Sunday, March 24, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்     J  K  SIVAN 
மஹா பாரதம்                                                                                                                                
                                                                                                                             அதிர்ச்சி மேல்  அதிர்ச்சி  

விராடன் தனது மகன் உத்தரனின் வீரத்திலும்  அவனுக்கு  எங்கிருந்தோ வந்து உதவிய  ஒரு தேவ புருஷன் யாராக இருக்கும் என்று ஹேஷ்யத்திலும் இருந்த போது, அவனெதிரே  தேவ புருஷனாக வந்து உதவிய  ப்ரஹன்னளா, உத்தரையின் கைகளில்  தான் கொண்டுவந்த பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமா, துரியோதனன், கர்ணன், ஆகியோரின் வஸ்த்ரங்களை அளித்தாள்.  தனது சகோதரனின்  உத்தரன் வீரத்தி மெச்சி, உத்தரையும் அதை பெருமையோடு பெற்றுக் கொண்டாள் .

மூன்றாம் நாள்  காலை, பாண்டவர்கள்  ஐவரும் தங்களது வெண்ணிற ஆடைகளோடு, ஆபரணங்களோடு  விராடன் அரண்மனையில் நுழைந்தனர். அஞ்ஞாத வாச  காலம் முடிந்தாகிவிட்டது.  அரசர்கள் அமரும் ஆசனங்களில் அமர்ந்தனர்.

விராடன் சற்று நேரத்தில் வந்தவன் அவர்கள் அரசர்கள் ஆசனங்களில் அமர்ந்திருப்பது கண்டவன் மிக்க ஆத்திரமடைந்தான்.  கங்க பட்டரே, என்ன இது. என்னோடு பகடை ஆடும்  நீர், எப்படி அரசர்கள் அமரும் ஆசனத்தில் அமரலாம். இதென்ன  அரசர்கள் ஆடை ஆபரணத்தோடு வந்திருக்கிறீர்,  ஆச்சர்யமாக இருக்கிறதே  என்ன இதெல்லாம்? ''

அருகே இருந்த உத்தரன்  சிரித்துக்கொண்டே  ''அப்பா,   இவர்  இந்திரனுக்கு சமான  ஆசனத்தில் அமர வேண்டியவர்.  இவர்   உங்கள் அரசவையில் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருப்பது உங்களுக்கு பெருமையான விஷயம். உலகே புகழும் பாண்டவர்களில் மூத்தவர், யுதிஷ்டிர சக்ரவர்த்தி, தர்ம, நீதி தேவதையின் அவதாரம். இவர் உங்கள் பணியாளாக  கங்க பட்டராக ஒரு வருஷ காலம் இங்கே இருந்தவர். இன்று உங்கள் ராஜ சபையில்  யுதிஷ்டிரர்  ஒரு சாதாரண அரசனின் ஆசனத்தில் அமர்வது இந்த தேசத்துக்கே பெருமை வாய்ந்த ஒரு விஷயம்'' என்றான்.

"என்ன  சொல்கிறாய் உத்தரா நீ.   ஆஹா  என  பாக்யம் எனக்கு.  இவர்  தர்ம புத்திரன் என்றால், பாண்டவர்கள் இணை பிரியாதவர்கள் ஆயிற்றே, அவரது மஹா சக்தி வாய்ந்த  பலம் மிகுந்த பீம சேனன்  எங்கே?  மகா வீரர் வில் விஜயன் அர்ஜுனன் எங்கே, நகுல சகாதேவர்கள்  யார்?  அவர்களைவரின் சஹ  தர்மினி திரௌபதி எங்கே? என்றான் விராடன்.  

 ''அவர் அருகிலே  இருப்பவர்களை  கவனிக்கவில்லையா?  
 விராடன்  அர்ஜுனன் அருகில் சென்று வணங்கினான்.   
''எனக்கு  பாண்டவர்களிடம் பரம பக்தி.  ப்ரியம். துரியோதனாதியரிடம்  சூதாட்டம் ஆடி  தோற்ற பின் அவர்கள் வனவாசம் சென்றார்கள்  என்று மட்டும் தான் அறிவேன். எனக்கு அவர்கள் நினைவு அடிக்கடி வரும். எங்கிருக்கிறார்களோ? அவர்கள் க்ஷேம லாபம் எவ்வாறு இருக்கிறதோ என்று  அடிக்கடி யோசிப்பது மட்டும் உண்டு.  விவரங்கள் யார்  மூலமும்  ஒன்றுமே  தெரியவில்லையே?'' என்று  கேட்டான்.

அர்ஜுனன்  பதிலளித்தான். 
'அரசே,  இதோ  உங்கள் எதிரில்  ஆசனத்தில் அமர்ந்திருக்கும்  மகா பலசாலி வல்லபன் தான் பீமசேனன், உங்கள் அரண்மனை சமையல் காரனாக இங்கு இருந்தவன்.எவராலும் வெல்ல முடியாத சுத்த வீரன். கீசகன் செய்த தவறுக்கு அவனை கந்தர்வனாக வந்து ஒரு இரவு  சில நிமிஷங்களில்  கூழாக்கியவன் பீமசேனனே.

" உங்கள்  அரண்மனை அச்வங்கள், பசுக்கள்  ஆகியவற்றை பராமரிக்கும்  தொழிலில் பணி  புரிந்தவர்கள்  இந்த  நகுல சகாதேவர்கள் தான் ''

'' நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு  ஏவல்  புரிந்த பணிப்பெண் தான் பாண்டவ குல தெய்வம்  திரௌபதி.  உங்கள் அரசிக்கு  சைரந்திரி. இவள் காரணமாகத் தான் கீசகன் உயிர் நீத்தான்.  அவனைச் சேர்ந்தவர்களும்  மயானத்தில் உயிரழந்தார்கள்''
அதற்குள்  உத்தரன் குறுக்கிட்டு  ''அப்பா,   இவ்வளவு நேரம் உங்களோடு பேசிக்கொண்டு உங்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தவர்  தான் நான் சொன்ன அந்த தேவ புருஷன். அர்ஜுனன். உங்கள் குமாரி உத்தரைக்கு நாட்யம் சொல்லிக்  கொடுத்தும்,  எனக்கு தேரோட்டியாக சைரந்திரியால் அனுப்பப்  பட் டவரும்  முதலில் எனக்கு தேரோட்டியும், பிறகு  நான்  மிரண்டபிறகு,  என்னைத்  தேரோட்டியாக  வைத்துக்கொண்டு என்னையும் குதிரைகளையும் காப்பாற்றியதோடு, தனி ஒருவனாக  அனைத்து  கௌரவ சேனையையும்  எதிர்த்து   ஓட வைத்து நமது பசுக்களை  காத்து,  உத்தரை கேட்டதற்காக  பீஷ்ம, த்ரோண,, கர்ண, துரியோதன மகா ரதர்களின் வஸ்த்ரங்களையும் பறித்து,  பரிசாக கொண்டுவந்த  இணையற்ற வீரர் ''

''ஆஹா  என்ன பாக்கியம் செய்தவன் நான். அதே சமயம் என்ன மாபெரும் தவறுகள் செய்தும் விட்டேன்'' என்று நாக்குழறினான்  விராடன்.

'' மகனே   பாண்டவர்களை கௌரவிப்பதில்  ஒரு கணமும் இனி தாமதிக்க கூடாது.  நான் செய்த பிழைக்கு  பிராயச்சித்தமாக  நமது உத்தரையை  அர்ஜுனனுக்கு மணமுடிக்க எண்ணம் வந்து விட்டது''  என்றான்  விராடன்.

"உத்தரா, இதையும் கேள்.   நான்  த்ரிகர்த்தர்களிடம் சிறைப்பட்டபோது எளிதில் என்னை  அவர்களிடமிருந்து மீட்டு என் உயிரைக் காப்பாற்றியவர்  பீமசேனன். இந்த மத்ஸ்ய தேசத்தின் மானம் காத்தவர்கள்  பாண்டவர்கள்.  விராடன்  யுதிஷ்டிரர் அருகே கை கட்டி நின்று

' யுதிஷ்டிரரே,  நான்அறியாமல் செய்த பிழைகளைப் பொருட்படுத்தாமல்  என்னை மன்னித்து அருள வேண்டும். இந்த நாட்டின் அரசுரிமை ஏற்று எங்களை ஆண்டருள வேண்டும். என்னுடைய  செங்கோல் இதோ தாங்களிடம் சமர்ப்பிக்
கிறேன்'. உங்கள் ஆணைப்படியே  இனி இங்கு எதுவுமே  நடக்கும் 'என்று விராடன் யுதிஷ்டிரன் எதிரே கைகட்டி வாய் பொத்தி நின்றான்.

''விராடா, எங்கள்  அஞ்ஞாத வாசம் எங்கு கழிக்கவேண்டும் என்று ஆலோசித்து நாங்கள் தேர்ந்தெடுத்தது உனது மத்ஸ்ய தேசம். இங்கு எங்களை ஒருவருஷ காலம் ஆதரித்து எங்கள் விரதம் வெற்றியோடு நிறைவேற உதவியவன் நீ. நாங்கள் தான் உனக்கு நன்றிக் கடன் பட்டவர்கள்'' என்றான் யுதிஷ்டிரன்.

விராடனின் அன்புப் பிடியில் திணறினர்  அர்ஜுனனும் பீமனும். நகுல சகாதேவர்களை அணைத்து  உச்சி முகர்ந்தான்.

''யுதிஷ்டிர மகாராஜா,  தெய்வங்களின் நல்லாசியால்  ஒரு ஆபத்துமின்றி  பன்னிரண்டு வருஷ வனவாசம் நன்கு முடிந்து  பதிமூன்றாவது வருஷ அஞ்ஞாத வாசம் இந்த மத்ஸ்ய தேசத்தில் எங்களுக்கு உதவியோடு அமைந்ததற்கு  நன்றி சொல்ல வேண்டியவன் நான் தான். எப்படி அதை தெரிவிப்பேன் என்று  தெரியவில்லை பிரபோ, என் மகள் உத்தரையை அர்ஜுனனுக்கு அளிக்க  உத்தேசம். தாங்கள் ஆசியோடு ''

யுதிஷ்டிரன் அர்ஜுனனை நோக்க அர்ஜுனன்  ''விராட மகாராஜா, தங்கள் பெண் உத்தரையை என் மருமகளாக ஏற்கிறேன். இந்த மத்ஸ்ய தேசம் எங்கள் உறவு தேசமாக இனி இருக்கும்''

''அர்ஜுன மகாராஜா,  தாங்கள் என் மகளை மனைவியாக ஏற்க  நான் கோரிய  விண்ணப்பம் தங்கள் விருப்பத்தைப் பெற வில்லையா?

" விராடா,  ஒரு வருஷ காலம், உங்கள் பெண் உத்தரையின் அந்தப்புரத்தில் அவளோடு  வாழ்ந்தவன் நான். அவளை என் பெண் போல பாதுகாத்தவன். அவளுக்கு குருவாகவும் இருந்தவன்.  எனவே  அவளை நான் மனைவியாக ஏற்பது முறையுமில்லை.  அவளை இன்னும் என் மகளாக  பாவித்து என் மகன் அபிமன்யுவிற்கு அவள் ஏற்ற மனைவி என்று மனதில் எப்போதோ நான்  திட்டம் போட்டாயிற்று''

" விஜயனை சம்பந்தியாகப் பெற  நான் அதிர்ஷ்டசாலி தான். அவசியம் உடனே இந்த திருமண ஏற்பாடுகள் நடக்கட்டும்'' என்றான் விராடன்.

கிருஷ்ணனுக்கும் மற்றவர்களுக்கும் அழைப்பு பறந்தது. நாலா பக்கமும்  உத்தரை அபிமன்யு விவாக செய்தி தெரிவிக்கப் பட்டது.

விராடனின் ஒரு நகரமான  உபப்லாவியம் என்ற அழகிய பிரதேசம். அதை பாண்டவர்கள் வசம் ஒப்புவித்து  ஏற்பாடுகள் ஜரூராக நடந்தது.  துவாரகையிலிருந்து கிருஷ்ணன், சுபத்ரா, அபிமன்யு ஆகியோர், காசிராஜன், துருபதன், சாத்யகி, யுயுதானன், க்ரிதி வர்மன்,மற்றும் அநேக  பாண்டவ நண்பர்கள் வந்துவிட்டனர்.  கிருஷ்ணன் பலராமனோடு அவர்கள் தந்தை  வசுதேவரும் வந்திருந்தது  அனைவரும் அவர்களை வணங்க வழி செய்தது.

கோலாகலமாக  வாத்ய கோஷ்டிகள் முழங்கியது.  மத்ஸ்ய தேசமே ஒரு மூலை  முடுக்கு விடாமல் கோலாகல விழாக்கோலம் பூண்டது. கிருஷ்ணனே  ஏற்பாடுகளை முன்னின்று நடத்த  உத்தரை மணக்கோலத்தில் வந்து அனைவரையும் வணங்க, விராடன் அபிமன்யுவிற்கு  ஏராளமான பசுக்களை, யானைகளை, திரவியங்களை பரிசாக வழங்க, அனைவரும் நர நாரயணர்களை வணங்க, அவர்கள் ஆசி பெற,  உத்தரை அர்ஜுனன் மருமகளாக, அபிமன்யுவின் மனைவியானாள் .

வந்திருந்த அரசர்கள் அனைவரும் பேசிய ஒரே பேச்சு  பாண்டவர்கள் அனுபவித்த வனவாச அஞ்ஞாத வாச துன்பங்களும் அர்ஜுனன் கௌரவ சேனையை விரட்டிய  மகாத்மியமும் தான்.  ஒருபக்கம் கிருஷ்ணன், மறுபக்கம் அவன் மகன் பிரத்யும்னன் எல்லோரையும் வரவேற்று கவனித்தனர். கிருஷ்ணனின் பேச்சை அனைவரும் சுவாரஸ்யமாக கேட்டு மகிழ்ந்தனர். ஏனென்றால் கிருஷ்ணனும் பாண்டவர்களைப் பற்றியே பேசினான்.

''நண்பர்களே, உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தது  தான்.  சகுனி  யுதிஷ்டிரனை  சூதாட்டத்தில் தோல்வியுறச் செய்து,  அவர்களை நிர்கதியாக பதிமூன்று வருஷங்கள் வாடச் செய்தான். துரியோதனன் சதி இது. கொடுத்த சத்தியத்தை பிழையின்றி பாண்டவர்கள் நிறைவேற்றி விட்டார்கள். கஷ்டங்களை எதிர்கொண்டு வென்றார்கள்.  இனி கௌரவர்கள் பாண்டவர்கள்  செய்யவேண்டியதென்ன என்று நாம் சிந்திக்க வேண்டும். துரியோதனனுக்கும் யுதிஷ்டிரனுக்கும்  எது நல்லது  என்று யோசிப்போம். மஹா பெரிய சக்ரவர்த்தியான யுதிஷ்டிரன் மற்றவர் பொருளுக்கோ உடைமைக்கோ ஆசைப்படுபவன் அல்ல. ஒரு சிறு தேசமாகவாவது அவர்கள் திரும்பப் பெறவேண்டாமா?  கௌரவர்களை வென்று முழு பாரதத்தையும்  கைப்பற்றுவது என்பது பாண்டவர்களுக்கு மிகவும் எளிது. ஆனால் அவர்கள் அப்படி செய்யக் கூடியவர்கள் அல்ல. யுத்தத்தில் அவர்களை எவராலும் வெல்ல முடியாது என்று பலமுறை நிரூபித்தவர்கள். பாண்டவர்களை ஒழிக்க, அழிக்க  சிறு பிராயம் முதலே துரியோதனன் சகுனி கர்ணன் போன்றோர் போட்ட திட்டங்கள்  இன்றுவரை வெற்றி பெறவில்லை.    என்ன செய்யவேண்டும் என்று  தனித் தனியாகவும் சேர்ந்தும் யோசித்து சொல்லுங்கள்.  துரியோதனன் மனதில் என்ன எண்ணம்  என்று அறியவேண்டும். யாராவது நம்மில் ஒருவர் நேரில்  சென்று அதை அறிந்து வரவேண்டும்.  நாட்டை  பாதி கௌரவர்களும் பாதி பாண்டவர்களும் ஆண்டு சகோதரர்கள் பூசலின்றி  அமைதியாக வாழலாமே.  உங்கள் அபிப்ராயம் சொல்லுங்கள்.  காத்திருக்கிறேன்'' என்றான் கிருஷ்ணன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...