றவர் நலனுக்காகவே  தன்னை  அற்பணிப்பவன்  தான்  சந்நியாசி.  லோக க்ஷேமம், ஜகத் ரக்ஷகம் போன்றவையில்  ஈடுபடுத்திக் கொள்பவன்.  தன்னலமின்றி  உலக நன்மைக்காக உழைப்பதில் உண்டாகும்,  தியாக மனப்பான்மையில் உண்டாகும்,  ஒளி  அகத்தில் நிரம்பில் முகத்தில் பிரதிபலிக்கும்  பிரகாசம் வீசி திகழ்பவன்.  அவனிடத்தில் பாம்பு  புலி சிங்கம் கூட  அன்போடு பழகும். ரமணர்  பரமாச்சார்யர்  ராமகிருஷ்ணர்  போன்றவர்களை இப்படிப் பார்த்திருக்கிறோமே. எதற்காக  அவர்கள்  படங்களை  பூஜை   செய்கிறோம். அதிலும் அவர்கள்  ஜீவசக்தி  உண்டுஎன  அறிந்தவர்கள் பலர்  அனுபவம் பற்றி  அறிகிறோம்.  அவர்களிடம்  ''தான்''  என்ற  எண்ணமோ , அகம்பாவமோ,  கர்வமோ  அணுவளவும் நெருங்காது. சன்யாசிக்கு  உயிர் மேல்  பாசம் இல்லை.  எதனிடமும் பயம் கிடையாது. உடலை காப்பாற்ற வேண்டும்  என்ற  எண்ணம்  ஏற்படும்போது  தான்  பயமே  உண்டாகும்.

சதாசிவ ப்ரம்மேந்த்ராவின் ஒரு கை  முஸ்லிம் ஒருவனால்   வெட்டப்பட்டு  துண்டாகி கீழே விழுந்தும்  அந்த நினைவே இன்றி  காவேரி கரை நோக்கி  போய்க்கொண்டிருந்தார். வெட்டினவன்  அந்த  துண்டான கையை  கொண்டு வந்து கொடுத்ததும்  அதை ஏதோ சட்டையில்  பட்டன்  மாட்டிக் கொள் வதைப் போல்  பொருத்திக்கொண்டு நடந்தவர்.  இதை  சுவாமி சிவானந்தா எழுதி உங்களுக்குச்  சொல்லி இருக்கிறேனே.  பிறப்பு  இறப்பு எதுவுமே  லட்சியம் இல்லாதவன்.  எல்லாவற்றையும்  விடுபவனே சந்நியாசி என்று சொன்னாலும்  இதில்  ஞானம்,  யோக பயிற்சி,  சுத்தமாக இருப்பது, பண்பாடு, சம்ப்ரதாயம்  இதெல்லாம் தான் . குருவிடம்  இருந்து கற்று அறிந்ததை  விடாமல் கடைப் பிடிப்பவன் சந்நியாசி. சிஷ்யன் இவற்றை விடமாட்டான். விடக்கூடாது. 

ஆத்மா ஞானியிடம் கோபம், ஆத்திரம்,பொறாமை, எதிர் பேச்சு, பணம், உடைமை, ஆகியவை நெருங்காது. உயிர் வாழ மட்டுமே  ருசியற்ற குறைந்த உணவு  உண்பவன். ஸ்தித ப்ரஞன், ஜிதேந்த்ரியன். ஆறு குண்டலி ஸ்தானங்களை கட்டுக்குள் கொண்டவன்.  சமாதியோகம்  அறிந்தவன். ஸ்வதந்திரன் . போதுமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...