சித்தர்கள் J K SIVAN
பட்டினத்தார்
இது தான் சுகம்
பட்டினத்தார் பற்றி அநேக விஷயங்கள் இதுவரை அறிந்து கொண்டோம். ஒன்றுமில்லாதவன் வாழ்க்கையை உதறி விட்டு ஓடுவது துறவல்ல. செல்வச்சீமானாக சகல வசதிகளும் உலக வாழ்க்கையஹே அனுபவிக்க எல்லாம் இருந்தும் இதெல்லாம் என்னோடு கடைசி வரையிலும் கூட வரப்போவதில்லை என்று உணர்ந்து மனம் இனிக்க துறவை மேற்கொண்ட ஒரு ஞானி பட்டினத்தார். நம்முடைய பேரதிர்ஷ்டம் அவர் சென்னை வாசியாக ஜீவன் முக்தராக இங்கே திருவொற்றியூரில் ஜீவ சமாதி அடைந்திருக்கிறார். அடிக்கடி சென்று அமர்ந்து தியானம் செய்யவேண்டிய ஒரு ஸ்தலம்.
பட்டினத்தார் பாடல்கள் எளிமையானவை. அர்த்தம் படித்தாலே புரியும். மற்றவை நாம் சிந்திக்கவேண்டியவை.
சிற்றம்பலமுஞ் சிவனு மருகிருக்க
வெற்றம்பலந் தேடி விட்டோமே - நித்தம்
பிறந்திடத்தைத் தேடுதே பேதை மடநெஞ்சங்
கறந்திடத்தை நாடுதே கண்.
அடடா என்ன பேதைமை இது. சித்தத்தை சிவமாகும் நடன சபாபதி சிவபெருமான் அங்கிங்கெனாதபடி என்னருகிலேயே என்றும் எங்கும் இருக்க, ஏனோ மனது ஒன்றுமில்லாத வெற்று அம்பலத்தை நாடுகிறதே. மனம் அழியும் தேகம் கொண்ட மாதரை நாடுதே. என் மட நெஞ்சமும் கண்ணும் அற்புதத்தை விட்டு அற்பத்தை தேடுகிறதே. என்று ஏங்குகிறார் பட்டினத்தார். இல்லை நாம் செய்வதை தாம் செய்வதாக காட்டுகிறார்.
தோட விழும் பூங்கோதைத் தோகை யுனை யிப்போது
தேடினவர் போய்விட்டார் தேறி யிரு - நாடி நீ
யென்னை நினைத்தாலிடுப்பிலுதைப்பேனா
னுன்னை நினைத்தாலுதை.
ஒரு அழகான பாடல் இது. அழகிய பெண்ணே, உன்னை சதா சர்வகாலமும் தொடந்து வண்டு மலரை சுற்றி வருவதைப் போல தேடியவன் இனி உன்னை தேட மாட்டான். மாட்டேன். மனதைத் தேற்றிக்கொள். இனி நீ வேறு நான் வேறு. என்னை தேடிக்கொண்டு நீ என்னருகே மீண்டும் வரவேண்டும் நீ மனதால் நினைத்தாலும் நான் வரமாட்டேன். உன்னை இடுப்பில் உதைப்பேன். இன்னொரு விஷயம். அப்படி நானே உன்னை மீண்டும் சேரவேண்டும் என்று நினைத்தால் நீயும் என்னை .செய்வாயா? எப்படி இந்த பட்டினத்தார் டீல் (DEAL )
வாசற்படி கடந்து வாராத பிச்சைக் கிங்
காசைப்படுவதில்லை யண்ணலே - யாசை தனைப்
பட்டிறந்தகாலமெலாம் போதும் பரமேட்டி
சுட்டிறந்த ஞானத்தைச்சொல்.
பரமேஸ்வரா, எனக்கு எதுவும் தேவை இல்லை என்ற உருதி மனத்தில் வலுப்பட வேண்டும். என் வாசலைக் கடந்து ஒரு இடம் நாடி '' அம்மா தாயே என்று பிக்ஷை தேடி போக எண்ணமில்லை..அப்படி ஒரு உணவின் மேல் ஆசை போய்விட்டது பிரபு. கொஞ்சமா நஞ்சமா என் வாழ்வில் நான் பட்ட ஆசைகளை பட்டியல் போட முடியாது. அது இனி கிடையாது என்பதால் தான் அழகான பொருத்தமான ''இறந்த காலம் '' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். எல்லாமே தீயில் சுட்டு நிலையாமை உணர்த்த உன் நினைவால் நெற்றியில் உடலில் சாம்பலாக பூசிக்கொள்கிறோம் என்ற ஞானத்தை விடாமல் நினைக்கும்படி செய் '' என்கிறார் பட்டினத்தார்.
நச்சரவம் பூண்டானை நன்றாத் தொழுவதுவு
மிச்சையிலே தானங் கிருப்பதுவும் - பிச்சை தனை
வாங்குவது முண்பதுவு ம்வந்து திருவாயிலிலே
தூங்குவதுந் தானே சுகம்.
,மாட மாளிகை, கார், பதவி,பொருள், மாதர் இதுவா உண்மையில் சுகம் ? ஆலஹால விஷம் விழுங்கி, அது போதாதென்று கொடிய நாகங்களை ஆபரணமாக பூண்ட சிவா, உன்னை பூரணமாக தொழும் ஆசையால் விளையும் சுகம், உன் ஆலயத்தில் உன்னை பார்த்துக்கொண்டே இருப்பதில் கிடைக்கும் சுகம், எங்கும் அதை தேடிப்போகாமல் பிச்சை இந்தா என்று யாரோ இட்ட உணவை உண்பதில் கிடைக்கும் சுகம், உன் திருக்கோயிலின் வாசலிலேயே ஒரு மூலையில் உன் நினைவோடு முடங்குவதும் தான் உண்மையிலேயே எனக்கு சுகம் என்கிறார் பட்டினத்தார்.
No comments:
Post a Comment