Saturday, March 2, 2019

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம் J K SIVAN
மகா பாரதம்.
அஞ்ஞாத வாச சிந்தனைகள்

நாம் நினைப்பதை விட வெகு வேகமாக நகர்வது நேரம். அடேயப்பா, அதற்குள் பன்னிரண்டு வருஷங்கள் ஓடி விட்டதே. இனி ஒரு வருஷம் பாண்டவர்கள் எவர் கண்ணிலும் படாமல் அடையாளம் தெரியாமல் வாழ வேண்டும். இது முடிந்தவுடன் தான் அவர்கள் சுதந்திர மனிதர்கள்.. இந்த ஒரு வருஷம் அவர்களை எவரேனும் அடையாளம் கண்டுவிட்டால் மீண்டும் பதிமூன்று வருஷம் வனவாசம்.

பாண்டவர்கள் மற்ற ரிஷிகள், முனிவர்கள் பிராமணர்கள் எல்லோரிடமும் விடை பெற்று எவரும் அறியா வண்ணம் தங்களது 13வது வனவாசத்தை அஞ்ஞாத வாசமாக வாழ்வதற்கு த்வைதவனத்தை விட்டு வெளியேறினார்கள். மஹாபாரதத்தில் இனிமேல் வரும் விஷயங்கள் விராட பர்வம் என்ற பகுதியில் இருந்து.

விராட பர்வம் சுவையான ஒரு பகுதி. இந்த கட்டத்தில் தான் பாண்டவர்கள் எப்படி பன்னிரண்டு வருஷ வனவாசம் முடிந்து ஒரு வருஷம் யார் கண்ணிலும் படாமல் கழிக்கவேண்டும் என்று திட்டமிட்டார்கள்.
கழுகு மாதிரி துரியோதனன் ஆட்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். பஞ்ச பாண்டவர்களின் யாரேனும் ஒருவர் அந்த அஞ்ஞாத வாச காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் மீண்டும் பாண்டவர்கள் பன்னிரண்டு வருஷம் வனவாசம் + ஒரு வருஷம் அஞ்ஞாத வாசம் வனத்தில் கழிக்கவேண்டும். ரொம்ப கடினமான சோதனை பாண்டவர்களுக்கு இப்போது தான் தலையைத் தூக்கப்போகிறது.

''வைசம்பாயனரே எனக்கு விறுவிறுப்பு அதிகரிக்கிறது. எப்படி என் தாத்தாக்கள் இந்த சோதனையில் வெற்றிகரமாக வெளி வந்தார்கள்?
எப்படி விராட நகரில் ஒரு வருஷ அஞ்ஞாத வாசத்தை கழிக்கவேண்டும் என்று தோன்றியது?
எப்படி திரௌபதியால் அதை துன்பத்தோடோ துன்பமின்றியோ கழிக்க முடிந்தது?
பாவம் ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டிருந்திருப்பார்கள் அல்லவா? - இப்படி ஜனமேஜயன் கேள்வி மேல் கேள்வியாக முனிவரை துளைத்துக் கொண்டிருந்தான்.

எம தர்ம ராஜன் யக்ஷனாக வந்து யுதிஷ்டிரனை சோதித்து அதில் வெற்றி பெற்றதால் மகிழ்ந்து, ''யுதிஷ்டிரா, உங்கள் ஒரு வருஷ அஞ்ஞாத வாசம் வெற்றிகரமாக ஒருவர் கண்ணிலும் படாமல் கழிந்து விடும்'' என்று வாழ்த்தினான். எனவே யுதிஷ்டிரன் தனது தம்பிகளை கலந்து எங்கே செல்வது, எப்படி காலம் கழிப்பது என்று மனம் விட்டு பேசினார்கள்.

''அர்ஜுனா, பீமா, நகுல, சஹாதேவர்களே, கவனியுங்கள், எப்படியோ பன்னிரெண்டு வருஷம் ஓடிவிட்டது. இந்த ஒருவருஷ அஞ்ஞாத வாச காலத்தை கௌரவர்களோ, அவர்களைச் சேர்ந்தவர்களோ அறியாதவண்ணம் தலை மறைவாகக் கழித்து விட்டோமானால் அடுத்தது வெற்றிக்கட்டமே. நாம் எங்கு சென்றால் எதிரி கண்ணிலிருந்து தப்பமுடியும் என்று சொல்லுங்கள்.

அர்ஜுனன் கையைத் தூக்கினான். ''சொல் அர்ஜுனா!'

அண்ணா, எனக்குத் தெரிந்த சில ஊர்களைச் சொல்லுகிறேன் அதில் எது உசிதம் என்று யோசியுங்கள். ''சேடி , மத்ஸ்யம், சுரசேனா, பட்டச்சரா, தசர்ணா, நவராஷ்டிரா, மல்லா, சால்வா, யுகந்தாரா, அவந்தி, சௌராஷ்டிரா. மற்றும் குந்திராஷ்டிரா''.

''போதும் போதும். அர்ஜுனா, நீ சொல் பீமா, எனக்கென்னவோ, மத்ஸ்ய தேசம் நமக்குச் சரிப்படும் என்று தோன்றுகிறது. விராடன், தர்மம் சத்யம் நேர்மை இதற்குக் கட்டுப்பட்டவன். வீரன். நம்மை நேசிப்பவன். தர்மவான். என்ன சொல்கிறீர்கள்? என்றார் தர்ம புத்ரர்.

''ஆஹா, சரியான யோசனை. ஆனால் நாமோ தலை மறைவாக பாண்டவர்கள் என்று யாரும் அறியாவண்ணம் வாழவேண்டும். எப்படி உள்ளே நுழைவது விராடன் நகரில்?'' என்றான் பீமன்.

''அண்ணா , எனக்கு உங்களைப்பற்றியே தான் கவலை. பொய் சொல்ல மாட்டீர்கள், தர்மவான். மென்மையான அரசர். இந்த சூழ்நிலையில் உங்களை என்னவென்று சொல்லிக் கொண்டு விராடன் முன் நிற்பீர்? என்றான் அர்ஜுனன். தலை மறைவாய் வாழும்போது பொய் அவசியம் இல்லையா?''

''சகோதரர்களே, நான் இதைப்பற்றி ஏற்கனவே யோசித்தாகி விட்டது. எதால் நான் சகலமும் இழந்தேனோ அதே எனக்கு கை கொடுக்கட்டும். கங்கபட்டன் என்ற பிராமணனாக, விராடனோடு சொக்கட்டான் ஆடுவதில் தேர்ந்தவனாக நுழைகிறேன். ராஜாவுக்கு தக்க ஆலோசனை சொல்ப வனாகவும் அறிமுகமாகிறேன். இது எனக்கு முடிந்த வேடம். அனுபவமும் உதவும்.''

''யாரய்யா நீ, இதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தாய் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?''

''நானா, இதற்கு முன் பாண்டவர்களில் மூத்தவரான தர்ம புத்ரன் என்ற புகழ் கொண்ட யுதிஷ்டிரனின் உற்ற நண்பன். அவனது நண்பர் நீங்கள் என்று அறிந்து, இப்போது பாண்டவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாததால் உங்களைத் தேடி வந்தேன் என்பேன்'

'பரவாயில்லை. அண்ணா சரியான பாத்திரமாகத்தான் நுழைகிறார். கவலையில்லை. பீமா நீ எப்படிடா சமாளிப்பாய்? ''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...