மார்ச் 21, இன்று விசேஷ நாள்.--- J.K. SIVAN
இன்று .பங்குனி உத்திரம் . பங்குனி மாதம் பவுர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் சேர்ந்து வரும் தினம் . ஸ்ரீ சுப்பிரமணியனுக்கு உகந்த விசேஷ நாள். தமிழ் 12 மாதங்களில் பங்குனி கடைசி 12வது. உத்திரம் 27 நக்ஷத்ரங்களில் 12வது. முருகனுக்கு 12 கரங்கள். பன்னிரு விழிகள். சோமாஸ்கந்தனின் அப்பா சுந்தரேஸ்வரருக்கும் அம்மா மீனாட்சிக்கும் மதுரையில் கல்யாண நாள். மீனாட்சி சுந்தரர் கல்யாணம் பண்ணிவைத்த விஷ்ணு ராமனாக அவதரித்து சீதையை மணந்த நாள். சுப்பிரமணியருக்கு தெய்வயானைக்கும் கல்யாண நாள். அரங்கனாக ஆண்டாளோடு கலந்த நாள். கிருஷ்ணனின் நண்பன் அர்ஜுனன் பிறந்த நாள். அர்ஜுனனுக்கு பல்குணன் என்று பெயர் பங்குனிக்கு பல்குனி என்று பெயர். தர்ம சாஸ்தா ஐயப்பன் பிறந்த நாள். இன்னும் என்ன சொல்லவேண்டும் ? என்ன பொருத்தம், இசைந்த பொருத்தம். முருக உபாசகர்கள் உபவாசம் இருக்கும் நாள். சிவபக்தர்களுக்கு கல்யாண சுந்தர விரதம். இன்று ஹோலி பண்டிகை வேறு எல்லா இடங்களிலும் கலர் பொடிகள் தூவப்பட்டிருந்தது.
இன்று திருப்பூர், ஈரோடு, சேலம்,உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் சென்னையை இணைக்கும் பெருஞ்சாலைகளில் கொளுத்தும் வெயிலில் பயணம் செய்தபோது வழியில் தென்பட்ட மலைக்கோயில்கள்,சிறு சிறு ஆலயங்களில் சிறப்பாக விழாக்கள் ஏற்பாடு நடப்பதை கவனித்தேன். வழியெல்லாம் சில இடங்களில் சப்பரம், குட்டித் தேர்கள். காவடிகள் .அறுபடை வீடுகளில் முருகனுக்கு விசேஷமாக திருநாள். பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ திரண்டு வரும் நாள்.
திண்டுக்கல் மாவட்டமும், அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, சைவ சமயத்தவர்கள், ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று காவிரி நதியில் தீர்த்தம் (புனித நீர்) கொண்டுவந்து, பழனியில் போகரால் நிறுவப்பட்ட நவபாஷாண முருகனுக்கு செலுத்துவார்கள். பங்குனியில் வெயில் கடுமை கேட்கவேண்டுமா? .அதுவும் இந்த வருஷம். நவபாஷாண பழனி முருகன் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி நதியின் நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது பங்குனி உத்தரம் திருவிழா.
No comments:
Post a Comment