ஐந்தாம் வேதம் J K SIVAN
மஹா பாரதம்
சண்டை வேண்டாம் , சமாதானம் தேவை
பலராமன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசினார். ''கிருஷ்ணா, எல்லோர் அபிப்ராயம் என்ன என்று கேட்டாயே, கௌரவர்கள் பக்கம் என்ன எண்ணம் அவர்கள் மனதில் ஓடுகிறது என்பது தெரியாமல் எப்படி அபிப்ராயம் சொல்வது?
எனக்கென்ன தோன்றுகிறது என்றால், இருபக்கமும் பாரபட்சம் இன்றி, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் மதிப்பிற்குரிய, சுமுகமாக நியாயம் எடுத்துச் சொல்லக் கூடிய, அதே நேரம் பராக்ரமமும் பலமும் கொண்டவன், ஒருவன் நேரிலே சென்று, சகோதரர்கள் இருவருக்கும் சம பங்கோடு அரசுரிமை பெற்று வரவேண்டும். இல்லையெனில் யுத்தம் விளையும். இருபுறமும் சேதம் அபரிமிதமாகும்' என்று அழுத்தமாக எடுத்துரைக்க கூடியவனாக இருக்க வேண்டும்.''
நீங்கள் எல்லோரும் கிருஷ்ணன் சொல்வதைக் கேட்டீர்கள். கிருஷ்ணன் இருபக்கமும் மதிக்கப்படுபவன். பாண்டவர்கள் முழு அரசுரிமையும் விரும்பவில்லை,கேட்கவுமில்லை. சகோதரன் துரியோதனனுக்கு பாதி ராஜ்ஜியம் விட்டுக் கொடுக்க முழு மனதோடு .தயாராக உள்ளார்கள்'' என்று அனைவருக்கும் உணர்த்தவேண்டும்'. எல்லோரையும் ஒருமுறை பார்த்து விட்டு தனது பேச்சை நிறுத்தினார் பலராமன்..
மறுபடியும் தொடர்ந்தார்:
''இதை மனதில் கொண்டு நம்மில் ஒருவர் ஹஸ்தினாபுரம் செல்லவேண்டும். இரு பக்கமும் மன அமைதி பெற, தகுந்த நேர்மையான வழியை எடுத்துச் சொல்லி துரியோதனன் சம்மதம் பெற்று வரவேண்டும். பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோர் நேர்மையான, நீதி முறையான, நேர்மையான ஆலோசனையை, முடிவையே, விரும்புபவர்கள்.
எல்லா பெரியோர்களையும் வைத்துக் கொண்டு கலந்தாலோசித்து, அனைவரின் சம்மதத்தோடு சுமுகமாக சகோதர்கள் இடையே நிலவும் இந்த பிரச்னையை தீர்ப்பவன் ஒருவன் நமக்கு இப்போது வேண்டும்.
யுதிஷ்டிரன் எல்லோரையும் விட்டு சூதாட்டத்தில் தேர்ந்த சகுனியோடு விளையாட ஒப்புக் கொண்டதற்கு மற்றவர் எவரும் பொறுப்பில்லை. யுதிஷ்டிரனுக்கு தெரியும் சகுனியை வெல்வது கடினம் என்று. இருந்தும் கடைசிவரை அவனோடேயே மோதினான். தவறு சகுனி மீதல்ல. ஆகவே இங்கிருந்து செல்பவன் யுத்தத்தை தவிர்க்க முயல வேண்டும் '' என்றார் பலராமன்.
சாத்யகி எழுந்தான். ''பலராமா, என்னால் நீ சொன்னதை முழுதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யுதிஷ்டிரன் தவறினான் என்று சொல்வதே பெரும் தவறு. தூக்கத்திலும் நீதி நேர்மை நியாயம், தர்மம், தவறாதவன் யுதிஷ்டிரன் என்பது எல்லோரும் அறிந்தது. சகுனிக்கோ துரியோதனனுக்கோ யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் வல்லவன் இல்லை என்பது தெரிந்தும் அவன் சரியான போட்டியாளன் இல்லை என்பதை அறிந்தும் அதை சாதகமாக்கிக் கொண்டு அவனை வலுக்கட்டாயப் படுத்தி ஆடவைத்து, ஒட்டாண்டியாக்கியது நெஞ்சில் ஈரமற்ற செய்கை. திட்டமிட்ட சதி. இதில் பெரும்பங்கு துரியோதனனுக்கும் உண்டு என்பதால், சகுனியை முன் நிறுத்தி, சுலப வழியில் யுதிஷ்டிரனின் ராஜ்யத்தை பிடுங்கி, மற்ற பாண்டவர்களை, திரௌபதியை வைத்து மேலும் ஆடவைத்து நிர்கதியாக்கி, அடிமைப் படுத்தி, பன்னிரண்டு வருஷ வனவாசம் அதன் பின் ஒரு வருஷம் மறைவாக, எல்லாம் இருக்கச் செய்தவன். காட்டிலும் அவர்களை நிம்மதியாக வாழ வைக்காதவன்.
மேலும் யுத்ததில் பாண்டவர்களை ஜெயிக்க முடியாது என்று தெரிந்து, யுதிஷ்டிரன் வார்த்தை பிறழாதவன் என்று அறிந்து இந்த சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்ட சகுனி மேல் தவறு இல்லை என்று நீ சொல்வதை என் காதால் கேட்கக் கூட அருவருப்பாக இருக்கிறது. தகுதியற்றவன் என்று தெரிந்து ஆட்டத்திற்கு இழுத்து ஒருவனை ஜெயிப்பது, நேர்மையா, நியாயமா? உனக்கு துரியோதனன் மேல் பாசம் உண்டு என்பதை உள்ளத்தில் இருந்து வார்த்தையாக கொட்டிவிட்டாய் ' என்று முடித்தான் சாத்யகி.
''துருபதா நீ என்ன சொல்கிறாய்?'' என்றான் சாத்யகி
'' திருதராஷ்டிரன் துரியோதனனை விட்டுக் கொடுக்க மாட்டான். துரியோதனனோ நேர்மைக்கு புறம்பான வழியே தேடுபவன். யுதிஷ்டிரன் நேர்மையாக நியாயமாக கொடுத்த வாக்கினை வெற்றிகரமாக நிறைவேற்றியும், அவர்கள் வாக்கு கொடுத்து நிறைவேற்றும் காலம் முடியும் முன்பே அடையாளம் கண்டு கொள்ளப் பட்டதால் மீண்டும் 13 வருஷ வனவாசம் என்று ஆரம்பிக்கிறான். பீஷ்மரே அப்படி இல்லை, பாண்டவர்கள் வனவாசம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று சொன்னாலும் கேட்க மனமில்லை. அவனிடம் என்ன நியாயம் எதிர்பார்க்கிறீர்கள்? அவனது துர்புத்திக்கு தூபம் போட சகுனி, கர்ணன் அவன் சகோதரர்கள் வேறு. எது எப்படி இருந்தாலும், பலராமன் சொல்வது போல் நாம் ஒரு முறை துரியோதனனை நேரில் கண்டு எடுத்துச் சொல்லி அவன் நியாயத்துக்கு கட்டுப்பட்டால் அது நன்மைக்கு தானே. வீணே உயிர்ச்சேதம் விளையாதே'' என்றான் துருபதன்.
இருந்தபோதிலும் நாம் முன் ஜாக்ரதையாகவும் இருக்க வேண்டும். உடனே நமது நண்பர்களுக்கு சேதி சொல்லவேண்டும். ஒருவேளை துரியோதனாதியர் ஒற்றுமையாக வாழ நேர்மைக்கும் நீதிக்கும் நியாயத்துக்கும் கட்டுப்பட தயாராக இல்லை என்று தெரிந்தால் (எனக்கென்னவோ அப்படித்தான் ஆகப் போகிறது என்று தோன்றுகிறது) நமது பக்கத்தில் பாண்டவர்களுக்கு உதவ சைன்யம் தயாராக இருக்கவேண்டும். தூதுவர்களை அனுப்பி சால்வன், திருஷ்டகேது, ஜெயத்சேனன், கேகயன், கிழக்கு கடலோர நாட்டு பகதத்தன், அஹூகன், ஹர்திக்யன், ரோசமானன், சேதி நாட்டு இளவரசன், ருக்மி, தந்தவக்ரன், ப்ரூரவன், , ஆகியோருக்கு படை யுடன் தயார் நிலையில் இருக்கச் சொல்லவேண்டும்.'' என்றான் சாத்யகி.
துருபதன் பேசினான்:
''என் குரு ஒரு பிராமணர் இருக்கிறார். அவரை துரியோதனனிடம் அனுப்பி அவர் அங்கு பீஷ்மர், துரோணர், த்ரிதராஷ்டிரன்
ஆகியோரிடம் எப்படி பேசவேண்டும் '' என்று கற்பித்து அனுப்புவோமா? என்றான் துருபதன்.
''துருபதன் சொல்வது சரி. யுதிஷ்டிரனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதை எடுத்துச் சொல்லி சாதகமாக வெற்றியுடன் திரும்பவேண்டும். சமாதானம் ஒன்றே நமது முதல் குறிக்கோள். நமக்கு இருபக்கமும் நண்பர்கள், பாரபட்சம் இன்றி அவர்களுடன் பழகுகிறோம். நமது செய்தியை மதித்து சுமுகமாக பாண்டவர்களுக்குச் சேர வேண்டிய பாதி ராஜ்யத்தை துரியோதனன் விட்டுக் கொடுத்தான் என்றால் எல்லாமே நல்லபடியாக முடிந்து விடுமே. சமாதானத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால் தான் யுத்தம் நேரும். துரியோதனனும் அவன் சகோதரர்கள் நண்பர்கள் யாவருமே விதியை சந்திக்க நேரும். முதலில் செய்தி அனுப்புங்கள்'' என்றான் கிருஷ்ணன்.
கிருஷ்ணன், பலராமன் ஆகியோர் துவாரகை திரும்பினார்கள். விராடன் அவர்களுக்கு தக்க மரியாதையோடு விடை கொடுத்தான்.
விராடன், துருபதன் ஆகியோர் பாண்டவர்களோடு நண்பர்களைச் சந்தித்து படைகளைத் தயார் செய்கிறார்கள் என்கிற சேதியும் ஒற்றர்கள் மூலம் துரியோதனனுக்கு கிடைத்து, அவனும் தனது ஆதரவாளர்களை எல்லாம் உடனே திரட்டி ஒன்று கூட்டி யுத்தம் நேர்ந்தால் தனக்கு பக்க பலம் தேட ஆரம்பித்தான்.
காற்றில் யுத்த வாசனை மெல்லிசாக வீச ஆரம்பித்து விட்டது. நாலா பக்க தேசங்களிலும் ஏதாவது ஒரு பக்கத்துக்கு ஆதரவாக சைன்யம் ஒன்று சேர ஆரம்பித்து விட்டது. ரத , கஜ, துரக, பதாதிகள் சேரத் தொடங்கினார்கள்.
துருபதனின் பிராமண குரு ஒருவர் ஹஸ்தினாபுரத்துக்கு நடந்தார்.
No comments:
Post a Comment