ஐந்தாம் வேதம் J K SIVAN
மஹா பாரதம்.
'' மந்த்ராலோசனை ''
இதுவரை அமைதியாக அங்கு வீற்றிருந்த கிருஷ்ணன் மேல் அங்கியால் நெற்றியை துடைத்துக் கொண்டான். அவனது பார்வை சஞ்சயனை நோக்கி இருந்தாலும் அவனுக்கும் பின்னே, நீண்ட பரவெளியில் நடக்கப்போகும் யுத்தத்தில், அதன் விளைவைப் பற்றிய தொலை நோக்கு பார்வையாக அமைந்ததை அவர்கள் எவருமே அறிய முடியவில்லை.
''சஞ்சயா, பாண்டவர்களும், கௌரவர்களும் ஏன் எல்லோருமே, சந்தோஷமாக சீரும் சிறப்புடனும் வாழவேண்டும் என்பதே என் விருப்பம். சமாதானம் ஒன்றே திருதராஷ்ட்ரனின் விருப்பம் என்று அறிவேன். ஏனென்றால் அவனுக்கு வேறு வழி கிடையாது. நான் கவனித்த வரையில் யுதிஷ்டிரன் எந்த சந்தர்ப்பத்திலும் நேர்மைக்கு, நியாயத்திற்கு புறம்பாக எதுவுமே செய்யவில்லை. பொறுமையாக, வந்த துன்பம் அனைத்
தையும் ஏற்று விதி விட்ட வழியின் படி நடந்து சொன்ன வார்த்தையைக் காப்பாற்றியவன். பொறுத்தார் பூமி ஆள்வார் என்று சொல்கிறோமே . பொறுத்திருந்த யுதிஷ்டிரன் பூமியை ஆளும் நேரம் வந்துவிட்டது என்று எனக்கு தோன்றுகிறது.
எது நல்லது, எது தீயது என்று என்னைக் காட்டிலும் நீ அறிவாய் என்றிருந்தால், சஞ்சயா, நீ அதை திருதராஷ்டிரனுக்கு எடுத்துச் சொல். துரியோதனனைத் திருத்த உன்னால் முடியுமென்றால் அதை முயற்சி செய்யேன். பசி எடுத்தவன் உண்கிறான். தாக மெடுத்தவன் நீர் பருகிறான். உண்பது, பருகுவது போன்ற செயல்கள் தேவைப்பட்ட திருப்தியை அளிக்கிறது. செயலை விட மேலானது ஒன்று இருந்தால் சொல். அது வெறும் பயனற்ற சொல்லாக தான் இருக்கும். ஒரு நியதிக் குட்பட்டு செயல் புரியும் காற்று, சூரியன் சந்திரன் எல்லாமே நமக்கு தேவையான காலை, மாலை, பருவகாலம், மழை, உஷ்ணம் அனைத்தையும் அளிக்கிறது. சமூகம் நால்வகையாக பிரிக்கப் பட்டு ஒவ்வொரு தொழிலும் அதைச் சார்ந்தவருக்கு என்று வகைபடுத்தி இருக்கிறது. ஒரு க்ஷத்ரியன் யுத்தம் புரியாமல் இருக்க முடியுமா? நேர்மையில், சத்தியத்திற்கு புறம்பாக தனது அதிகாரத்தை செலுத்துவது தர்மமா? பிறர் பொருளுக்கு ஆசைப்படுவது அழகா? இப்படிப் பட்ட செயலால் தான் யுத்தம் நேருகிறது. திருதராஷ்டிரன் இப்போது அனுபவிப்பது பாண்டவர்களின் செல்வத்தை. இருட்டில் சொந்தக்காரன் அறியாமல் திருடினாலும், பகலில் கண்ணெதிரே கொள்ளையடித்தாலும், இரண்டும் ஒன்றே. தண்டிக்கத் தக்கது. பாண்டவர்களின் பங்கு நிர்ணயிக்கப் பட்டது தானே. அதை ஏன் துரியோதனன் பறித்துக்கொள்ள வேண்டும்? தனக்குரிமையான பிதுரார்ஜித சொத்து வெளியேயிருந்து சேகரிக்கப் பட்டதை விட உயர்ந்தது. மேலானது. நீ இதெல்லாம் திருதராஷ்டிரனுக்கும் துரியோதனனுக்கும் எடுத்துச் சொல். அனைவர் எதிரிலே, அரசாணி மண்டபத்தில், அபலையாக த்ரௌபதி அலறினபோது பீஷ்மன் முதல் அனைவரும் பார்த்துக் கொண்டே தானே இருந்தார்கள். பேராசை, பெருநஷ்டத்தில் தான் முடியும். இப்போது ஒற்றுமை சமாதானம் எல்லாம் பேசும் திருதராஷ்டிரன் அப்போது இதை தடுத்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன். விதுரனைத் தவிர எவரும் இதை தடுக்க முயலவில்லை. சகுனி திரௌபதியை வைத்து ஆடு என்று சொல்லும்போது திருதராஷ்டிரன் ஏன் தடுக்கவில்லை? கர்ணன் தகாத சுடு சொல்லை திரௌபதியிடம் அவள் கணவர்கள் முன்னே வீசியபோது யாருமே தடுக்க வில்லையே. துச்சாதனன் திரௌபதியை மான பங்கப் படுத்த அவள் முடியைப் பிடித்திழுத்து வந்த போது சும்மா இருந்த திருதராஷ்டிரன் இப்போது சமாதானம் பேசுவது காலம் கடந்த செயல்.
சஞ்சயா, நானே நேரில் ஹஸ்தினாபுரத்துக்கு வரலாம் என்று இருக்கிறேன். பாண்டவர்களுக்கான உரிமையை, அவர்கள் பக்கத்து நேர்மையை, நீதியை எடுத்துச் சொல்கிறேன். சமாதானமாக எல்லாம் முடிந்தால் எனக்கு தான் முதலில் சந்தோஷமாக இருக்கும். ஏனெனில் கௌரவர்கள் எவரும் உயிரிழக்காமல் தப்புவார்கள். நீதி நேர்மை, நியாயம் எல்லாம் நான் எடுத்துச் சொன்னால் திருதராஷ்டிரன் மகனுக்கு காதில் ஏறுமோ பார்க்கலாம். நான் சமாதான பேச்சுக்கு வரும்போது எனக்கு தக்க வரவேற்பு கிடைக்குமோ என்பதே தெரியவில்லை. இந்த முயற்சியில் நான் வெற்றி பெறாவிட்டால், அர்ஜுனன் பீமன் ஆகியோரால் கௌரவர்கள் அழிவது என்னவோ நிச்சயம். கர்ணன் துச்சாதனன், முதலானோர் சூதாட்டத்தில் யுதிஷ்டிரன் தோற்றபோது பேசிய பேச்சுகளுக்கு பீமன் அர்ஜுனன் ஆகியோர் தக்க சமயத்தில் பதில் அளிப்பார்கள்.
துரியோதனன் ஒரு தீய உணர்ச்சிகளைப்பெருக்கும் சக்தி கொண்ட விஷ மரம். அதன் தண்டு கர்ணன். சகுனி அதன் கிளைகள், அதில் உண்டாகும் கொடிய பூக்கள், காய்கள் தான் துச்சாதனன். அடி மர வேர் திருதராஷ்டிரன்.
யுதிஷ்டிரனோ ஒரு நேர்மை, நியாய, நீதி, அடிப்படையில் விளைந்த மரம். அதன் தண்டு அர்ஜுனன். பீமன் தான் கிளைகள், நகுல சகாதேவர்கள் பூவும் காய்களும். அடிவேர் நான்,மற்றும் அறநெறி படைத்த ரிஷிகள், முனிவர்கள்.
திருதராஷ்டிரனும் அவன் மக்களும் ஒரு வனம். அதில் உலவும் சிங்கங்கள் புலிகள் தான் பாண்டவர்கள். சிங்கம் புலி இல்லை என்றால் காடு அழியும். காடின்றி சிங்கம் புலி வாழ இயலாது. ஒன்றை ஒன்று சார்ந்தது. பாண்டவர்கள் திருதராஷ்டிரனை இன்னும் கூட மதிக்கிறார்கள். எனவே சமாதானத்துக்கும் சண்டைக்கும் இரண்டிற்குமே பாண்டவர்கள் தயார். திருதராஷ்டிரன் எதை விரும்புகிறான்? நான் சொன்னதை எல்லாம் எடுத்துச் சொல்.''
கிருஷ்ணனின் பேச்சு, அதில் இருந்த சாதுர்யம், நீதி நேர்மை, நியாயவாதம் எல்லாமே எங்கும் எதிரொலித்தது. ஆம் என்று மரங்கள் கிளைகள் ஆடின, இலைகள் படபடத்து கை தட்டின, பறவை விலங்கினங்கள் மனமொப்பி ஆதரவளிப்பது போல் அவற்றுக்குரிய சப்தஜாலங்களால் ஆமோதித்தன. விதி சிரித்தது.
சஞ்சயன் விடை பெற்று சென்றான்.
No comments:
Post a Comment